வ ரிகள் மக்களின் உழைப்பபை சுரண்டுவதாக அமைந்துவிடக்கூடாது – டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து!

Thursday, September 5th, 2019

ஏற்றுமதி அபிவிருத்தித் துறையின் முன்னேற்றம் கருதி 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் 2000 ஏற்றுமதியாளர்களை நிலைப்படுத்தப் போவதாகவும், அதற்கான அறிவுறுத்துகின்ற செயலமர்வுகள் மாகாண ரீதியிலாக மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டு, கடந்த வருடம் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்ப செயலமர்வு மாத்தறை மாவட்டத்தில் நடைபெற்றிருந்ததாகவும் கூறப்பட்டது.

மேற்படி நோக்கமானது முறையாகக் கையாளப் பட்டிருந்தால், தற்போதைக்கு 1500க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் நிலை பெற்றிருப்பார்கள் என நம்புகின்றேன்.

ஆனால், சொல்வதொன்று, செய்வதொன்று, நடப்பதொன்று என்ற இந்த ஆட்சியாளர்களின் கோட்பாட்டுக்கமைவாக இதுவரையில் எத்தனை ஏற்றுமதியாளர்கள் நிலைப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்? என்பது தெரியவில்லை.

என்னதான் ஏற்றுமதியாளர்களை அதிகரிப்பது, நிலைப்படுத்துவது எனக் கூறிக் கொண்டாலும், எமது ஏற்றுமதி அபிவிருத்தித் துறையானது பல்வித தன்மையினைக் கொண்டிருத்தல் அவசியமாகின்றது.

குறிப்பாக, ஆரம்ப காலங்களிலே இந்த நாட்டு ஏற்றுமதிப் பொருட்கள் என்ன என்றால், தேயிலை,  இறப்பர், தெங்கு என்ற நிலை மாறி இப்போது தேயிலை, ஆடை, உல்லாசப் பிரயாணத்துறை என்று ஆகிவிட்டுள்ளது.  இவ்வாறான மாறுதல் இடம்பெற்றிருந்தாலும்கூட, இவற்றுக்குப் பதிலாக ஏனைய நாடுகளைப் போல் பரந்தளவிற்கு வேறு என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? என்பதற்கு பதில் இல்லை.

தொழில்நுட்பக் கருவிகள், உபகரணங்கள் என்ற வகையில் ஏதுமில்லை. அதிகளவு மண் இந்த நாட்டில் இருந்தும்கூட மட்பாண்டங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறோமா? அதுவுமில்லை. இவை எல்லாம் சிறு கைத்தொழில்களுக்குள் அடக்கப்பட்டு விட்டுள்ளன.

ஏற்றுமதி குறைவடைதல், நேரடி வெளிநாட்டு முதலீடுகளில் மலட்டுத் தன்மை, நவீனத்துவம் வரையறையுறுதல் போன்ற காலங்காலமாக நிலவிவருகின்ற பொருளாதார சவால்களுக்குத் தீர்வுகளைத் தேடிக் கொள்ள வேண்டுமாயின் முதலில் குடிவரவு தொடர்பிலான சட்டத்தைத் திருத்தங்களுக்கு உட்படுத்தி, மிகவும் முற்போக்கான சட்டத்தின் ஊடாக சுதந்திரமான நடமாட்டத்திற்கு வழியேற்படுத்தப்படல் வேண்டும் என அண்மையிலே இலங்கையின் பொருளாதாரத்துறை சார்ந்த முன்னேற்றம் தொடர்பிலே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

தொழில்நுட்ப அறிவு தொடர்பிலான தொடர்புகள் அதிகளவில் இருத்தலும், இல்லாததும் என்ற காரணத்தைக் கொண்டு உலகில் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மாறுதல்கள் நிலவுகின்றன. 

கைத்தொழில் நாடுகளின் விவசாயிகளைவிட அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளின் சம்பிரதாய விவசாயிகள் அறிவில் மிகைத்தவர்கள். என்றாலும், அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளின் விவசாயிகள் நவீன கருவிகள், அதிக விளைச்சலைத் தருகின்ற விதைகள், மிகுந்த உயர் தர உரம் மற்றும் சந்தை வாய்ப்புகளின் தொடர்புகள் போன்ற காரணங்களால் உயர் வருமானத்தைப் பெறுவதாகவும் அந்தக் கருத்தரங்கிலே கருத்துகள் முன்வைக்கப் பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய கருத்தரங்குகளை நடத்தி, வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்டு கருத்துகளைப் பெறுகின்ற இந்த நாட்டில், அந்தக் கருத்துக்களை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு முயலாத ஒரு தன்மையையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

உற்பத்திகளின் பல்விதத் தன்மை தொடர்பிலும் இதே கருத்தமர்வில் பிரஸ்தாபிக்கப்பட்டும் இருந்தது. அதாவது, ‘பொருளாதார விருத்தி என்பது அதன் உற்பத்தித் தொகுதிக்குள் புதிய பொருட்களும், சேவைகளும் உட்புகுதல் ஆகுமே அன்றி, ஒரு வர்க்க பொருட்களின் உற்பத்திகளை மேலும், மேலும் அதிகரிப்பதால் அல்ல’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய கருத்துகளின் அடிப்படையில் இந்த நாட்டு ஏற்றுமதி அபிவிருத்தி குறித்து யோசிக்க வேண்டிய காலமானது மேலும், மேலும் தாமதப்படுமேயானால், இறுதியில் எஞ்சப் போவது எதுவுமே இருக்காது என்றே தோன்றுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்; டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை ஃ நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை ஃ துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைஉற்பத்தி வரி விசேட எற்பாடு சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் கெலந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

1979ஆம் ஆண்டு 40ஆம் இலக்கமுடைய இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டமானது இந்த நாட்டில் செயற்படுத்தப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதியுடன் 40 ஆண்டுகளாகின்றன.

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையானது இந்தச் சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்டது. இன்றுவரையில் இந்தச் சபை பல்வேறு முயற்சிகளை ஏற்றுமதி அபிவிருத்தி தொடர்பில் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்ற நிலையிலும், இந்த நாட்டு ஏற்றுமதி அபிவிருத்தித் துறை என்பது எந்தளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றது? என்பது இன்னமும் கேள்விக் குறிகளைத் தாண்டி வெளியில் வந்ததாக இல்லை.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நிலைப்பாடுகளிலிருந்து, எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டி வரக்கூடிய சவால்களுக்கமைவாக ஏற்றுமதி அபிவிருத்தித் துறையானது பரந்தளவிலான வளர்ச்சியினை ஈட்ட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும்

அதற்கான ஆயத்தங்களை செய்வதெனில், சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தில் மாத்திரமன்றி, குடிவரவு தொடர்பிலான சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமாகும் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சட்டங்கள் மாத்திரம் திருத்தப்பட்டால் மாத்திரம் போதாது, வெளிநாட்டு முதலீடுகளுக்கேற்ப உட்கட்டுமாண வசதியின்மைகள் இன்னும் இந்த நாட்டிலே காணப்படுகின்றன. அவை மேம்படுத்தப்பட வேண்டும்.

இவை அனைத்துக்கும் முன்பதாக, சமூக அபிவிருத்தி தொடர்பில் மேலும் அவதானங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

இத்தகைய ஏற்பாடுகள் இன்றி, வெறுமனே எதற்கெடுத்தாலும் வரிகளை அதிகரிப்பதன் காரணமாக அது நாட்டு மக்களுக்கு ஏற்படுத்துகின்ற சுமைகளைப் போன்றே மறுபக்கத்தில் பொருளாதாரத்தின் மீதான அழுத்தங்களையும் பிரயோகிக்கின்றது என்பதற்கு இங்கே கொண்டு வரப்பட்டிருக்கின்ற உற்பத்தி வரி விசேட சட்டமூலத்தின் கீழான கட்டளை எடுத்துக்காட்டுகின்றது

2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் மோட்டார் வாகனங்கள்மீது மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி வரித் திருத்தங்கள் காரணமாக அகற்றப்படாது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்ற வாகனங்களை அகற்றுவதற்கென விசேட தீர்வை தொடர்பில் கூறப்படுகின்றது.

இரண்டு வருட காலமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்கள் ஓரிடத்தில் தேங்கிக் கிடப்பதென்பது இந்த நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தத் தக்க அழுத்தங்கள் குறித்து இதுவரையில் அவதானங்கள் செலுத்தப்படாத ஒரு நிலையே இருந்துள்ளது.

வரி அறவீடுகள் என்பது இந்த நாட்டின் நடைமுறைக்கு எந்தவகையில் சாத்தியமாகும் என்பது குறித்து ஆராய்ந்து, மேற்கொள்ள வேண்டியதாகும்.

பிறநாடுகள் கூறுவதற்காகவும் அல்லது பிறநாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற வகையிலும் இந்த நாட்டில் வரி அறவீடுகளை மேற்கொள்கின்றபோது, அது எதிர்மறையான விளைவுகளையே கொண்டிருக்கும் என்பதற்கு, இந்த நாட்டிலே அமுல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வரி அறவீடுகள் உதாரணமாக இருக்கின்றன.

குறிப்பாகப் புகையிலை உற்பத்தி வரியினை எடுத்துக் கொண்டால், இந்த நாட்டில் புகைத்தலைக் கட்டுப்படுத்துவதென்றால், சிகரெட் வகைகளின் விலைகளை அதிகரிப்பதே அதற்கான பொறிமுறை எனக் கூறப்பட்டு, அந்த பொறிமுறை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, கீழ் மற்றும் மத்திய வருமானம் ஈட்டுகின்ற நாடுகளில் 10 வீதமான அதிகரிப்பினை மேற்கொண்டால், புகைத்தலை 8 வீதமாகக் குறைக்கலாம் என உலக வங்கி உள்ளடங்கலாக சர்வதேச நிறுவனங்கள் பலவும் சுட்டிக் காட்டியிருந்தன.

என்றாலும், பீடி மற்றும் சட்ட விரோத வெளிநாட்டு சிகரெற் வகைகள் என்பன குறைந்த விலையில் கிடைக்கின்ற ஒரு சூழல் உருவாகியிருப்பதன் காரணமாக, வெளிநாடுகள் வெற்றி பெறுகின்ற மேற்படி பொறிமுறை, இலங்கையில் அதேயளவு சாத்தியமற்றது என்பது அண்மைய ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்; டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை ஃ நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை ஃ துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைஉற்பத்தி வரி விசேட எற்பாடு சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் கெலந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

நாம் இங்கு ஏற்றுமதி அபிவிருத்தி குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் இங்கு சிலர் இறக்குமதி அரசியல் தீர்வு குறித்தே காலம்பூராகவும் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நாய் கடித்தால் என்ன,. பூச்சி பூரான் கொட்டினால் என்ன,… அருகில் உள்ள மருத்துவ மனையை நாடாமால் அதற்குக்கூட சர்வதேசத்தை நோக்கி அண்ணார்ந்து பார்த்து தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்போரையே நான் சுட்டிக்காட்டுகிறேன்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வென்பது சர்வதேச சமூகத்திடமிருந்து இறக்குமதியாகும் வெறும் பண்டமல்ல. மாறாக,.. எமது பேரம் பேசும் அரசியல் பலத்தை வைத்து எமக்குள் நாமே இதுவரை பேசித்தீர்த்திருக்க வேண்டிய உள்நாட்டு விவகாரம்.

சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்குத் தீர்வு தருவது உண்மையென்றால் முள்ளிவாய்க்கால் அவலங்களின் போது,.. ஏனந்த சர்வதேச சமூகம் வந்து நின்று எமது மக்களைக் காக்கவில்லை என்று நான் கேட்கிறேன்.

அதற்கு முந்திய ஆட்சிகளின் போது 1958, 1977, 1983 களில் நடந்த இன அழித்தொழிப்பு வன்முறை சாக்காட்டில் எமது மக்கள் அவலங்களைச் சந்தித்திருந்த போது கூட அந்த சர்வதேச சமூகம் வந்து நின்று எமது மக்களை காத்திருக்கவில்லை.

அது ஏனென்று நான் கேட்கிறேன்…. எல்லா ஆட்சிக்காலங்களிலும் எமது மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள்.

அப்போது இங்கு அபயக்கரம் நீட்டி வந்திருக்காத சர்வதேச சமூகம் தமிழர்களின் அரசியல் தீர்வை எமக்கு இறக்குமதி செய்து தருவார்கள் என்று இனியும் நாம் நம்பியிருக்க முடியுமா?

அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும். ஒரு மருத்துவிச்சியின் துணையாக எந்த நாடுகளும் வந்தெமக்கு அனுசரணை வழங்கட்டும்.

இது வரை எமது பிரச்சினைகளை எமக்குள் நாமே பேசித்தீர்த்திருக்க வேண்டும். அதற்கு எமது அரசியல் பலத்தைச் சரிவரப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

அரசுடன் பேசுவது கூனிக்குறுதல் அல்ல. அடிமைத்தனமும் அல்ல. தத்தமது சொந்தச் சலுகைகளுக்காக மட்டும் திரை மறைவில் அரசுடன் கூனிக்குறுகி நின்று பேசும் பணப்பெட்டி அரசியல் வாதிகள்.

தமிழர்களின் உரிமைகளுக்காக மட்டும் தமது அரசியல் பலத்தை வைத்து அவர்கள் ஏன் பேரம் பேசவில்லை என்று நான் கேட்கிறேன்.

இனியென்ன தேர்தல் காலம்.,. சர்வதேச சமூகம் கூர்ந்து பார்க்கிறது,. குனிந்து பார்க்கிறது.. நிமிர்ந்து பார்க்கிறது,.. என்றெல்லாம் வழமை போல் புலுடா விடுவார்கள்.  தமிழ் மக்கள் இது குறித்து விழிப்புடன் இருப்பார்கள் என்றே நம்புகிறேன்.

ஆன்மீக வரலாற்றில் ஒரு கதை உண்டு. உலகத்தை முதலில் சுற்றி வருபவர்கள் யாரோ அவருக்கே ஞானப்பழம்.

அம்மையும் அப்பனுமே உலகமென தனது தாய் தந்தையரை சுற்றி வந்து பிள்ளையார் ஞானப்பழத்தை வெற்றி கொண்டதும். உலகெல்லாம் சுற்றி வந்து ஞானப்பழம் இழந்து போட்டியில் தோற்ற முருகப்பெருமான் போல் ஆண்டியாய் நின்றதும் வரலாறு.

இதில் பணப்பெட்டி அரசியல்வாதிகள் பிள்ளையார் நிலையா? அல்லது முருகப்பெருமான் நிலையா? வரலாற்றை உணர மறுத்தால் ஆண்டிகள் ஆவீர்கள் என்பதே உண்மை.

எனவே, இந்த நாட்டின் நிலைத் தன்மைக்கேற்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். தவிர, தான்றோன்றித்தனமான செயற்பாடுகளால் மேலும், மேலும் பாதிப்புகளையே அடைய வேண்டியிருக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்

Related posts:

யுத்த வடுக்களற்ற புதிய தேசத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்...
வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசு அக்கறைகாட்டவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்...
‘காலத்தை வென்ற மக்கள் நேய’ வரவு – செலவுத் திட்டம் கடற்றொழில் துறைக்கும் ஒரு பலமான தைரியத்தை தந்துள்ள...