வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை விசாரணைகளுக்கு என்ன நடந்தது :  கண்கண்ட சாட்சியாக நானே இருக்கிறேன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, January 23rd, 2019

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26, 27ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இடம் பெற்றிருந்த விசாரணைக்கு என்ன நடந்தது எனக் கேட்க விரும்புகின்றேன்.  அதேபோன்று, கண்டி மற்றும் ஏனைய சிறைச்சாலைகளிலும் இதேபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றும் அவை தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவே கூறிய போதிலும், அவை தொடர்பில் இதுவரையிலும் எந்தத் தகவல்களும் இல்லை. வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகளின் கண்கண்ட சாட்சியாக நான் இருக்கிறேன் என்பதால், அந்த வேதனைகளை நான் நன்கறிவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கடன் இணக்க சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்டதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் அண்மையில் ஊடகங்கள் வாயிலாக அத் தாக்குதலின் ஊஊ வுஏ காணொளிக் காட்சிகள் பகிரங்கப்படுத்தி இருந்தன.

இந்த சம்பவம் தொடர்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் இரு விசாரணைக் குழுக்களை நியமித்து, அதன் ஒரு குழுவின் அறிக்கை தற்போது கிடைத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

‘சிறைக் கைதிகளும் மனிதர்கள்” என சிறைச்சாலைகளின் வெளிச் சுவற்றில் வெளியில் இருப்போருக்குக் காட்டிக் கொண்டு, உள்ளே நிர்க்கதியாக இருக்கின்ற சிறைக் கைதிகளைத் தாக்குவது என்பது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத மோசமான செயலாகும்.

எனவே, மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் எவ்விதமான விடயங்களை முன்வைத்திருக்கின்றனவோ தெரியாது. எனினும், இத்தகைய மிலேச்சத்தனமான செயல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள், இனிமேல் இவ்வாறு வேறொரு சம்பவம் நிகழாதிருப்பதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

கடந்த 21ஆம் திகதி முல்லைத்தீவு, முள்ளியவளையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்  மிகவும் பாரதூரமானதொரு விடயம் ஒன்றைக் கூறியிருந்தார். அதாவது, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு, பிடிபட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களின் ஆவணங்கள் அனைத்தும் இன்று களவாடப்பட்டுள்ளன என்றும், அவை நீதி அமைச்சில்கூட இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இது, நீதி அமைச்சு மற்றும் நீதிமன்ற கட்டமைப்புகள் தொடர்பிலான நம்பிக்கையீனத்தையே எடுத்துக் காட்டுவதாக அமைந்நிருந்தது மேற்படி ஆவணங்களில் ஒன்று, இரண்டேனும் எங்காயாவது இருந்து கிடைக்குமா? எனத் தான் தேடிப் பார்க்கப் போவதாக நாட்டின் தலைவரே கூறுகின்றபோது, நீதித் துறை கட்டமைப்பின்மீது எமது மக்களுக்கு இயல்பாகவே சந்தேகம் ஏற்படக்கூடும்.

நாடாளுமன்ற கலைப்பு விவகாரம் தொடர்பிலான உயர் நீதிமன்ற தீர்ப்பினையடுத்து, இந்த நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் இருந்து வருகின்ற நம்பிக்கையானது, மேற்படி கருத்து காரணமாக இழக்கப்படுகின்ற ஒரு நிலையினைத் தோற்றுவித்துள்ள நிலையில், இது தொடர்பில் நீதி அமைச்சு என்ன பதிலை கூறப் போகின்றது? என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது.

இதனிடையே மேற்படி ஆவணங்கள் மேற்படி ஆவணங்கள் எவையும் காணாமற்போகவில்லை என்றும், அவை நீதி அமைச்சிடம் இருப்பதாகவும் தெரிவத்து நீதி அமைச்சர் இதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கின்றேன் என்று அமைச்சரவையில் தெரிவித்தார் என்றும், அதற்கான ஆதாரத்தை ஜனாதிபதியடம் கையளித்தார் என்றும் மயக்கமான செய்திகள் இன்றைய ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன. எனவே, ,தனது உண்மை நிலை என்ன? என்பதை அறிய விரும்புகின்றேன்.

இவ்வாறான சிக்கல்கள் நீதிக் கட்டமைப்பில் இருந்தால், இத்தகையதொரு கட்டமைப்பின் பின்னணியில்தான் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வுகளின்றி இழுபடுகின்றதா? என்ற கேள்வியின் முன்னால்,  தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பிலான தீர்வு குறித்து யாருடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வர முடியும்? என்பதையும் இந்த இடத்தில் ஒரு கேள்வியாகவே முன்வைக்க விரும்புகின்றேன்.

போதைப் பொருள் ஒழிப்பு வாரமென இந்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு, கடந்த திங்கட்கிழமை இதன் ஆரம்ப வைபவம் முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்தது. அதே நேரம், அண்மையில் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் பிலிப்பைன் நாட்டுக்குச் சென்றிருந்த நிலையில், இலங்கையில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு உதவி கோரப்பட்டதாகவும், அதற்கென ஒரு குழுவினர் இலங்கை வரவுள்ளதாகவும் ஊடகங்களின் மூலமாகத் தெரிய வருகின்றது.

போதைப் பொருள் வர்த்தகம் காரணமாக இந்த நாட்டில் நாளாந்தம் மனிதப் படுகொலைகள் இடம்பெற்று வருவதை நாங்கள் காண்கின்றோம். அண்மையில் வத்தளை பகுதியில் இருவர் கொல்லப்பட்டனர். நேற்றைக்கு முந்தைய தினம் கொழும்பு, ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு என மனிதப் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

ஜனாதிபதி அவர்கள் கூறுவதைப் போன்று, ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களது அது தொடர்பிலான ஆவணங்கள் தொலைந்து போயிருக்குமானால், போதைப் பொருள் தொடர்பிலான அனைத்து அனர்த்தங்களும் இந்த நாட்டில் அழித்துவிட முடியாத ஒரு நிலையினை எட்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, இந்த நாட்டில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் அனைவரும் – நீதி அமைச்சு உள்ளடங்கலாக – தங்களது பங்களிப்பினை வழங்க முன்வர வேண்டியது அவசியமாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கடந்த வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும்  பாதிப்பிற்கு உட்பட்ட மக்களுக்கான நட்டஈட்டுத் தொகைகள் இன்னமும் உரிய முறையில் கிடைக்காத ஒரு குறைபாடு நிலவுகின்றது

மேற்படி வெள்ளப் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கான நட்டஈட்டுத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஏற்கனவே பலமுறை முன்வைத்திருக்கின்றேன். இருப்பினும் 10 ஆயிரம் ரூபா வீதமே வழங்கப்படும் எனக் கூறப்பட்டும், அந்த நிதிகூட உரிய ஏற்பாட்டில் இன்னமும் பலருக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

அதேநேரம், பயிரழிவு, கால்நடைகள் அழிவு உள்ளிட்ட இழப்புகள் தொடர்பிலும் விரைவான தீர்வுகள் இதுவரையில் எட்டப்படவில்லை. எமது மக்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்விற்கு ஆயத்தமாக வேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர்.

தங்களிடம் கேட்டுத்தான் அமைச்சரவையில் முடிவுகள் எட்டப்படும் என்றும், தங்களிடம் கேட்டுத்தான் வடக்கு – கிழக்கில் ஆனைத்ம் நடக்கும் என்றும் கூறித் திரிகின்ற அரசுடன் ஆட்சியில் இணைந்திரக்கின்ற தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் இது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை இதுவரையில் எடுத்திருக்கிறார்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டம் தவிர்ந்து என்று நினைக்கின்றேன். ஏனைய அனைத்து மாவட்டங்களிலுமாக ‘சேனா’ என்கின்ற படைப் புழுவினால் இந்த நாட்டின் விவசாயத்துறை அடியோடு அழிக்கப்பட்டு வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பாக அம்பாறை, மொணராகலை போன்ற மாவட்டங்களில் இந்த புழுவின் தாக்கம் காணப்பட்டபோதே, அதனைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று ஏனைய அனைத்து மாவட்டங்களக்கும் இந்தப் புழுவின் தாக்கம் பரவியிருக்காது

ஆரம்பத்தில் சோளப் பயிர்ச் செய்கையைப் பாதித்த இந்தப் படைப் புழுவானது பின்னர் குரக்கன், நெல், கரும்பு, கோவா, பயற்றங்காய், வெண்டிக்காய் எனப் பரவி அனைத்தையும் அழிக்கின்ற நிலை இன்று ஏற்பட்டிருக்கின்றது.

தற்போது இந்த புழுவைக் கட்டுப்படுத்துவதற்கு அரச தரப்பில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்ற போதிலும், தனியார் சிலர் தங்களது கண்டுபிடிப்புகளாக பல்வேறு இயற்கை கிருமிநாசினிகளை தயாரித்தும், பயன்படுத்தியும் வருவதாகவம் தெரிய வருகின்றது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சியின் முதற் கோலாசானாக இருக்கின்ற கௌரவ மகிந்த அமரவீர அவர்கள் விவசாய அமைசசராக செயற்பட்டிருந்த காலகட்டத்தில் சோளம் உள்ளடங்கலான சில தானிய வகைகளின் இறக்குமதியினை இந்த வருடத்திலிருந்து நிறுத்தப் போவதாக அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பினால் ஈர்க்கப்பட்ட எமது விவசாய மக்கள் அதிகளவில் தானியச் செய்கையின்பால் ஈடுபாடுகளைக் காட்டத் தொடங்கினர். ,தன்காரணமாக வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெற்று, தானியப் பயிர்ச் செய்கையினை பரவலாக மேற்கொண்டு வந்த நிலையிலேயே இந்த அழிவு இன்று ஏற்பட்டிருக்கின்றது. இந்த இடத்தில் இந்த படைப் புழுவின் வருகை தொடர்பிலான சந்தேகம் எமது மக்களிடையே எற்படுவது இயல்பாகும்.

அந்தவகையில் இன்றளவிற்கு சுமார் 45 ஆயிரம் ஹெக்கடயர் சோளப் பயிரச் செய்கை அழிவடைந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. எனவே, மேற்படி படைப் புழு காரணமாக அழிவுற்ற பயிர்களுக்கான நட்டஈடுகளை வழங்குவதற்கு இந்த அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுடன், இந்த விவசாய மக்கள் பெற்றுள்ள வங்கிக் கடன்களையும் இரத்துச் செய்வதற்கு இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிலையில் படைப் புழுத் தாக்கம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தலா 45 ஆயிரம் ரூபாவினை அரசு  வழங்கவுள்ளதாக ஓர் அமைச்சர் கூறியதாகவும், ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் கூறியதாகவும் இருவேறு செய்திகள் இன்றைய ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன. ஒரு ஏக்கருக்குகுறைந்தபட்சம் 45 ஆயிரம் ரூபா என வழங்கப்பட வேண்டும் என்பதையும், அதேநேரம் மேற்படி விவசாயிகளின் அடுத்தகட்ட பயிர்ச்செய்கைக்கான மானியங்களையும் வழங்க அரசு முன்வர வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றேன்.

Related posts:


அரசு கூறும் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்கள் கிடைப்பதில்லை! நாடாளுமன்றில்  டக்ளஸ் தேவானந்தா தெரிவ...
தேசிய கடப்பாடுகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் சர்வதேச கடப்பாடுகளுக்காக அஞ்ச வேண்டியதில்லை -டக்ளஸ் தேவான...
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாள...