வன இலாக்காவால் அபகரிக்கப்பட்டுள்ள மன்னார், குஞ்சுக்குளம் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, March 8th, 2017

மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் வன இலாக்காவினரால் அபகரிக்கப்பட்டுள்ள சுமார் 200 ஏக்கர் காணிகளை விடுவித்து, அம் மக்களுக்கு வழங்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சூழல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்களிடம் இவ்விடயம் தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், இது குறித்து மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தின், மடு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் 1965, 1967, 1970 மற்றும் 1975ம் ஆண்டுக் காலப்பகுதிகளில் குடியேறியுள்ள மக்களுக்கு அரசாங்க காணிகள் வழங்கப்பட்டு, பற்றைக் காடுகளான அக் காணிகளை துப்பரவு செய்து இம் மக்கள் அவற்றில் தங்களது வாழ்வாதார தொழிலான விவசாயத்தினை மேற்கொண்டு வந்துள்ளனர் என்றும், நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலை காரணமாக 1990ம் ஆண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ள இம் மக்கள், தங்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியிருந்து, 1995ம் ஆண்டில் மீளக் குடியேறி, அசாதாரண சூழ்நிலை தொடர்ந்ததன் காரணமாக, மீண்டும் அதே ஆண்டில் இடம்பெயர்ந்து, மடு, பூமலர்ந்தான் போன்ற கிராமங்களில் தற்காலிகமாக வாழ்ந்து, 1997ம் ஆண்டில் மீண்டும் குஞ்சுக்குளம் பகுதியில் மீளக் குடியேறியுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

தற்காலிக வீடுகள் அமைத்து அப்பகுதியில் மீளக் குடியேறிய இம் மக்கள், அக் காணிகள் மீண்டும் பற்றைக் காடுகளாகி இருந்ததாலும், சூழ்நிலை காரணமாகவும் விவசாய செய்கையை மேற்கொள்ள இயலாதிருந்து, பின்னர் 2009ம் ஆண்டு முதல் அக் காணிகளைத் துப்புரவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர் என்றும், 1995ம் ஆண்டிலும், அதற்குப் பிந்திய காலத்திலும் மேற்படி விவசாயக் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ளதாகவும், இக் காணிகள் அனைத்தும் மன்னார் மாவட்ட செயலகக் காணிக் கிளையில் தனியார் விவசாயக் காணிகளாகப் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், மேற்படி சுமார் 187 குடும்பங்களுக்குச் சொந்தமான புதுக்களம், தம்பனைக்குளம், சின்னக் குஞ்சுக்குளம், மங்கலம்பிட்டி, பாலமோட்டைத் தோட்டம் போன்ற குளங்களின் கீழுள்ள காணிகளும் மேலும், சில மானாவாரி காணிகளுமாக சுமார் 200 ஏக்கர் விவசாய காணிகள் வன இலாக்காவால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இம் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை மேற்கொள்ள இயலாத நிலையில் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு வருவதாகவும், சிலரது வீட்டு வளவுகளுக்குள்ளும்,  வீடுகளுக்குள்ளும் வன இலாக்காவினர் தங்களது எல்லைக் கற்களை நட்டியுள்ளதாகவும், இதனால் தங்களது வசிப்பிடங்கள் தொடர்பிலும் ஆபத்தான நிலையே ஏற்பட்டுள்ளதாகவும் இம் மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

குஞ்சுக் குளம் பகுதி மக்களது மேற்படி பிரச்சினை தொடர்பில் உடனடி அவதானம் செலுத்தி, இம் மக்களது காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும்,

மரங்கள் அடர்ந்த இடங்கள் யாவும் வன இலாக்காவுக்கு சொந்தமான காணிகள் என்ற நிலையில், இப் பகுதியில் மாத்திரமன்றி வடக்கு – கிழக்கு உட்பட நாட்டில் பல பகுதிகளிலும் இவ்வாறான பிரச்சினைகள் தலைதூக்கியுள்ள நிலையில், பொது மக்கள் பாதிக்கப்படாத வகையில், இப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை வகுத்து, செயற்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கடல் தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்...
அகிம்சை குரலுக்கு மதிப்பளித்திருந்தால்  இலங்கை இரத்தம் தோய்ந்த தீவாக மாறியிருக்காது – நாடாளுமன்றில் ...
திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியை புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு  டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோ...
வடக்கில் உவர் நீர் புகுந்து விவசாய நிலங்களை பாதிப்படையச் செய்கின்றது  தடுக்க நடவடிக்கை வேண்டும் - நா...
உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு எவரும் தடையாக இருக்கக்கூடாது - நாடாளுமன்றில் டக்ளஸ் த...