வரிச் சுமைகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, March 7th, 2017

எமது நாட்டின் பொருளாதார நிலைமையானது பாரிய வீழ்ச்சி நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற தருணத்தில், பல்வேறு வரி முறைமைகள் குறித்து நாம் இந்தச் சபையிலே தொடர்ந்து வாதப் பிரதிவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறானதொரு நிலையில், எமது கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்படுகின்ற கணக்காய்வு அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஊடகங்கள் வெளியிட்டு வருகின்ற விமர்சனங்களை – ஆய்வுகளைப் பாரக்கின்றபோது, இங்கு குறிப்பிடப்படுகின்ற வரிகளை அறவிடக்கூடிய அரச நிறுவனங்கள், அந்தந்த வரிகளை உரிய முறையில் அறவிட்டுக் கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனவா என்ற சந்தேகமே எழுகின்றது.

ஊடகங்கள் கூறுவதெல்லாம் உண்மையல்ல என்று எவரேனும் கூறினாலும், ஊடகங்களில் வெளிவரும் இவ்வாறான தகவல்களே எமது மக்களுக்கு நேரிடையாகச் செல்லக்கூடிய தகவல்களாக அமைகின்றன.

எனவே, இவற்றை ஏற்றுக் கொள்கின்ற தரப்பினர் அதிகமானவர்களாகவும், மறுக்கின்ற தரப்பினர் மிகக் குறைந்த எண்ணிக்கையினராகவும் இருப்பதால், ஊடகங்கள் வெளியிடுகின்ற தகவல்கள் தொடர்பில் நாம் உதாசீனமாக இருந்துவிட முடியாது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உற்பத்தி வரி விஷேட சட்ட ஏற்பாடுகள் தொடர்பான விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றிய அவர், ஒரு நாட்டின் தேசிய உற்பத்தியானது வளர்ச்சியடைகின்ற நிலையில் அதன் பெறுபேறுகள் மக்களை நோக்கிப் பாய்தலும், அதன் ஊடாக தனிநபர் வருமானம் உயர்வடைகின்ற சூழ்நிலையில், நேரடி வரிகள் போன்றவற்றால் அரசின் வரி வருமானம் உறுதிப்படுத்தப்படுவதும், வரி வருமானம் இவ்வாறு உயர் நிலையை அடைகின்றபோது அரசுக்கு கடன் பெற வேண்டியத் தேவை குறையும் என்பதும் பொதுவானதொரு பொருளாதாரப் போக்காகும். எனினும், கடந்த காலங்களை ஆராய்ந்து பார்க்கின்றபோது, எமது நாட்டில் வரி வருமானமானது குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை எட்டாமல் இருப்பதையே தொடர்ந்து காணக்கூடியதாக இருக்கிறது.

உதாரணமாக, நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி ஒரு ரூபா வளர்ச்சி கண்டிருக்கும் நிலையில், அரசாங்கத்தின் வருமானமானது 70 – 74 சத அளவிலேயே வளர்ச்சி கண்டிருந்த நிலையையே காணக்கூடியதாக இருக்கிறது.  இது, வரி முகாமைத்துவத்தில் காணப்படுகின்ற பாரிய குறைபாடு என்றே கூறவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

வளைந்து கொடுக்கக்கூடிய வரி வருமானத்தின் பலஹீனமான தன்மை, பலஹீனமான வரி நிர்வாகம், வரி விதிப்புகளிலிருந்து தப்பித்துச் செல்லல் போன்ற விடயங்கள் இத்தகைய நிலைக்கு காரணமாக இருக்கிறது என்றே குறிப்பிட்டுக் கூற வேண்டும்.

சுமார் 20 வருடங்களுக்கு முந்தைய எமது நாட்டின் பொருளாதார நிலையை எடுத்துக் கொண்டால், அரச வருமானம் சுமார் 165 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், அரச கடன் செலவீனமானது சுமார் 84 பில்லியன் ரூபா என்ற நிலை காணப்பட்டது. ஆனால், இன்று அரச வருமானத்தைவிட அதிகளவு அதிகரித்த நிலையிலேயே எமது கடன் செலவீனங்கள் காணப்படுகின்றன. ஆகவே, அரச வருமானம் 3 மடங்காக அதிகரிக்கின்ற நிலையில், அரச கடன்களுக்கான செலவீனங்கள் 3.4 மடங்காக அதிகரிக்கின்றபோது, அரசின் ஏனைய செலவினங்களையும் சேர்த்து, மேலும், மேலும் கடன் பெறக்கூடிய அரசின் நிலைப்பாடானது வருடா வருடம் அதிகரிக்கும் என்பது தெட்டத் தெளிவாகின்றது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

இத்தகைய நிலையில் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதன் ஊடாகவே கடன் செலவீனங்களைக் கட்டப்படுத்தக் கூடிய நிலையை நாம் அடையலாம். எனினும், அதற்குரிய வகையிலான வரிக் கொள்கை எமது நாட்டில் வலுப் பெறாதுள்ள நிலையில், அதுவும் சாத்தியமாகப் போவதில்லை என்றே கூறவேண்டிய நிலைக்கு இன்று நாங்கள் ஆளாகியிருக்கின்றோம்.

பொருளாதார நிலையில் வளர்ச்சியுறுகின்ற போது படிப்படியாக அரசின் நேரடி வரிகள் உயர்வடைதல் வேண்டும். குறைந்த வருமானமுள்ள காலகட்டங்களின்போது நேரடி வரி முறைமையிலான தனி நபர் மீதான வரியானது, செலுத்தப்படுகின்ற விகிதத்தில் வீழ்ச்சியடைகின்ற காரணத்தினால், அதிகளவில் பொருட்கள் மீது விதிக்கப்படுகின்ற மறைமுக வரிகளால் வருமானத்தை ஈட்ட வேண்டிய நிலை அரசுக்கு எற்படுகின்றது.

இந்த வகையில், கடந்தகால எமது கடன்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் எமது நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவதற்கென பெறப்பட்ட கடன்களும் பாரியளவில் அடங்குகின்றன. பெறப்பட்ட கடன்களில் அவ்வாறான வசதிகளையும் ஏற்படுத்தியிருக்கலாம்.

உற்பத்திகளை வினைத் திறன. ஆக்குவதற்கும், உற்பத்தி செலவினங்களைக் குறைப்பதற்குமான காரணிகள் பல இந்த உட்கட்டமைப்பு என்கின்ற பதத்தினுள் அடங்குகின்றன. அதாவது, உற்பத்திக்கு ஒத்துழைக்கின்ற மின்னுற்பத்தி, பெருந்தெருக்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், புகையிரதப் போக்குவரத்து கட்டமைப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டும், இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள உற்பத்தியின் வளர்ச்சியானது என்ன? என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. எத்தனை முதலீட்டாளர்கள் கடந்த காலங்களில் எமது நாட்டுக்கு வந்து தங்களது முதலீடுகளை மேற்கொண்டுள்ளார்கள்? இதற்கு பதிலாக, தற்போதைய எமது பொருளாதார நிலையின் முன்பாக முதலீடுகளை மேற்கொள்ள வருபவர்கள்கூட திரும்பிச் செல்லுகின்ற ஒரு நிலையையே நாம் கண்டு வருகின்றோம்.

தனிநபர் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற சந்தர்ப்பங்களில்கூட அரச வருமானம் அதிகரிக்கவில்லை என்றால், உண்மையிலேயே தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதா என்ற கேள்வி எழுகின்றது. அது உண்மை எனில், ஒழுங்கான முறையில் வரி அறவிடல்கள் இடம்பெறுவதில்லையா? என்ற கேள்வி அடுத்து எழுகிறது. இவ்வாறான பொருளாதார வளர்ச்சியின் பிரதிபலன்கள் கீழ்நோக்கிச் செல்லாது, குறிப்பிட்ட ஒரு குழு சார்ந்து கசியும் நிலையான ‘வருமான வியாபிப்பு குறைபாடுகள்” களையப்படவும் வேண்டியுள்ளதை இங்கு மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எமது அண்டைய நாடான இந்தியாவைப் பொறுத்த வரையில், 1990ம் ஆண்டு அதனது முழுமையான நேரடி வரி வருமானம் 19 வீதமாக இருந்து, 2010ம் ஆண்டாகும்போது அது 59 வீதமாக அதிகரித்துள்ளது. அதாவது மறைமுக வரி வருமானத்தை தாண்டிய நிலையில் நேரடி வரி வருமானமானது அதிகரித்துள்ளது. இது, துரித பொருளாதார விருத்தியையும், அதனூடான தனி நபர்களது வரி செலுத்தும் இயலுமையையுமே எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. அதாவது, ‘பொருளாதாரம் வளர்ச்சி அடைகின்றபோது நேரடி வரிகளின் பங்களிப்பு படிப்படியாக வளர்ச்சி பெறும்’ என்கின்ற பொருளாதார சித்தாந்தத்தை இந்தியா உறுதி செய்திருப்பதைப் போன்று, நாமும் எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின்பால் இன்னும் பல மடங்கு அவதானங்களைச் செலுத்த வேண்டியுள்ளது என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

எமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதிகரித்துள்ள உள்நாட்டு, வெளிநாட்டு கடன் சுமை போன்ற காரணங்களால் பல்வேறு வகையிலான நேரடி மற்றும் மறைமுக வரி முறைமைகள் விதிக்கப்பட்டும், அவை வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டும் வருகின்றன. எனினும,; உரிய முறையில் அந்தந்த வரிகளை அறிவிடுவதற்கு தவறிவிடுகின்ற அல்லது, வேண்டுமென்றே தவிர்த்து விடுகின்ற நிலைப்பாடுகள், அந்த வரிகளை அறவிடும் தரப்பினரிடத்தே காணப்பட்டால் அல்லது, அவ்வாறான நிலைப்பாட்டுக்கு அத் தரப்பினரைத் தள்ளிவிடுகின்ற பணிப்புரைகள் மேல்நிலை வாரியாக விடுக்கப்பட்டால், அரச வருமானம் என்பது வீழ்ச்சியடையும் நிலையில்,  குறிப்பிட்ட ஒரு சாரார் மாத்திரம் இந்த வீழ்ச்சியில் வளர்ச்சியடைகின்ற நிலையில், இந்த வீழ்ச்சியை தூக்கி நிறுத்த வேண்டிய பாரிய சுமை சாதாரண மக்கள்மீதே திணிக்கப்படுகின்றது.

எமது கணக்காய்வாளர் நாயகத்தின் 2015ம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையைப் பார்க்கின்றபோது, 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் திகதி முதல் அமுலில் வருமாறு விதிக்கப்பட்டுள்ள, 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதிக்குள் அல்லது அதற்கு முன்பாக செலுத்தப்பட வேண்டுமென வரவு – செலவுத் திட்டத்தில் அமுலாக்கப்பட்டிருந்த கெசினோ வரியை அறவிடாமை காரணமாக 1000 மில்லியன் ரூபா வருமான இழப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

அதேபோன்று, 2000ம் ஆண்டு முதல் அறவிடுவதற்கென வரவு – செலவுத் திட்டத்தால் தீர்மானிக்கப்பட்டிருந்த மாளிகை வரி, குடியகல்வு வரி போன்றவை அறவிடப்படாமை காரணமாகவும்,

மேலும், இலங்கை சுங்கத்தில் பொருட்களின் பெறுமதி மதிப்பீடுகள் அடிக்கடி மாற்றப் படுவதனாலும், அரசுக்கான வருமானம் பாரியளவில் இழக்கப்படுவதாகவே தெரிய வருகிறது.

புகையிலை வரி கட்டளைச் சட்டத்திற்கு உட்படுகின்ற சுருட்டு, பீடி, மற்றும் பைப் (குழாய்) புகையிலை என்பவற்றுக்கு வரி அறவீடுகள் விதிக்கப்பட வேண்டிய போதிலும், மதுவரித் திணைக்களமானது அவற்றக்கான வரி அறவீடுகளில் ஈடுபடவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இவ்வாறான வரிகளை அறவிடுவதற்கான நடவடிக்கைகளை வலுவுள்ளதாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், கூடிய மட்டிலும் நவீன கேள்விகளுக்கு இணங்க உற்பத்தித் துறைகளை விருத்தி செய்து, உற்பத்திகளை அதிகரித்து, அதன் மூலமான நேரடி வரிகளை அதிகரிப்பதற்கும், மறைமுக வரிகளை அதிகளவில் குறைப்பதற்கும், அதன் மூலமாக எமது சாதாரண மக்கள் மீதான சுமையினை குறைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உணவு உற்பத்திக்கும் மக்களது தேவைகளுக்குமிடையிலான சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும் - நாடாளும...
இடர் முகாமைத்துவ அமைச்சால் உள்ளு+ராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட பவுசர்களின் உரிமங்கள் அந்தந்த பிரத...
மதவாத ரீதியில் மக்களை வழிநடத்த யாரேனும் முயற்சித்தால் நாடு அழிவுகளை சந்திக்க நேரிடும் – டக்ளஸ் எம்....