அரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, March 8th, 2019

கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட்ட துரித அபிவிருத்தியின் நிமித்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘கம்பெரலிய’ வேலைத் திட்டமானது நாடு முழுவதிலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. மேற்படி வேலைத் திட்டமானது தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இத் திட்டத்தை வரவேற்கின்றோம். அந்த வகையில், இதுவரைக்காலமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மற்றும் இனங்காணப்பட்டுள்ள  கருத் திட்டங்கள் தொடர்பிலும், ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் கூறப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு மேற்படி கருத் திட்டங்களுக்கான நிதியை நேரடியாக ஒதுக்கப் போவதாகும் தற்போது கூறப்படுகின்றது. அதேநேரம், கிளிநொச்சி மாவட்டத்தில் ‘கம்பெரலிய’ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக முன்னெடுகப்பட்டு வருகின்ற வீதிகள் புனரமைப்பு பணிகள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமங்களுக்கு அமையாத வகையில், தரமற்ற வகையில் ஒப்பந்தக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனை மேற்பார்வை செய்ய வேண்டியர்வர்கள் அது தொடர்பில் அக்கறை காட்டுவதில்லை எனவும், இதன் பின்னணியில் சில அரசியல்வாதிகளின் அழுத்தங்கள் இருப்பதாகவும், இதன் காரணமாக எவ்விதமான தொழில்நுட்ப மேற்பார்வைகளும் இன்றிய நிலையிலேயே இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் முறையிட்டு வருகின்றனர். இதே நிலை ஏனைய பகுதிகளிலும் நிகழக்கூடும்.

அதேநேரம், இத்தகைய அரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றபோது, அதன் பெயர்களை தமிழ் மொழியிலும் குறிப்பிடுகின்ற நிலையிலேயே அத் திட்டங்கள் தொடர்பில் எமது மக்களுக்கும் உணர்வு ரீதியிலான ஓர் ஈர்ப்பு ஏற்படும். அதேநேரம், தேசிய நல்லிணக்கம் பற்றி கதைக்கின்ற நிலையில், மொழி உரிமைகள் பற்றி பிரஸ்தாபிக்கப்படுகின்ற நிலையில், இது அத்தியவசிமயானதொரு விடயமாகும் என்றே கருதுகின்றேன்.

அந்த வகையில் – ‘கம்பெரலிய’ எனும் சிங்கள சொற் பதத்துடன் அதற்குரிய அர்த்தத்தை; தரக்கூடிய ‘கிராமப் பிறழ்வு” அல்லது வேறு உரிய  தமிழ் சொற் பதத்தினையும் இணைத்து வழங்கப்பட முடியாதா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நிலையியற் கட்டளை 27/2 இன் கீழான கேள்வி நேரத்தின்போதே  நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இதுவரைகாலமும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்  மேற்படி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களது பெயர்களையும், அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகைகள் குறித்தும் விபரங்களை அறியத் தர முடியுமா?

மேற்படித் திட்டங்களின் தொழில்நுட்ப மற்றும் ஏனைய கண்காணிப்புப் பணிகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு உரியதொரு பொறிமுறையை வகுக்க முடியுமா?

போன்ற எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விபரங்களையும் கௌரவ நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

Related posts:

புகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...
கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புபை விரைவாக ஏற...
வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது எப்போது? ...

வன்னேரிக்குளம் பகுதியில் நெற் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? - நாடாளுமன்றில் டக...
அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந...
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்...