விபத்துகளுக்கு உள்ளானவர்களுக்கு உதவும் பொது மக்களை ஊக்குவிக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 7th, 2017

வீதி விபத்துகளுக்கு முகங்கொடுப்போரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவதில் பொது மக்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படக்கூடிய வேலைத் திட்டமொன்று வகுக்கப்பட்டு, அது வெகு விரைவாக செயற்படுத்தப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த வருடம் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் உலகில் 12.5 இலட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் வீதி விபத்துகளில் பலியாவதாகவும், இதன்படி பார்க்கும்போது நாளொன்றுக்கு 3,472 பேர் பலியாவதாகவும், இவர்களில் அதிகமானோர் 19 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டோர் என்றும், மரணங்கள் நிகழ்வதற்குரிய காரணங்களில் வீதி விபத்துகள் 9வது இடத்தை வகிப்பதாகவும், 2030ம் ஆண்டளவில் இது 7வது இடத்தைப் பிடித்துவிடும் என்றும் தெரிய வருகிறது. மேலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தைக் கொண்ட நாடுகளில் வீதி விபத்து மரணங்கள் 90 வீதம் நிகழ்வதாகவும், போக்குவரத்திற்குரிய அவசியமான உட்கட்டுமானங்கள் அபிவிருத்தி, கொள்கை மாற்றங்கள் மற்றும் வேகக் கட்டுப்பாட்டு முறைமைகள் என்பன சிறப்பாக இல்லாமையே இதற்குக் காரணமென்றும் அதில் தெரிவிக்கப்படுகின்றது.

எமது நாட்டில் ஏற்பட்டு வருகின்ற வீதி விபத்துக்களை பார்க்கின்றபோது, தற்போது அது ஒரு தேசிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பதையே அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இதன்படி, வருடமொன்றுக்கு சுமார் 60 ஆயிரம் வீதி விபத்துகள் எமது நாட்டில் ஏற்படுவதாகவும், இவற்றில் சுமார் 3,000க்கும் அதிகமான மக்கள் மரணமடைவதாகவும் பொதுவான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வகையில், கடந்த 10 வருடங்களில் வீதி விபத்துகள் காரணமாக எமது நாட்டில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மரணமடைந்துள்ளனர் என்றும், சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படு காயங்களுக்கு உட்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகிறது.

இவ்வாறான விபத்துகள் காரணமாக எமது சமூகத்துக்கு பயனுள்ள பலரை நாம் இழக்கின்ற அதே நேரம், இவ்வாறான மரணங்களால் பாதிக்கப்படுகின்ற குடும்பங்களின் நிலைமைகளும் பாரியதொரு பிரச்சினையாகவே உருவெடுக்கின்றது. எனவே, இப்பிரச்சினை தேசிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பதை குறைத்துக் கொள்ளும் வகையில், உரிய செயற்பாடுகளை உடனடியாகவும், உறுதியாகவும் முன்னெடுக்கப்பட வேண்டியது அத்தியவசியமாகும் என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

வீதி விபத்துகளைத் தடுப்பது தொடர்பில் உறுதியான நடைமுறைகளை செயற்படுத்துகின்ற போது, போக்குவரத்து பொலிஸாரின் பொறுப்புகள் பாரியவையாகும். இந்த நிலையில் பார்க்கின்றபோது, குற்றங்களை இழைக்கும் வரையில் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, பின்னர் அர்களைப் பிடித்து தண்டனைகளுக்கு உட்படுத்துவதைவிட, குற்றங்கள் நிகழும் முன்பதாக அவற்றைத் தடுக்கத்தக்க வழிவகைகளை ஆராய்ந்து, அவற்றை முன்னெடுப்பதே சிறந்த செயற்பாடாக இருக்கும் என்பதை இங்கு அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன். அதாவது, பொலிஸார் மறைந்திருக்கின்ற நிலையில் சாரதிகள் அசட்டைப் போக்கிற்கு உட்பட்டு, அதனால் ஏற்படக்கூடிய விபத்துகளும் உண்டு. எனவே, பொலிஸார் நேரடியான பார்வையில் வாகன சாரதிகளுக்கு தெரியக்கூடிய வகையில் வீதிகளில் பணியாற்றுகின்ற நிலையில், சாரதிகள் விழிப்படையக்கூடிய சாத்தியங்களே எராளமாகும். அந்த வகையில், வீதி விபத்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் அதிகாலை – காலை வேளைகளில் வாகன விபத்துகள் இடம்பெறுவது அதிகரித்துக் காணப்படும் ஒரு நிலையும் உள்ளது. இதனைத் தடுப்பதற்கு ஏதுவாக, போக்குவரத்து பொலிஸாரின் சேவையை குறிப்பாக, பிரதான வீதிகளில் இரவு 12.00 மணி முதல் அதிகாலை 6.00 மணி வரையில் பரவலாக விஸ்தரிப்பதற்கும், வேகத் தடைகளையும், கண்காணிப்பு உபகரணங்களையும் அவ் வீதிகளில் மேலும் வலுவுள்ளதாக அமைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், தகுதியற்ற சாரதிகளை இனங்காண்பதற்கான சோதனை நடவடிக்கைகளை பரவலாக முன்னெடுத்தல், விபத்துக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளும் வகையிலான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தல், தகுதியானவர்களுக்கு மாத்திரம் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், குடிபோதையில் வாகனங்களைச் செலுத்துவோரை பிடிப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை வலுவுள்ளவதாக முன்னெடுத்தல், வீதி ஒழுங்கு விதிகளை மீறுகின்ற சாரதிகள் மற்றும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல், கட்டாக்காலி விலங்குகள் மற்றும் வளர்ப்பின விலங்குகள் பாதைகளில் ஊடுறுவதைத் தடுப்பது தொடர்பில் உள்@ராட்சி மன்றங்களின் ஊடாக நடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்கள் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

வீதி விபத்துகள் காரணமாக பலியாகின்றவர்களின் தொகைக்கு சமாந்திரமான தொகையினர் அங்கவீனமாக்கப்படுகின்றனர். இவ்வாறு அங்கவீனமானோர் தொடர்பில் இதுவரையில் ஒழுங்கான கணக்கெடுப்புகள் எமது நாட்டில் மேற்கொள்ளப்படவில்லை என்றே கருதுகின்றேன். அந்த வகையில், எமது நாட்டைப் பொறுத்தவரையில் மனித உழைப்பு தொடர்பில் வருடாந்தம் ஏற்படுகின்ற நட்டமானது சுமார் 200 மில்லியனுக்கு அதிகமானதாகும் என்றும் தெரிய வருகிறது.

வீதி விபத்துக்களை கூடிய வரையில் குறைப்பதற்கு சர்வதேச ரீதியில் இனங்காணப்பட்டுள்ள ஒரு விடயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது, ‘உழைப்பியலை’ அவர்கள் பயன்படுத்துவதால் இந்த வீதி விபத்துகள் கூடுமானவரைத் தவிர்க்கப் பட்டுள்ளதாகவே அறிய முடிகின்றது. மக்களது உயரம் – பருமன், கை, கால்களின் நீளம், கண்களின் காட்சிகாண் பலம், உடலின் உயரம், சுமை, பார வேலைகள் செய்யக்கூடிய தகுதி போன்றவை தொடர்பில் தேசிய மட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, நாட்டு மக்களின் உடல் – உள திறன் இந்தளவுதான் என்றொரு தீர்மானத்துக்கு வருதலே ‘உழைப்பியல்’ எனப்படுகின்றது.

இதனடிப்படையில் அந்த மக்களால் பயன்படுத்தக்கூடிய தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, அவை அந்த மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்படுகின்ற மினி வாகனங்களை ஜப்பானியர்களால் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. எனவே, மேற்படி உழைப்பியல் தொடர்பில் நாம் தெளிவுகளைப் பெற்றிருந்தால், எமது நாட்டு மக்களின் பாவனைக்கு ஏற்ப வாகனங்களை தயாரிக்கச் செய்வித்து, அவற்றைப் பெற்றுக்கொண்டு, பயன்பாட்டுக்கு விடக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்த முடியும். அந்த வகையில், வாகன பயன்பாடுகள் தொடர்பிலும் ஒரு தேசிய வேலைத்திட்டமாக எமது நாட்டு மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

பெரும்பாலும் அன்றாடம் பாதைகளில் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வாகனங்களை நாம் பார்க்கின்றபோது, ஒரு வாகனத்தில் ஒரு நபர் மாத்திரம் பயணஞ் செய்கின்ற நிலைமைகளே மிக அதிகமாகும். ஆளுக்கொரு வாகனம் என்ற ரீதியில் பாதைக்கு வருகின்றபோது ஏற்படுகின்ற வாகன நெரிசல்கள் அதிகமாகின்ற நிலையில், அதன் ஊடான  பயன்பாடுகள் தொடர்பிலும் நாம் அவதானஞ் செலுத்த வேண்டியுள்ளது. எமது நாட்டிலுள்ள பாதைகளுக்கு ஏற்பில்லாத வகையில் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன.  சில பாதைகள் பழுதடைந்து காணப்படுகின்றன. இவ்வாறான பாதைகளில் பயணிக்கின்ற வாகனங்கள் விரைவில் பழுதடைந்து விடுகின்றன.

அதே நேரம், எந்தவொரு கல்வித் தகைமையும் அற்ற, இலகுவாக உள்வாங்கப்படக்கூடிய, ஒரேயொரு பொறுப்புமிக்கத் தொழிலாக சாரதி தொழில் தற்போது எமது நாட்டிலே காணப்படுகின்றது. சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதில் அநேகமாக முறையற்ற வழிவகைகளைப் பின்பற்றுகின்ற நடைமுறைகளும் எமது நாட்டில் இல்லாமலில்லை.

அந்த வகையில், நாட்டில் தற்போதுள்ள சட்ட திட்டங்கள், வீதி விபத்துகளை தவிர்ப்பதற்கு போதுமானதாக இல்லை என்பதுடன், சட்ட திட்டங்கள் இருப்பதன் காரணமாகவே  விபத்துகளைத் தடுக்கின்ற வீதம் அதிகரித்துள்ளது என்றும் கூற முடியாதுள்ளாகவே தெரிய வருகின்ற என்பதையும் இங்க சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வீதி ஒழுங்குகளையும், வாகனங்களைச் செலுத்துகின்ற சட்ட திட்டங்களையும் பின்பற்றாத சாரதிகளுக்கு எதிராக சட்ட ரீதியாக தண்டப் பணம் அறவிடுவதால் மாத்திரம் விபத்துகள் குறையப் போவதில்லை. அனைத்து விடயங்கள் குறித்தும் சட்ட ரீதியிலான அணுகுமுறை கடினமாக இருப்பின், சட்டத்தை மேலும் கடினமாக்கி, சாரதிகளின் ஒழுக்கம் தொடர்பிலும், அதே நேரம் பாதசாரிகளின் ஒழுக்கம் தொடர்பிலும் அதிக அவதானமெடுக்கப்பட வேணடியுள்ளது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

சாரதி பயிற்சிகளின்போது, தனியாக வாகனங்களைச் செலுத்த முடியுமா என்பது குறித்து மாத்திரம் அவதானங்களைச் செலுத்துவது போதுமானதல்ல. அந்தப் பயிற்சியின்போது, அறிவு, திறன், எண்ணங்களின் கூட்டிணைவுகள் என்பவை தொடர்பிலும் உரிய அவதானங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் பார்க்கின்றபோது, சாரதிகள், பயணிகள், பாதசாரிகள், மோட்டார் போக்குவரத்து பொலிஸார், போக்குவரத்து அமைச்சு, பயணிகள் போக்குவரத்து அதிகார சபை போன்ற பல்துறையினரதும் இணைந்த ஒத்துழைப்புகளுடன் கூடியதான தேசிய வேலைத் திட்டமே மேற்படி வீதி விபத்துகளை தடுப்பது தொடர்பில் அவசியமாகிறது என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

வாகன நெரிசல்கள் எற்படுவதும், விபத்துகள் எற்படுவதும் போன்ற பிரச்சினைகள் தீர்வின்றிய பிரச்சினைகள் அல்ல. மனித திறன்களை அதிகரிப்பதன் ஊடாக உலகின் அபிவிருத்தியடைந்துள்ள நாடுகள் இப்பிரச்சினைகளை மிகவும் குறைப்பதில் வெற்றி கண்டுள்ளன. இதன் மூலம் 85 வீதமான வாகன நெரிசல்களையும், விபத்துகளையும் தவிர்க்க இயலுமாகவுள்ளதாகவும் தெரிய வருகிறது.

அந்த வகையில், சுமார் 60 வருடங்களுக்கு முன்பதாக பிரித்தானிய நாட்டில் ‘ஹென்டன் வாகனக் கட்டுப்பாட்டு முறைமை’ என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு, இன்றும் அது நடைமுறையில் இருப்பதாகவும், மனித திறன்களை விருத்தி செய்வதே இதன் இலக்கு என்றும், இதனடிப்படையில், பாதைகளை பயன்படுத்துவது தொடர்பிலான அறிவு, புரிந்துணர்வு போன்றவற்றை அந்த நாட்டு மக்களுக்கு பாடசாலை செல்லும் வயதிலிருந்தே வழங்கப்படுகின்றது என்றும் தெயவருகிறது. இந்த முறைமை வீதி விபத்துகளைக் குறைப்பதற்கு வலுவுள்ளதொரு திட்டமாக இருப்பதால், இது குறித்து உரிய அவதானங்களைச் செலுத்தி, அதனை எமது நாட்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்சந்தர்ப்பத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

வீதி திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு பகுதிகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கோரப்படும் அறிவிப்புகள் தனிச் சிங்கள மொழியினில் மாத்திரமே காட்சிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, கொழும்பு போன்ற பிரதான நகரங்களிலும் இந்த நிலையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சைகைகள் கூட இல்லாத இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிங்கள மொழி மூலப் பரிச்சயமற்றவர்களால் வீதி ஒழுங்கு மீறல்களுக்கான வாய்ப்புகள் ஏராளம். இது குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் உரிய அவதானம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு,

இங்கு இன்னுமொரு முக்கியமான விடயத்தை வலியுறுத்தி விடைபெற விரும்புகின்றேன்.

வீதி விபத்து ஏற்படுகின்ற நிலையில், உயிருக்குப் போராடுகின்றவர் உட்பட காயமடைந்தோருக்கு உடனடி மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டியதே அவசியமாகும். இத்தகைய சிகிச்சைகள் தாமதாகி அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்ட பல சம்பவங்களையும் நாம் கண்டிருக்கின்றோம். அவ்வாறான விபத்துகளின்போது எவரேனும் காயமின்றி தப்பித்தாலும்கூட, உடனடியாக செயற்பட இயலாத நிலையில் அவர் நிலைகுலைந்து போகின்ற சந்தர்ப்பங்களே ஏராளமாகும் என்பதால், அவரால் காயப்பட்டவர்களை மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக உட்படுத்த இயலாத நிலை ஏற்படலாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் விபத்துகளுக்கு உள்ளாகின்றவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கான உதவிகளை மேற்கொள்ள பொது மக்கள் முன்வராத ஒரு நிலையை எமது நாட்டிலும் காணக்கூடியதாக இருக்கிறது. சட்ட சிக்கல்களில் தாங்கள் அகப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் காரணமாகவே பொது மக்கள் இந்த விடயத்தில் பின்னடிக்கின்றனர் என்பதே உண்மையாகும்.

எனவே, நான் இதற்கு முன்னரும் இந்தச் சபையில் கோரிக்கை விடுத்துள்ளதைப் போல், இந்த விடயம் தொடர்பில் ஒரு தேசிய சட்ட பொறிமுறை அவசியமாகின்றது. அதாவது விபத்துகளுக்கு முகங்கொடுப்போரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவதில் பொது மக்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படக்கூடிய வேலைத் திட்டமொன்று வகுக்கப்பட்டு, அது வெகு விரைவாக செயற்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன்.

10.-1-300x229

Related posts:

சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளை முடக்கும் வகையிலான ஏற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்த...
வடக்கில் மக்கள் உடற் காயத்திற்கும் உளக்காயத்திற்கும் உள்ளாகியிருக்கின்றார்கள் - நாடாளுமன்றத்தில் டக்...
மதவாத ரீதியில் மக்களை வழிநடத்த யாரேனும் முயற்சித்தால் நாடு அழிவுகளை சந்திக்க நேரிடும் – டக்ளஸ் எம்....

தேசிய நல்லிணக்க  என்றும் விதையை  மாணவர்களிடையே விதைக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா ...
இறக்குமதிக்கான வரிகளை அதிகரிப்பதன் மூலமாக எமது உற்பத்திகளுக்கான உள்ளூர் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கலா...
சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளை முடக்கும் வகையிலான ஏற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்த...