வன்முறைக்கு தீர்வு காணப்பட்டதே தவிர  தமிழ் மக்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, December 6th, 2017

இன்றைய தினம் பொது நிர்வாக, முகாமைத்துவம், உள்நாட்டலுவல்கள், உள்@ராட்சி மற்றும் மாகாண சபைகள் ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, எனது கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கியதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று எமது நாட்டை எடுத்துக் கொண்டால், அரச தொழில்வாய்ப்புகளில் தமிழர்கள் மிக அதிகளவில் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலையே தொடர்கின்றது என்பதை இங்கு நான் வேதனையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளது.

இத்தகைய புறக்கணிப்புகள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா? இல்லையேல் தமிழர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்ற எண்ணத்தில் மேற்கொள்ளப்படுகின்றதா? இல்லை, அப்படியான மக்களே இந்த நாட்டில் இல்லை என்று கருதப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா? என்ற கேள்வியே இன்று எமது மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

ஒரு புறம் தேசிய நல்லிணக்கம் பற்றிப் பேசப்படுகின்றது. மறு புறம் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்ற செயற்பாடுகள் தொடரப்படுகின்றது. இந்த நிலையில், தேசிய தீய எண்ணங்களே எமது மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்படுகின்றன.

தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்புகள் இல்லை. முஸ்லிம் இளைஞர், யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்புகள் இல்லை. இத்தகைய நிலையில் இவர்கள் தங்களுக்கான வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்வதற்காக ஏதாவது வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுகின்றபோது, அல்லது வர்த்தக நிறுவனங்களில், தனியார்த் துறைகளில் பணிகளில் ஈடுபடுகின்றபோது, நாட்டின் வர்த்தகத்துறை சிறுபான்மையினரின் கைகளுக்குப் போய்விட்டதாகக் கூறப்பட்டு,  இனவாதத் தரப்பினரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எமது நாட்டில் அரச அலுவலகங்களை எடுத்துக் கொண்டால், தமிழ் பணியாளர்களில் எத்தனைப் பேரைக் காண முடியும்? என்பது இன்று ஒரு சாதாரணமான கேள்வியாகவே இருக்கின்றது.

வடக்கு மாகாணத்தில் கடந்த நவம்பர் மாதம் வரையில் வேலைவாய்ப்புகள் கோரி 40 ஆயிரத்து 493 பேர் மாவட்டச் செயலகத்தில் தங்களைப் பதிவு செய்துள்ள நிலையில் – மேலும் பதிவு செய்ய வேண்டிய பலர் உள்ள நிலையில், வடக்கில் மாவட்டச் செயலகங்களுக்கும், பிரதேச சபைகளுக்கும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படும்போது, வேலைவாய்ப்புகள் கோரி நடு வீதியில் நின்று போராடி வருகின்ற வடக்கு இளைஞர், யுவதிகள் மத்தியில் தேசிய நல்லிணக்கம் எப்படி வளரும்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

இன ஐக்கியமோ, தேசிய நல்லிணக்கமோ, எது ஏற்பட வேண்டுமென்றாலும், முதலில் எமது மக்கள் பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்தப்படல் வேண்டும். எமது இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளைக் கேட்பதால் எமது இன உரிமையை அடகு வைக்க வேண்டி வரும் என சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள்போல் கூறி, என்னால் எமது மக்களை ஏமாற்ற முடியாது. எமது மக்களின் அரசியல் உரிமைகளைக் கேட்பது, தொழில் உரிமைகளைக் கேட்பது, அடிப்படை உரிமைகளைக் கேட்பது என்பது இனவாதமாகப் பார்க்கக்கூடாது. இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவதற்கு அர்ப்பணிப்புடன் – உயிரையும் பணயம் வைத்து – நேர்மையுடன் அன்று முதல் இன்று வரை செயற்பட்டு வருபவன் நான். அந்த வகையில், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும், தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்குமே இந்தக் கோரிக்கைளை நான் முன்வைக்கின்றேன். இந்த நாட்டில், தேசிய நல்லிணக்கம் வலுவாக ஏற்படுத்தப்பட வேண்டிய உண்மையான – நேர்மையான தேவை இருக்குமானால், அனைத்து இனங்களையும, அனைத்துத் துறைகளிலும்; முதலில் சமப்படுத்த வேண்டும்.

நாட்டின் சனத்தொகைக்கு ஏற்ப உலகில் மிக அதிகளவிலான அரச பணியாளர்களைக் கொண்டு விளங்குகின்ற எமது நாட்டில், இன விகிதாசாரத்திற்கு ஏற்ப அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்குமானால் எமது இளைஞர், யுவதிகளுக்கு இத்தகைய வேலையற்றதொரு நிலைமை ஏற்பட்டிருக்காது.

இத்தகையதொரு நிலைமை ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச அவர்கள் ஒரு சுற்றறிக்கையைக் கொண்டு வந்திருந்தார். 1990ஃ15ஆம் இலக்க சுற்றறிக்கை. அதன்படி இன விகிதாசாரத்தின் அடிப்படையிலான அரச தொழில்வாய்ப்புகளை வழங்கியும் வந்தார். அவரது மறைவுக்குப் பின்னால், அந்த சுற்றறிக்கை தூக்கி எறியப்பட்டுவிட்டது.

இயற்கை அனர்த்தமொன்று ஏற்படப் போகின்றதென்றால், அதனை எமது மக்களுக்கு தமிழில் அறிவிப்பதற்குக்கூட ஒரு தமிழ் அதிகாரி வளிமண்டளவியல் திணைக்களத்தில் இல்லாத நிலை. இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களது நிலை எந்தளவிற்கு துரதிர்ஸ்டவசமான நிலையில் இருக்கின்றது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாக இல்லையா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

எனவே, எமது மக்களுக்கான அரசியல் உரிமைக்கான அதிகாரங்களைப் பகிர்வதை காலம் தாழ்த்தி வருவதைப்  போல், ஏற்கனவே பகிரப்பட்டுள்ள அதிகாரங்களை வழங்காதிருப்பதுபோல், எமது மக்களுக்கான தொழில் உரிமைக்கான வாய்ப்புகளிலும் காலம் தாழ்த்தப்படக்கூடாது என்பதையே இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

நாட்டில் வன்முறை ஒழிக்கப்பட்டு, தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள் எனக் கூறிவிட்டால் மட்டும் போதாது, சுதந்திரக் காற்றை மட்டும் குடித்துக் கொண்டு தமிழ் மக்கள் வாழ முடியுமா? என்பது குறித்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதே நேரம், தற்போதைய நிலையில் பகிரப்பட்டுள்ள அதிகாரங்களை வைத்துக் கொண்டு, வெற்றுக் கதைகளை அளந்து கொண்டிருக்காமல், வடக்கு மாகாண சபையும் தொழில்வாய்ப்புகளை உருவாக்க முன்வர வேண்டும். வடக்கின் புனரமைப்பு அமைச்சராக நான் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் பல்வேறு தொழில்வாய்ப்புகளை வடக்கில் உருவாக்குவதற்கு என்னால் முடிந்திருந்தது. வடக்கு மாகாண சபையால் இதுவரையில் ஒரு வேலைவாய்ப்பினைக் கூட உருவாக்க முடிந்திருக்கின்றதா? கட்டாக்காலி மாடுகளைப் பிடித்து, மக்களிடம் கொடுத்துவிட்டு, சுய வேலைவாய்ப்பு வழங்கினோம் எனக் கூறி முடிப்பதற்குள் அந்த மாடு தன் வழியே சென்று விடும் நிலைமைகளையே காணக்கூடியதாக இருக்கின்றது.

தேர்தல்களில் போட்டியிடுவதற்கு காட்டப்படுகின்ற அக்கறை, முயற்சி என்பவற்றை மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் காட்ட வேண்டும். அதற்கான ஆளுமை வேண்டும்.

அரசாங்க சேவையில் பட்டத்தினை அடிப்படைத் தகைமையாகக் கொள்ளாத பதவிகளில் பணிபுரியும் பட்டதாரிகளான, பொது முகாமைத்துவ உதவியாளர்களுக்கு உரிய பதவியுயர்வு, சம்பள அதிகரிப்பு, மற்றும் ஏனைய சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென மேற்படி பொது முகாமைத்துவ உதவியார்கள் ஒரு கோரிக்கையினை முன்வைத்துள்ளனர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஏனைய துறைகளில் பட்டதாரியாக உள்ளவர்களுக்கு அவரவர் கடமை புரியும் துறைகளில் உரிய காலத்தில் பதவியுயர்வுகள் வழங்கும் போது முகாமைத்துவ உதவியாளர் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பதவியுயர்வுகள் கிடைக்கப்பெறுவதில்லை என்றும்,

அந்த வகையில், அரச முகாமைத்துவ உதவியாளர்கட்கு ஆN-2 சம்பள படிநிலை வழங்கப்படுகின்றது என்றும், பட்டதாரிகளுக்கு ஆN-4 சம்பள படிநிலை வழங்கப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளதுடன்,  அரச முகாமைத்துவ உதவியாளர்களுக்கு ஆN-4 சம்பள படிநிலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், வகுப்பு தரம் பிரிக்கப்பட்டு ஐஐஐ ஐஐ, ஐ என்ற நிலைக்கு நேரொத்த படிநிலைக்கு சம்பளத்தினை மாற்றுதல் வேண்டும் என்றும்,

அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்று அரச முகாமைத்துவ உதவியாளர் பதவியை மாற்றம் செய்து  – பட்டதாரி அரச முகாமைத்துவ உதவியாளர் என்ற புதிய பதவி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும்,

பட்டதாரிகளான அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் 24 வருடங்களுக்கு மேல் சேவையை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு நேர்முகப்பரீட்சைக்கு அழைத்து, கணக்காளர் சேவை, இலங்கை நிர்வாக சேவை, உதவி திட்டமிடல் பணிப்பாளர் சேவை, கணக்காய்வு உத்தியோகத்தர் பதவி, புலனாய்வு உத்தியோகத்தர் பதவி, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் பதவி போன்ற நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,

மத்திய அரசாங்கத்திலும், மாகாண சபைகள், உள்@ராட்சி மன்றங்களிலும், மற்றும் நாடு முழவதிலுமுள்ள ஏனைய அரச அலுவலகங்களிலும் கீழுழைப்பு பட்டதாரிகளாக கடமைபுரியும் சகல பட்டதாரிகளையும் பட்டதாரி ஆளணிக்குள் உள்வாங்கி பொருத்தமான பதவிப் பெயர்களில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் இவர்கள் விடுக்கின்ற கோரிக்கை தொடர்பில் கௌரவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் பரிசீலித்துப் பார்த்து சாதகமான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இதே நேரம் எமது பகுதிகளில் கடந்த அசாதாரண காலகட்டத்திலிருந்து, பல்வேறு அரச துறைகள் சார்ந்த பணிகளில் ஆளணிப் பற்றாக்குறைகள் மிக அதிகமாக இருந்த நிலையில், தொண்டர் ஆசிரியர்களாக, சுகாதாரத் தொண்டர்களாக என அன்றிலிருந்து, இன்றுவரையில் எவ்விதமான ஊதியங்களும், சலுகைகளும் இல்லாத நிலையில் பணிபுரிந்து வருகின்ற பலர் தகைமைகள் இருந்தும், அனுபவம் இருந்தும் அரச நிரந்தரப் பணிகளில் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியதொரு வியடமாகும்.

மேலும், இரு மொழிகள் அமுலாக்கம் என்பது இந்த நாட்டில் எழுத்து மூல ஆவணமாக வைத்துப் பாதுகாக்கப்படுகின்றதே அன்றி, அரச அலுவலகங்களில் செயற்பாட்டு வடிவத்தினைப் பெற இன்னும் அது தயாராக இல்லை என்றே தெரிய வருகின்றது.

தமிழ் மொழியில் மாத்திரம் பரிச்சயம் கொண்ட ஒருவர் அரச அலுவலகங்களில் மொழி புரியாமல் தமக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை தொடர்கின்றது. இத்தகைய நிலைமைகள் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில்தான் இருக்கின்றது எனப் பார்த்தால், தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அதே நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது.

இத்தகைய பிரச்சினைகள் பற்றிக் கேட்டால், பதிலாக மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கின்றார்கள் எனக் கூறி பொறுப்பு வாய்ந்தவர்கள் பலரும் அந்தப் பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்கின்றார்கள்.

அரச அலுவலகங்களில் மொழி பெயர்ப்பாளர்கள் இருக்கின்றார்கள் என்றால், எத்தகைய தகுதியில் அவர்கள் இருக்கின்றார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

1999ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரச பணியில் தகுதிவாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் எத்தனைப் பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

2005ஆம் ஆண்டு வரையில் அரச பணிகளில் மொழி பெயர்ப்பாளர்களுக்கான பதவி நிலைகள், ஊதிய மட்டங்கள் என்பன உயர்ந்த மட்டத்திலிருந்ததாகவும், 2006ஆம் ஆண்டு முதல் அது எழுதுவினைஞர் சுப்ரா தரத்தினைவிட குறைந்த மட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அதிலிருந்து தகுதிவாய்ந்த மொழி பெயர்ப்பாளர்கள் அப் பதவியில் இணைந்து கொள்வதற்கு முன்வராததொரு நிலையே காணப்படுவதாகவும் தெரிய வருகின்றது.

இந்த நிலைமையினை மூடி மறைப்பதற்காக 2013ஆம் ஆண்டிலிருந்து தகுதி நிலை பாராமல், மேற்படிச் சேவைக்கு ஆளணிகள் நிரப்பப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது. இத்தகைய தகுதியற்ற மொழி பெயர்ப்பாளர்களிடம் நீதி மன்றங்களில் மாட்டிக் கொண்ட அனுபவம் எனக்கும் இருக்கின்றது.

மேலும், எமது நாட்டில் தற்போதைய நிலையில் அரச அலுவலகங்களில் தகுதியான மொழி பெயர்ப்பாளர்களுக்கான தட்டுப்பாடானது பாரிய அளவில் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. 2005ஆம் ஆண்டு வரையில் மொழி பெயர்ப்பாளர் சேவையின் 1ம் தரமானது ஒரு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி பதவிக்கு சமாந்தரமாகவும், தற்காலத்தில் எம்.என். 7 ஊதிய பரிமாணத்தைக் கொண்ட பதவிக்கு சமாந்தரமானதாகவும் இருந்துள்ளதாகவும், இதே சேவையின் விN~ட தரமானது 2005ஆம் ஆண்டு வரையில் மேற்முறையீட்டு நீதிமன்ற பிரதிப் பதிவாளரின் பதவிக்கு சமாந்தரமான ஊதிய பரிமாணத்தில,; நிறைவேற்று தரத்தின் தற்போதைய எஸ். எல். 1 ஊதிய பரிமாணத்தின் 12வது கட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பதவிக்கு சமாந்திரமான நிலையில் இருந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் செயற்படுத்தப்பட்டுள்ள 06ஃ2006ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் மூலமாக மேற்படி சேவையின் மேற்கூறப்பட்ட இரு தரங்களும் எம். என். 06 என்கின்ற ஊதிய பரிமாணத்திற்குக் கொண்டுவரப்பட்டதாகவும், இந்த நிலைமையானது ஒரு நிறுவனத்தினது எழுதுவினைஞர் அதி (சுப்ரா) தரத்தை விடவும் குறைந்த சேவை நிலைமையாகுமென்றும் கூறப்படுகின்றது.

மொழி பெயர்ப்பாளர்களுக்காக நடாத்தப்படுகின்ற ஒரேயொரு பதவி உயர்வு நிலையானது 1ஆம் தரத்திலிருந்து விN~ட தரத்திற்கான பதவி உயர்வு நிலை மாத்திரமே ஆகுமென்றும், மேற்படி பதவி உயர்விற்கான பரீட்சையானது இறுதியாக 1999ஆம் ஆண்டிலேயே நடாத்தப்பட்டது என்றும், அதன் பின்னர், மேற்படி ஊதியப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை எனக் கூறி இன்று வரையில் சுமார் 18 வருட காலமாக மேற்படி பரீட்சை நடத்தப்படவில்லை என்றும், இதனால், விசேட தரத்தில் ஒரு அலுவலருமின்றி முழுமையாக வெற்றிடமாக உள்ளதாகவும் தெரிய வருவதுடன், மேற்படி சேவையில் தகுதியானவர்கள் ஆர்வங் காட்டாத நிலையும், 2006ஆம் ஆண்டில் சேவையில் இணைந்து கொண்டவர்களில் தகுதிவாய்ந்த பலர் சேவையினைக் கைவிட்டுப் போயுள்ள நிலையும் ஏற்பட்டுள்ளதாலேயே இன்று மேற்படித் துறையில் தகுதியானவர்களுக்கு பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மேற்படி பற்றாக்குறையினை மூடி மறைப்பதற்காக, 2009ஆம் ஆண்டில் மொழி பெயர்ப்பாளர்களுக்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் தோல்வி கண்ட 54 பேர் 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து மொழி பெயர்ப்பு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்னர் இவ்வாறு தகுதியற்றவர்களை இணைத்துக் கொள்கின்ற நடவடிககைகள் பலமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இதன் காரணமாக அரச சேவைகயில் மொழி பெயர்ப்பு சேவையானது பொது மக்களுக்கு எவ்விதமான பயனும் அற்ற நிலையிலேய காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிலைமையினை அவதானத்தில் கொண்டு, மொழி பெயர்ப்பாளர்களின் பதவிகளை தற்போதைய நிலையிலிருந்து 2005ஆம் ஆண்டு வரைக் காணப்பட்ட நிலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா என்றும்

முடியும், எனில் அத்தகைய நடவடிக்கைகள் எப்போது மேற்கொள்ளப்படும் என்பதை அறிவிக்க முடியுமா என்றும்

சுமார் 18 வருடங்களுக்கு மேலாக பதவி உயர்வுகள் வழங்கப்படாதமையால் தற்போது விசேட தரத்தில் ஒரு அலுவலருமின்றி முழுமையாக வெற்றிடமாக உள்ள நிலையில், நடைமுறை சேவைப் பிரமாணக் குறிப்பின் ஏற்பாடுகளுக்கு அமையாக தகைமை பெற்றவர்களுக்கு விசேட தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியுமா என்றும்

தகுதிவாய்ந்த மொழி பெயர்ப்பாளர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு எடுக்கப்படக்கூடிய நடைமுறைச் சாத்தியமான மாற்று வழிமுறைகள் என்ன என்றும்

கௌரவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் தனது பதிலினை தற்போது வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

அத்துடன், அரச தொழில்வாய்ப்புகளில் – எத்துறைகளாக இருந்தாலும் கட்டாயமாக இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம் என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

தமிழ் மக்களும் இந்த நாட்டின் தேசிய இனம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அதை செயல் வடிவில் காட்ட வேண்டும். தமிழர்களுக்கும் இந்த நாட்டில் உரிமை இருக்கின்றது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதனையும் செயல் வடிவில் காட்ட வேண்டும். தொழில் உரிமையும் அதில் முக்கியமானதொன்று என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை உடனடியாக செயலில் காட்ட வேண்டும்.

மேலும், தற்போது பணியில் இருக்கின்ற அரச சேவையாளர்களது வினைத்திறன்கள் மேம்படுத்தப்பட வேண்டியதும், அவர்களை ஒழுங்குற முகாமைத்துவம் செய்யப்பட வேண்டியதும் அவசியமாகவுள்ளது. பொது மக்களிடமிருந்து அதிகளவிலான வரிகளை விதித்து, பொது மக்களுக்கு பயனற்ற அரச பணியாளர்களுக்கு அதனை ஊதியமாக வழங்கி வருவதானது எந்த வகையிலும் நியாயமாகாது. அரச ஊழியர்கள் ஒரு நாளில் நான்கு மணி நேரமே அரச அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர் என அண்மையில் எமது கணக்காளர் நாயகம் அவர்கள் தெரிவித்திருந்தார்.

அண்மையில், இலங்கையைத் தளமாகக் கொண்ட ஒரு தொழிற்சங்கத்தின் ஆய்வின்போது, அரச பணியாளர்களில் 60 வீதமானவர்கள் கடமை நேரத்தில் முகநூல் பயன்பாட்டிற்கென 3 மணி நேரத்தைச் செலவிடுவதாகத் தெரிய வந்துள்ளது.

வடக்கு – கிழக்கு உட்பட நாட்டில் பல மாகாணங்களிலும் வேலைவாய்ப்புகளற்ற நிலையில், பட்டதாரிகள் பலர் காத்திருக்கும்போது, 1 இலட்சத்து 96 ஆயிரத்து 128 அரச பணியாளர்கள் – அதாவது நூற்றுக்கு 17.8 வீதமானவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில்கூட சித்தியடையாதவர்களாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இவை அனைத்தும் அவதானத்தில் கொள்ளப்பட்டு, அரச பணியாளர்கள் விடயமானது சீரமைப்பிற்கு –  மீள் முகாமைத்துவத்திற்கு உட்படுத்தப்படல் அவசியமாகின்றது. நிலைபேறு அபிவிருத்தியினை எதிர்பார்த்திருக்கின்ற நாட்டில், வினைத்திறனற்ற அரச பணியாளர்களை வைத்துக் கொண்டு ஒரு அடி கூட முன்னேற முடியாது என்பதை நானிங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் 14,022 கிராம சேவையாளர்கள் பிரிவுகள் இருக்கின்ற நிலையில் அவற்றுள் சுமார் 2000 பிரிவுகளுக்கான கிராம சேவையாளர்கள் பதவிகள் நிரப்பப்படாததொரு நிலை அண்மைக் காலம் வரையில் காணப்பட்டது. அந்தப் பதவிகளுக்கான நியமனங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா? என்பது தொடர்பில் கௌரவ அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்கள் தனது உரையின்போது தெரிவிப்பார் என எதிர்பார்க்கின்றேன்.

ஒரு கிராம சேவையாளர் பல பிரிவுகளில் பதில் கடமைகளை நிறைவேற்றுகின்ற நிலையில், பொது மக்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்து வரும் நிலைமைகளை வடக்கிலும் காணக்கூடியதாக இருக்;கின்றது. தெற்கிலும் காணக் கூடியதாக இருக்கின்றது.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கலந்து கொள்கின்ற பிரதான நடமாடும் சேவை நடாத்தப்படுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்கள், துணுக்காய் பிரதேச செயலகத்தில் வைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி அறிவித்திருந்ததாகவும், சுமார் 100 நாட்கள் கடந்தும் அத்தகைய நடமாடும் சேவை எதுவுமே அங்கு இடம்பெறவில்லை எனவும் முல்லைத்தீவு மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடயத்தையும் கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

அத்துடன் ஜனாதிபதி அவர்களது ஆலோசனைக்கு அமைவாகவும், பிரதமர் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற  ‘நிலமெஹெவர’ ஜனாதிபதி மக்கள் சேவைக்கு எனது கோரிக்கைக்கு அமைவாக ‘உத்தியோகப்பூர்வ பணி’ என்ற தமிழ் மொழி மூலமான பெயரினையும் இணைத்துக் கொண்டமைக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியை கௌரவ அமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதுடன், இத்தகைய நடமாடும் சேவைகளை மேற்கொள்கின்றபோது, அது தொடர்பில் அந்தந்த பகுதிகளின் மக்களுக்கு தெளிவான முறையில் அறிவிப்புகள் கிடைக்கப்பெற வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்ற விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில், கடந்த செப்டெம்பர் மாதம் மன்னார், நானாட்டான் பகுதியில் இடம்பெற்றிருந்த ‘உத்தியோகப்பூர்வ பணி’ நடமாடும் சேவையின்போது ஒழுங்கான அறிவித்தல்களின்றி பொது மக்கள் பெரும் சிரமங்களுக்கு உட்பட்டதாகவும், முக்கியப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக காத்திருந்த மக்கள் இறுதியில் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் அம் மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.

எனவே, இவ்விடயம் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்தவார் என எதிர்பார்த்து, அடுத்ததாக உள்@ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு குறித்து சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

எனது இந்தக் கோரிக்கைகள் நீண்ட காலக் கோரிக்கைகளாக இருக்கின்றன.; தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையில்,  இக் கோரிக்கைள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் சாத்தியமில்லை என்றாலும், எதிர்காலத்தில் இந்த விடங்களை அவதானத்தில் கொண்டு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வகையிலேயே இந்தக் கோரிக்கைகளை முன்வைக்கின்றேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதங்கேணி, கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான், மன்னார் மாவட்டத்தில் மடு போன்ற பிரதேச செயலகங்களுக்கு பிரதேச சபைகள் இல்லாத காரணத்தினால் அங்கே உள்@ராட்சி சபைகளுக்குரிய சேவைகளான குப்பைகள் அகற்றல், சந்தைப் பராமரிப்பு, நோய்த் தடுப்பு உட்பட்ட அடிப்படை சேவைகள் செயலற்றுக் காணப்படுகின்றன. இந்த நான்கு பிரதேசங்களும் மிகப் பெரிய மற்றும் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களாகக் காணப்படுகின்றன. எனவே, இப் பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நான்கு பிரதேச சபைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மேலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கென நகர சபைகளை உருவாக்குவதற்கும்,  மானிப்பாய், சுண்ணாகம். சங்கானை, நெல்லியடி ஆகிய பிரதேச சபைகளை நகரசபைகளாக தரமுயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

கிளிநொச்சி  மிகப் பெரிய நகரமாகும். 4 கிலோ மீற்றர் தூரம் பரந்தன் முதல் முறிகண்டிவரை பரந்துள்ளது. இந்நகரம் தற்போது கரைச்சி பிரதேச சபையால் நிர்வகிக்கப்படுகின்ற நிலையில், இந்த சபையால் கிளிநொச்சி நகரத்தின் தேவைகளை பூர்த்திசெய்ய முடியாமல் உள்ளது. மேலும் கரைச்சி பிரதேச சபை கண்டாவளை பிரதேச செயலகத்தையும் நிர்வகிக்க வேண்டிய நிலையில் உள்ளது.  1991ஆம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சி நகர சபையாகவே இயங்கி வந்தது. கிளிநொச்சி நகரமானது, கிளிநொச்சி மாவட்டத்தின் நிர்வாக நகராகவும், விவசாய, வர்த்தக, நிதி மற்றும் கல்வி துறைகளுக்கு வடமாகாணத்தில் ஒரு மையமாகவும் விளங்குகின்றது.

முல்லைத்தீவு நகரமும் முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக நகராமாக விளங்குகின்றது. இதுவும் 1991ஆம் ஆண்டிற்கு முன்னர் நகரசபை அந்தஸ்தை அனுபவித்திருந்தது.

இதே போன்று மானிப்பாய், சுண்ணாகம், சங்கானை, நெல்லியடி நகரங்களும் 1991ஆம் ஆண்டிற்கு முன்னர் நகரசபை அந்தஸ்;தைக் கொண்டிருந்தன. இன்று நன்கு வளர்ச்சியடைந்துள்ள நிலையில், மேற்படி நகரங்களில் நகர சபை நிர்வாகம் அமையாததால் நகரங்களின் தேவைகளும், சேவைகளும் மிகவும் பின்தங்கிக் காணப்படுகின்றன.

வடமாகாணத்;திலுள்ள ஒரேயொரு மாநகர சபையாக யாழ்ப்பாணம் மாநகரமே காணப்படுகின்றது. இத்தகைய நிலையில் வடக்கு மாகாணத்தில், மிக வேகமாக வளர்ந்து, சகல துறைகளிலும் அபிவிருத்தி கண்டுவரும் வவுனியா நகரை மாநகர சபையாக தரம் உயர்த்த வேண்டும். இத் தரமுயர்த்தல் இந் நகரை மேலும் வளர்ச்சியடையச் செய்யும் என்பதும், அங்குள்ள மக்களுக்கும் மிக உயர்ந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் என்பதும் எனது நம்பிக்கையாகும்.

கிழக்கு மாகாணத்தின்; தலைநகரான திருகோணமலையை மாநகர சபையாகத் தரம் உயர்த்துவதற்கும், மேலும் செங்கலடி, களுவாஞ்சிக்குடி, மூதூர், கிண்ணியா போன்ற பிரதேச சபைகளையும் நகர சபைகளாக தரம் உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று – மத்தி, கோரளைப்பற்று (வாழைச் சேனை), ஆகிய பிரதேச செயலகங்களுக்கு பிரதேச சபைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இங்கே பிரதேச சபைகள் இன்மையால் உள்@ராட்சி சேவைகள் மிகவும் முடங்கிக் காணப்படுகின்றன. எனவே, மேற்படி பிரதேச செயலாகங்களுக்கும் பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும்.

கல்முனை நகரில் சாய்ந்த மருது பிரதேச மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் அதே வேளையில,; அங்குள்ள தமிழ்ப் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளும், துன்பங்களும் நீண்ட காலமாகவே தீர்க்கப்படாமல் உள்ளன. மேலும் இதனால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கமும், ஒற்றுமையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையும் காணப்படுகின்றது.

தெற்கில் மாத்தறை மாவட்டத்திலுள்ள வெலிப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் ஒரு பிரதேச சபையினை உருவாக்க வேண்டியத் தேவையும், அக்குரஸ்ஸ, தெனியாய, அக்மண போன்ற நகரங்களுக்கு நகர சபைகளை உருவாக்க வேண்டியத் தேவையும் இருக்கின்றது.

அதே நேரம், உள்@ராட்சி சபைகள் உருவாக்கம், தரமுயர்த்தல் சம்பந்தமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் முடிவு காணப்படாமல் நீண்ட காலமாக உள்@ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சிடம் உள்ளதாக தெரியவருகின்றது.

அண்மையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் உள்@ராட்சி சபைகள் அமைப்பது மற்றும் தரம் உயர்த்துவது தொடர்பிலான தகுதிகள் குறித்து வரையறுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இக் குழு மிகவும் பின்தங்கிய, மக்கள் அடர்த்தி குன்றிய பிரதேசங்களான வடமத்திய மாகாணம், வடமாகாணம், கிழக்கு மாகாணம், ஊவா மாகாணம் போன்றவற்றின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளத் தவறியுள்ளது என்றும், மேலும் இக் குழுவில் சிறுபான்மை இனத்தவர்களின் பிரதிநிதித்துவம் எதுவும் கிடையாது என்றும், இக் குழுவின் பரிந்துரைகள் மேற்கூறப்பட்ட பின்தங்கிய பிரதேசங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றும் தெரிய வந்துள்ளது. எனவே, இவ்விடயம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என கௌரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கில் தமிழ் இளைஞர்களுக்கும், தெற்கில் சிங்கள இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஏதேனும் பிரச்சினைகளினாலோ, அல்லது, வடக்கில் தமிழ் மக்களுக்கும், தெற்கில் சிங்கள மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஏதேனும் பிரச்சினையினைகளினாலோ கடந்த சுமார் மூன்று தசாப்த கால யுத்தம் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கவில்லை.

இந்த நாட்டு மக்கள் நலன் குறித்த தூர நோக்கு சிந்தனையை முடக்கிப் போட்டிருந்த, சுயலாப அரசியல் சிந்தனை மேலோங்கியிருந்த தமிழ் – சிங்கள அரசியல் தலைமகளின் குறுகிய நோக்கு செயற்பாடுகளே கடந்த கால யுத்தத்திற்கும், அதன் ஊடாக எமது நாட்டினதும், மக்களினதும், சொத்துக்களினதும் பாரிய அழிவுகளுக்கும் காரணமாகியிருந்தன.

இதனை மனதில் கொண்டு, இனிமேலும் அத்தகைய வரலாற்றுத் தவறுகளை இழைக்காமல், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கை வழி நோக்கிப் பயணிப்போம் எனக் கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்.

ஊடகப் பிரிவு

ஈழமக்கள் ஜனநாயக கட்சி

Related posts:


மலர்ந்தது தமிழர் ஆட்சி  என்றவர்களின் ஆட்சியில் ஊழலும், மோசடியுமே மலிந்து காணப்படுகின்றது - டக்ளஸ் த...
செய்யும் தவறுக்கு முன்னர் அதன் விளைவுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவ...
மலர்ந்தது தமிழரசு என்றவர்கள் எமது மக்களை கையேந்திகளாகவே வீதிகளில் நிறுத்தியுள்ளனர் - டக்ளஸ் எம்.பி ச...