தபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல பரிச்சயம் கொண்டவர்களை ஏன் நியமிக்க முடியுhது? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, February 21st, 2019

நாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில் நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது பணியில் இருக்கின்ற பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்களின் எண்ணிக்கை போதாமையே இதற்குப் பிரதான காரணமெனக் கூறப்படுகின்றது. குறிப்பாக, தபால் சேவகர் ஒருவர் விடுமுறையில் செல்கின்றபோது, அன்றைய தினம் குறித்த பகுதிக்கான தபால் விநியோகம் இடம்பெறுவதில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தோட்டத்துறை மக்களின் முகவரிகளுக்கு வருகின்ற கடிதங்கள் மற்றும் தபால் மூல ஆவணங்கள் அனைத்தும் மிக தாமதமாகவே அம் மக்களுக்கு கிட்டியிருந்த நிலையில், அந்த நிலையை மாற்றி, அனைத்து தபால்களும் தாமதமின்றி அம்மக்களுக்குக் கிடைக்கக்கூடிய வகையில் ஓர் ஏற்பாடாக 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09ஆம் திகதி பெருந்தோட்டப் பகுதிக்கான தபால் சேவகர்களாக 353 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆகக் குறைந்த கல்வித்தரம் 8ஆந் தரம் என்ற அடிப்படையில், 35 வயதிற்கு உட்பட்ட, மலையக தோட்டப் பகுதிகளை நிரந்தர வசிப்பிடங்களாகக் கொண்டவர்களுக்கு மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிய வருகின்றது.
மேற்படி பதவிக்கு மேலும் பலர் நியமித்திருந்த நிலையில், அவர்களில் திறமை மற்றும் கூடிய கல்வித் தகைமை என்பவற்றின் புள்ளிகள் அடிப்படையில் 353 பேருக்கு மாத்திரமே நியமனங்கள் வழங்கப்பட்டு, மேற்படி விண்ணப்பதாரிகளில் நியமனங்கள் கிடைக்கப்பெறாத ஏனைய விண்ணப்பதாரிகளில் இருந்து புள்ளிகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாம் கட்ட நியமனங்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்ததாகவும், ஆனால் சுமார் 10 ஆண்டுகள் கழிந்தும் அந்த இரண்டாம் கட்ட நியமனங்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை என்றும் தெரிய வருகின்றது.
அதேநேரம், வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தமிழ் மொழியில் முகவரியிடப்பட்டு அனுப்பப்படுகின்ற கடிதங்கள் யாவும் பல நாட்கள் தாமதித்தே உரியவர்களுக்கு கிடைக்கின்ற ஒரு நிலையும் தொடர்ந்து காணப்படுகின்றது. இதற்கான காரணத்தை ஆராய்கின்றபோது, தபால் அலுவலகங்களில் தமிழ் மொழி மூல பரிச்சயம் கொண்டவர்களின் பற்றாக்குறை பெருமளவு காணப்படுவதாக தெரிய வருகின்றது. அதாவது மாற்று மொழி தகைமைக்கான சான்றிதழ்களை கொண்டிருக்கின்ற தபால் திணைக்கள ஊழியர்களால் தமிழ் மொழியில் பணியாற்ற இயலாத நிலை காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் பின்வரும் கேள்விகளுக்கான பதில்களை எதிர்பார்க்கின்றேன்.
மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் பதவிக்கு ஏற்கனவே விண்ணப்பித்து, நியமனங்கள் கிடைக்காதிருக்கின்றவர்களில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் வகிப்போருக்கான இரண்டாம் கட்ட நியமனங்கள் வழங்குவதில் இருக்கின்ற தடைகள் என்ன?
இவர்களுக்கான நியமனங்கள் எப்போது வழங்கப்படும்? அல்லது புதிதாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, உரிய நியமனங்கள் எப்போது வழங்கப்படும்?
பெருந்தோட்ட மக்கள் கடிதங்களை தபாலில் சேர்ப்பதற்கு வசதியாக தோட்டப்பகுதிகளின் முக்கிய இடங்களில் தபால் பெட்டிகளை ஏன் பொருத்த முடியாது?
தபால் திணைக்களத்தில் தமிழ் மொழி தகைமை சான்றிதழ் பெற்று, தமிழ் மொழி மூலமாக செயற்பட இயலாதவர்களை விடுத்து, தமிழ் மொழி மூல பரிச்சயத்தை நடைமுறை சாத்தியமாகக் கொண்டவர்களை ஏன் நியமிக்க முடியுhது?
நியமிக்க முடியும் எனில், அது எப்போது சாத்தியமாகும்?
மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் ஹலீம் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.
(நாடாளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அவர்களிடம் கேட்டபோது)


தமிழ் நாட்டில் இருந்து இலங்கை திரும்புவதற்காக சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டுவரும் இலங்கை அகதிகளுக்கான...
நிலையியற் கட்டளை 23/2 இன் கீழ் 2016.05.20 ஆந் திகதி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்...
தமிழ் மாணவர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களைப் போல ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ் மாணவரது கல்வியிலும் அரசு ...
அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை...
முகமாலையில் வெடிபொருட்கள்: மக்கள் குடியேற நீடிக்கிறது தடை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்...