இரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதில் வேறேதும் தடைகள் உள்ளனவா? –  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 9th, 2016

மண்டைக்கல்லாறு, குடமுருட்டிக்குளம், பாலியாறு ஆகிய புதிய குளங்களை இணைத்து அவற்றின் கொள்ளளவினை பெருக்கி அதனூடாக விவசாயத்தினை அபிவிருத்தி செய்வதுடன் நீர் விநியோகத்திற்கும் பயன்படுத்தலாம். இத்தகைய வளங்களை மேம்படுத்துவதன் மூலமும் யாழ்ப்பாண குடாநாட்டுக்கான எதிர்கால குடிநீர்த் தேவையினைப் பூர்த்தி செய்வதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நிலையியற் கட்டளை 23/2 இன் கீழ் எழுப்பப்படும் வினாக்கள் நேரத்தில் இன்று (09.06.2016)  வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் குறித்த விடயம் தொடர்பான முன்வைத்த உரையை எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.

யாழ் குடாநாட்டில் காணப்படுகின்ற நீர்  வளங்களைக் கொண்டு மக்களுக்கு உரிய அளவில் தரமான குடிநீரை வழங்க முடியாதுள்ளது. யாழ் குடாநாடானது நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில்,  அதிகளவான இரசாயனப் பதார்த்தங்களின் பாவனையாலும்,  திட்டமிட்டுக் கட்டப்படாத மலசலக்கூடங்களின் மலக்கழிவுகளினாலும், கழிவு ஒயில் கலப்பினாலும்,  தேவைக்கதிகமான நீரை விவசாயத்திற்கு எடுப்பதுடன் பம்பிகளை பாவித்து அளவுக்கதிகமான நீரை வெளியேற்றும் போது கடல்நீரானது உள்வந்து குடிநீரானது உவர்நீராவதனாலும் யாழ் குடாநாட்டின் தரைக்கீழ் நீர் வளமானது மாசடைந்தும், குறைந்தும் காணப்படுகின்றது.

மேலும், எமது மாவட்டத்தின் மழைவீழ்ச்சியானது சராசரியாக வருடத்திற்கு 1200mm ஆகவும்  அதன் ஆவியாக்கம் ஆனது 1800 mm ஆகவும் இருப்பதனாலும் போதியளவு நீரினை தேக்கி வைப்பதற்குரிய தரையமைப்பு இன்மையாலும் யாழ் குடாநாட்டு நீர்வளம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இவ்விடயங்கள் தொடர்பாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினாலும், நீர்வளச்சபையினாலும் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அரசாங்க திணைக்களங்களினாலும்; நடாத்தப்பட்ட ஆய்வுகளின்படி, யாழ் குடாநாட்டின் குடிநீரானது இலங்கை தர நிர்ணயத்திற்கு அமைவாக குடிப்பதற்கு உகந்ததாக  இல்லை என பலகாலங்களாகவும் பல மட்டங்களினுடாகவும் தெரியப்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில்,  யாழ் குடாநாட்டு நிலத்தடி நீரைப் பாதுகாப்பதனையும் யாழ் குடாநாட்டு மக்களின் குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்வதனையும் அடிப்படையாகக் கொண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் 1985ம் ஆண்டிலிருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு, 2005,2006 ஆம் ஆண்டு சாத்தியப்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, யாழ் குடாநாட்டின் தற்போதைய சனத் தொகையின் அடிப்படையில்  தேவைப்படும் குடிநீரின் அளவு 50,000 கனமீற்றர்/நாள் என அறியப்பட்டதாகத் தெரியவருகிறது. இது எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப அதிகரிக்கக்கூடும்.

இந்நிலையில் நீண்டகாலத்திற்கான தேவையை நிறைவு செய்வதனையும் நிலைத்திருக்கக் கூடியதான நீர் வழங்கல் சேவையினை மேற்கொள்ளுவதனையும் அடிப்படையாகக் கொண்டே யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தி;ட்டமானது 2006ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டது. இதன் பிரகாரம், இரணைமடுக்குளக்கட்டு 2 அடியால் உயர்த்தப்படும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் குளத்தின் கொள்ளளவு அதன் தற்போதைய கொள்ளளவாகிய 106,500 ஏக்கர் அடியிலிருந்து 120,000 ஏக்கர் அடியாக கூட்டப்படுமென்றும், மேலும் IFAD உதவியுடன் அரசாங்கத்தினால் கீழ்க்கால்வாய்கள் அனைத்தும் மீள்கட்டப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் நீரை சிறந்த முறையில் நெற்பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தக் கூடியதாக இருக்குமென்றும் தெரியவருகிறது. இக் குளத்தின் கொள்ளளவு 120,000 ஏக்கர் அடியாக அதிகரிக்கும் போது மேலதிகமாக கூட்டப்படும் 13,500 ஏக்கர் அடியில் 12,000 ஏக்கர் அடி நீரானது யாழ் குடாநாட்டு மக்களினுடைய குடிநீர்த் தேவைக்கு பாவிப்பதற்கான நோக்கத்தைத் திட்டம் கொண்டிருந்தது. அன்று, விடுதலைப் புலிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் இத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர். எனினும் அதன் பிற்பட்ட காலங்களில் ஒரு சிலரின் சுயலாப அரசியல் காரணமாக இத் திட்டம் தடைப்பட்டிருந்தது. இந் நிலையில், இரணைமடு குளத்தைப் புனரமைத்து, கிளிநொச்சி மாவட்ட விவசாய மக்களது தேவைகள் போக எஞ்சிய நீரை யாழ் குடாநாட்டு மக்களின் குடி நீர்த் தேவைக்கு கொண்டுவர வேண்டுமென்பது பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதே நேரம்,  மழைக்காலத்தில் இரணைமடுக்குள நீரை யாழ்ப்பாண குடிநீருக்கு பாவிக்க வேண்டும் என்றும் வறட்சி காலத்தில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் ஒரு சிலரிடம் காணப்படுகிறது. கடந்த 31.05.2016ம் திகதி யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இது காலங்கடந்த ஞானமாக இருப்பினும், இவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ உடன்பட்டிருக்கின்ற நிலையில் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டியுள்ளது. ஆரம்பத்திலேயே இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தடைகள் ஏற்படுத்தாது இருந்திருப்பின் இன்றைக்கு இத்திட்டத்தின் மூலமான பயன்களை எமது மக்கள் ஓரளவு பெற்றிருப்பார்கள். யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியோடு மலக்கழிவு நீரகற்றும் (Sewerage System ) திட்டம் யாழ்ப்பாண நகரில் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆயினும் இரணைமடுக்குளத்திலிருந்து நீர் பெறுவதில் ஏற்பட்ட இடர்பாடு காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

ஆயினும் பிரான்சிய நிறுவனமாகிய யுகுனு யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகம் நிறைவேற்றப்பட்ட பின்பு, மலக்கழிவு நீரகற்றல் திட்டத்திற்கு உதவுவதற்கு முன்வந்துள்ளதாகத் தெரியவருகிறது. இத் திட்டத்தை அன்றே ஏற்கப்பட்டிருந்தால், சம காலத்தில் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தால் இன்று எமது மக்கள் இதன் பயனை பெற்றிருப்பார்கள்.

மேலும், பூநகரிக்குளத்திட்டம் எனக்கூறப்படும் திட்டத்தினூடாக கொக்குடையான், மாளாப்பு, தேவன்குளம் ஆகிய குளங்களை இணைத்து உருவாக்குவதன் மூலம் அதன் கொள்ளளவை கூட்டுவதன்  ஊடாக சேகரிக்கப்படும் மழைநீரை விவசாயத்திற்கும் நீர்வழங்கலுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் இரணைமடுக்குளத்திற்கு மேல் கரிபட்ட முறிப்பு என்னும்  இடத்தில் வான்கதவு ஒன்றை அமைப்பதனூடாக மழைகாலத்தில் நீரை சேமிக்க முடிவதுடன் வறட்சி காலத்தில் இதனைப் பயன்படுத்த முடியும். ஆயினும், இத்திட்டமானது 2005,2006ஆம் ஆண்டுகளில் நிதி போதாமையினால் கைவிடப்பட்டது.

மண்டைக்கல்லாறு, குடமுருட்டிக்குளம், பாலியாறு ஆகிய புதிய குளங்களை இணைத்து அவற்றின் கொள்ளளவினை பெருக்கி அதனூடாக விவசாயத்தினை அபிவிருத்தி செய்வதுடன் நீர் விநியோகத்திற்கும் பயன்படுத்;தலாம். ஆகவே இத்தகைய வளங்களை மேம்படுத்துவதன் மூலமும் யாழ்ப்பாண குடாநாட்டுக்கான எதிர்கால குடிநீர்த் தேவையினைப் பூர்த்தி செய்வதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந் நிலையில், இரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதில் வேறேதும் தடைகள் உள்ளனவா என்பது குறித்து அறியத்தர முடியுமா?

அவ்வாறு தடைகள் இருப்பின், இத் திட்டத்தை முன்னெடுப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் என்ன என்பது பற்றி விபரிக்க முடியுமா?

தடைகள் ஏதும் இல்லாத நிலையில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு, அதனை நிறைவு செய்யக்கூடிய காலகட்டம் குறித்து கூற முடியுமா?

இத் திட்டமானது ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டதா அல்லது ஏதும் மாற்றங்களுக்கு உட்பட்டதா என்பது பற்றி கூற முடியுமா?

இத் திட்டத்துடன் இணைந்த சுகாதாரத் திட்டம் பற்றிய நிலைப்பாடு குறித்து கூற முடியுமா?

வறட்சி காலங்களில் யாழ் குடாநாட்டுக்கான சுத்தமான குடி நீரை வழங்குவதற்குரிய  என்னென்ன மாற்று ஏற்பாடுகள் இனங்காணப்பட்டுள்ளன என்பது பற்றிக் கூற முடியுமா?

மகாவலி திட்டத்தினூடான வட மத்திய மாகாண கால்வாய்த் திட்டத்தின் முதலாம் கட்டம் அனுராதபுரத்தை நோக்கியதாகவும், அதன் இரண்டாம் கட்டம் வடக்கை நோக்கியதாகவும் இருக்கும் நிலையில், இத் திட்டத்தை இரணைமடு உட்பட்ட வடக்கின் பிரதான குளங்களுடன் இணைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது பற்றி கூற முடியுமா?

அத்துடன், களுகங்கையை வடக்குடன் இணைக்கும் திட்டத்தை முன்னெடுத்தால், அப் பகுதி மக்களது குடி நீர்த் தேவைகள் மாத்திரமன்றி, இரு போகங்கள் உட்பட்ட உப உணவு உற்பத்திகளுக்கும் வசதியேற்படுவதுடன், இதனூடாக உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணக் கூடிய வாய்ப்புகளும் ஏற்படும் என்பதால் இத் திட்டத்தை முன்னெடுப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றனவா என்பது பற்றி கூற முடியுமா?

மேற்படி வினாக்களுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

Related posts:


யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்? அரசியல் தொடர்புகள் உண்ட...
புகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...
கிளிநொச்சி விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை இலவசமாக வழங்க ஏற...