விவசாயத்துறை இன்னும் சில காலங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Saturday, April 6th, 2019

கட்டாந்தரையான இந்த நாட்டின் பொருளாதார வெளியில், வரவுகளை எதிர்பார்த்து, செலவுகளை அதிகரித்து முன் வைக்கப்பட்டுள்ள இந்த வருடத்திற்கான வரவு – செலவுத் திட்டமானது எமது மக்களின் வாழ்வில் பசுமையான எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்கப் போகின்றது என்ற கேள்விக்கு இடம் வைத்திருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த நாட்டு மக்கள் மீது பாரிய கடன் சுமைகளை சுமத்திவிட்டு, மேலும், மேலும் கடன் படுனர்களாகவே எமது மக்களை எதிர்பார்க்கின்ற ஒரு நிலையில், எமது மக்கள் இத்தகைய கடன் சுமைகளிலிருந்து விடுவிக்கப்படக் கூடிய காலம் எப்போதாவது வருமா? என ஏங்கிக் கொண்டிருக்க வேண்டியே இருக்கின்றது.

இன்று இந்த நாட்டு மக்கள் வாழ்வதற்காக எதிர்நோக்கியிருக்கின்ற விலைகள் மிக அதிகமானது.  இயற்கையின் சீற்றம் ஒரு பக்கமாக வாட்டி எடுத்து வருகின்ற நிலையில், வாழ்வாதாரங்கள் என்பதே கேள்விக் குறியாக்கப்பட்டு, அதிகரித்துள்ள வரிகளின் வலிகளாலும், விலையேற்றங்களின் சுமைகளாலும் மக்கள் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகங்களாகக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

மக்கள் இத்தகைய துயர நிலைமைகளிலிருந்து மீள வேண்டும். மீட்கப்பட வேண்டும். அதற்கான வரவுகளை இந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியில் உருவாக்கக்கூடிய திட்டங்கள் முன்னெடுகப்பட வேண்டும்.

குறிப்பாக இன்று இருக்கக்கூடிய ஏற்றுமதி சார்ந்த இந்த நாட்டு உற்பத்திகளை முதலில் காப்பாற்றிக் கொள்வதற்கும், அவற்றைப் பேணி வளர்த்தெடுப்பதற்கும் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அதே நேரம் புதிய உற்பத்திகளால் நவீன உலக சந்தைவாய்ப்புகளை எட்டுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

சூழவும் கடலைக் கொண்டுள்ள இந்த நாட்டில் கடற்றொழில் என்பது வெறுமனே ஒரு வெற்றிலை பாக்குக் கடையைவிட மோசமான நிலையிலேயே தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விவசாயத்துறை என்பதும் இன்னும் சில காலங்களில் எமது மக்களுக்கு தொல்பொருளாகிவிடுமோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தி வருகின்றது.

வடக்கிலே எமது மக்கள் இந்த நாட்டில் ஏனைய மக்களைப் போல் வாழ்வதற்காக மிக அதிகமான துன்ப, துயரங்களையே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். தெற்கிலே எமது மக்கள் வாழ்வதற்காக மிக அதிகமான துன்ப துயரங்களையே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இரு தரப்பு மக்களையும் இனவாதம் என்கின்ற ஒரு போர்வையைப் போர்த்திவிட்டு, ஒரு சிலர் மாத்திரம் ஆண்டு, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலைமைகளே தொடர்கின்றேன்

எமது மக்களது பல்வேறு பிரச்சினைகளையும் தீர்க்கப் போவதாகக் கூறியே, எமது மக்களின் வாக்குகளை அபகரித்து, அதிக எண்ணிக்கையினாலான உறுப்பினர்கள் தமிழ்த் தரப்பு சார்ந்து இந்த சபைக்கு வந்தனர். இங்கு வந்ததும், அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற இந்தத் தமிழ்த் தரப்பினர் விரும்பியிருந்தால் எமது மக்களது பல பிரச்சினைகளையும் தீர்த்திருக்க முடியும்.

ஆனாலும், வாக்களித்த எமது மக்களை மறந்துவிட்டு, தங்கள், தங்களது வாழ்க்கையினை மாத்திரமே அரசுடன் பேரம் பேசி அவர்களால் பெற்றுக் கொள்ள முடிகின்றதே தவிர, எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேரம் பேசுவதற்கு அவர்களது வாய்கள்; அடைத்துக் கொள்கின்றன.

நிபந்தனையுடன் ஆதரவு வழங்குகின்றோம் – நிபந்தனையுடன் ஆதரவு வழங்குகின்றோம் என்று அடிக்கடி கூறுகின்ற இவர்கள், என்ன நிபந்துனையுடன் ஆதரவு கொடுக்கிறோம் என ஒரு போதும் வெளியில் கூறுவது கிடையாது. யாராவது கேட்டால், அது ராஜதந்திரம் என்பார்கள். இவர்களது ராஜதந்திரமானது எமது மக்களை ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் விட்டிருந்தது.  இப்போது எஞ்சியிருக்கின்ற மக்களை நடுக் கடலில் கொண்டு வந்து விட்டிருக்கின்றது.

இப்போது, தங்களால் சிந்தித்துக்கூட எதையேனும் கூற முடியாத வங்குரோத்து நிலையும் இந்தத் தமிழ்த் தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது. நாங்கள் அப்போதிருந்து எதையெல்லாம் கூறி வருகின்றோமோ, எதை எல்லாம் இந்த அரசு செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றோமோ, அதை எல்லாம் இப்போது மனப்பாடம் செய்துகொண்டு, மறுபடி கூறி வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் உண்மையிலேயே எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என எண்ணியிருந்தால், எப்போதோ எமது மக்களின் பிரச்சினைகள் தீர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏன்? இந்த ஆட்சியிலே கூட தீர்த்திருக்கலாம். இந்த அரசுக்கு இன்றும்கூட ஆதரவாக நின்று இந்த அரசசைக் காப்பாற்றவே இவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால், அதன் ஊடாக எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என நினைப்பதில்லை.

நான் பத்து நிமிடங்கள் கதைத்தால், அதில் ஐந்து நிமிடங்கள் இவர்களைக் குறை கூறுவதாகவே இவர்கள் கூறி வருகின்றனர். ஐந்து நிமிடங்கள் மட்டுமல்ல, எமது மக்களின் வரலாற்றுக் காலம் வரையிலும் குற்றம் கூறுமளவிற்கே இவர்கள் எங்கள் மக்கள் தொடர்பில் நடந்து கொள்கிறார்கள்; என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

எமது மக்களுக்கு வாக்குறுதிகள் பலவற்றை அளித்துவிட்டு, அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றாமல், எமது மக்களை ஏமாற்றியே இவர்களது வயிறுகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இன்று எமது மக்கள் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தொடர்ந்து இருந்து வருகின்ற பல்வேறுபட்ட அடிப்படை, அன்றாட மற்றும் உணர்வு ரீதியிலான பிரச்சினைகளுக்கு மத்தியிலும் வாழ்வா? சாவா? என்ற நிலையிலேயே இருந்து வருகின்றனர்.

நுண்கடன் தொல்லை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், வடக்கில் பல்வேறு பிரதேசங்களில் வாழுகின்ற சுமார் 45 ஆயிரம் பெண்கள், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள சுமார் 140 கோடி ரூபா பெறுமதியான நுண் நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக ஒரு செய்தி ஊடகங்களில் வெளிவந்திருந்தது. இது தற்போதைக்கு எந்த நிலையினை எட்டியிருக்கின்றது

மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற பிரமிட் முறையிலான நிதி நிறுவனங்கள் மீளவும் வடக்கிலே தமது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றன. இது தொடர்பிலும் அவதானங்கள் செலுத்துப்பட்டு, இத்தைகய நிதி நிறுவனங்கள் எமது மக்களை இலக்கு வைத்து, பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்ற நிலைமைகள் தடை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் எமது மக்களின் பொருளாதார ரீதியிலான மேம்பாடுகளை எமது மக்கள் எட்டிக் கொள்வதற்கென எமது பகுதிகளில் இருக்கின்ற வளங்களைக் கொண்டதான உற்பத்திக் கிராமங்களை அமைக்க வேண்டியதன் அவசியம் நிலவுகின்றது. இத்தகைய உற்பத்திக் கிராமங்கள் சிறு தொழில் முயற்சிகளாக கூட்டுறவுத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படத்தக்க ஏற்பாடுகளாக வலுப்பெறுமாயின் அது எமது மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

கடன் தொகைகளைப் பெற்று தொழில் முயற்சிகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் என்பது எமது பகுதிகளில் பெரும்பாலான மக்களால் முன்னெடுக்க முடியாத நிலையே தோன்றுகின்றது.

குறிப்பாக, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், திடீரென வடக்கு நோக்கிப் பாய்ந்திருந்த அதீத பொருட் சந்தை வாய்ப்பானது, எமது மக்களின் தேவைகளினதும், பின்தள்ளப்பட்டிருந்த முப்பது வருட காலத்து விடுவிப்பினது மேலதிக தேவைகளினதும் காரணமாக அந்தப் பொருட் சந்தையின் போட்டியிடத்தக்க கொள்வனவாளர்களாக மாற வேண்டியிருந்தது.

இதன் காரணமாக குடும்பம், குடும்பம் சார்ந்த படுகடன்கள் அதிகரிக்கின்ற நிலைமைகளுக்கு ஆளாக்கப்பட்ட நிலைமைகளும் இருக்கின்றன.

மேலும், மேற்குறிப்பிட்ட நுண் நிதி மற்றும் நிதி நிறுவனங்களின் ஊடான படுகடன்கள் காரணமாகவும் இன்னமும் எமது மக்கள் பெரும் பாதிப்புகளுக்குள் தள்ளப்பட்டனர்.

எனவே, இந்த இக்கட்டான பொருளாதார கட்டமைப்பிற்குள் அதிலிருந்து மீளமுடியாத நிலைமைகள் எமது மக்களுக்கு ஏற்பட்டுள்ளன.

இன்னமும் விடுவிக்கப்படாத எமது மக்களுக்கான வாழ்வாதார இடங்கள், விடுவிக்கப்பட்டும் பல்வேறு தடைகளுக்கு உள்ளாகிவருகின்ற வாழ்வாதார வளங்கள் என கண்ணுக்கு எட்டியும், கைக்கு எட்டாத நிலையில் எமது மக்களுக்கான பொருளாதாரங்கள் பயன்பாடின்றி, விரிந்து கிடக்கின்றன.

இவை அனைத்துக்குமான முதன்மை தேவையானது, எமது மக்களும் இந்த நாட்டு மக்களே என நடைமுறை ரீதியில் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையாகும்.

இந்த வரவு – செலவுத் திட்டத்திலே கூறியுள்ள சில முன்மொழிவுகளை யதார்த்தமாக்கியவாறு விளம்பரப் படங்களை எடுத்து ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றீர்கள்.

அதிலே ஒரு விளம்பரம், முதியோர்களுக்கான விடுதி தொடர்பானது. அந்த விளம்பரத்தை பார்க்கின்ற பிள்ளைகள் தங்களது பெற்றோரை முதியோர் விடுதியிலேயே கொண்டு போய் சேர்ப்பதற்கு முன்வரக்கூடிய வகையில் அந்த விளம்பரம் எடுக்கப்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

மேலும்,  பிரபல நடிகர்கள் நடிக்கின்ற திரைப்படங்கள் ‘வெகுவிரைவில் வெளிவரும்’ என  விளம்பரங்கள் காட்டப்பட்டு, இரசிகர்களின் ஆவலைத் தூண்டுவதுண்டு. அதுபோல், ‘இழப்பீட்டு அலுவலகம் வெகுவிரைவில்’ என விளம்பரங்களில் காட்டப்பட்டு வருகின்றது.

இந்த விளம்பரங்களுக்கு செலவிடப்படுகின்ற நிதித் தொகையில் ஒரு தொகையாவது இழப்பீட்டுத் தொகையாக எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

Related posts:


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் வீம்புக்காகவோ, அன்றி அரசியல் காரணங்களுக்காகவோ போராட்டங்களை நடத்தவ...
புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியின் குணாம்சங்களையே கொண்டுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்...