செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம

Saturday, May 20th, 2000

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே!

தனிமனிதப்படுகொலைகளால் எவராலும் எந்த இலக்கையும் அடைய முடியாது என்பதற்கு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாந்துபுள்ளே அவர்கள் மீதான படுகொலை ஓர் எடுத்துக்காட்டாகும். அமைச்சர் ஜெயராஜ் பெர்னாந்துபுள்ளே அவர்கள் இலங்கைத் தேசத்தின் ஓர் உத்தம புத்திரர். இலங்கைத் தீவில் வாழும் அனைத்து இன மத மக்களையும் இணைத்து வாழ்ந்த ஓர் உறவுப் பாலம். இலங்கை மக்கள் பேசுகின்ற இரு மொழிகளையும் சமமாக சிங்கள மொழியைப் போல் தமிழ்மொழியையும் தமிழ் மொழியைப் போல் சிங்கள மொழியையம் தன் இரு விழிகளாக நேசித்து இவ்விரு மொழிகளிலும் அனைத்து இன மக்களோடும் பேசி உறவு கொண்டு இன ஐக்கியத்திற்காக உழைத்து வந்தவர். நாம் விரும்புவது போல் சிவனும் புத்தரும் அல்லாஹ்வும் இயேசுவும் இலங்கை மக்கள் வணங்கும் தெய்வங்கள் எனக் கருதி மதவேறுபாடின்றி ஆன்மீக ரீதியாகவும் அனைத்து மக்களுக்கும் வழிகாட்டியவர். இந்த நாட்டில் நிலவும் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சுவார்தையின் ஊடகத் தீர்வு காண விரும்பி அதற்காக உழைத்துக்கொண்டிருந்தபோதே அவரைப் புலித்தலைமை ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்தது.

மனித குலத்தின் எதிரியான புலித் தலைமை இன்று இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களுக்கும் எதிரி  என்பதை உலகமே ஏற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் தலைவர்களைக் கொன்றொழித்த புலித் தலைமை சிங்கள மொழி பேசும் அரசியல் தலைவர்களையும் கொன்றொழித்து வந்திருக்கின்றது. தமிழ்பேசும் மக்களை மட்டுமன்றி சிங்கள முஸ்லிம் சகோதர மக்களையும் கொன்றொழித்து வந்திருக்கின்றது. அரசியல் தலைவர்கள் மீது தற்கொலைக்குண்டுதாரிகளை ஏவிவிட்டு தனிமனிதப் படுகொலைகளை நடத்தி வந்த புலித் தலைமை இன்று தற்கொலை செய்வதற்குத் தயாராகி வருகின்றது. ஆனால் நான் முன்னரே  குறிப்பிட்டதுபோல தனிமனிதப் படுகொலைகளினால் எவராலும் இந்த இலக்கை அடைய முடியாது என்பதற்கு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாந்து புள்ளே அவர்கள் மீதான படுகொலையே சிறந்த உதாரணமாக இருக்கின்றது. அவரைக் கொன்றொழிப்பதன் மூலம் இந்த நாட்டில்அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சித்து வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் எமது அரசாங்கத்தையும் ஆட்டம் காண வைக்கலாம் என்று புலித் தலைமை கனவு கண்டது. ஆனால் இன்று ஆட்டம் கண்டுகொண்டிருப்பது புலித் தலைமைதான். அரசாங்கம் அல்ல.

இன்று புலித் தலைமை தமது இருப்பைப் பாதுகாப்பதற்காகதமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக உலக நாடுகள் எங்கும் மக்களைத் தூண்டிவிட்டு ஊர்வலங்களையும் போராட்டங்களையும் நடத்தி விருகின்றது. அப்பாவி மனித உயிர்களைத் தீக்குளிக்க வைத்து அதில் அனுதாபம் தேடி தமது உயிர்களைப் பாதுகாத்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறது. ஆனால் உலகம் புலித் தலைமையின் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. காரணம் புலித் தலைமை மேற்கொண்ட தனிமனிதப்படுகொலைகள். இதுதான் உண்மை. புலித்தலைமையின் அடங்காத அருவருப்பான யுத்த வெறியினால் இன்று அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்ற துர்ப்பாக்கியச் சம்பவங்களே நடந்து வருகின்றன.ஆனால் இன்று அவ்வாறு தவறுதலாகக் கொல்லப்படுகின்ற அப்பாவி மக்களின் எண்ணிக்கையினைப் பல மடங்காங்கப் பெருக்கிக் காண்பிப்பதன் மூலம் புலித் தலைமை அனுதாபம் தேட முற்பட்டு வருகின்றது. இன்று தமிழ் பேசும் மக்கள் அவலங்களைச் சந்தித்து வருவதற்குக் காரணமானவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தான். இன்று இந்தப் பிரபாகரனுக்காக யுத்த நிறுத்தம் கேட்கும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நான் ஒன்றை மட்டும் கேட்கின்றேன். 40ஆயிரம் சவப் பெட்டிகளை யாழ்;ப்பாணத்தில் தயாராக வைத்திருங்கள் என்று உங்கள் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றில் நிகழ்த்திய கன்னிப் பேச்சில் கூறியபோது இந்த யுத்தத்தினால் மக்கள்தாம் அவலங்களைச் சந்திக்க வேண்டிவரும் என்று நீங்கள் ஏன் சிந்தித்திருக்கவில்லை? அத்துடன் இவர்கள் புலிகளின் வான்படை கொழும்பில் வந்து குண்டு போடும் என்று பாராளுமன்றத்தில் கூச்சலிட்டு இந்தியாவிற்கும் மற்றும் உலக நாடுகளுக்கும் தப்பிச் சென்றுவிட்டிருக்கிறார்கள். இன்று அவலங்களைச் சந்தித்து வருவது அப்பாவிப் பொதுமக்களே. ஆகவே எமது மக்கள் இன்று சந்தித்து வருகின்ற அவலங்களுக்குத் தமிழ் கூட்டமைப்பினராகிய நீங்களும்தான் காரணம்.

இன்ற எமது தேசம் சீழ்படிந்த ஒரு புண்ணாக இருக்கின்றது. அதனால் வலியும் வேதனையும் அதிகமாகி இருக்கின்றது. சீழ்படிந்த புண்ணுக்குள் ஒரு முள் இருக்கின்றது. அந்த முள்ளை அகற்றிவிட்டால் வலி தீரும்.வேதனை தீரும் புண் குணமடையும். இங்கே சீழ்பிடித்த புண்ணுக்கள் முள்ளாக இருப்பவர் புலித் தலைவர் பிரபாகரன்தான்  என்பதை நான் கூறிவைக்க விரும்புகின்றேன். படையினர் மடுவைக் கைப்பெற்றினால் நாங்கள் மதவாச்சியில் நிற்போம் என்ற புலிகளின் வீரவேசப் பேச்சைக் கேட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புல்லரித்தப் போய் நின்றிருந்தார்கள். ஆனால் இன்று என்ன நடந்திருக்கின்றது.? புலிகள் தங்களது பலாத்கராப் பிடிக்குள் வைத்திருந்த அகன்ற நிலப்பரப்பு கீரைப்பாத்தியாக சுருங்கிவிட்டது. இதற்கு யார் காரணம்? யுத்தத்தை வரிந்துகட்டித் தொடங்கிய புலித்தலைமையின் பலாத்கராப் பிடிக்குள் இருந்து மீட்டெடுத்து அனைத்து இன மத மக்களின் சுதந்திரமான வழிபாட்டுக்காகத் திறந்துவிட வேண்டுமெனக் கனவு கண்டவர் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே அவர்கள். அவரது கனவு நிறைவேறியிருக்கின்றது. விரைவில் மடுமாதா தேவாலயத்திற்கு அனைத்து மத மக்களும் சென்று வருவதற்கான சூழ்நிலையை உருவாக் கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எமது மக்களின் சார்பாக இந்தச் சபையில் ஒரு மனிதபிமான வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன்.

பிரபாகரனின் பங்கர் வாசலுக்குள் இப்போது உங்களால் செல்ல முடியாது. அதனால் நீங்கள் புலித் தலைவர் பிரபாகரனிடம்  அவலங்களைச் சந்தித்து வருகின்ற எமது மக்களை வெளியேற அனுமதிக்க வேண்டுமென்று அவரிடம் நீங்கள் பகிரங்கமாகக் கோரிக்கை எழுப்ப வேண்டும்.எமது மக்களின் அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் காரணமானவர்கள் நீங்களும் பிரபாகரனும்தான். ஆகவே அந்தக் கோரிக்கையினை எமது மக்களின் சார்பாக பிரபாகரனிடம் நீங்கள் விடுத்தால் அது நீங்கள் செய்த மாபெரும் வரலாற்றுத் தவறுகளுக்குப் பிரயச்சித்தமாக அமையுமென நான் நினைக்கின்றேன். எமது மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இதுவே எமது விருப்பம். புலித்தலைமை தம்மைப் பாதுகாப்பதற்காக எமது மக்களை மனித கேடயங்களாகத் தடுத்து வைத்திருக்கின்றது. ஆனாலும் புலித் தலைமையின் அச்சுறுத்தலையும் தடைகளையும் தாண்டி எமது மக்களில் ஒரு பகுதியினர் வெளியே வந்திருக்கிறார்கள் அவர்களது நலன்கள் பாதுகாக்கப்படும்.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாந்துபுள்ளே அவர்கள் விரும்பியதுபோல எமது மண்ணில் அமைதியும் சமாதானமும் இன ஐக்கியமும் செழித்து வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அமைதி சமாதானத்துடன் அரசியலுரிமை பெற்ற மக்களாக அனைத்து மக்களும் மகிழ்ந்து வாழும் அமைதிப் பூங்காவாக எமது தேசத்தை விரைவில் மாற்றவேண்டும். அதுவே மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாந்துபிள்ளை அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும். அதை மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அவர்கள் நிறைவேற்றி வைப்பாரென்பது எமது நம்பிக்கை. இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாந்துபுள்ளே அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி பிள்ளைகளுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகின்றேன். நன்றி.

20 மே 2000

Related posts:

வடமாகாணத்தில் பாழடைந்து கிடக்கும் அணுகு வீதிகள் பாலங்கள் எப்போது புனரமைக்கப்படும் - நாடாளுமன்றில் டக...
பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்தக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது - டக்ளஸ்...
அந்நியச் செலாவணி ஈட்டலுக்கான வழிவகைகள் இறுக மூடப்பட்டு கிடக்கின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ச...