உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை உழைக்கும் மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்கும் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, September 17th, 2019


மலையகத் தோட்டத் தொழிலாள மக்களின் ஊதியம் தொடர்பிலான பிரச்சினைகள் – அதாவது அம்மக்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை தீர்க்கப்படும் வரையில் அம் மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றே கூற வேண்டியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற சிரம வாசனா எனப்படுகின்ற உழைப்பு அதிஸ்ட நிதியம், சம்பளச் சபைகள் திருத்தச் சட்டமூலம் மற்றும் தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள் என்பன தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த நாட்டின் தொழிலாளர்கள் தொடர்பில் கதைக்கின்றபோது முக்கியமாக இரு துறைகள் சார்ந்த உழைப்பாளர்கள் தொடர்பிலான பிரச்சினைகளே மிக அதிகளவில் முன்னணி வகிப்பதாகக் கூற முடியும்.

ஒன்று, மலையகத் தோட்டத்துறை சார்ந்த உழைப்பாளர்களது பிரச்சினைகள். இரண்டாவது சுதந்திர வர்த்தக வலைய ஆடைத் தொழிற்சாலைகள் சார்ந்த பெண் உழைப்பாளர்களது பிரச்சினைகள். இந்த இரு துறைகளும் இன்று இந்த நாட்டின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறைகளாக விளங்குகின்றன.

மலையகத் தோட்டத்துறை தொழிலாள மக்களது ஊதியப் பிரச்சினை என்பது, ஏதோ வலுக்கட்டாயமாக வழங்கப்படுகின்ற நிவாரணங்களைப் போன்று அல்லது கப்பம் செலுத்த வேண்டியிருப்பதைப்போன்று நிர்வாகத் தரப்பினரால் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

உண்மையிலேயே அம் மக்கள் உங்களிடமிருந்து நிவாரணமாகவோ அல்லது கப்பமாகவோ இந்த ஊதிய உயர்வினை எதிர்பார்க்கவில்லை. அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியத்தையே எதிர்பார்க்கின்றனர். அதைக்கூட உயர்த்துவதற்கு வருடக் கணக்கில் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டு, இழுத்தடித்து வருகின்ற நிலையே இன்னமும் தொடர்கின்றது.

இந்த மக்கள் தேயிலைக் கொழுந்தில் விரல்களை வைக்காவிட்டால் இந்த நாட்டின் பொருளாதாரமே தேய்ந்துவிடும் என்பது தெரிந்தும், மிக சுலபமாக அம்மக்களை ஏமாற்றி வருவதற்கு, தோட்ட நிர்வாகங்களும், மறுபக்கத்தில் அம்மக்களது சந்தா பணங்களில் செயற்படுகின்ற சில தொழிற் சங்கங்களும் செயற்பட்டு வருவதானது மிகவும் வேதனையான விடயமாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இத்தகைய நிலையில் மலையக தோட்டத் தொழிலாள் மக்களது ஊதியத்துடன் ஐம்பது ரூபாவை அதிகரிப்பதற்கான முயற்சிகள் வாய்மூலமாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தது எனவும் கூறப்பட்டது. இந்த ஐம்பது ரூபா பற்றி பலரும் வானளவாகப் புகழ்ந்து வேதம் ஓதிக் கொண்டும் இருந்தனர். இருந்தும், இன்று வரையில் அது சாத்தியமாகவில்லை.

இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான இந்தத் தொழிலாள மக்களுக்கு ஒரு ஐம்பது ரூபாவையேனும் வழங்க முடியாமல், அம்மக்களைக் கட்டியெழுப்புவோம், தூக்கி நிறுத்துவோம் என வெறும் வாயால் கதைகளை அளந்து கொண்டிருப்பது வெட்கமாக இல்லையா? எனக் கேட்கத் தோன்றுகின்றது.

அத்துடன், மேற்படி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற மிகவும் குறைவான நாளாந்தச் சம்பளங்களும் வெட்டப்படுகின்ற நிலையும் தொடர்கின்றன.

குறிப்பாக, பணிக்குத் தாமதமாக வருதல், நாள் ஒன்றுக்குப் பறிக்கப்பட வேண்டிய கொழுந்தின் அளவு குறைந்திருத்தல் போன்ற காரணங்களை முன்வைத்து பல தோட்ட நிர்வாகங்கள் இந்தச் செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாகத் தெரிய வருகின்றது.

இத்தகைய செயற்பாடுகள் பல காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இலங்கையின் சில பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களது சம்பளமானது சட்டவிரோதமான முறையில் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி வெட்டப்படுவதாக தொம்சன் ரொய்டர்ஸ் பவுண்டே~ன் அமைப்பு  தகவல்களை வெளியிட்டிருந்தது.

அத்துடன், இந்தச் சம்பள வெட்டு விடயமானது இலங்கையின் கைத்தொழில் பிணக்குச் சட்டம், சம்பள நிர்ணய சபையின் கட்டளைச் சட்டம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் உட்பட பல்வேறு தொழிலாளர் சட்டங்களை மீறுபவையாக உள்ளதாகவும் இலங்கையின் சட்டத்துறை சார்ந்த பலரும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

இத்தகைய பல்வேறு பாதிப்புகளை தங்களது கடின உழைப்பின் முன்னால் எதிர்நோக்கி இருக்கின்ற மலையகத் தோட்டத் தொழிலாள மக்களின் ஊதியம் தொடர்பிலான பிரச்சினைகள் – அதாவது அம்மக்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை தீர்க்கப்படும் வரையில் அம் மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றே கூற வேண்டியிருக்கின்றது.

உயர்ந்த இடங்களில் குடியமர்ந்திருந்தாலும் இம் மக்களது வாழ்க்கை நிலைமைகள் இன்னும் உயர்த்தப்படவில்லை என்பதை உணர்ந்து, அம் மக்களையும் இந்த நாட்டின் ஏனைய சமூக மக்களைப் போன்று அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் சமநிலைப்படுத்துவதற்கான எற்பாடுகள் அவசியம் என்பதையே நான் மீண்டும், மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சுதந்திர வர்த்தக வலைய ஆடைத் தொழிற்சாலைகளில் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களது நிலைமைகளும் சம்பள விடயங்களைப் பொறுத்தமட்டில் மிகவும் பின்தங்கிய நிலையியே காணப்படுகின்றன. பொருளாதார நிலையில் மிகவும் பின்னடைந்த, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற தூர இடங்களைச் சேர்ந்த பெரும்பாலான யுவதிகள் – பெண்கள் தங்களது வாழ்க்கை நிலையை ஓரளவுக்கேனும் வடிவமைத்துக் கொள்வதற்காக இத்துறையை நாடி வருகின்றனர்.

ஆனால், இவர்களது உழைப்பினை முடிந்தவரையில் உறிஞ்சுகின்ற நிர்வாகத் தரப்பினர், இவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற சம்பளம் தொடர்பிலோ, இவர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் தொடர்பிலோ அக்கறை கொள்ளாத நிலைமைகளே காணப்படுகின்றன. இந்தப் பெண் உழைப்பாளர்களது ஊதிய உயர்வுகள் தொடர்பில் ஊதிய நிர்ணய சபையினால் எத்தகைய ஏற்பாடுகளை மெற்கொள்ள முடியும்? என்கின்ற கேள்வி எழுகின்றது.

குறிப்பாக, தனியார்துறையைப் பொறுத்த மட்டில் ஊதிய நிர்ணய சபையானது மூன்றில் ஒன்றுக்கும் குறைந்த தொகையினருக்கே உரித்தாகின்றது எனவும் கூறப்படுகின்றது. ஏனைய பெரும்பாலான பணியாளர்களுக்கு இச் சபையானது உரித்தற்ற வகையிலேயே அமைந்துள்ளதாகவும் தெரிய வரும் நிலையில், தனியார்துறை பணியார்களது சம்பளப் பிரச்சினை தொடர்பில் பாதுகாப்பற்றதொரு நிலைமையே இந்த நாட்டில் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது.

இந்த சம்பள நிர்ணய சபையானது தனியார்துறைப் பணியாளர்களது சம்பளத்தை உயர்த்துகின்ற நிலையிலும், அந்த சம்பள உயர்வானது, புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்ற பணியாளர்களது ஆரம்ப சம்பளம் தொடர்பில் சம்பந்தப்படுகின்றதே அன்றி தற்போது பணியில் இருக்கின்ற பணியாளர்களது சம்பளத்தை உயர்த்துவதற்கு சம்பள நிர்ணயச் சபைக்கு உரிமை இல்லை எனவும் கூறப்படுகின்றது.

எனவே, இத்தகைய தொழிலாளர்கள் சார்ந்த சட்டங்கள் திருத்தப்பட்டு, அனைத்து உழைக்கும் மக்களுக்கும் போதிய பயன்களை அடையக்கூடிய வகையில் அவை மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அனைத்தத் தனியார்துறை பணியாளர்களினதும் ஊதியம் உள்ளிட்ட தொழில் ரீதியிலான பாதுகாப்பினை முழுமையாக வழங்குவதற்குச் சட்டங்களால் இயலாதுள்ள நிலையில், தற்போது தனியார்துறை சார்ந்து நடைமுறையில் இருந்து வருகின்ற 54 தொழிலாளர் கட்டளைச் சட்டங்களுக்குப் பதிலாக ‘ஒற்றை தொழிலாளர் சட்டம்’ என்கின்ற தனி தொழிலாளர் சட்டம் ஒன்று கொண்டு வரப்படுவதற்கான ஆயத்தங்கள் தொடர்பிலும் அண்மைக் காலமாகப் பேசப்பட்டு வருகின்றது.

இந்தப் புதிய சட்டத்தைக் கொண்டு வருவதில் அமெரிக்க யூ. எஸ். ஏட் அமைப்பின் தலையீடு இருப்பதாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டும் வருகின்றது.

இந்தச் சட்டமானது தொழில் அமைச்சுக்குத் தெரியாத வகையில், அபிவிருத்தி மூலோபாய மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சானது யூ. எஸ். ஏட் அமைப்பின் உதவியுடன் இதனை மேற்கொண்டு வருவதாகவும், இதன் மூலம் தனியார்துறைப் பணியாளர்கள் தற்போது அனுபவித்து வருகின்ற சொற்ப உரிமைகளும் பறிக்கப்பட்டு விடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டும் வருகின்றது.

குறிப்பாக, தனியார்துறை தொழில்வாய்ப்புகள் தொடர்பிலான அனைத்து நிபந்தனைகளையும் வகுக்கின்ற அதிகாரத்தை முதலாளிமார்களிடம் வழங்குவது, இதற்கென சம்பள நிர்ணய சபையினை இரத்துச் செய்து தனியார்துறையின் அனைத்துத் தொழிற்துறை மற்றும் பணிகள் தொடர்பிலான குறைந்தபட்ச சம்பளத்தைத் தீர்மானிக்கின்ற அதிகாரத்தை முதலாளிமார்களிடம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை இந்த ஒற்றை தொழிலாளர் சட்டம் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

இத்தகைய ஏற்பாடானது, அடிப்படையில் தொழிலாளர் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை மீறுகின்ற ஏற்பாடாகும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்ற நிலையில், தொழில் அமைச்சு இது தொடர்பில் என்ன விளக்கங்ளைக் கொண்டிருக்கின்றது? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் சுமார் 7 இலட்சம் பேர் உள்@ர் வீட்டுப் பணிகளில் ஈடபட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இதில் அதிகமானவர்கள் – அதாவது நூற்றுக்கு 75 சத வீமானவர்கள் தமிழ் மக்களாகவும், நூற்றுக்கு 15 வீதமானோர் முஸ்லிம் மக்களாகவும், ஏனைய 10 வீதமானோர் சிங்கள மக்களாகவும் உள்ளதாகப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

வீட்டுப் பணியாளர்களைப் பொறுத்த வரையில் சுமார் 80 வீதமானவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். 18 வயது முதற் கொண்டு 72 வயது வரையிலானவர்கள்  இத்தகைய வீட்டுப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வருவதுடன், அதிகமாக 30 வயதிற்கும் 45 வயதிற்கும் இடைப்பட்டவர்களே இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்ற நிலைமை காணப்படுகின்றது.

இந்தப் பணியாளர்களும் தங்களது தொழில் சார்ந்த பாதுகாப்புகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே பணியாற்றி வருகின்றனர். அத்துடன் பல்வேறு பிரச்சினைகளுக்கு நாளாந்தம் முகங்கொடுக்கின்றவர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.      

தற்போது வீட்டுப் பணியாளர்களுக்கெனவும் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அச்சங்கமானது வீட்டுப் பணியாளர்களது உரிமைகள் தொடர்பில் அதிகளவு அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்ற போதிலும், அச் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அந்தளவு அக்கறை காட்டுவதாக இல்லை என்றே தெரிய வருகின்றது.

எனவே, இத்தகைய தொழிலாளர்கள் அனைவரதும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையிலான திருத்தங்களைச் சட்டங்களில் மேற்கொள்வதுடன், அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும், மீறுமிடத்து சட்ட ரீதியிலான தண்டனைகளுக்கு உட்படுத்துவதற்கும் கடுமையான ஏற்பாடுகள் தேவை என்பதை வலியுறுத்திதுகின்றேன்.

Related posts:


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! நாடாளுமன்றில்  செயல...
திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியை புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு  டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோ...