வலுவிழந்த பொருளாதாரத்தின் மத்தியில் ஏற்றுமதிகளின் மந்தமும், இறக்குமதிகளின் வேகமும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, June 20th, 2017

எமது நாடு இன்று வலு குறைந்த பொருளாதாரத்திற்கு மத்தியில் அதிகரித்த இறக்குமதிகளுடனும், குறைவான ஏற்றுமதிகளுடன் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையே தொடர்வதாகத் தெரிய வருகின்றது. அந்த வகையில் பார்க்கின்றபோது, 2015ஆம் ஆண்டு 10546.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த எமது மொத்த ஏற்றுமதி வருமானமானது, 2016ஆம் ஆண்டில் 10309.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி கண்டிருக்கின்ற நிலையில், மொத்த இறக்குமதி செலவானது 2015ஆம் ஆண்டு 18934.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து, 2016ஆம் ஆண்டில் அது 19400.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளமையை இலங்கை மத்திய வங்கியின் 2016ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் காணக் கூடியதாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (20) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

இவ்வடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், இறக்குமதிப் பொருட்கள் தொடர்பில் அவதானிக்கின்றபோது, நுகர்வுப் பொருட்களுக்கான இறக்குமதி செலவு 2015ஆம் ஆண்டில் 4,713.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், 2016ஆம் ஆண்டில் அது 4,319 மில்லியன் டொலர்களாக குறைவடைந்துள்ள போதிலும், இடைநிலைப் பொருட்கள் என்ற வகையிலான எரிபொருள், மசகு எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியம், நிலக்கரி, கோதுமை, சோளம்,  அருங் கற்கள், புடவைகள் மற்றும் புடவைகளுக்கான அணிகலன்கள், இரசாயன உற்பத்திகள், வைரம், தங்கம், கனிய உற்பத்திகள் போன்ற பொருட்களின் இறக்குமதிக்கான செலவுகளில் அதிகரித்த தண்மையையே காணக் கூடியதாகவுள்ளது.

அந்த வகையில், மேற்படி இடைநிலைப் பொருட்களுக்கான செலவினம் 2015ஆம் ஆண்டில் 9,638.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து, அது 2016ஆம் ஆண்டில் 9,870 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளமையைக் காணக் கூடியதாகவுள்ளது.

இந்த வகையில் பார்க்கின்றபோது, எமது ஏற்றுமதித்துறைக்கான உற்பத்திப் பொருட்கள் தொடர்பிலேயே நாம் அதிகமான அக்கறையினைக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்பதையே நான் தொடர்ந்தும் இந்தச் சபையிலே வலியுறுத்தி வருகின்றேன்.

கடந்த வருடத்தின் எமது ஏற்றுமதித் துறைகள் சார்ந்து அவதானிக்கின்றபோது, கைத்தொழிற்துறையைப் பொறுத்தமட்டில் 2015ஆம் ஆண்டில் அது 8,017.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து, 2016ஆம் ஆண்டில் அது 7,940.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தையே – அதாவது, சற்று குறைந்த வருமானத்தையே ஈட்டித் தந்திருக்கின்றது.

இந்த வகையில், எமது நாட்டின் கைத்தொழிற்துறை சார்ந்த அவதானிப்புகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டியத் தேவை நிலவுகின்றது என்பது புலனாகின்றது.

எனவே, ஏற்கனவே எமது நாட்டில் இருந்து, பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழிற் துறைகளையும், புதிய கைத்தொழிற்துறைகளையும், எமது நாட்டினது தேவை மற்றும் ஏற்றுமதிச் சந்தையின் தற்கால கேள்விகளுக்கு இணங்க இனங்கண்டு மீள செயற்படுத்தப்பட வேண்டியதும், உருவாக்கப்பட வேண்டியதும் கட்டாயமாகும்.

அந்த வகையில் இன்றைய நிலையில் பொருளாதார ரீதியில் மிகுந்த பாதிப்புகளுக்கு உட்பட்டு, வீடு, வீடு சார் கடன்கள் அதிகரித்தும், தனி நபர் வருமானம் குறைந்தும் காணப்படுகின்ற வடக்கு மாகாணத்தில் ஏற்கனவே செயற்பட்டிருந்த கைத்தொழிற்துறைகளை மீள செயற்படுத்துவதற்கும், அங்குள்ள வளங்களை இனங்கண்டு மேலும் புதிய தொழிற்துறைகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை இங்கு மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நுகர்வுப் பொருட்களின் இறக்குமதியானது, 2015ஆம் ஆண்டைவிட 2016ஆம் ஆண்டில் செலவுகளைக் குறைத்துள்ள போதிலும், அதற்குள் உட்படுகின்ற அரிசி, சீனி, இனிப்பு வகைகள், பால் உற்பத்திகள்,  குறிப்பிட்ட மருந்து வகைகள் போன்றவற்றின் உற்பத்திகளை மேற்கொள்வதற்கான வளங்கள் மற்றும் மூலப் பொருட்கள் எமது நாட்டிலேயே கிடைக்கக்கூடியதாக இருப்பதால், அந்த உற்பத்திகளை பரவலாக மேற்கொள்வதற்கும், அதன் பாலான ஊக்குவிப்புகளை மேற்கொள்வதற்கும், வசதிகளை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், இவ்வகைப் பொருட்களுக்கான இறக்குமதி செலவினங்களை போதியளவில் கட்டுப்படுத்த இயலும்.

இறப்பர் ஏற்றுமதியில் 2015ஆம் ஆண்டைவிட 2016ஆம் ஆண்டில் 6.5 வீதமான அதிகரிப்பினை நாம் கண்டுள்ள போதிலும், தேயிலை ஏற்றுமதியில் 2015ஆம் ஆண்டு 1,340.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வருமானம் கிடைத்துள்ள நிலையில், 2016ஆம் ஆண்டு அது, 1,269 அமெரிக்க டொலர்களாக குறைந்து 71.5 வீதமான வீழ்ச்சி நிலையை அடைந்துள்ளது.

அந்த வகையிலே, எமது ஏற்றுமதிப் பொருட்களில் பிரதானமானதொரு இடத்தை வகிக்கின்ற தேயிலை உற்;பத்தி தொடர்பில் நாம் தொடர்ந்து அதிக அவதானங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

எமது நாட்டில் தேயிலை உற்பத்தித்துறையை நம்பியதாக பெரும்பாலான மக்களைக் கொண்டுள்ள ஒரு சமூகம் பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் தொடர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், பிற வேலைவாய்ப்புகளும் அரிதாகவுள்ள நிலையில், வாழ்வாதார ஈட்டல்கள் சவால்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இம் மக்களது வாழ்க்கை மற்றும் எதிர்காலத்துடன் பின்னிப்பிணைந்துள்ள தேயிலைத்துறை குறித்து அதிகளவிலான அக்கறையை இந்த அரசு எடுக்க வேண்டியுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதே நேரம், கடலுணவு உற்பத்தியில் 2015ஆம் ஆண்டைவிட 2016ஆம் ஆண்டு 6.5 வீதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. சுற்றிலும் கடல் வளத்தைக் கொண்டிருக்கும் எமது நாடு, அந்தக் கடல் வளத்தைக கொண்டு எமது பொருளாதாரத்தை மேலும் வலுவுள்ளதாக கட்டியெழுப்புவதற்கு இயலாத நிலையிலேயே தொடர்ந்தும் இருந்து வருவது மிகவும் வேதனையான விடயமாகும். இதற்கு, இந்தியக் கடற்றொழிலாளர்களது அத்துமீறியதும், தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களைக் கொண்டதுமான தொழில் முயற்சிகள் ஒரு பிரதான தடையாகவே இருந்து வருகின்றன. இத்தகைய தடைகளை அகற்றும் வகையில் எமது கடற்றொழில் அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்கள் மேற்கொண்டு வருகின்ற துணிச்சலான சில நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன. அந்த வகையில், இவரது செயற்பாடுகளை ஊக்குவித்து, அவற்றை மேலும் தீவிரப்படுத்துவதற்குரிய ஒத்துழைப்புகளை பொறுப்புமிக்க அனைவரும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், எமது நாட்டைப் பொறுத்த வரையில், சர்வதேச கடற் பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சுமார் 1600 மீன்பிடிப் படகுகளுக்கே சர்வதேச டூனா ஆணைக்குழு அனுமதிகள் உள்ளதெனத் தெரிய வருகின்றது. எனினும், இந்தப் படகுகள் அனைத்தும் சர்வதேச கடற் பரப்பில் தொழிலில் ஈடுபடுகின்றனவா? என்பது தொடர்பில் உடனடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். அவ்வாறு தொழிலில் ஈடுபடாத படகுகளுக்கான அனுமதிகள் இரத்துச் செய்யப்பட்டு, புதிதாக அந்த அனுமதிகளைப் பெறக் காத்திருக்கும் கடற்றொழிலாளர்களின் படகுகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டு, அத் தொழில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதே போன்று வடக்கு மாகாணத்தின் கடற்றொழில்த் துறை தொடர்பிலும் முக்கிய அவதானங்கள் செலுத்தப்பட வேண்டியத் தேவையுள்ளது. அதனை மேலும் நவீன முறையில் கட்டியெழுப்புவதன் ஊடாக எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரியளவிலான பங்களிப்பினை அதன் மூலமாகப் பெற முடியும். குறிப்பாக, பெறுமதி சேர் கடலுணவு உற்பத்திகளுக்கான முயற்சிகளை வடக்கில் நவீன வசதிகளுடன் ஏற்படுத்துவதன் ஊடாக சிறந்த பயன்களை பொருளாதார ரீதியிலும், தொழில்வாய்ப்புகள் என்ற வகையிலும் பெற முடியும்.

அதே நேரம், சிறு வேளாண்மை உற்பத்திகள் ஏற்றுமதிகள் தொடர்பிலும் 2015ஆம் ஆண்டில் எமது நாட்டுக்குக் கிடைத்துள்ள வருமானத்தில் கடந்த ஆண்டு 46.3 வீதமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இதற்கு, எமது நாட்டில் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்ற வரட்சி மற்றும் ஏனைய கால நிலை மாற்றங்கள் காரணமாகக் கூறப்பட்டாலும், எமது நாட்டின் வேளாண் துறை குறித்தும் ஒரு மந்தமான கொள்கை நிலைப்பாடே தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவது தெரிய வருகின்றது. இதன் காரணமாக இன்று வேளாண்மை துறை சார்ந்த உற்பத்திகளும் இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில், இது மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் எதிர்காலத்தில் ஏற்படும். இது தொடர்பிலும் உரிய அவதானங்கள் செலுத்தப்படுவது ஆரோக்கியமானது.

எமது நாட்டைச் சேர்ந்த சுமார் 10 இலட்சம் அளவிலான தமிழ் மக்கள் இன்று உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது தாய்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளையே அதிகமாக விரும்பி நுகரும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், இவர்களது நுகர்வுத் தேவைகளுக்காக எமது நாட்டிலிருந்து பல்வேறு உணவு மற்றும் உப உணவுப் பொருட்கள் தனியார்த்துறைகள் மூலமாக ஏற்றுமதி செய்யப்படுகின்ற நிலையையும் காணக்கூடியதாக இருக்கின்றபோதும், அது போதுமானதாக அல்ல என்றே தெரிய வருகின்றது.

எனவே, இத்துறை சார்ந்த ஏற்றுமதிகளை மேலும் ஊக்குவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் ஊடாக பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற எமது மக்களுடன் எமது பாரம்பரிய விழுமியங்களைத் தொடர்ந்து பேணிக் கொள்வதற்கும், அதே நேரம், இப் பொருட்களை அங்குள்ள ஏனைய மக்களுக்கும் அறிமுகம் செய்து வைப்பதன் ஊடாக ஒரு சந்தை வாய்ப்பினை உருவாக்கிக் கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும் என நம்புகின்றேன்.

அந்த வகையிலே எமது பனம் பொருள் சார் உற்பத்திகள், கடலுணவுகள், உப உணவுப் பொருட்களான மிளகாய், சின்ன வெங்காயம், கருணை கிழங்கு, ராசவல்லிக் கிழங்கு, மரவள்ளி, வற்றாலை, கச்சான், குரக்கன், நல்லெண்ணெய், எள்ளு உட்பட்ட பொருட்களுக்கான உற்பத்திகளை அதிகரிக்கவும், ஏற்றுமதி செய்வதற்கும் இயலுமாகும்.

அதே நேரம், போதியளவில் தற்காலத்தைய சர்வதேச கேள்விகளுக்கு ஏற்ப எமது ஏற்றுமதித்துறையை விருத்திச் செய்கின்ற நோக்கில் உற்பத்தித் துறைகைளை அதிகரிப்பதற்கும், அதே நேரம் இறக்குமதிகள் தொடர்பில் உரிய அவதானங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றைப் போதுமானளவு குறைப்பதற்கும், அல்லது கட்டப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இதுவே எமது நாட்டுக்கு தாங்கிக் கொள்ளக்கூடியதொரு பொருளாதாரக் கொள்கையாக அமையும். அந்த வகையில், கடந்த 2012 – 2016 காலப்பகுதிக்குள் சீனா 150 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த தனது இறக்குமதி செலவினங்களை 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள்; வரை குறைத்துள்ளதாகவும், இந்தியா இதே காலப்பகுதிக்குள் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த தனது இறக்குமதி செலவினங்களை 30 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைத்துக் கொண்டுள்ளது எனவும் தெரிய வருகின்றது.

அதே நேரம், இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து முதல் மூன்று மாதக் காலப்பகுதிக்குள் இந்தியா மற்றும் சீனாவிலிருந்து சட்டவிரோதமாக எமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற 450,000 போலியான பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றொரு தகவலும் ஊடகங்களில் வெளிவந்திருந்தது. இவ்வாறான பொருட்கள் தொடர்பில் மிகுந்த அவதானங்கள் தேவை எனவும் கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 7 ஜூலை 2010 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துரிதகதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில...
அரசியல் கண்ணாடிகளை கழற்றிவிட்டு நிஜங்களை பார்ப்பதற்கு முன்வாருங்கள் - அரசியல் தலைவர்களுக்கு அமைச்சர்...