வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலம் வறுமையை போக்கவும், வேலைவாய்ப்பை வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும்- நாடாளுமன்ற உரையில் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்

Friday, May 26th, 2017

இன்றைய உலகை அச்சுறுத்துகின்ற பாரிய நெருக்கடியாகவும், பாரிய பிரச்சினையாகவும் வறுமை காணப்படுகின்றது. வறுமையை எமது நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு ஏதுவாக அரசினால் கொண்டுவரப்பட்ட ஒரு வேலைத் திட்டமாக வாழ்வின் எழுச்சித் திட்டம் காணப்படுகின்றது. இதற்கு முன்பதாக இந்த வேலைத் திட்டமானது வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருந்த நிலையில், எமது நாட்டிலிருந்து வறுமையானது எந்தளவிற்கு ஒழிக்கப்பட்டிருக்கிறது? என்ற கேள்வியை முன்னிறுத்தியதாக சில கருத்துக்களை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்டத்தின் கீழான சட்டளைச்சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு இன்றைய தினம்(26.05.2017) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் தனது உரையில்,

‘ஒரு மனிதன் தனது வாழ்வாதாரத்திற்கு அத்தியவசியமான தேவைகளை – அதாவது, உணவு, உடை, வீடு, நீர் போன்றவற்றை – அடைந்து கொள்ள முடியாத நிலைமையே வறுமை’ என அழைக்கப்படுவதாக பொருளியலாளர்கள் வறுமைக்கு வரைவிலக்கணம் வகுக்கின்றனர்.

அதே நேரம், ‘ஒரு மனிதன் இந்த உலகில் வாழ்வதற்கு அவசியமான மிகக் குறைந்த தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ முடியாத நிலையே வறுமை’ என உலக வங்கி வறுமைக்கான வரைவிலக்கணத்தை வகுத்துள்ளது.

வறுமையை கணிப்பதற்கான அளவீடுகள் காலத்திற்குக் காலம் வித்தியாசப்பட்டவையாகவே இருந்து வருகின்றன. ஆரம்ப காலத்தில் உணவு, உடை, நீர், வசிப்பிடம் என்பன ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளாக இருந்துள்ள நிலையில், தற்போதைய நவீன வளர்ச்சிகளுடன் கல்வி, சுகாதாரம் என்பனவும் ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்ற கட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

இந்த மாறுபட்ட வளர்ச்சிப் போக்குகளை நோக்குமிடத்து, மனிதர்களுக்கு எவை எல்லாம் அவசியமாகத் தேவைப்படுகின்றனவோ, அவற்றை அடைய முடியாத நிலைமையே வறுமையாகுமெனக் கொள்ள முடியும். மனிதர்களுக்கு தேவைப்படாதவற்றை அடைய முடியாத நிலைமை வறுமையானது அன்று.

அந்த வகையில், எமது நாட்டின் வறுமை ஒழிப்பு தொடர்பிலான பிரதான வேலைத்திட்டமான வாழ்வின் எழுச்சி திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத பலர் இன்றும் வறுமை நிலைக்கு உட்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, இந்த நிலைமையானது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதி வாழ் மக்களிடையே மிக அதிகளவில் காணப்படுகின்றமையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கடந்த சுமார் 30 வருட காலமான யுத்தச் சூழலானது, எமது நாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பாரிய வறுமை நிலைக்குத் தள்ளியிருப்பதை உணரக்கூடியதாக உள்ளது. அதாவது, எமது நாட்டில் வாழ்கின்ற ஏனைய மக்களுடன் ஒப்பிடும்போது இந்த வித்தியாச நிலையைக் காண முடியும்.

கடந்த ஆண்டைப் பொறுத்தவரையில் இலங்கையின் வறுமை நிலை 6.7 வீதமாக வீழ்ச்சி கண்டிருப்பதாக உலக வங்கி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் எமது நாட்டின் வறுமை நிலை 6.7 வீதமாக இருந்துள்ள நிலையில், இனங்களின் அடிப்படையில் அதனை வகுத்துப் பார்கின்றபோது, 5.9 வீதமான சிங்கள மக்களும், 9.4 வீதமான இந்திய வம்சாவளித் தமிழ் மக்களும், 12 வீதமான இலங்கைத் தமிழ் மக்களும், 6.5 வீதமான முஸ்லிம் மக்களும் வறுமைக்கு உட்பட்ட நிலையில் இருக்கின்றனர் என உலக வங்கி தெரிவித்திருந்ததை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில் பார்க்கின்றபோது, அதி கூடிய வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாக இலங்கைத் தமிழர்கள் இருக்கின்றார்கள். கடந்த கால யுத்தமும், அதன் பின்னரான வாழ்வாதாரங்களுக்கான வாய்ப்புகளின்மையுமே எமது மக்களை இந்த நிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

அதே நேரம், எமது நாட்டில் குறைந்த ஊதியத்தைப் பெறுகின்றவர்கள் எனப் பார்க்கின்றபோது, எமது நாட்டின் மொத்த மக்கட் தொகையில் 32.1 வீதமானவர்கள் குறைந்த ஊதியத்தை – அதாவது நாளொன்றுக்கு இரண்டரை அமெரிக்க டொலர்களைப் பெறுகின்றவர்களாக இருக்கின்ற நிலையில், சிங்கள மக்களில் 28.8 வீதமானர்கள் இதில் அடங்குகின்ற நிலையில், இந்தியத் தமிழ் மக்களில் 46.3 வீதமானவர்களும், இலங்கைத் தமிழர்களில் 44.4 வீதமானவர்களும், முஸ்லிம் மக்களில் 37.2 வீதமானவர்களும் மேற்படி குறைந்த ஊதியத்தைப் பெறுகின்ற தொழிலாளர்களாக இருக்கும் நிலையே காணப்படுகின்றது என உலக வங்கி சுட்டிக் காட்டுகின்றது.

இந்த ஆய்வுகளை முன்வைத்தே, எமது நாட்டில் ஆகக் குறைந்த ஊதியத்தில் ஆகக் கூடுதலான தொழில் புரிகின்றவர்களாக இலங்கையில் இலங்கைத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் இருப்பதனால், அதி கூடிய வறுமை நிலைக்கு இம் மக்கள் ஆட்பட்டுள்ளனர் என உலக வங்கி தெரிவித்திருக்கின்றது.

இந்த விகிதாசாரத்தை மாகாண ரீதியல் வகைப்படுத்துகின்றபோது, நாளொன்றுக்கு இரண்டரை அமெரிக்க டொலர் ஊதியத்தைப் பெறுகின்ற தொழிலாளர்கள் அதிகமாகவுள்ள மாகாணங்களாக வடக்கு, கிழக்கு மாகாணங்களும், மலையகப் பகுதிகளும் காணப்படுகின்றன.

இதில் வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால், இந்த வீதமானது, முல்லைதீவில் 74.4 வீதமாகவும், மன்னாரில் 60.9 வீதமாகவும், கிளிநொச்சியில் 57.2 வீதமாகவும், யாழ்ப்பாணத்தில் 42.6 வீதமாகவும், வவுனியாவில் 23.1 வீதமாகவும் காணப்படுவதாகத் தெரிய வருவதுடன், தொழிலின்மை பிரச்சினையானது வடக்கில் 10.2 வீதமாகவும், கிழக்கில் 11.2 வீதமாகவும் இருந்து வருவதையும் அவாதானிக்க முடிகின்றது. மேலும், நாளொன்றுக்கு 350 ரூபா ஊதியம் பெறுகின்ற மக்கள் மிக அதிகமாக வாழ்கின்ற மாவட்டமாக முல்லைதீவு மாவட்டமே காணப்படுவதாகவும் தெரிய வருகின்றது.

அந்த வகையில், எமது பகுதிகளில் மக்களது வறுமை நிலையை அகற்றுவதற்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல், உருவாக்குதல், கைத்தொழிற்துறைகளை ஏற்படுத்துதல், சுய தொழில் முயற்சிகளை மேலும் அதிகரித்து, ஊக்குவித்தல், தொழில் நுட்ப பயிற்சிகளை அதிகளவில் மேற்கொள்ளல் போன்ற குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் தேவை. எனினும், அதுவரையில் மேற்படி வாழ்வின் எழுச்சி திட்டம் மூலமான உதவிகளை வறுமை நிலை மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்ற எமது பகுதிகளுக்கு, பயனாளிகளை அதிகமாக உள்வாங்கப்படுவதன்; ஊடாக வழங்குவதற்கும், தற்போதுள்ள வாழ்வின் எழுச்சி கட்டமைப்பிற்குள் தொழில்வாய்ப்புகளை வழங்கக்கூடிய நிலைமைகள் ஓரளவு இருக்கின்ற நிலையில், அதனைப் பயன்படுத்தி எமது பகுpகளில் வேலையில்லாப் பட்டாதாரிகளின் பிரச்சினைகளை ஓரளவு தீர்ப்பதற்கும் கௌரவ அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வாழ்வின் எழுச்சித் திட்ட கட்டமைப்பானது சமுரர்த்தி கட்டமைப்பிலிருந்து மாற்றப்பட்டபோது, அதனது வேலைத்திட்ட விரிவாக்கங்களுக்கு எற்ற வகையில் பல்வேறு தொழிற்துறைகள் சார்ந்த வாய்ப்புகள் உள்வாங்கப்பட்டிருந்ததாக அறிய முடிகின்றது. குறிப்பாக, நாடளாவிய ரீதியில் 1074 சமுர்த்தி வங்கிகள் உள்ள நிலையில், இவற்றுக்கான காவலாளிகள், கனிணி உதவியாளர்கள் பதவிகள் வெற்றிடங்களாகக் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்ற நிலையில், வாழ்வின் எழுச்சி திட்டத்தின் பெயரை சமுர்த்தி என பெயர் மாற்றஞ் செய்யப்பட்டுள்ள நிலையில், வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாத நிலையில், மேற்படி வெற்றிடங்களை நிரப்ப முடியும் என்பதையும், அதற்கான எற்பாடுகளே தேவை என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன், கடந்த 20 வருடங்களாக மேற்படி திணைக்களத்தில் பதவி வகித்து வருகின்ற சிரே~;ட முகாமையாளர்கள் உட்பட பதவி உயர்வுகள் பெறப்படாத நிலையிலேயே பலரும் பணியாற்றி வருகின்ற நிலையில், மேற்படி பதவி உயர்வுகள் முறையாக வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் மூலமான ஏனைய வெற்றிடங்களையும் தொழில் வாய்ப்புகள் அற்றோரைக் கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், மேற்படித் திணைக்களத்தின் கட்டமைப்புகளை உரிய முறையில் செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றபோது, நாடாளாவிய ரீதியில் சுமார் 7000 பேருக்கு தொழில்வாய்ப்புகளை வழங்க முடிகின்ற நிலையில், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் சுமார் 600 பேருக்கான வேலைவாய்ப்புகளை இதன் மூலமாக வழங்க முடியும் என்பதால், இது குறித்தும் அவதானங்கள் செலுத்தப்பட வேண்டும்.

இவ்வாறான முயற்சிகளுக்கூடாக எமது இளைஞர், யுவதிகளின் வேலையில்லா பிரச்சினைக்கு ஓரளவு தீர்வினைக் காண முடியும் என நம்புகின்றேன். அந்த வகையில், இவ்வாறு அரச துறைகளில் காணப்படுகின்ற பல்வேறு பதவி வெற்றிடங்களை படிப்படியாக நிரப்ப ஆரம்பித்தால், எமது இளைஞர், யுவதிகளில் கணிசமானோர் வறுமை நிலை ஒழிப்புக்கு முக்கிய பங்காளியாவார்கள் என்பது நிச்சயமாகும் என்பதையும் இங்கு நான் தெரிவித்துக் கொள்கின்றென்.

யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் தற்போது சமுர்த்தி நலனுதவிக் கொடுப்பனவு பெற்றுக்கொள்ளும் குடும்ப எண்ணிக்கை  53,840 ஆக இருக்கும் நிலையில், சமுர்த்தி நலனுதவி இதுவரை கிடைக்காமல் வறுமை காரணமாக 41,421 குடும்பங்கள் அந்த உதவியை எதிர்பார்த்து விண்ணப்பித்துள்ளன என்றும், கிளிநொச்சி மாவட்டத்தில்  11,740 குடும்பங்கள் சமுர்த்தி உதவி பெற்று வருகின்ற நிலையில், மேலும் 16,640 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன என்றும், முல்லைதீவு மாவட்டத்தில் 11,105 குடும்பங்கள் சமுர்த்தி உதவி பெற்று வருகின்ற நிலையில், மேலும் 12,266 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன என்றும், மன்னார் மாவட்டத்தில் 13,166 குடும்பங்கள் சமுர்த்தி உதவியைப் பெற்று வருகின்ற நிலையில், மேலும் 14,000 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன என்றும், வவுனியா மாவட்டத்தில் 11,956 குடும்பங்கள் சமுர்த்தி உதவி பெறுகின்ற நிலையில், மேலும் 16,004 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன என்றும் தெரிய வருகின்றது.

அதே போன்று, கிழக்கு மாகாணத்திலும் மேலும் சமுர்த்தி நலனுதவி கொடுப்பனவை எதிர்பார்த்த நிலையில் பல ஆயிரக் கணக்கான குடும்பங்கள் விண்ணப்பித்து இருக்கின்றன என்பதையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

அந்த வகையில், கௌரவ அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க அவர்களால் சுமார் 5 மாதங்களுக்கு முன்பதாக சமுர்த்தி நலனுதவிகள் கிடைக்கப் பெறுவோர் தொடர்பிலும், சமுர்த்தி நலனுதவிகள் தேவைப்பட்டு விண்ணப்பித்தோர் தொடர்பிலும் இருவேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன என அறிய முடிகின்றது. எனவே, மேற்படி ஆய்வுகளின் முடிவுகளை பகிரங்கப்படுத்தி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு விசேட ஏற்பாடு என்ற வகையில், தற்போது நடைமுறையிலுள்ள சில நிபந்தனைகளை தளர்த்தி மேலும் பயனாளிகளை உள்வாங்குவதற்கும்,  நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உதவுதொகையாக  1,500 ரூபா பெறும் மாணவர்களது எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், ஒரு பிரதேச செயலர் பிரிவில் உள்ள சமுர்த்திப் பயனாளிக் குடும்பங்களில் உயர்தரம் பயிலும் பிள்ளைகள் உள்ள குடும்பங்களை இலக்காகக்  கொண்டு, அக்குடும்பங்களில் 30 வீதமானோருக்காவது  புலமைப்பரிசில் உதவு தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கௌரவ அமைச்சர் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள் வாழும் குடும்பங்கள் மற்றும் மிகவும் நலிவுற்ற குடும்பங்களை இலக்காகக் கொண்டு 90 வீத மானிய அடிப்படையிலான கருத்திட்ட உதவிகளுக்கான ஒதுக்கீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும்,

கனரக வாகனங்கள் ஓட்டுதல,; இலத்திரனியல் உபகரணங்களைத் திருத்துதல,; உணவு பதனிடும் முறைகளை அறிந்துகொள்ளல் போன்ற தொழிற் பயிற்சிகள் தொடர்பில் சமுர்த்திப் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு வழங்கப்படுகின்ற 80 வீதமான உதவு தொகை பெறுவோரின் எண்ணிக்கையினை சமுர்த்திப் பயனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்றும்,

கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு  மாவட்டங்;களிலும், மன்னார் மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் சில பகுதிகளிலும், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னரே சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம் 2012ம் ஆண்டின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சமுர்த்தி வங்கிகளில் பொதுவான கடன் நிபந்தனைகள் நியமங்கள்,  அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உடனடியாகக் கட்டியெழுப்புவதற்கு ஏற்ற வகையில் இல்லை.

குறிப்பாக, ஆரம்பத்தில் 25,000 ரூபாவினை கடனாகப் பெற்று தொழில் முயற்சியை விருத்தி செய்தல் போதுமானதாக இல்லை. எனவே, இத்தகைய வாழ்வாதாரம் தேவைப்படும் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களுக்கு இத்தொகையை குறைந்த பட்சம் 50,000 ரூபாவாக  வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மீண்டும் கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Related posts: