வீதியில் போராடும் மக்களுக்கு நீதியும் பரிகாரமும் கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, September 5th, 2018
வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதைப்போல், கூடிய விரைவில் இந்த நாட்டில் காணாமற்போகக்கூடிய அபாயத்தில் இருக்கின்ற ஏற்றுமதி பயிர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் ஓர் அலுவலகம் அமைக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றே நினைக்கின்றேன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கு ஊதியமொன்றை செலுத்துதல் தொடர்பான விவாதம் இன்றையதினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இன்றைய தினம் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் தொடர்பிலும் வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்ட நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கு ஊதியமொன்றினை வழங்குதல் தொடர்பிலும் நடைபெறுகின்ற விவாதத்தில் கலந்து கொண்டு எனது கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நாட்டில் ஏற்கனவே வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதைப்போல், கூடிய விரைவில் இந்த நாட்டில் காணாமற்போகக்கூடிய அபாயத்தில் இருக்கின்ற ஏற்றுமதி பயிர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் ஓர் அலுவலகம் அமைக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றே நினைக்கின்றேன்.
வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்ட தங்களது உறவுகளைக் கண்டறியும் முகமான எமது மக்களின் போராட்டமானது இரண்டாவது வருடத்தை நோக்கி தொடர்கின்றது. இந்த மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையில் எந்தவொரு செயற்பாடுகளும் இதுவரையில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால், எமது மக்கள் நம்பிக்கை இழந்த நிலையிலேயே போராடி வருகின்றனர்.
இத்தகையதொரு நிலையில் வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்ட நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான மேற்படி அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த மே மாதம் மன்னாரில் இடம்பெற்றிருந்த ஒரு கலந்துரையாடலுடன் இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
என்ற போதிலும், இந்த அலுவலகம் தொடர்பிலும் எமது மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாகவே இருக்கின்றனர் என்பதையே மேற்படி அலுவலகத்திற்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுத்துக் காட்டின.
வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்ட நபர்கள் பற்றிய விசாரணைகள் முடியும்வரையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என மேற்படி அலுவலகம் பரிந்துரை செய்வதாக கடந்த 30ஆம் திகதி காணமற்போகச் செய்யப்படுவதற்கு எதிரான சர்வதேச தினத்தன்று அந்த அலுவலகத்தின் தலைவர் கூறியதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்த வாழ்வாதார உதவிகள் இப்போதல்ல, எப்போதோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வாழ்வாதார உதவிகளைப் பெற இந்தக் குடும்பங்கள் ஒன்பது வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் கண்டறியும் பொருட்டு இதற்கு முன்பதாக அமைக்கப்பட்டிருந்த ஆணைக்குழுக்களும் இத்தகைய ஏற்பாடுகளை வலியுறுத்தியிருந்தன. ஆனால், அவை எதுவும் செயற்படுத்தப்பட்டதாக இல்லை.
ஆனால், இந்த வாழ்வாதார உதவிகள் மட்டுமே எமது மக்களின் தேவை அல்ல. வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்ட தங்களது உறவுகள் பற்றிய தகவல்களை அறிய எமது மக்கள் எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர். எனவே, எமது மக்களுக்கு நீதி, நியாயம், பரிகாரங்கள் கிடைக்கப் பெற வேண்டும்.
இத்தகைய நிலையில், வலிந்து காணமற்போகச் செய்யப்பட்டவர்கள் என இந்த நாட்டில் எவருமில்லை என நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி என்றால், வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்கின்ற இந்த அலுவலகம் எதற்காக? என எமது மக்கள் கேட்கின்றனர்.
காணாமற்போனவர்கள் வெளிநாடு சென்றிருக்கலாம் என நீங்கள் கூறுகிறீர்கள். அவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்றிருந்தால், அவர்கள் அவர்களது உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள் எனக் கூற முடியாது. நீங்கள் கூறுகின்றவாறு வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும், அவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து சொல்லுங்கள் என்றே எமது மக்கள் கேட்கிறார்கள்.
என்றாலும், வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் பற்றிய மற்றும் காணாமற் போகச் செய்தவர்கள் பற்றிய தகவல்களை மேற்படி அலுவலகத்தின் மூலமாக எமது மக்களுக்கு அறிய முடியுமா? என்றொரு கேள்வியும் எமது மக்களிடத்தே எழுந்துள்ளது.
மேற்படி அலுவலகத்தினால் திரட்டப்படும் எந்தவொரு தகவல்களையும் எவருக்கேனும் வழங்கக்கூடாது என மேற்படி காணாமற்போன நபர்கள் பற்றிய அலுவலக சட்டத்தின் 15 (1) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளமையினால், இந்த கேள்வி எமது மக்களிடையே எழுந்துள்ளது.
இந்தவகையில் திரட்டப்படுகின்ற தகவல்களை எமது மக்கள் அறிய வாய்ப்பு இல்லை என்கின்றபோதும், மேற்படி அலுவலகத்தின் புலனாய்வுகளால் கண்டுகொள்ளப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எவருக்கும் எதிராக, குற்றவியல் அல்லது சிவில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலும், மேற்படி அலுவலகம் தொடர்பில் எமது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்றே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
மேலும், மேற்படி அலுவலகம் தொடர்பிலான சட்டத்தின் 3(2)ஆம் பிரிவின்படி மேற்படி அலுவலகமானது தொடர்ந்து இருக்குமென்று கூறப்படுகின்ற நிலையில், இதே சட்டத்தின் 6ஆம் பிரிவானது, மேற்படி அலுவலகத்தின் உறுப்பினர்கள் மேற்படி அலுவலகம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று வருடங்கள் இருக்கலாம் எனக் கூறுகின்றது.
இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இருக்கின்ற உறுப்பினர்கள் மூன்று வருடங்களின் பின்னர் மீள நியமிக்கப்படுவார்களா? அவ்வாறு இவர்கள் மீள் நியமனங்கள் பெற வேண்டும் எனில், அரசுக்கு விஸ்வாசமாக இவர்கள் செயற்பட மாட்டார்கள் எனக் கூற முடியுமா? குறித்த மூன்று வருடங்களின் பின்னர் இவர்கள் மாற்றப்பட்டு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டால், அவர்கள் எவ்வாறு செயற்படுவார்கள்? மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடர்வார்களா? அல்லது இப்போது தொடர்ந்திருப்பதில் இருந்து ஆரம்பிப்பார்களா? ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் ஒவ்வொன்றும் ஆரம்பித்தவற்றையே மீண்டும், மீண்டும் ஆரம்பித்து, தொடர்ந்ததுபோல், தற்போதும் அந்த நடைமுறையே மேற்படி அலுவலகத்தின் மூலமும் மேற்கொள்ள முனைவதைப் போல், நிலைமை இப்படியே தொடருமா? போன்ற கேள்விகள் எமது மக்கள் மத்தியில் இருக்கின்றன.
எனவே, இத்தகைய கேள்விகளுக்கு எமது மக்களுக்கு தெளிவான பதில்களை வழங்க வேண்டியுள்ளது.
அத்துடன், மேற்படி அலுவலகத்திற்குத் தேவையான நிதி – தற்போது இங்கு முன்வைக்கப்பட்டுள்ள மேற்படி அலுவலக அங்கத்தவர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட நிதியானது – திரட்டு நிதியிலிருந்து செலவாக அமையும் வகையில் செலுத்தப்பட வேண்டியிருப்பதாகத் தெரிய வருகின்றது. திரட்டு நிதியானது ஜனாதிபதியின் செயலாளரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற காரணத்தினால், இந்த நிதியினை கட்டுப்படுத்துவதன் மூலமாக மேற்படி அலுவலகத்தின் செயற்பாடுகளை முடக்கவும் முடியும் என்கின்ற நிலை காணப்படுவதைக் காரணம் காட்டி, மேற்படி அலுவலகத்தின் சுயாதீனத் தன்மை குறித்தும் துறைசார் ஆய்வாளர்களால் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
அதுமட்டுமன்றி, மேற்படி அலுவலக சட்டத்தின் 5 (3) ஆம் பிரிவுக்கமைவாக பிரதம நிறைவேற்று அதிகாரியாக மேற்படி அலுவலகத்தின் தவிசாளரே இருப்பார் என்றும், அவரது அலுவலகத்தில் மூன்று அலகுகள் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது – நபர்களைத் தேடிக் கண்டறியும் அலகு, சாட்சியங்களைப் பாதுகாக்கும் அலகு, தரவுகள் திரட்டும் அலகு என்பவை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இவற்றுள் தரவுகள் திரட்டும் அலகுக்கான தலைமை அதிகாரி ஒருவர் பற்றியோ, முக்கியப் பொறுப்புகளை நிiவேற்றக்கூடிய செயலாளர் பதவி பற்றியோ, கணக்காளர் பற்றியோ எதுவும் குறிப்பிடாத நிலையே காணப்படுகின்றது.
இங்கு தகவல் திரட்டும் அலகு என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். மேற்படி அலுவலகத்திற்குக் கிடைக்கக்கூடிய தகவல்களுடன், ஏற்கனவே வேறு நிறுவனங்களால் திரட்டப்பட்டுள்ள தகவல்களையும் திரட்டுகின்ற பொறுப்பு இந்த தகவல் திரட்டும் அலகுக்கு உரித்தானது.
திரட்டப்படுகின்ற தகவல்கள் இரகசியமாக வைக்கப்படல் வேண்டும் என்ற வகையில், மேற்படி தகவல்கள் எமது காணாமற்போன உறவுகளுக்கும் வழங்கப்படாத நிலையில், வேறு எவருக்கு, எதற்கு இத் தகவல்கள் போய்ச் சேரப் போகின்றன? என்ற கேள்வியும் எமது மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.
எனவே, இத்தகைய விடயங்கள் காரணமாகவே மேற்படி அலுவலகம் தொடர்பில் எமது மக்கள் அவ நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், இந்த அலுவலகம் என்ன செய்யப் போகிறது? என்ற கேள்வி எழுகின்றது. வலிந்து காணமற்போகச் செய்யப்பட்ட உறவுகளின் ஒத்துழைப்புகள் கிடைக்காமல் வெறுமனே ஓர் அலுவலகம் என்ற ரீதியில் காலத்தைக் கடத்தப் போகின்றதா? எனக் கேட்க விரும்புகின்றேன்.
இலங்கையில் இதுவரையில் 60 ஆயிரம் பேர் காணாமற் காணாமற் போகச் செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்பச் சபை அண்மையில் தெரிவித்திருக்கின்றது. வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டவர்களது உறவுகளின் போராட்டமானது இரண்டாவது வருடத்தை நோக்கியதாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது மக்கள் தொடர்ந்தும் வீதியிலேயே நின்று போராட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அல்லது இம் மக்களுக்கு உஎ;னவிதமான தீர்வினை வழங்கப் போகிறீர்கள்? என்று கேட்க விரும்புகின்றேன்.
வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணை அலுவலகம் தனது இடைக்கால அறிக்கையை கடந்த 30ஆம் திகதி – அதாவது, வலிந்து காணாமற் போகச் செய்யப்படுவதற்கு எதிரான சர்வதேச தினத்தில் கையளிப்பதாக இருந்தும், அது தற்போது பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அந்த இடைக்கால அறிக்கையில் வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்வதற்கென நினைவுத்தூபி ஒன்றினை அமைப்பது தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அதாவது, மேற்படி இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்படி அலுவலகத்தின் தலைவர் கூறியதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகளின் பிரகாரம், இந்த நினைவுத்தூபி வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டவர்களை நினைவு கூர்வதற்காக அமைக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவே தெரிய வருகின்றது. அப்படி எனில், வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்ற முடிவுக்கு மேற்படி அலுவலகம் வந்துள்ளதா? என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, இது தொடர்பில் தெளிவான விளக்கம் எமது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
நினைவுத்தூபி தொடர்பில் நான் ஏற்கனவே தனிநபர் பிரேரணை ஒன்றினை இந்தச் சபைக்கு கொண்டு வந்திருந்தேன். அதாவது, கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த அனைவரையும் நினைவு கூறுவதற்காகவும், மத அனுஸ்டானங்களை மேற்கொள்வதற்கும் ஏதுவாக அந்த நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தேன்.
அதனை இந்த அரசு ஏற்றுக் கொண்டிருந்தது. எனினும் அந்த நினைவுத்தூபி அமைவிடம் தொடர்பில் எமக்கு இணக்கம் இல்லை. மேற்படி நினைவுத்தூபியானது இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதியிலேயே அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இருந்தும் அன்று நினைவுத்தூபி அமைத்தல் தொடர்பில் இந்த அரசு ஏற்றுக் கொண்டாலும், இவ்விடயம் தொடர்பில் இதுவரையில் எவ்விதமானதொரு ஏற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டுவதுடன், இவ்விடயம் தொடர்பில் இந்த அரசு உடனடி அவதானத்தை செலுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பில் அவதானததைச் செலுத்துகின்ற வேளை, ஏற்றுமதியானது கடந்த ஜூன் மாதத்தைப் பொறுத்தவரையில் சற்று வளர்ச்சி நிலையினை எட்டியுள்ளதாகவே அறிய முடிகின்றது. எனினும், இறக்குமதியானது ஏற்றுமதியைவிட மிகவும் அதிகரிப்பினையே காட்டி, தொடர்கின்றது.
தேயிலை ஏற்றுமதியானது கடந்த ஜூன் மாதத்தைப் பொறுத்தவரையில் 6.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ள நிலையே காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. எமது நாட்டு தேயிலை உற்பத்தி தொடர்பில் நான் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றேன். இந்த அரசு தனது முழுமையான அவதானத்தைச் செலுத்தி தேயிலை உற்பத்தி தொடர்பில் அதிக அக்கறை செலுத்தாவிட்டால், அது இந்த நாட்டின் பொரளாதாரத்திற்கு பலத்த அடியாக விழக்கூடும். தைத்த ஆடைகளும், புடவைகளுமே எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு கைக்கொடுக்கும் என்ற அசட்டையில் இருந்துவிட்டால், ஏனைய ஏற்றுமதி உற்பத்திகள் யாவும் மறைந்து போய்விடக்கூடிய அபாயங்கள் இருக்கின்றன.
கடந்த மாதம் மிளகு செய்கையாளர்கள் ஒரு போராட்டத்தினை நடத்தியிருந்தனர். இலங்கை மிளகுக்கு சர்வதேச சந்தையில் நல்லவிதமான கேள்வி இருக்கின்ற நிலையில், தரமற்ற வெளிநாட்டு மிளகினை கொண்;டு வந்து, இலங்கை மிளகுடன் கலப்படம் செய்து, அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் இலங்கையின் ஏற்றுமதி மிளகின் தரம் குன்றிவிட்டதாகவும், இதனால் இலங்கை மிளகின் – அதாவது கலப்படம் செய்யப்பட்ட மிளகின் விலை வீழ்ச்சி காரணமாக தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மிளகு செய்கையாளர்கள் கூறுகின்றனர்.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்ற காலத்தின்போது, தேர்தல் பிரச்சாரத்திற்கென மலையகப் பகுதிக்குச் சென்றிருந்த மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் இந்த மிளகு கலப்படம் தொடர்பில் கதைத்திருந்தது நினைவுக்கு வருகின்றது. இந்த கலப்பட விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். எனினும், இன்று வரையில் இந்த அரசு அத்தகைய நடவடிக்கைகள் எதனையும் எடுத்ததாகத் தெரிய வரவில்லை.
இதே நிலைமையே இலங்கைத் தேயிலைக்கும் ஏற்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறகின்றன. இந்த வகையில், தரம் மிகுந்த எமது நாட்டு உற்பத்திகளுக்கு சர்வதேச சந்தைகளில் அவப் பெயரினை எற்படுத்தி, எமக்கான ஏற்றுமதி பொருட்களுக்கான வாய்ப்புகளை நாம் இழந்து வருகின்றோம் என்பதனை மீண்டும் இங்கு பதிவு செய்து வைப்பதுடன், இத்தகைய கலப்பட செயற்பாடுகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், இந்த நாடு பொருளாதார ரீதியில் பாரிய அழிவினையே சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை என்பதையும் கூறிவைக்கின்றேன்.
அதே நேரம், கடந்த வாரம் ஊவ பரணகம பகுதி உருளைக்கிழங்கு உற்பத்தியார்களும் ஒரு போராட்டத்தினை நடத்தியிருந்தனர். அதாவது தங்களது உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடைக்காலத்தில் வெளிநாட்டு உருளைக்கிழங்கு இறக்குமதி காரணமாக சந்தையில் தங்களது உற்பத்திகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பதே இவர்களது இப் போராட்டத்திற்கு காரணமாகும்.
இத்தகைய போராட்டங்கள் இந்த நாட்டில், உருளைக்கிழங்கு, வெங்காயம், மரக்கறிகள் போன்ற பயிர்ச் செய்கைகளின் அறுவடைக் காலங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற போதிலும், இதுவரையில் இதற்கு ஒழுங்கு முறையிலான தீர்வுகள் இந்த நாட்டில் இல்லாதிருக்கின்றன.
எனவே, இவை தொடர்பில் அக்கறையுடனான அவதானங்களை செலுத்தி, இத் துறைகள் சார்ந்து தேசிய கொள்கை ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும் என்பதை வலியுறுத்தி, விடைபெறுகின்றேன்.
நன்றி.

Related posts:

வரலாற்று பாடநூல்களில் தமிழர்களது உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளது! அந்நியர்களுக்கெதிராகத் தமிழர்...
வடக்கில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 820 கீழ்நிலைப் பணியாளர்கள் தொடர்பில...
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழர் தரப்புக்களை ஒன்றி ணைப்பேன் - நாடாளு மன்றில் எம்.பி. டக்ளஸ் தேவா...

நாட்டு நலன்களுக்கு இழப்புகள் ஏற்படாத வகையில் தேசிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவது அவசியமாகும் - கோப...
தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா !
சலுகைகள் வேண்டாம்: எமது மக்களுக்கு வளங்களை மீள ஒப்படைத்தால் போதும - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலிய...