எமது மக்கள் ஒருபோதும் அபிவிருத்தியையோ, வாழ்வாதாரத்தையோ எதிர்த்தவர்கள் அல்லர். மக்களைக்காட்டி, மக்களுக்குத் தேவையில்லை என்று கூறி, அன்று தொடக்கம் இன்று வரை அவற்றை எதிர்த்தவர்களால் எமது மக்களின் தேவைகள் பல இன்றும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் உள்ளன. – டக்ளஸ் தேவானந்தா

Thursday, May 5th, 2016
‘மலர்ந்தது தமிழர் அரசு” என்று கூறியவர்கள், இன்று வடக்கு மாகாண ஆட்சிப் பதவியில் இருந்துகொண்டு இருக்கின்ற நான்கு அமைச்சுக்களை யார் யாருக்கிடையில் பங்கிட்டுக் கொள்வது என்பதில் காட்டுகின்ற முனைப்பினை போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுடைய அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பில் என்றாவது காட்டியிருக்கிறார்களா?  என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலையியல் கட்டளை 23/2  கேள்வி நேரத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் முன்வைத்து உரையாற்றிய விபரங்கள் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மத்திய அரசாங்கத்தினால் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் பிரகாரம், கல்வி, சுகாதாரம், மின்சாரம், விவசாயம், கடற்றொழில், குடி நீர், நீர்ப்பாசனம், வீடமைப்பு, மீள்குடியேற்றம், வீதி அபிவிருத்தி, உட்பட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுயதொழில் வசதிகள் அடங்கலான வாழ்வாதார வசதிகள் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 2014ஆம் ஆண்டு வரை அபிவிருத்தித் திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
2013.09. 21ம் திகதி வடமாகாண சபைத் தேர்தல் நடைபெற்று, வடமாகாண சபைக்கென மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி அமைக்கப்பட்டு இன்று சுமார் இரண்டரை வருடங்களுக்கு மேல் கடந்த நிலையில், அபிவிருத்தி தொடர்பிலோ, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் தொடர்பிலோ எந்தவொரு நடைமுறை சார்ந்த திட்டங்களும் மேற்கொள்ளப்படாத நிலையும், மத்திய அரசின் திட்டங்கள்கூட மாகாண சபையினால் பல்வேறு நடைமுறை சாத்தியமற்ற காரணங்கள் கூறப்பட்டு நிராகரிக்கப்படுகின்ற நிலையையுமே காணக்கூடியதாக இருக்கின்றது.
வடக்கு மாகாண சபையைக் கைப்பற்றியவுடன், ‘மலர்ந்தது தமிழர் அரசு” என்று கூறியவர்கள், இன்று ஆட்சிப் பதவியில் இருந்துகொண்டு, இருக்கின்ற நான்கு அமைச்சுக்களை யார் யாருக்கிடையில் பங்கிட்டுக் கொள்வது என்பதில் காட்டுகின்ற முனைப்பினை, போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுடைய அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பில் காட்டியிருக்கிறார்களா? என்றால், இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.
கடந்த இரண்டு வருடங்களில் மத்திய அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி, மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களுக்காகச் செலவு செய்யப்படாமல், திறைச்சேரிக்கு திரும்பிச் சென்றதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
2009ஆம் ஆண்டிற்கு முன்பும், 2009ஆம் ஆண்டிற்குப் பின்பும் – அதாவது, யுத்தம் நிலவிய காலங்களிலும், யுத்தத்திற்குப் பின்பும், மத்திய அரசாங்கத்தில் பங்குகொண்டிருந்த நிலையில், மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தித் திட்டஙகள்;; மத்திய மற்றும் மாகாணத்திற்குரிய அந்தந்த அமைச்சுக்கள் மூலமாக  முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அந்த வகையில், யாழ் குடாநாட்டில் பல்துறைகள் சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டன. தீவகப் பிரதேசங்கள் உட்பட மக்கள் குடியமர்வதற்கும், மீள் குடியமர்வதற்கும் ஏதுவாக அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, அம் மக்களது வாழ்வாதாரத் தேவைகளும் இயன்றவரை பூர்த்தி செய்யப்பட்டிருந்தன.
கடல் கடந்த தீவுகளாகிய எழுவைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய இடங்களுக்கு கடல் போக்குவரத்தினையும், தீவுகளுக்கு உட்பட்ட போக்குவரத்துக்கான வசதிகளையும் மேம்படுத்தி, 24 மணி நேர மின்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்; போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அங்கு மக்கள் இயல்பாக வாழ்வதற்குரிய சூழல் உருவாக்கப்படடிருந்தது. குறிப்பாக, அங்கு வாழும் கடற்தொழிலாளர்கள் கடலில்  மீன்பிடிப்பதற்கான தடைகள் நீக்கப்பட்டிருந்தன. அத்துடன், நெடுந்தீவில் நீண்ட காலமாக நிலவிவந்த  குடி நீருக்கான தேவையானது 24 மணி நேரமும் போதியளவு சுத்தமான குடி நீர் இம் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய வகையில் பூர்த்தி செய்யப்பட்டது.
வடமாகாண சபையினுடைய மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆளும்தரப்பு உறுப்பினர்கள் மக்கள் நலன்சார்ந்த பணிகளை மேற்கொள்ளாமல், வெறுமனே தங்களது தனிப் பெருமைகளை பறைசாற்றும் களமாக அதைப் பயன்படுத்தி வருவதானது, வடமாகாணத்தின் நலனில் அக்கறை உள்ளவர்களுடைய கவலையாக உள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர்  பளிஹக்கார அவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் காட்டிய அக்கறை இன்று வடமாகாணத்திற்கான 10 விஷேட திட்டங்கள் என்ற அடிப்படையில் விசேட அமைச்சரவைப் பத்திரம் மூலம் அங்கீகரிக்கப்பட்டு, மத்திய அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்டு,  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் முன்னெடுப்பதற்கு மத்திய அரசினால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் இந்த அரிய பணியினை முன்னெடுத்த வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பளிஹக்கார அவர்களுக்கும்; வடமாகாண ஆளுநர் செயலகத்தினுடைய உத்தியோகத்தர்களுக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நிலையில்,
பொதுவாக மத்திய அரசாங்கத்தினால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு பல்வேறு நடைமுறை சாத்தியமற்ற இடையூறுகள், தடைகள் ஏற்படுத்தப்பட்டு, அத் திட்டங்களை நடைமுறைப்படுத்த விடாத ஒரு நிலையே காணப்படுகின்றது என்பதை கௌரவ அமைச்சர் அவர்கள் அறிவாரா?
தற்போதைய இத் திட்டங்களுக்கும் ஏதேனும் இடையூறுகள், தடைகள் ஏற்படுத்தப்படுமானால், மத்திய அரசு, இத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இருந்து தவிரந்துகொள்ளுமா?
அல்லது, எமது மக்களின் நலன் கருதி இத் திட்டங்கள் நடைமுபை;படுத்தப்படுமா?
இந்த விஷேட திட்டங்களில் முதலாவதாக, காரைநகருக்கும், ஊர்காவற்துறைக்குமான பாலம் அமைக்கும் திட்டம் காணப்படுகின்றது. இது, உண்மையில் மக்கள் தீவகப் பகுதியில் இலகுவாகப் பயணம் செய்யக் கூடிய ஒரு பாதை அமைப்பாகும். குறிப்பாக, காரைநகருக்கும், ஊர்காவற்துறைக்குமான கடல் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டால், மக்கள் பல கிலோ மீற்றர்கள் சுற்றியே செல்ல வேண்டியதொரு நிலை காணப்படுகின்றது. காரைநகர், ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவின் கீழ் வருவதால், இங்குள்ள மக்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தங்களது தேவைகளை நிறைவேற்ற மிகுந்த சிரமங்களுக்கு உட்படுகின்றனர். எனவே, இப் பாலம் அமைக்கும் திட்டமானது எமது மக்களுக்கொரு வரப்பிரசாதமாகும்.
இதன் மூலம் வலிகாமமும் தீவகப் பகுதியும் தரைப்பாதை மூலம் இணைக்கப்படக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. ஏற்கனவே, 90களில் யாழ் குடா நாட்டில் பல பாதைகள் அமைத்தும், பல பாதைகள் புனரமைக்கவும்பட்டன.  அதன் பின்னர், 2009 ஆம் ஆண்டின் பின்னர்தான் வடபகுதிக்கான A9 பாதை முதல் அதிகளவிலான பிரதான பாதைகள் உட்பட்ட சிறிய பாதைகள் பல  புனரமைக்கப்பட்டுள்ளன.
அதே நேரம், இதற்கு மேலதிகமாக, தீவகப் பகுதியினையும் வலிகாமம் மேற்கு பகுதியினையும் மிக இலகுவாக இணைக்கக்கூடிய மாற்றுப் பாதையான வேலணை அராலிச் சந்தியூடான அராலிக்கான பாதை செப்பனிடப்பட்டு அதற்கான பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா?
இரண்டாவதாக, குறிகட்டுவானுக்கும், நெடுந்தீவுக்குமான கடல் கலம் அமைத்தல். இதன்மூலம் மக்களுடைய கடற்போக்குவரத்து மேலும் சீராகுமென நம்பப்படுகிறது. காலாகாலமாக பழுதடைந்துவந்த குமுதினிப் படகினை அடிக்கடி திருத்துவதற்கும், அதற்கு மேலதிகமாக, புதிதாக வடதாரகை படகினை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், அதனையும் உரிய காலத்தில் திருத்துவதற்கும் கடந்த காலப்பகுதியில் பல்வேறு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
மூன்றாவதாக, நெடுந்தீவில் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மக்கள் போக்குவரத்திற்கான இறங்குதுறையை சீரமைக்கும் திட்டமாகும். இதன் மூலம் கடற்றொழிலாளர்களும் பயணிகளும் பயன்பெறுவார்கள். நெடுந்தீவில் மீன்பிடித்துறைமுகம் அமைக்கவேண்டும் என்ற திட்டத்தின் பூர்வாங்கமாக கடல்  ஆழப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக கரையில் அணை கட்டும் பணிகள் இடைநடுவில் நின்றுவிட்டன.  இதன்காரணமாக மழைகாலங்களில் மண் கடலுக்குள் சென்றுள்ள நிலையில் அவற்றை அகழ்ந்தெடுத்தே தற்சமயம்  மீன்பிடித் துறைமுகம் மற்றும் இறங்குதுறை அமைக்கப்பட வேண்டியுள்ளது.
எனவே, உரிய வகையில் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு, மீண்டும் மண் அப்பகுதி கடலுக்குள் செல்லாத வகையில் அணை கட்டப்பட்டு, மேற்படி மீன்பிடித் துறைமுகம் மற்றும் இறங்குதுறை சீரமைக்கப்படுமா?
நான்காவதாக, எழுவைதீவில் காணப்படுகின்ற மீன்பிடித் துறைமுகத்தினை மீள்புனருத்தாரணம் செய்யும் திட்டத்தின் மூலம் அங்கு வசிக்கும் கடற்றொழிலாளர்களின்  வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதுடன், பயணிகளின் போக்குவரத்திற்கும் இது வசதியாக அமையும். கடந்த காலங்களில் இந்த மீன்பிடித் துறைமுகத்தினை கடந்றொழிலாளர்கள் பாவித்துவந்தார்கள் எனினும், இதில் பல்வேறு வசதிக் குறைபாடுகள் காணப்பட்டன. எழுவைதீவு மீன்பிடித் துறைமுகம் மற்றும் இறங்குதுறைக்கும் தரைக்கும் இடையிலான  வீதியைத் திருத்தும் திட்டத்தின் மூலம் பயனாளிகள் துறைமுகத்தை அடைவது இலகுபடுத்தப்படும். இந்தவீதி மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் வருகிறது. இதுவரைக் காலமும் எந்தவிதமான திருத்தமும் அற்ற வீதியாக இது காணப்படுகிறது.
மேற்படி குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து, கடற்றொழிலாளர்கள் மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையில் இத்துறைமுகமும் இறங்குதுறையும் முழுமையாக புனரமைப்புச் செய்யப்படுமா?
ஐந்தாவதாக, வடமாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களில் கடல் பாசி வளர்க்கும் திட்டமாகும். இதன்மூலம் யுத்தத்தினால் தொழில் இழந்த கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம்.  கடந்த காhலத்தில் இரணைதீவு, வளைப்பாடு, இரணைமாதா நகர், பள்ளிக்குடா, சுழிபுரம், நயினாதீவு, எழுவைத்தீவு, அனலைதீவு, மெலிஞ்சிமுனை, காரைநகர் – சாம்பலோடை, பொன்னாலை  ஆகிய பகுதிகளில் பரீட்சார்த்தமாக கடல்பாசி வளர்ப்புத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
அந்த வகையில், உரிய தொழில்நுட்ப அறிவு வழங்கப்பட்டு, தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு இத் திட்டம் மேற்கொள்ளப்படுமா?
ஆறாவதாக, வேலணை – ஊர்காவற்துறை தரைப்பாதையினைத் திருத்தும் திட்டமாகும். இதன்மூலம் தீவக மக்களுடைய போக்குவரத்துத் தேவைகள் மேலும் இலகுபடுத்தப்படும். கடந்த காலத்தில் யாழ் – ஊர்காவற்துறை வீதி புனரமைக்கப்பட்டு, தரமுயர்த்தப்பட்டதை இங்கு நினைவு கூறுகின்றேன்.
ஏழாவதாக, எமது மக்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி, தொழில் வாய்ப்புக்களைப் பெருக்குவதற்கு 03 உப திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
அதில் முதலாவது உபதிட்டமாக, யாழ். மாவட்டத்தில் பசுப்பால் உற்பத்தியைப் பெருக்கி, அதனை சரியான முறையில் பதப்படுத்தி, சந்தைப்படுத்துவதற்குரிய வழிவகைகளுக்கான திட்டம் முன்மொழியப்பட்டிருக்கின்றது.
யாழ் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பாலினைக்கொண்டு எமது மக்களுக்கு உடன் பாலினை விநியோகிக்கவும், ஏனைய எஞ்சிய பாலினை பதப்படுத்தி சநதைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க முடியுமா?
இதற்கு ஏற்ற வகையில், தற்போது குடாநாட்டில் பெரும்பாலும் கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைகள் இல்லாத நிலையில் அதற்கான திட்டத்தினை மேற்கொள்ள முடியுமா?
உள்ளூர் கால்நடைத் தீவண உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் கால்நடைத் தீவணங்களை மக்கள் இலகுவாகவும், நியாய விலையிலும் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பினை உருவாக்க நடவடிக்கை எடுக்க முடியுமா?
குடாநாட்டில் கட்டாக்காலிகளான நிலையில் கைவிடப்பட்டுள்ள கால்நடைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது.
இரண்டாவது உப திட்டமாக, வதிரி தோல் உற்பத்தித் தொழிற்சாலையினை மேம்படுத்தும் திட்டமும் மூன்றாவது உப திட்டமாக, காமாட்சி அம்பாள் மென் இயந்திரவியல் (Light engineering) தொழிற்சாலையினை மேம்படுத்தும் திட்டமும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இத்தகைய திட்டங்கள் உண்மையில் எமது மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்ல, அவர்களுடைய சிறுதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை.
கடந்த காலத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மக்களுடைய சிறுகைத்தொழில் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டன. அந்த வகையில், மேற்படி இரு தொழிற் சாலைகளும் பல மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு,  செயற்படுத்தப்பட்டன. மேலும், பனை அபிவிருத்திச் சபை, கைத்தொழில் அபிவிருத்திச் சபை, வடகடல் நிறுவனம், தேசிய அருங்கலைகள் பேரவை, தேசிய வடிவமைப்புச் சபை  ஆகியவற்றின் மூலம் பல தொழில் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டன. அச்சுவேலியில் கைத்தொழிற்பேட்டை மீள நிறுவப்பட்டது. ஆனையிறவு உப்பளம் புனரமைக்கப்பட்டது.
அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையை மேலும் பலப்படுத்துவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா?
ஆனையிறவு உப்பள செயற்பாடுகள் எந்தளவில் உள்ளன?
எட்டாவதாக, வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியசாலைக் கழிவுகள் அகற்றும் திட்டமாகும். இதன்மூலம் வைத்தியசாலைகளினுடைய தொற்றுக் கிருமிகள் நீக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தகாலங்களில் யாழ். போதனா வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து ஆதார வைத்தியசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகள் ஆகியவற்றின் உள்ளக கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன. வைத்தியசாலைகளுக்குத் தேவையான ஆளணியினர் நியமிக்கப்படுவதற்கும்  உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஒன்பதாவதாக, யாழ். மாவட்டத்தின் வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி ஆகிய பகுதிகளில் காணப்படுகின்ற உள்ள+ராட்சி சபைகள் மூலம் உரிய முறையில் மலக்கழிவுகள் அகற்றப்படுவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்தந்தப் பிரதேசங்களினுடைய சுகாதாரம் மேம்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் உள்ளூராட்சி சபைகளுக்கு வேண்டிய கழிவகற்றல் உபகரணங்கள்,  தண்ணீர்த் தாங்கிகள், உழவு இயந்திரங்கள் என்பன வழங்கப்பட்டிருந்தன.
பத்தாவதாக, யாழ். மாநகர சபையினுடைய திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகளை மேலும் சீரான முறையில் மேற்கொள்வதற்குரிய நடைமுறைசார்ந்த திட்டமாகும். இதன்மூலம் நகரம் குப்பை இல்லா நகரமாகக் கூடிய வாய்ப்பு உருவாகும். கடந்த காலத்தில் மாநகரத்தில் முக்கியமான வீதிகள் பல காப்பெற் வீதிகளாகின. வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. நகரத்தின் உட்கட்டமைப்பு மற்றும் கால்வாய் வசதிகள் மேம்படுத்தப்பட்டன. மாநகர சபையினுடைய திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகள் சீராக நடைபெற்றதினையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு அகற்றப்படுகின்ற குப்பைகளைக்கொண்டு உயிரியல் வாயு உற்பத்தி மூலமான மின்சாரத்தைப் பெறவும், அதன் மூலமான கழிவுகளைக் கொண்டு இயற்கை உர உற்பத்திக்குமான ஒரு திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்க முடியுமா?
மேற்படி 10 திட்டங்களுக்குமான உத்தேச நிதியொதுக்கீடு எவ்வளவு என்பதனைத் தனித்தனியான திட்டங்கள் வாரியாகக் கூற முடியுமா?
மேற்படி 10 திட்டங்களை மேற்கொள்கின்ற ஒப்பந்த நிறுவனங்கள் எவை என்பதனைத் தனித்தனியாகக் கூற முடியுமா?
மேற்படி 10 திட்டங்களுக்குமான செயற்பாட்டுத் திட்டம் (Action plan) தொடர்பான விபரங்களைத் தனித்தனியாகக் கூற முடியுமா?
மேற்படித் திட்டங்கள் யாவும் எப்போது ஆரம்பிக்கப்பட்டு, எப்போது முடிவுறுத்தப்படும்?
இந்தத் திட்டங்கள் மூலம் வடமாகாண மக்களுடைய வாழ்வாதாரம், சுகாதாரம், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.
எமது மக்கள் ஒருபோதும் அபிவிருத்தியையோ, வாழ்வாதாரத்தையோ எதிர்த்தவர்கள் அல்லர். மக்களைக்காட்டி, மக்களுக்குத் தேவையில்லை என்று கூறி, அன்று தொடக்கம் இன்று வரை அபிவிருத்தியையும், வாழ்வாதாரத்தையும் எதிர்த்தவர்களால் எமது மக்களின் தேவைகள் பல பூர்த்தி செய்யப்படாத நிலையிலேயே உள்ளன.
அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களுடைய அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரம் தொடர்பில் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டுவரும் நாங்கள் இந்த 10 மக்கள் நலத் திட்டங்களையும் வரவேற்பதுடன், மேற்படி விடயங்கள் தொடர்பான எனது கேள்விகளுக்கான பதில்களை கௌரவ அமைச்சர் அவர்கள் வழங்குவாரென எதிர்பார்க்கிறேன்.

Related posts:

கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன? – பிரதமரிடம் டக்ளஸ் எம...
தகுதிகாண் அடிப்படையில் பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? - அமைச்சர் அர்ஜூன ரணது...
‘என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ ஊடாக வடக்கு மாகாணத்தில் இதுவரையில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? – நாடாளு...