வடக்கு கிழக்கு மக்களை அந்நியமாகவே பார்க்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Thursday, May 24th, 2018

வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களை அந்நியர்களாகவே பார்க்கின்ற போக்குகளை கொண்ட நீங்களே அந்தப் பகுதிகளை பிரித்து கையாளுகிறீர்களே அன்றி அவ்வாறு பிரிக்க வேண்டிய தேவை எமது மக்களுக்கு ஒருபோதும் கிடையாது என்பதை நான் இந்தச் சபையிலே வலியுறுத்திக் கூறுகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாதெரிவித்தள்ளார்.

தேசிய சூழல் சட்டத்தின் கீழான 7 கட்டளைகள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுபைகயிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார் –

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் மிக, மிக அதிகமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயம் ஒரு சூழல் பாதுகாப்பாகும். அதே நேரம், இந்த நாட்டில் அதிகமாகக் கவனம் செலுத்தப்படாத ஒரு விடயமாக இருப்பதும் சூழல் பாதுகாப்பு என்றே கருத வேண்டியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் எனது கருத்துக்களையும் பதிவதற்கு வாய்ப்பு வழங்கியமை தொடர்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சூழல் பாதுகாப்பு தொடர்பில் நிறையவே பேசப்பட்டும், அதிகளவிலான விளம்பரங்கள் செய்யப்பட்டும், எத்தனையோ திட்டங்கள் பற்றி இந்த நாட்டில் பேசப்பட்டும் வருகின்ற போதிலும், உண்மையிலேயே அவற்றால் இந்த நாட்டின் சூழல் பாதுகாப்புப் பெறுகின்றதா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

தொல்பொருள் மிகைக் கொண்ட அடர்த்தியான அனுராதபுரப் பகுதிகளை டோசர் இயந்திரங்கள் கொண்டு நாசப்படுத்திவிட்டு, தவறு நடந்துவிட்டதாக கூறிக் கொள்ளும் நீங்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் என்ற பெயரில் பல்வேறு இடங்களை மறைத்து, தடுத்து வைத்திருக்கிறீர்கள்.

இதே போன்று, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் எனப் பெயரிட்டுள்ள பல வனங்களிலிருந்து பாரியளவில் மரங்கள் வெட்டப்பட்டு, கடத்தப்படுகின்றன. இந்த நிலையில் நாட்டின் வன அடர்த்தியை அதிகரிக்கப் போவதாகக் கூறுகிறீர்கள். வனங்கள் அழிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு இன்று பல மாவட்டங்களில் மக்கள் அன்றாடம் வன விலங்குகளுடன் போராடிக் கொண்டே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாது, விவசாய செய்கைகள் நாளாந்தம் பாரியளவில் அழிக்கப்பட்டு வருகின்றன.

சூழலைப் பாதுகாப்பதற்கு மரக் கன்றுகள் நடுவதாகக் கூறி, ஆயிரக் கணக்கில் நடப்பட்டாலும், நட்டியப் பின்னர் அவற்றைப் பராமரிப்பதற்கு எவருமின்றி, அவை கருகியும், கால்நடைகளுக்கு உணவாகியும் மறைந்து விடுகின்றன.

அடர்ந்த பாதுகாப்பு வனங்களில் எல்லாம் மரங்களை வெட்டிக் கொண்டு, எமது பகுதிகளில் எமது மக்களது வாழ்வாதார, குடியிருப்பு பகுதிகளை எல்லாம் வன இலாக்காவுக்குச் சொந்தமானவை என எல்லைகள் இடுகின்ற பரிதாப நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது.

கடந்த கால யுத்தம் காரணமாக மிக அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்களான முல்லைத்தீவு மாவட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் குடியிருக்க வீடுகள் இன்றி இருக்கின்ற நிலையில், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தினை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் முறிகண்டி, மாங்குளம் பகுதிகளில் ஒதுங்கியிருந்த அரச காணியில் அத்திவாரமிட்டு, கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவிருந்த நிலையில், வனவளத் திணைக்களத்தினர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அங்கே பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை மிகவும் மோசமான முறையில் நடத்தியிருக்கின்றனர். இவ்வாறு எமது மக்களது காணிகள் உட்படபெரும்பாலானகாணிகளை வனவளத் திணைக்களத்தினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே கையகப்படுத்தியிருக்கின்றனர்.

1983ஆம் ஆண்டு தென் பகுதியில் ஏற்பட்டிருந்த இனக் கலவரங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்டு ஜெயபுரம் எனும் கிராமம் உருவாக்டகப்பட்டு, இங்கு குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களுக்கென தேவன்குளத்தின் கீழ் 548 ஏக்கர் வயல் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த கால யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த மேற்படி வயல் நிலத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கென தற்போது அங்கு குடியிருக்கின்ற சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்தோர் 2010ஆம் ஆண்டிலிருந்து முயற்சித்து வருகின்ற போதிலும் வனவளத் திணைக்களத்தினர் அதற்கு தடையாக இருந்து வருகின்றனர்.
நான் இங்கு குறிப்பிடுவது ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இதைப் போன்று வனவளத் திணைக்களத்தின் கெடுபிடிகள், தடைகள் காரணமாக வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் பெரும்பாலான எமது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

பாதுகாப்புத் தரப்பினர் ஒருபுறம், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஒருபுறம், தொல்பொருள் திணைக்களத்தினர் ஒருபுறம், வனவளத் திணைக்களத்தினர் ஒருபுறம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர் ஒருபுறம் என அனைத்துத் தரப்பினரும் அங்குள்ள காணிகளை கையகப்படுத்திக் கொண்டால், எமது மக்கள் வாழ்வது எங்கே? வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வது எங்கே? எனக் கேட்க விரும்புகின்றேன்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், காடழிப்புகள், சட்டவிரோத மணல் அகழ்வுகள் மிக மிகத் தாராளமாக நடந்தேறுகின்ற நிலையில், அவற்தை; தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகளே அவற்றுக்குத் துணை போகின்ற நிலையில், விவசாய நிலங்களில் இயற்கையாக அதிகளவில் வளரக்கூடிய சுண்ணக்கற்களை பயிர்ச் செய்கைக்காக அகற்றும்போதும், அவற்றை அப்புறப்படுத்தும்போதும், அந்தக் கற்களை விற்று அன்றாடம் தங்களது வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்வதற்கு முயற்சிக்க மக்கள் கைது செய்யப்படுகின்றனர். ஆயிரக் கணக்கில் தண்டப் பணங்களைச் செலுத்தவதற்கு ஆளாக்கப்படுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டம் உட்பட வடக்கு மாகாணத்தின் பல்வேறு விவசாய நிலங்கள் இன்று உவர்நீர்த் தளங்களாக உருமாறி வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் நான் பலமுறை இந்தச் சபையிலே எடுத்துக் கூறியிருக்கின்றேன். நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், அது இதுவரையில் சாத்தியமாக்கப்படவில்லை.

இத்தகைய காரணங்களால் எமது மக்கள் இப்போது குடியிருக்கின்ற பகுதிகளை விட்டும் வெளியேறி வருகின்ற நிலையில், நீங்களும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறிக் கொண்டு காணி, நிலங்களை கையகப்படுத்திக் கொண்டால், எமது மக்கள் என்ன செய்வார்கள்? என்பது பற்றி நீங்கள் சற்று மனிதாபிமான ரீதியிலாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எமது மக்களின் எந்தப் பிரச்சினையை எடுத்தாலும், உடனே இனவாத சாயம் பூசப்பட்டு, அதனை சுயலாப அரசியலாக்கப் பார்க்கிறீர்கள். அல்லது, அவ்வாறு ஆக்கப்படுகின்ற சுயலாப அரசியலுக்கு அச்சப்பட்டு, மௌனமாகி விடுகிறீர்கள். அன்றி, அந்தப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி நீங்கள் சிந்திப்பதில்லை. வடக்கு, கிழக்கு மக்களை அந்நியமாகவே பார்க்கின்ற போக்குகளை கொண்ட நீங்களே, அந்தப் பகுதிகளை பிரிந்து கையாளுகிறீர்களே அன்றி, அவ்வாறு பிரிக்க வேண்டியத் தேவை எமது மக்களுக்கு ஒருபோதும் கிடையாது என்பதை நான் இந்தச் சபையிலே வலியுறுத்திக் கூறுகின்றேன். நீங்களே அப்படியொரு மாயையை உருவாக்கி, நீங்களே அதற்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். வேறு எதையுமே நீங்கள் செய்வதாக இல்லை.

இன்று வடக்கிலே தொடர்கின்ற வறட்சிக்கு பெரிதும் காரணமாக இந்த சூழல் அழிப்பு நடவடிக்கைகளே காணப்படுகின்றன. தெற்கிலே, மலையகப் பகுதிகளிலே இயற்கை அனர்த்தங்கள் வருடந்தோறும் நிகழ்வதற்குக் காரணமும் இந்த இயற்கை அழிப்பு நடவடிக்கைகள்தான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சூழல் பாதுகாப்பு என்பது கொழும்பு நகரில் குப்பை கொட்டாமல், ஏனைய பிரதான நகரங்களில் குப்பை கொட்டாமல் பார்த்துக் கொள்வது மட்டுமல்ல. முழு நாட்டினையும் பிரதிபலிக்கின்ற வகையில் அந்த ஏற்பாடுகள், வலுவுள்ளதாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.
கால நிலை சீர்கேடுகளால் ஏற்படுகின்ற அனர்த்தங்கள் தொடர்ந்தும் ஏற்படுகின்றன. அனர்த்த இடங்கள் பற்றி ஏற்கனவே குறிப்பிடுவதும், சிலவேளை மறந்துவிடுவதும், அங்கிருந்து மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுவதும், மக்கள் பாதிக்கப்பட்டால் அது குறித்து தகவல்களை செய்தியாக சொல்வதும் மட்டும்தான் தொடரும் இந்த நாட்டின் அனர்த்த முகாமைத்துவமாக இருக்கின்றது. ஏற்கனவே இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் உரிய இருப்பிடங்களின்றி அவதியுறுகிறார்கள்.
வடக்கிலே பாதுகாப்புத் தரப்பினர் கையகப்படுத்திக் கொண்டுள்ள எமது மக்களின் காணி, நிலங்களை விடுவிப்பதற்கு நிதி கேட்கப்படுகின்றது. இங்கே, அவிஸ்ஸாவலை, சாலாவ பகுதியில் இராணுவக் களஞ்சியம் வெடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.

தெற்கிலே இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது, தனியார்த்துறையினர் – குறிப்பாக தனியார் ஊடகங்கள் முன்வந்து செய்கின்ற பணிகளில் ஓரளவையேனும் அரச தரப்பினர் செய்வதற்கு முன்வருவதில்லை என்ற கருத்தே மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது.
இந்த நாட்டில் பிரதான கங்கைகள் பெருக்கெடுப்பு காரணமாக அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில், இந்த கங்கைகளை ஆழப்படுத்துவது, தூர்வாறுவது, கரைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பது போன்ற பல்வேறு துறைகள் சார்ந்து சிந்திக்கின்றீர்களா? என்பது பற்றி தெரிய வில்லை.

பொலித்தீன் தடை பற்றி இங்கே விவாதிக்கப்படுகின்றது. இந்த நாட்டைப் பொறுத்தவரையில், நாளாந்த பொலித்தீன் பாவனை சுமார் 20 மில்லியன் என்றும், நாளாந்த லன்ச்சீட் பாவனை சுமார் 15 மில்லியன் என்றும் தெரியவருகின்றது. இதில் 40 வீதமே மீள்சுழற்சி செய்யப்படுவதாகவும், ஏனைய 60 வீதம் கழிவுகளாக அகற்றப்படுவதாகவும் தெரிய வருகின்றது. இந்தக் கழிவுகளில் கணிசமானவை இந்த நாட்டின் நிலத்தில், நீர் நிலைகளில் தேங்கிக் கிடக்காமல் இருக்க முடியாது. இவற்றை எல்லாம் இனங்கண்டு, அவற்றை அகற்றுவதற்கு இதுவரையில் மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்ன? என்பது பற்றிக் கேட்க விரும்புகின்றேன்.

பொலித்தீன் தடை குறித்து நீங்கள் நகரப் பகுதிகளிலேயே குறிப்பாக அவதானத்தைச் செலுத்துவதாகத் தெரிகின்றது. நகரங்களை விட்டு, தூரப் பகுதிகளுக்குச் சென்று பாருங்கள். பொலித்தீன்களால் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்புகளை உங்களால் கண்டு கொள்ள முடியும். கொழும்பில்கூட இரயில் பாதைகளை அண்டியதான பகுதிகளில், சேரிப் பகுதிகளில் போய்ப் பாருங்கள். பொலித்தீன்களை, பிளாஸ்ரிக் வகைகளை எரிக்கின்ற செயற்பாடுகளை காண முடியும்.

ஏற்கனவே ஒருமுறை பொலித்தீன் பாவனையில் மாற்றம் கொண்டு வந்தபோது, உணவகங்களில் ஒரு சாப்பாட்டின் விலை 10 ரூபாவால் அதிகரித்தது. பின்னர் அரிசி விலை, தேங்காய் விலைகள் அதிகரித்தபோது, மேலும் 10 ரூபா அதிகரித்தது. பின்னர் எரிவாயு விலை அதிகரிப்பில் 10 ரூபாவும், எரிபொருள் அதிகரிப்பில் மேலும் 10 ரூபாவும் என அதிகரித்துள்ளது.

எனவே, பொலித்தீன் தடையுடன், உக்கக்கூடிய வகையிலான மாற்று ஏற்பாடுகளுக்கான ஊக்குவிப்புகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். காகிதம் சார்ந்த உற்பத்திகளை பரவலாக ஆரம்பிக்கலாம். அதற்கென வாழைச்சேனை காகித ஆலையைப் பயன்படுத்தலாம். பனைசார் உற்பத்திகளை மேலும் ஊக்குவிக்கலாம். இதன் காரணமாக எமது பகுதிகளில் தொழில்வாய்ப்புகளையும் பெருக்கிட முடியும். எனவே, இவற்றை ஊக்குவிக்க முன்வாருங்கள். அதேபோன்று இந்த நாட்டின் சூழலைப் பாதுகாப்பதற்கு பரந்தளவிலான திட்டங்களை, வலுவுள்ளதாக, பலமுள்ளதாக முன்னெடுக்கும் வழியைப் பாருங்கள் எனக் கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன்

Related posts:

வடக்கு மாகாண சபை ஊழல் தொடர்பில் மத்திய அரசின் நடவடிக்கை வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக...
ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்க...
கறுப்பு ஜுலையின் காயங்கள் மக்களிடையே இன்னமும் மாறவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

மக்களின்தேவைகளை நிறை வேற்று வதற்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டோம்: சுய நலத்த...
அதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்...
தமிழரின் பிரச்சினை தீர்ந்துவிட்டால் கூட்டமைப்பிற்கு பிழைப்புக்கே வழியிருக்காது - நாடாளுமன்றில் டக்ள...