13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் உருவாகும் தீர்வை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகின்றார்கள் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா

Friday, June 10th, 2016

13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் உருவாகும் தீர்வை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகின்றார்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (10) நாடாளுமன்றத்தல் உரையாற்றிய அவரது உரையின் முழு வடிவையும் எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!….

இலங்கைத்தீவானது ஓர் பல்லின தேசிய சமூக மக்களைக் கொண்ட நாடு.

அந்த வகையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்றே எமது நாடு தேசிய ரீதியாக அடையாளப்படுத்தப்பட்டும் வருகிறது.

ஆனாலும் நடைமுறையில் இங்கு வாழும் சிறுபான்மை தேசிய இனங்களின் அரசியலுரிமைகள் குறித்த பிரச்சினைகள் தீராப்பிரச்சினையாகவே இன்னமும் இழுபட்டு சென்று கொண்டிருக்கிறது.

அரசியல் ரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அரசியல் தீர்வொன்றை விரும்பி நிற்கும் எமது தமிழ் பேசும் மக்களின் சார்பாகவும் அபிவிருத்தி மற்றும் சகல வாழ்வியல் உரிமைகளுக்காகவும்  எதிர்பார்த்து காத்திருக்கும் எமது மக்களின் சார்பாகவும் எனது கருத்துக்களை இந்த அதியுயர் சபையில் நான் முன்வைக்கின்றேன்.

13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை  ஓர் ஆரம்பமாகக் கொண்டு அதற்கு மேலதிக அதிகாரங்களை/ விசேடமான அதிகாரங்களை/ சமச்சீரற்ற அதிகாரங்களை வழங்குவதன் மூலம் அரசியலுரிமைப்பிரச்சினைக்கான  தீர்வினை நோக்கிச் செல்லலாம் என்பதையே நாம் ஆரம்பம் முதல் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

ஆனாலும் அதை சக தமிழ் கட்சித் தலைமைகள் அன்று ஏற்றிருக்கவில்லை. காலம் கடந்தாவது சக தமிழ் கட்சிகள் 13 வது திருத்தச்சட்டம் குறித்து பேசவும் அதன் நடைமுறைகளில் பங்கெடுக்கவும் வந்திருக்கின்றன.

அந்த வகையில் எமது வழிமுறை நோக்கி அவர்கள் வந்ததை நாம் வரவேற்கின்றோம். இதேவேளை கையிலே அமுதசுரபி ஒன்றை வைத்துக்கொண்டு பிச்சைப்பாத்திரம் கொண்டு அலைவது போல்.

37 அதிகாரங்களை கொண்ட மாகாணசபை அதிகாரத்தையே நடைமுறைப்படுத்த விரும்பாமலும்; முடியாமலும் எமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று பிச்சைப்பாத்திரம் ஏந்தித் திரிகிறார்கள். கையில் கிடைத்திருக்கும் மாகாண சபை அதிகாரத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. புதிய அரசியலமைப்பு குறித்து யோசனைகளை முன்வைத்துக்கொண்டு திரிகிறார்கள்.

நாமும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை வரவேற்கின்றோம். அதற்கான எமது யோசனைகளையும் முன்வைத்திருக்கிறோம். அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லெண்ண முயற்சிகளை நாம் ஆதரித்தும் வரவேற்றும் வருகின்றோம்.

ஆனாலும் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் உருவாகும் தீர்வை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகின்றார்கள் என்பதே எனது கேள்வியாகும்.

முன்னாள் ஐனாதிபதி தடை என்றார்கள். முன்னாள் ஆளுனர் தடை என்றார்கள். முன்னாள் பிரதம செயலாளர் தடையென்றார்கள். ஆனால் ஆட்சி மாறி புதிய ஐனாதிபதியும் பிரதமரும் புதிய புதிய ஆளுனர்களும் புதிய பிரதம செயலாளரும் வந்திருக்கிறார்கள்.

மாகாணசபையை நடத்துவதற்கு தொடர்ந்தும் அடுத்தவர்களே தடையாக இருந்து வருவதாக குற்றும்சாட்டி வருவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வடக்கு மாகாண சபை என்பது சாதனைக்குரிய சபையாக இல்லாமல் சர்ச்சைக்குரிய சபையாகவே காணப்படுகின்ற நிலை தொடர்கிறது.

தமிழர் தரப்பில் இருந்து இன்று அரசியல் பலத்தோடு மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதேவேளை அதே தமிழ் கட்சி தலைமைகள் மாகாண அரசையும் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி புரிந்து வருகிறார்கள்.

எனினும் தமிழ் பேசும் மக்களின் நிலை நீடித்த துயரங்களாகவே தொடர்கிறது. இன்று அவர்களும் இதையே கூறுகின்றார்கள். வீதி புனரமைப்புகள் விட்ட குறையில் நிற்கின்றன. மத்திய அரசின் பொறுப்பில் இருக்கும் பிரதான வீதிகள் பெரும்பாலானவை புனரமைக்கப்பட்டு விட்டன.

ஆனாலும் மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் உள்ளூராட்சி சபைகள் செய்து முடிக்க வேண்டிய உள்ளூர் வீதிகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.மக்களுக்கு சொந்தமான காணி நிலங்கள் தொடர்ந்தும் மீட்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டிய எமது காணி நிலங்களை துரிதமாக விடுவிக்க வேண்டும். குறிப்பாக செழிப்பான வளம் கொண்ட விவசாய நிலங்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் போன்றவையும் இன்னும் விடுவிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது.

அத்துடன் மீள் குடியேறிய மக்களுக்கான வாழ்வாதார வசதிகள் மேலும் வளப்படுத்தப்பட வேண்டும். சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும்.

பொலிஸாரும் படையினரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கும் சனத்தொகைக்கும் ஏற்ற வகையில் நிலை கொண்டிருத்தல் வேண்டும்.வீடிழந்த மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். இதன்போது கடைப் பிடிக்கப்படுகின்ற இறுக்கமான நடைமுறைகள் தளர்த்தப்பட வேண்டும்.

வேலையற்ற பட்டதாரிகள் வேலை கேட்டு தவமிருக்கிறார்கள். சுகாதாரத்தொண்டர்கள் வேலை கேட்டும் நிரந்தர நியமனம் கோரியும் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள். விசேட திட்டம் என்ற வகையில் சமுர்த்தி நிவாரணங்கள் மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு அதிகரிக்கப்பட வேண்டும். சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையும் மக்களின் வாழ்நிலைக்கு ஏற்றவாறு அதிகரிக்கப்பட வேண்டும்.

கௌரவ பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்கள் யுத்த அனர்த்தங்களினால் தமது உடலில் குண்டுத்துகல்களையும் ஆயுத சிதறல்;களையும் சுமந்து வாழ்கின்றவர்களுக்கு அரசு விஷேட வைத்தியர்களைக் கொண்டு உதவிகளை வழங்கும் என்று அறிவித்திருப்பதை வரவேற்கின்றேன்.

அந்த அறிவிப்பு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும் பாதிக்கப்பட்டவர்கள் நன்மையடைவதையும் உறுதிப்படுத்தடவும் அவசியமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவேண்டும்.

யுத்தம் காரணமாக அங்கவீனங்களை எதிர்கொண்டுள்ளோர் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் முன்னாள் இயக்கங்களின் போராளிகள் போன்றோரது வாழ்வாதரங்கள் தொடர்பில் விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

புகையிரதத்தில் பயணம் செய்யும் அங்கவீனமுற்ற படையினருக்கு இன்று முதல் சிறப்பு பயண அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனைப் பயன்படுத்தி அவர்கள் சாதாரண பயணச்சீட்டில் 50 வீத சலுகையைப் பெற்றுக் கொண்டு பயணிக்க முடியும் என்றும் புகையிரத திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை வரவேற்கின்றேன். போரினால் தமது அங்கங்களை இழந்த எமது நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும் இதுபோன்ற சலுகைகளும் முன்னுரிமைகளும் வழங்கப்படுவது அவசியமாகும். ஆனால் இதுபோன்ற சலுகைகளும் முன்னுரிமைகளும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும். போரை வெற்றி கொள்ள படையினர் போராடியதைப்போல் போர் வெற்றி கொள்ளப்படுவதற்கு தமிழ் மக்கள் தம்மை அர்ப்பணித்திருக்கின்றார். அதில் பெறுமதிமிக்க உயிர்களையும் தமது அங்கங்களையும் உடமைகளையும் இழந்திருக்கின்றார்கள் என்பதையும் கவனத்தில் எடுப்பது அவசியமாகும். அதுவே தேசிய நல்லிணக்கத்தை அர்த்தபூர்வமாகக் கட்டியெழுப்பவும் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்கவும் உதவும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Related posts:


மலையக மக்களும் இலங்கையின் இறையாண்மையுள்ள தமிழ் மக்கள்தான்- நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்த...
தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்துகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...
நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் - வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்....