மதவாத ரீதியில் மக்களை வழிநடத்த யாரேனும் முயற்சித்தால் நாடு அழிவுகளை சந்திக்க நேரிடும் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 4th, 2019

இன்று இந்த நாட்டிலே அரசியல் ரீதியிலாக சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களை இந்த அரசாங்கம் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்வர வேண்டும். அவ்வாறின்றி, தொடர்ந்தும் இனவாத ரீதியிலானதும், மத அடிப்படைவாத ரீதியிலானதுமான பாதையில் அரசியலை முன்னெடுத்து, மக்களை வழிநடத்திக் கொண்டு செல்வதற்கு யாரேனும் முயற்சிப்பீர்களேயானால், அது இந்த நாட்டுக்கு மேலும், மேலும் அழிவுகளையே கொண்டு தரும் என்பதில் மறு பேச்சுக்கு இடமில்லை என்பதையே நான் இங்கு மீண்டும், மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இலங்கை தேயிலை ஆராய்ச்சி சபை தொடர்பிலான திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதத்;தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மாற்றங்கள் ஏற்படுகின்ற நிலையில், அந்த மாற்றங்கள் எதன் அடிப்படையில் நிகழ்த்தப்படுகின்றதோ அந்த அடிப்படைகளின் முக்கியத்துவமாக இருக்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

அதைவிடுத்து, குறுகிய, சுயலாப அரசியலுக்காக ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றை நியாயப்படுத்தியும், இன்னொரு சந்தர்ப்பத்தில் அதையே குற்றஞ்சாட்டியும் சில தமிழ் அரசியல் வியாபாரிகள் போன்று செயற்படுவதால், இந்த நாட்டில் எதையுமே உங்களிடமிருந்து எமது மக்களால் எதிர்பார்க்க முடியாது என்பதையும் அவதானத்தில் கொள்ள வேண்டும்.

இன்று சகோதர முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டாக தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து, சுதந்திரமான விசாரணைகளுக்கென ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். இரண்டு ஆளுநர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதில் இருந்து தொடர்ந்தும் இவர்களில் ஒரு சிலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள், பல்வேறு தரப்பினரால் சுமத்தப்பட்டு வந்திருந்தது.

இப்போது, அத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு காலக்கெடு விடுத்து, முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். எனவே, இந்த அரசு உடனடியாக அதை செய்து முடிக்க வேண்டும். அத்துடன், இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். பிச்சைக்காரனின் புண்ணைப் போல் தொடர்ந்தும் இந்தப் பிரச்சினையை வைத்துக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சினை காரணமாக இன்று இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பற்றதொரு அச்ச நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த மக்களின் இத்தகைய நிலை விரைவில் மாற்றப்பட வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்திக் கொண்டு, இன்றைய விடயத்திற்கு வருகின்றேன்.

எமது நாட்டின் அந்நியச் செலாவணியில் இன்னனமும் ஒரு நிரந்தரமான ஈட்டல் துறையாக விளங்குகின்ற தேயிலை உற்பத்தித் துறை தொடர்பில்கூட தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற உழைப்பாள மக்களின் வாழ்க்கை நிலையினைப் போன்று, தொடர்ந்தும் துயரமான விடயங்களையே அவதானிக்கக் கூடியதாக இருப்பது வேதனை தருகின்ற வகையிலேயே அமைந்திருக்கின்றது.

அண்மையில்கூட ‘சிலோன் ரீ என்கின்ற இந்த நாட்டின் அபிமானத்திற்குரிய தேயிலை ஏற்றுமதியின் போது, ஜப்பான் நாட்டின் சிகப்பு அறிவிப்பிற்கு அது உட்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

1980 – 90 களில் இந்த நாட்டின் ஏற்றுமதித்துறையில் மிக முக்கிய பங்கினை தேயிலை ஏற்றுமதியானது வகித்திருந்தது. குறிப்பாக, 1990ஆம் வருடத்தில் 215.6 மெற்றிக் தொன் கிலோ தேயிலையினை ஏற்றுமதி செய்த நாடாக உலகின் முதலாவது இடத்தை இலங்கை பெற்றிருந்தது.

ஆனால், அதன் பின்னரான காலகட்டங்களில் தொடர்ந்து வரும் தேயிலை செய்கை தொடர்பிலான புறக்கணிப்புகள், அத் துறையில் ஈடுபடுகின்ற மக்கள் தொடர்பிலான புறக்கணிப்புகள், கலப்படம்; போன்ற பல்வேறு காரணிகள் இன்று அத்துறையினை மிகவும் அழிவு நிறைந்த பாதைக்கே இட்டுச் சென்றுள்ளது என்றே கூற வேண்டும்.

இந்த நாட்டு தேயிலை உற்பத்தியில் சீனி, வர்ணங்கள் என்பவை கலப்படம் செய்கின்ற தொழிற்சாலைகள் பல இருப்பதாகவும், அத்தகைய 53 தொழிற்சாலைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், மேற்படி கலப்படத் தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமென்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கூறியிருந்ததாகவும் கடந்த வருடம், பெப்ரவரி மாதம் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

அதற்கு முந்தைய வருடம் இலங்கைத் தேயிலைக்கு ரஷ்யாவினால் இடைக்காலத் தடையொன்று விதிக்கப்பட்டிருந்தது.

இப்போது, இந்த வருடத்தில் இலங்கை தேயிலை தொடர்பில் ஜப்பானின் புறக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, அழிவுதரக்கூடிய இரசாயனக் கலப்பு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த இலங்கைத் தேயிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயனம்  கொண்ட களைநாசினி பயன்படுத்தப்பட்டு, தேயிலை செய்கைகள் மேற்கொள்ளப்படுவதே இதற்கக் காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த வகையில், தேயிலையின் தரத்தினை பழுதடையச் செய்கின்ற செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? என்ற கேள்வி எழுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்த தற்கொலைத் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியது யார்? என்ற கேள்விக்கு இதுவரையில் உரிய பதில் கிடைக்காதிருப்பதைப் போன்று, இல்லாமல், தேயிலை உற்பத்தி தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய சட்டரீதியிலான நிறுவனம் இலங்கை தேயிலைச் சபையே எனக் கூறப்படுகின்றது.

இருந்தும், இலங்கை தேயிலையின் தரம் தொடர்பில் தொடர்ந்தும் ஏதாவதொரு பிரச்சினை எழுந்து கொண்டேதான் இருக்கின்றது. தரமற்ற தேயிலைச் செடிகள் விநியோகங்கள் மற்றும் வளர்ப்பு தொடர்பில் கடந்த ஆண்டு பிரஸ்தாபிக்கப்பட்டது. இவ்வறு எழுகின்ற பிரச்சினைகள் தொடர்பில், அவ்வப்போது உரிய தீர்வுகள் எட்டப்படாமல், அவை பாரிய பிரச்சினைகளாக உருவாகின்ற வரையில் பார்த்துக் கொண்டிருக்கின்ற வழக்கம் காரணமாகவே இந்த நாட்டில் தேயிலைத் துறை மட்டுமல்லாது, பல்வேறு துறைகளும் இந்த நிலைக்கு வந்துள்ளன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்

இதுவரைக் காலமும் தமிழ் மக்களின் நலன்கள் சார்ந்து செயற்படாமல், கிடைத்த சந்தர்ப்பங்களை நாசமாக்கிவிட்டு, இனிமேல்தான் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பாகச் சிந்தித்து நிதானதாகச் செய்றப்படப் போவதாகக் கூறுகின்ற தமிழ்த் தலைமைகளின் இன்றைய நிலைமை போலவே இருக்கின்றது இந்த நாடும், நாட்டின் அனைத்துத் துறைகளும் என்றே கூற வேண்டியிருக்கின்றது

இவ்வளவு காலமும் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் தாங்கள் சிந்தித்து செயற்படவில்லை என்பதை இப்பேதாவது இந்தத் தமிழ்த் தலைமைகள் ஏற்றுக் கொண்டுள்ளன. அதேபோன்று, இந்தத் தமிழ்த் தலைமைகளை நம்பி அழிவுகளினபால்; போயுள்ள தமிழ் மக்களைப் போன்றே, இந்த நாட்டின் அழிவுகளின்பால் போயுள்ள ஏனைய அனைத்துத் துறைகளையும் கட்டியெழப்புவது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டிய ஏற்பாடுகள் தேவை என்பதை இங்கு வலியுறுத்துவதுடன், அந்த ஏற்பாடுகள் இந்தத் தமிழ்த் தலைமைகளின் வெறும் வாய் வார்த்தைகளாக மாத்திரம் இருந்து விடாமல், செயற்பாட்டு ரீதியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

தேயிலை உற்பத்தி சார்ந்த  தொழிற்துறையில் ஈடுபட்டிருக்கின்ற மலையக மக்கள் தொடர்பில் உரிய அவதானங்கள் செலுத்தப்படாத நிலைமையும் தொடர்ந்து கொண்டே இருப்பதையும் காண்கின்றோம். தொழில் இடங்களில் அவர்கள் பல்வேறு இடையூறுகளுக்கு உட்படுகின்றனர். ஊதிய ரீதியில் இன்னமும் மிகவும் பின்தள்ளப்பட்டே வைக்கப்பட்டுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை பல்வேறுபட்ட வடிவங்களில் ஆராய்வது, தொழில் பற்றாக்குறையை தவிர்த்தல், தொழில் வினைத் திறனை மேம்படுத்தல், கல்வி ஒத்துழைப்பு தொடர்பில் ஒப்பந்தம் ஒன்று மிச்சிகன் ஆiஉhபையn   பல்கலைகழகத்திற்கும் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுகத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட இருந்ததாக கடந்த வருடத்தில் அறியக் கிடைத்திருந்தது. அதன் இன்றைய நிலை என்ன என்பது பற்றி அறிய விரும்புகின்றேன்.

குறிப்பாக, தோட்டத் தொழிலாள மக்களின் வாழ்க்கை நிலை மேமப்படுத்தப்பட்டால், அவர்களது சமூக, பொருளாதார நிலை மேம்படுத்தப்பட்டால், வினைத் திறன் ரீதியில் அவர்களது உழைப்பினை மேலும் பெற இயலும் என நினைக்கின்றேன். 50 ரூபா ஊதிய அதிகரிப்பொன்று அவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது. இன்று அதைப் பற்றி எந்தக் கதையுமே கிடையாது.

இன்றும் கூட குழவி கொட்டுகள் உள்ளிட்ட பல்வேறு மிருகங்களின் அச்சுறுத்தல் நிலைமைகளுக்கு மத்தியில் தொழில் செய்கின்ற நிலையிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய சூழலை ஏற்படுத்துவது அவசியமாகின்றது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதேநேரம், தொடர்ந்தும் தேயிலையை வெறும் மூலப் பொருளாகவே ஏற்றுமதி செய்து கொண்டிருக்காமல், பெறுமதி சேர்க்கப்பட்ட பொருளாக ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தேவை என்தையும் அவதானத்தில் கொள்ள வேண்டும். அதாவது, ‘உடனடி தேநீர் தொடர்பில் உலகில் பாரிய கேள்விகள் இருப்பதாகவே தெரிய வருகின்றது.

தேயிலை ஏற்றுமதியில் இன்று நாம் பல நாடுகளுடன் போட்டிப் போட வேண்டியுள்ளது. அதற்கேற்பவே எமது உற்பத்தியின் தரத்தினை மேம்படுத்துவதற்கும், பெறுமதி சேர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அயலக இந்தியாவைப் பொறுத்த வரையில், தேயிலையுடன் பல்வேறு மருத்துவப் பொருட்கள் சேர்க்கப்பட்ட ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கப்பட்டு, சந்தையிலே பிரபலமாகியுள்ளன. இலங்கையில்கூட ஒரு சில தனியார்த் துறையினர் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், அதற்கான ஊக்குவிப்புகள் மற்றும் கண்காணிப்புகள் என்பன தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தற்போதுகூட இந்த நாட்டின் தேயிலைக் கைத் தொழிலானது முழுமையாகவே தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏலம் விடுவோர் போன்ற அரசுக்கு அப்பாற்பட்ட துறையினரின் மூலமாகவே கையாளப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்ற நிலையில், இதில் உடனடி  மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அத்தகையதொரு நிலை வரும்வரையில், இலங்கைத் தேயிலையின் தரம் தொடர்பில் உறுதியிட முடியாத நிலை தொடர்வதைத் தவிர்க்க முடியாது என்பதையும் வலியுறுத்துகின்றேன்.

Related posts:

வன இலாக்காவால் அபகரிக்கப்பட்டுள்ள மன்னார், குஞ்சுக்குளம் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - செயலாளர் ந...
களுத்துறை சிறை தாக்குதலில்  நான் ஒரு கண்பார்வையை இழந்தேன் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி
குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம...