தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் சந்தேகத்தை தருகின்றன – அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Thursday, July 19th, 2018

வடக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு இடங்கள் தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் 16வது பிரிவின் கீழ், தொல்பொருள் திணைக்களத்தினால் புராதனச் சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக அதிகளவிலான இடங்கள் புராதனச் சின்னங்களாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாகவும், இவற்றுள் முல்லைத்தீவு நகரப் பகுதியில் அமைந்துள்ள பொதுச் சந்தையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேற்படி பொதுச் சந்தையானது அங்குள்ள வர்த்தகர்களால் அரசுக்கு முறையாக வரிகள் செலுத்தப்பட்டு, பல காலமாக செயற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், அதனை புராதனச் சின்னங்களுக்குள் உள்வாங்கப் பட்டிருப்பதனால் மேற்படி வர்த்தகர்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க யமுனா ஏரி மற்றும் சங்கிலியன் தோப்பு என்பன எவ்விதமான பராமரிப்புகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றிக் காணப்படுகின்றன. யமுனா ஏரியைச் சுற்றி  பாதுகாப்பு வேலி அமைக்குமாறு அப்பகுதி மக்களால் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், தொல்பொருள் திணைக்களம் அதுதொடர்பில் உரிய அவதானங்களைச் செலுத்தியதாக இல்லை.

பாதுகாப்பு வேலி இன்மை காரணமாக இதுவரையில் மேற்படி ஏரியில் 5 மனித உயிர்கள் பலியாகியுள்ளதுடன், மேலும் மூவர் தற்கொலைக்கு முயன்று உயிர் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. அதே நேரம், சங்கிலியன் தோப்பும் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டு, மேற்படி சங்கிலியன் தோப்பிற்குரிய காணி பறிபோகும் அபாயம் ஏற்பட்டு வருகின்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் எந்த ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன? என்றும் முல்லைத்தீவு பொதுச் சந்தையின் நிலைமை தொடர்பில் உண்மை நிலை என்ன? என்பது தொடர்பாகவும் தெளிவு படுத்த வேண்டும் என்பதுடன்  யாழ்ப்பாணம், நல்லூர் யமுனா ஏரியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து அதனையும், சங்கிலியன் தோப்பினை தனியார் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுவித்து அதனையும் பாதுகாத்து, பராமரிப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா? என்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெளிவுபடுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ விஜேதாச ராஜபக்ச அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts:

 அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி கேள்வி
முகமாலையில் வெடிபொருட்கள்: மக்கள் குடியேற நீடிக்கிறது தடை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்...
மானிய அடிப்படையில் விதை உருளைக் கிழங்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்....

மும்மொழி அமுலாக்கத்தை உறுதிசெய்வதற்கு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
மாகாண சபை தவறியுள்ள நிலையில், நெடுந்தீவு வைத்தியசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு தலையிட...
வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அழிவடைந்த உப உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – நாடாளுமன...