வடக்கு மகாகாண அபிவிருத்தி மந்தகதியாகியிருக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, March 14th, 2019

கடந்த கால யுத்தம், பல்வேறு தொடர்ந்தேர்ச்சியான இயற்கை அனர்த்தப் பாதிப்புகள், இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முந்தைய காலங்களில் தேசிய அபிவிருத்திகளால் காட்டப்பட்டு வந்த புறக்கணிப்புகள் என பல்துறைகள் சார்ந்தும் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலைக்கு ஆளாகியிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள், யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதிக்குள் துரித அபிவிருத்திகளைக் கண்டிருந்தாலும், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தற்போது அந்த அபிவிருத்தி நிலையானது மந்தப் போக்கினையே கொண்டதாக இருப்பதும்,

யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டங்களில் துரித அபிவிருத்தித் திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்ட போதிலும், வடக்கு கிழக்கு மாகாண மக்களது உணர்வு ரீதியிலான பிரச்சினைகள் முதற்கொண்டு, அடிப்படை, பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அக்கறை காட்டப்படாத நிலையில், இன்று எமது மக்கள் பிரச்சினைகளுக்குள் பிரச்சினையாக வாழ வேண்டியே நிலையே ஏற்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –                                            

அரசியல் ரீதியில் எமக்குக் கிடைத்திருந்த குறைந்தபட்ச பலத்தினைக் கொண்டு, யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னரும் மத்திய அரசுகளுடன் இணைந்திருந்த நிலையிலேயே எம்மால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு உதவித் திட்டங்களை – பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியுமாக இருந்தது.

அதுவும், யுத்தத்தில் ஈடுபட்டிருந்த மற்றும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மத்திய அரசுகளோடு எமது அரசியல் பலத்திற்கு ஏற்ற வகையில் எமது மக்களுக்கு அக்காலகட்டத்தில் பல்வேறு உதவிகளை நாம் மேற்கொண்டிருந்தோம். அக்காலகட்டத்தில் அத்தகைய உதவிகள் எமது மக்களுக்குக் கிடைக்காதிருந்திருப்பின் எமது மக்களின் அழிவுகள் – பாதிப்புகள் இதைவிட அதிகமாக இருந்திருக்கும் என்பதை எமது மக்கள் உணர்வார்கள்.

ஆனால், இன்று நிலைமை அப்படியல்ல. யுத்தம் என்றொன்றில்லை. நல்லாட்சி என்று கூறிக் கொண்டே இந்த ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. அன்று இந்த ஆட்சியை கொண்டு வந்ததாகக் கூறிக் கொண்டவர்களாக, இன்று இந்த ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளவர்களாக, எமது மக்களின் அதிகளவிலான வாக்குகளை அபகரித்துக் கொண்டவர்களாக தமிழ்த் தரப்பினர் இருக்கின்றனர்.

எனவே, இந்த ஆட்சியில் பேரம் பேச வேண்டிய போதியளவு வாய்ப்புகளை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். அதுவும், ஆளுங்கட்சியிலேயே இருக்கின்றார்கள். இவர்கள் இந்த அரசுக்கு ஆதரவளிக்காவிட்டால், இந்த அரசு தற்போதுள்ள அறுதி பெரும்பான்மையையும் இழந்துவிடும் நிலை இருக்கின்றது.

ஆகவே, இந்த அரசைக் கொண்டு, எமது மக்களது இதுவரையில் தீராதிருக்கும் பிரச்சினைகளுக்கு இவர்களால் தீர்வுகளை எட்ட முடியும். என்றாலும், இவர்கள் அவ்வாறு எமது மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு – தற்போது கிடைத்திருக்கின்ற இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தவேனும் முன்வருவதாக இல்லை.

நாடாளுமன்றத்திலே ஆளுங்கட்சியுடன் இணைந்து தங்களுக்கான அனைத்தையும் செய்து கொள்கின்ற இவர்கள், எமது மக்களின் பிரச்சினைகள் என வரும்போது மட்டும் ஏதோ ஆளுங்கட்சிக்கு வெளியில் இருப்பவர்களைப் போன்று கதைக்கின்றனர்.

இன்று ‘வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுவதைப்’ போல், ‘இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்காது’ என்றும் ‘நம்பிக்கை தகர்கிறது’ என்றும் மக்களைப் பார்த்து கூறுகிறார்கள். இந்த ஆட்சியில் இவர்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் இருந்தும், இந்த ஆட்சியில் முடியாதென்றால், இவர்கள் ஜனாதிபதி, பிரதமராகியா எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் பார்க்கிறார்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

எமது மக்கள் மீதான உண்மையான நேசமும், அக்கறையும், ஆர்வமும், ஆளுமையும் இவர்களுக்கு இருந்திருந்தால், இந்நேரம் எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகள் பலவும் தீர்ந்திருக்கும்.

ஏற்கனவே வடக்கு மாகாண சபையை ஐந்து வருட காலமாக முடக்கி வைத்தும், மத்திய அரசின் திட்டங்களை தடுத்து வைத்தும், எமது மக்களின் பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டதால், எவ்விதமான வாழ்வாதாராங்களுக்கும் வழியின்றிய எமது மக்கள் நுண்கடன் போன்ற பாரிய சுமைகளுக்கும், தற்கொலை போன்ற கொடிய செயல்களுக்கும் தங்களைத் திணித்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இன்றும்கூட இந்த அரசுடன் பங்காளி கட்சிகளாக இணைந்திருக்கின்ற இவர்கள், அதன் மூலமாக எமது மக்களுக்கு எதுவும் செய்யாமல், எமது மக்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயற்பாடுகளைஞம் முடக்கி வருவதாகவே அறிய முடிகின்றது.

இன்று இந்த நாட்டில் வறுமை அதிகம் கொண்ட மாகாணமாக வடக்கு மாகாணமும், அதற்கடுத்த நிலையில் கிழக்கு மாகாணமும் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் உற்பத்தித்துறைகளில் முன்னேற்றம் இல்லை. கைத்தொழிற்துறை வீழ்ச்சி நிலையினையே காட்டுகின்றது. வேலையின்மை பிரச்சினையானது அதிகரித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் மத்திய மற்றும் மாகாண ரீதியலான அரச நிறுவனங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களும் பிற மாவட்ட ஆளணிகளால் நிரப்பப்படுகின்றன.

பல்வேறு வகையிலான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளை சுமந்தவர்களாக எமது மக்கள் தங்களது பிரச்சினைகளை யாரிடம் போய்க் கூறி ஆறுதல் பெறுவது எனத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

தங்களது குறைகளை கடவுளிடம் போய்க் கூறலாம் என எமது மக்கள்  கோவில்களுக்கு சென்றாலும், கோவில்களையும் தொல்பொருள் என்ற ரீதியல் ஆக்கிரமித்துக் கொள்கின்ற நிலையே இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

வீட்டு வசதிகள் இன்மை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் வெய்யிலுக்கு வாடியும், மழைக்கு நனைந்தும் நாளாந்தம் அவதியுற்று வருகின்றனர். இன்னமும் மீளக்குடியயேற வேண்டிய நிலையில் இருக்கின்ற மக்களின் அவலங்களும், ஏற்கனவே மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள்கூட இன்னமும் செய்து கொடுக்கப்படாத நிலையில், அம் மக்கள் அனுபவித்து வருகின்ற இன்னல்களும் இன்னமும் தீர்ந்ததாக இல்லை.

வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு, காஞ்சுரமோட்டையில் கடந்த சுமார் 07 மாதங்களுக்கு முன்னர் குடியேற்றப்பட்ட 46 குடும்பங்கள் இதுவரையில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் இன்றி வாழந்து வருகின்றன. இதில் 17 குடும்பங்கள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பகுதி தமிழ் கிராமங்களில் சுமார் 08 ஆயிரம் வரையிலான தமிழ்க் குடும்பங்கள் மீளக்குடியேறி வாழும் நிலையில் அவர்களுக்கு எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை என்றே கூறப்படுகின்றது. மேலும் இப்பகுதியில் வனவளத் திணைக்களத்தின் கெடுபிடிகள் காரணமாக 278 தமிழ்க் குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில், வட்டக்கச்சி பகுதியில் புதுக்காடு கிராமத்திலே மக்கள் தகரக் கொட்டகைகளிலும், கோழிக் கூடுகளிலும் வாழும் நிலையில் இருக்கின்றனர்.

முல்லைத்தீவு, துணுக்காய் பகுதியில் நிரந்திர வீடு தருவதாகக் கூறப்பட்டு, அத்திவாரம் வெட்டுமாறு அரச அதிகாரிகள் கூறியதால் அத்திவாரங்களை வெட்டிவிட்டு, மக்கள் ஒரு மாதம் கடந்த நிலையிலும், வீடமைப்பிற்கான நிதி இன்றி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு இன்னும் பல மீள்குடியேற்ற பகுதிகளில் இந்த நிலைமையே காணப்படுகின்றது. அந்த வகையில், மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அவதானங்களைச் செலுத்துகின்றபோது, மீளக்குடியேற்றிய பகுதிகளின் அடிப்படை வசதிகள் தொடர்பிலும் மிகுந்த அவதானங்கள் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்பதையே இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்

இந்தியாவில் இருந்து இலங்கை திரும்புகின்ற அகதி மக்கள் தொடர்பிலான பிரச்சினைகள் பற்றி கூற வேண்டியுள்ளது. குறிப்பாக இவ்வாறு இலங்கை திரும்பியவர்களில் சுமார் 2400 குடும்பங்கள் வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம், வவுனியா வடக்கு உள்ளிட்ட பிரதேச பிரிவுகளில் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். இருந்தும் இம் மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமலேயே உள்ளதாக அம் மக்கள் தொடர்ந்தும் முறையிட்டு வருகின்றனர்.

இவ்வாறாதொரு நிலை இருக்கின்ற போது, இந்தியாவில் இருக்கின்ற ஏனைய அகதி மக்கள் எந்த நம்பிக்கையில் மீள இலங்கை திரும்புவார்கள்? என்ற கேள்வி எழுகின்றது

கிளிநொச்சி மாவட்டத்திலே இரணைதீவில் குடியேறியுள்ள மக்கள் இன்று அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதியுறுகின்றனர். குடிநீருக்கு தட்டுப்பாடு, மின்சார வசதிகள் முழுமையாகவே கிடையாது. தற்காலிக கொட்டில்கள் அமைத்து வாழகிறார்கள். மருத்துவ வசதிகள், சுகாதார வசதிகள் எதுவுமில்லை.

அண்மையில் கௌரவ பிரதமர் அங்கு சென்றிருந்தபோது, கௌரவ பிரதமரிடம் இரணைதீவு மக்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அங்கிருந்த எந்தவொரு அரசியல்லாதியும் ஒரு வார்த்தைகூட கூறியிருக்கவில்லை என அம் மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.

அதேபோன்று, கிளிநொச்சி மாட்டத்திலே ஜெயபுரம் கிராமத்தில் வாழுகின்ற சுமார் 135 குடும்பங்கள் வாழ்வாதாரங்களை மேற்கொள்வதற்கான அனைத்து வழிகளும் தடுக்கப்பட்ட நிலையில் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். இம் மக்கள் முன்னர் அங்கு விவசாய செய்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இன்று அந்தக் காணிகள் வனவளத் திணைக்களத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளன. இம் மக்கள் நன்னீர் மீன்பிடியில் அப்போது ஈடுபட்டிருந்தனர். இன்று அந்த தேவன்குளம் தூர்ந்து போயிருக்கிறது. அன்று அம் மக்கள் மரமுந்திரிகைத் தோட்டத்தில் தொழில் செய்தனர். இன்று அத் தோட்டம் இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தங்களது சொந்த நிலத்தைக் கோரி இன்று இரண்டு வருடங்களாக வீதியில் இறங்கி போராட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படித்தான் எமது மக்களது வாழ்க்கை முன்பு ஊர், ஊராக இடம்பெயர்ந்து கழிந்தது. இப்போது ஊரிலிருந்து கொண்டே சொந்த இடங்களில் குடியேற முடியாமல் கழிந்து கொண்டிருக்கின்றது.

எனவே, குறிப்பாக, கடந்த கால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் கழிந்தும் நிம்மியாக வாழ இயலாமல் பாதிக்கப்பட்டு வருகின்ற எமது மக்களுக்கு இந்த மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுத்து, எமது மக்களை கைதூக்கிவிட முன்வாருங்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன்

அன்று அபிவிருத்தியை வெறும் சலுகை என்று கூறியவர்கள் இன்று தாமாகவே குனிந்து நின்று அத்திவாரங்களுக்கு அடிக்கற்கள் நாட்டுகின்றார்கள். வேடிக்கை என்னவென்றால், வீதிகள் புனரமைப்பது எங்கள் விடுதலையாகாது என்று கூச்சலிட்டவர்கள், தமது தொண்டர்களை அனுப்பி புனரமைப்பதற்காக வீதிகளை அளந்து கொண்டிருக்கிறார்கள்

சிங்கள அரசுகள் தமிழர்களை பிரித்தாண்டு கூறு போட்டவர்கள் என்று சீறி எழுந்தவர்கள், அதே அரச தலைவர்களை அழைத்து சிம்மாசனம் இருத்தி மரியாதையோடு வழியனுப்பி வைக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் அபிவிருத்தியும் உரிமைதான் என்று எழுதப்பட்டிருக்கும் வாக்;கியங்களை இப்போதுதான் இவர்கள் படித்துப்பார்த்தர்களோ தெரியாது. நாங்கள் அதை எப்போதோ படித்துப்பார்த்தவர்கள். அதை விடவும் எமது மக்களின் அவலங்களை மக்களுடன் கூட இருந்தே அனுபவங்களை பாடங்களாக கற்றுக்கொண்டவர்கள்.

ஆகையால்தான் அரசியலுரிமைக்கான, அபிவிருத்திக்கான, அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என முப்பரிமாண கொள்கை வகுத்து நாம் செயலாற்றி வருகின்றோம்.

அடுத்தவன் செய்தால் துரோகம்! தாம் செய்தால் ராஜதந்திரம்!! என்ற ஏமாற்று நாடகங்கள் எல்லாம் மக்களின் மன அரங்கில் இனி ஒரு போதும் ஏறாது.

இப்போது கூட வடக்கின் அபிவிருத்தியை பிரதமரின் ஊடாக செய்ய எத்தனிக்கும் தரகு அரசியலை நடத்த விரும்புகிறார்களே ஒழிய, தாமாக முன் வந்து தமிழ் பேசும் மக்களின் அவலங்களை நேரில் நின்று தீர்க்கும் திராணியற்றவர்களாகவே இருந்து வருகின்றார்கள். தத்தமது சொந்த சலுகைகளை அரசுடன் பின்கதவால் கைகுலுக்கி பெற்றுக்கொள்கிறார்கள்.

அது போல், தமிழ் பேசும் மக்களின் அவலங்களுக்கான தீர்வுகளையும் தாமே அமைச்சு பொறுப்பெடுத்து பெற்றுக்கொடுப்பதில் ஏன் தயக்கம் என்று கேட்கின்றேன்.

தமது அரசியல் பலத்தை வைத்து அடுத்தவர்களுக்கு கிடைக்கும் அமைச்சு அதிகாரங்களை தடுத்து நிறுத்தும் சுயலாப  அரசியல் தலைமையல்ல நாம். யார் குற்றியும் அரிசியானால் சரி, ஆனாலும் அந்த அரிசி பசித்தவனை சென்றடைய வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்கள் நாம்.

எமது வழிமுறைக்கு மட்டும் வந்தவர்களை நாம் வரவேற்கின்ற அதேவேளை அதைப்போல்; எதை? எப்படி? எவ்வாறு? சாதித்து காட்டுவது என்ற எமது பொறிமுறைக்கும் அவர்கள் வருவார்களேயானால், நாம் அதை திறந்த மனத்தோடு என்றும் வரவேற்போம்.

இன்று நிழல் அமைச்சர்களாக இருக்கும் நீங்கள் நிஜ அமைச்சர்களாக பொறுப்பெடுத்து வந்தால் உங்களுக்கு வழி காட்டவும், வல்லமை தந்து தமிழினத்தின் வாசல் தோறும் வெளிச்சத்தை தர வல்ல ஆலோசனைகையும் வழங்க நான் என்றும் தயாராக இருக்கின்றேன்.

அதேநேரம், தொழிற் பயிற்சி அமைச்சின் கீழுள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூல பயனாளிகள் தொழிற் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியான வகையில், தமிழ் மொழி மூலப் பரிச்சயமுள்ளவர்கள் அதிகம் வாழுகின்ற பகுதிகளில் தமிழ் மொழி மூல பயிற்சி ஆசியர்களை போதுமானளவு  இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நான் தொடர்ந்து முன்வைத்து வருகின்றேன்.

குறிப்பாக, மலையகம், கொழும்பு போன்ற பகுதிகளில் இது தொடர்பில் அதிக அவதானங்களை செலுத்த வேண்டும் என்பதை இங்கு சுட்டிக்காடடுகின்றேன் என்றார்.

Related posts:

எதிர்காலத்தில் இலவசக் கல்வி இல்லாது போய்விடுமோ? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!
யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானி...
மொழி அமுலாக்கலில் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலிய...