வடக்கு மாகாணம் போதைப்பொருள் கடத்தும் கேந்திரமாக மாறக் காரணம் என்ன? – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, June 7th, 2018

இன்றைய தினம் மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எனது கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கியமை தொடர்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நாட்டில் ஏற்கனவே ‘போதைக்கு முற்றுப் புள்ளி’ என்றும் தற்போது ‘போதையற்ற தேசம்’ என்றும் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான செயற் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இந்த நாட்டில் போதைப் பொருள் பாவனை என்பது அதிகரித்து வருகின்ற நிலைமைகளே காணப்படுவதாக அன்றாடம் ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் நகரங்களிலும், பின்னர் நகரங்களை அண்டியப் பகுதிகளிலும் வியாபித்திருந்த போதைப் பொருள் பாவனையானது, இன்று கிராம மட்டங்கள் தோறும் ஆக்கிரமித்து, எமது மக்களை ஆட்டிப்படைக்கின்ற மாபெரும் அழிவாகவே உருவெடுத்துள்ளது. குறிப்பாக, எமது மாணவர் சமூகத்தை இலக்கு வைத்துள்ள ஆபத்தாகவே இது உருவெடுத்துள்ளது.

வடக்கு மாகாணம் போதைப் பொருட்களின் கடத்தல் செயற்பாடுகளுக்கு முக்கிய கேந்திரமாக இந்த நாட்டில் மாறியிருக்கின்ற சூழ்நிலையில், அதன் பாவனையும் எமது பகுதிகளில் அதிகரித்து, பல்வேறு சமூக சீர்கேடுகளை தோற்றுவித்து வருவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இத்தகைய போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் கடந்த காலத்தில் யுத்தம் நிலவிய காலகட்டங்களில் இல்லாதிருந்தன. கடற்றொழில்களில் தடைகள், கடற் படையினரது தீவிர ரோந்து சேவைகள் மற்றும் வடக்கிலிருந்து தென் பகுதிக்கான தரைப் போக்குவரத்து வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் இந்தப் பிரச்சினை அப்போதிருக்கவில்லை.

இப்போது இத்தகைய போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் காரணமாக எமது பகுதிகளில் அதன் பாவனை அதிகரித்து, அதன் காரணமாக பல்வேறு சமூகப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றமை மட்டுமல்லாது, எமது கடற்றொழிலாளர்களுக்கு தங்களது தொழிற்துறைகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில், கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் சந்தேகத்தின் பேரில் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றமை, கைது செய்யப்படுகின்றமை போன்ற செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

அதேநேரம், மேற்படி போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகளை காரணம் காட்டி, அவற்றைத் தடுக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறப்பட்டு, கடற் படையினர் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதார கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தம் வசப்படுத்திக் கொண்டுள்ளமையும,; எமது கடற்றொழிலாளர்கள் தங்களது தொழிற்துறைகளை மேற்கொள்வதற்கு இயலாதுள்ளமைக்கு இன்னொரு காரணமாகும்.

போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு எனக் கூறப்பட்டாலும் வடக்கின் ஊடான போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் எந்தளவிற்கு இதுவரையில் தடுக்கப்பட்டுள்ளன? என்ற கேள்வியே இன்று இந்த நாட்டில் எழுந்துள்ள பிரதான கேள்வியாக இருக்கின்றது.

இன்று இந்த நாட்டில் கிராம மட்டங்களிலிருந்து நகர மட்டங்கள் வரையில் போதைப் பொருள் பாவனை பெருமளவு அதிகரித்துள்ளதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். நாளாந்தம் ஊடகங்களைப் பார்க்கின்ற போது, போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுகின்ற சம்பவங்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவற்றில் நூற்றுக்கு 99 சத வீதமான கைதுகள் நாட்டுக்குள்ளேயே இடம்பெற்றுள்ளதாகவே தெரிய வருகின்றது. கடத்தப்படுகின்ற நிலையில் கடலில் வைத்துக் கைப்பற்றப்படுகின்ற சம்பவங்கள் இதுவரையில் எத்தனை நிகழ்ந்துள்ளன? என்ற கேள்வி இல்லாமல் இல்லை.

கடந்த காலங்களில் கொள்கலன்களில் போதைப் பொருட்கள் இந்த நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அவற்றைக் கைப்பற்றியதாகவும் செய்திகள் மிகவும் பரபரப்பாக வெளிவந்தன. அதன் பின்னர் என்னவாயிற்று? இன்றுவரையில் கடத்தியவர்கள் யார்? என்று எந்தத் தகவலுமே இல்லாது போய்விட்டது.

2020ஆம் ஆண்டில் போதைப் பொருளை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு, புகையிலைச் செய்கையைத் தடை செய்வதறங்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கேரள கஞ்சா இந்த நாட்டுக்குள் நாளாந்தம் மிக அதிகளவில் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
‘போதைப் அற்ற நாடு’ என்பது வெறும் பிரச்சாரங்களில் மட்டுமல்லாது, அதனை ஒழிக்கக்கூடிய ஏற்பாடுகள் வலுவுள்ளதாக மேற்கொள்ளப்படுதல் குறித்தும் அதிக அவதானம் செலுத்தப்படல் வேண்டும்.

இன்று இந்த நாட்டில் இவற்றை ஒழிக்கின்ற – கட்டுப்படுத்துகின்ற நிறுவனங்களில் கடமையாற்றுகின்றவர்கள் எந்தளவிற்கு அர்ப்பணிப்புடன் அத்துறையில் ஈடுபட்டுள்ளனர்? என்பதும் எமது மக்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது.

இதைவிட தற்போது போதை மாத்திரைகளும் இந்த நாட்டுக்குள் அதிகளவிலான பாதிப்பை உண்டு பண்ணுகின்ற அளவிற்கு வியாபித்து வருவதாகவே தெரிய வருகின்றது. இந்த வகையில் சுமார் 15க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் நாட்டுக்குள் புழக்கத்தில் இருப்பதாகவே கூறப்படுகின்றது.

இந்த நாட்டில் மதுபாவனையும் அதிகரித்தே காணப்படுகின்றது. இதற்கு பிரதான காரணமாக கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் பியருக்கான விலை குறைப்பு சுட்டிக்காட்டப்படுகின்றது.

சட்டவிரோத மது பாவனையை அல்லது உற்பத்தியைக் கட்டப்படுத்துவது மற்றும் உல்லாசப் பிரயாணிகளின் வசதிகள் கருதி என மேற்படி பியர் விலை குறைப்பிற்கு பிரதான காரணங்கள் கூறப்பட்டன.

இந்த நாட்டில் சட்டவிரோத மதுபான பாவனை தொடர்பிலோ அல்லது உற்பத்தி தொடர்பிலோ தேசிய மட்டத்திலான புள்ளி விபரங்கள் இல்லை என்றாலும், தொழில்நுட்ப ரீதியிலான துணை தேசிய ஆய்வுகளைப் பொறுத்தமட்டில் சட்டவிரோத மதுபான பாவனையில் ஈடுபடுவோர் இந்த நாட்டில் 10 வீதத்திற்கும் குறைவானவர்கள் என்றே கூறப்படுகின்றது. இந்த நாட்டில் சுமார ;40 வீதமானோர் மது பாவனைக்கு உட்பட்டுள்ள நிலையில், அதில் 10 வீதத்திற்கும் குறைவான – அதாவது சுமார் 6 – 7 வீதமானோர் மட்டுமே சட்டவிரோத மதுபாவனைக்கு உட்பட்டுள்ள நிலையில், பியர் விலைக் குறைப்பானது சட்டவிரோத மது பாவனையாளர்களை அதிலிருந்து விடுபட எந்தளவிற்கு அழுத்தங்களைக் கொடுக்கும் என்பது கேள்விக்குறியான விடயமாகும்.

அதே நேரம், உல்லாசப் பயணிகளின் வசதியினை கருதி பியர் விலையின் குறைப்பு ஏற்படுத்தப்பட்டதெனில், உல்லாசப் பிரயாணிகளுக்கான சுற்றுலா மையங்களை அமைத்து, அதற்குள் விசேட ஏற்பாடாக மேற்படி விலைக் குறைப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, உல்லாசப் பிரயாணிகளுக்கு என்று கூறிக் கொண்டு, நாடாளாவிய ரீதியில் அதற்கான விலையைக் குறைத்ததே இன்று நாட்டில் மதுபான பாவனை அதிகரிப்புக்கு பிரதான காரணமாக இருக்கின்றது என்றே தெரிய வருகின்றது.

பியருக்கு விதிக்கப்பட்டிருந்த வரியானது 50 வீதத்தினால் குறைக்கப்பட்டதன் காரணமாக 1995ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த நாட்டில் மது பாவனையானது அதிகரித்தே காணப்பட்டது. 2006ஆம் ஆண்டில் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான கொள்கை இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக 2007ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் மதுபான பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், மதுபான உற்பத்திகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை நோக்கி மிக அதிகளவில் நகர்த்தப்பட்டதன் காரணமாக, 2010ஆம் ஆண்டு முதல் மீண்டும் இந்த நாட்டில் மதுபான பாவனையானது அதிகரிக்க ஆரம்பித்து, கடந்த கால யுத்தப் பாதிப்புகளைவிட மிக அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற அபாயமாக இன்று வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டையுமே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தற்போதைய பியர் விலைக் குறைப்பும் அதற்கு பக்க வாத்தியமாக இருந்து, மதுபாவனையில் இந்த நாடு உலகில் 4வது இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது.

இன்று இந்த நாட்டில் பாடசாலை மாணவர்களை வெகுவாக இலக்கு வைத்து பல்வேறு வகையிலான போதைப் பொருட்கள் பாடசாலைகளை அண்டியப் பகுதிகளிலேயே விற்பனை செய்யப்படும் செயற்பாடுகள் பெருகியுள்ளன. கடந்த வருடத்தில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் 29,790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்ற நிலையில், இவர்களில் 39 வீதமானவர்கள் 20 வயதினை அண்டியவர்களாகவே காணப்படுகின்றனர். 60 வீதமானவர்கள் 30 வயதினைத் தாண்டியவர்கள் எனத் தெரிய வருகின்றது.
பியரின் விலைக் குறைப்பானது இந்த நாட்டில் இளம் வயதினரிடையே – குறிப்பாக கல்வி கற்கின்ற தரப்பினரிடையே மதுப் பழக்கத்திற்கும், அதிகரித்த மது பாவனைக்கும் வழிகாட்டியுள்ள நிலையில், இது செறிவு கூடிய மதுவகைகளை நோக்கிய பயணத்திற்கும் உந்து சக்தியாக இருக்கின்றது.
பியரின் விலையைக் குறைத்து, ஏனைய செறிவு கூடிய மது வகைகளின் விலை அதிகரிப்பானது, மது பாவனையாளர்களை சட்டவிரோத மது பானங்களை நோக்கி நகர்த்துவதாகவே இருக்கின்றது. இதனால், ஏற்கனவே 6 – 7 வீதமான அளவில் இருந்துள்ள சட்டவிரோத மது பாவனையாளர்களது எண்ணிக்கை இன்னும் சில காலங்களில் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. தற்போதைய நிலையில், வடக்கு மாகாணத்தில் இத்தகைய சட்டவிரோத மது உற்பத்திகள் அதிகரித்து வருவதையும், இத்தகைய உற்பத்தி செயற்பாடுகளில் பாடசாலைகளைவிட்டு இடைவிலகிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

அதுமட்டுமல்லாது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் பாவனை அதிகரிப்பிற்கும் இது வழி வகுத்துள்ளது என்றே தெரிய வருகின்றது.
எனவே, இந்த நாட்டினை போதையற்ற நாடாக மாற்ற வேண்டுமெனில், அது தொடர்பிலான சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற நிறுவனங்கள் தொடர்பில் இறுக்கமான ஏற்பாடுகள் இருத்தல் அவசியமாகின்றது. வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை பெரும்பாலும் தடுப்பதற்கு ஏதுவாக இருந்த தமிழ் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் மாற்றப்பட்டு, இன்று வடக்கிலே போதைப் பொருள் கடத்தல் என்பது பாரியளவில் அதிகரித்துள்ளது.

இதே நேரம் பொலிஸ் துறையில் குற்றங்களுக்கு ஆட்படுகின்ற பொலிஸ் அதிகாரிகள் தண்டணை என்ற பெயரில் வடக்கு மாகாணத்திற்கு மாற்றப்படுகின்ற நிலையில், அவர்களில் பெரும்பாலானவர்களும் மேற்படி குற்றங்களுக்குத் துணை போகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை. எனவே, பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில் கூடிய அவதானமெடுத்து, பொலிஸ் சேவையில் இருக்கின்ற நேர்மையான அதிகாரிகளை வடக்கு மாகாணத்திற்கு நியமித்து, மேற்படி போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செயற்பாடுகள் உள்ளிட்ட சமூகவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, அதே நேரம் தற்போது வடக்கில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை பயன்படுத்தி, எமது கடற்றொழிலாளர்களது தொழில் முயற்சிகளுக்கு பாதிப்பினை – சிரமங்களை ஏற்படுத்தாத வகையில், கடுமையான நடவடிக்கைளை மேற்கொண்டு இந்த போதைப் பொருள் கடத்தல்களை முறியடிக்க இந்த அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தி விடைபெறுகின்றேன்.

Related posts:

திருமலையில் அபகரிக்கப்பட்டுவரும் தமிழ் மக்களின் வழிபாட்டிடங்களை விடுவிக்க நடவடிக்கை தேவை – நாடாளுமன்...
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழர் தரப்புக்களை ஒன்றி ணைப்பேன் - நாடாளு மன்றில் எம்.பி. டக்ளஸ் தேவா...
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாள...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 8 டிசம்பர் 2012  அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
உண்ணாவிரதமிருக்கும் தமிழ்க் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் விரைவாக நிறைவேற்ற வேண்டும் - நாடாளுமன்றில...
தமிழர் தேசத்தின் வளங்கள் தொடர்ந்து சுரண்டப்படுகின்றன நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி எடுத்துரைப்பு