வடக்கு – கிழக்கில் தமிழ் மொழிமூலமான அரச பணியாளர்களே நியமிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 28th, 2017

இறந்த உறவுகளுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி மரியாதை என்பது வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான ஓர் உரிமை வாழ்வை உருவாக்கிக் கொடுப்பதேயாகும்.

இதுவே அர்த்தபூர்வமான அஞ்சலி மரியாதையாகும். அதற்காக உறுதியுடன் உண்மைவழி நின்று உழைப்போம். வலிகளையும் வதைகளையும் இரத்தப் பலிகளையும் சுமந்து நடந்த மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றுவோம்.

போலித்தனமாக அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பவர்கள் உரிமைகளைப் பெறுவதற்காக கனிந்த வந்த சந்தர்ப்பங்களை உரிய முறையில் பயன்படுத்த மறுத்துவிட்டனர்.

அவர்களின் நோக்கம் மக்களின் துன்ப துயரங்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதேயாகும். உள்ளத்தில் நஞ்சும் உதட்டில் நல்லெண்ணமும் கொண்டு நல்ல பாம்பு வேசம் போட்டு நடிக்கின்றார்கள்.

யார் அழிய வேண்டும் என்று உள்@ர விரும்பினார்களோ அவர்களின் பெயரைச் சொல்லி அரசியல் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார்.

இன்றைய தினம் அனர்த்த முகாமைத்துவம், துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை, தொழில், தொழில் உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு எனது கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு வாய்ப்பளித்தமை தொடர்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த 23ஆம் திகதியுடன் கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளைத் தாக்கி, பாரிய அழிவுகளுக்கு வித்திட்ட சூறாவளி அனர்த்தத்தின் 39ஆம் ஆண்டு நினைவுகள் அனு~;டிக்கப்பட்டிருந்தன. அந்த பாரிய அழிவுக்குப் பலியான 982 பேரினையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூறுகின்றேன்.

எமது நாட்டில் நிலவுகின்ற வரட்சி காலநிலை காரணமாக 13 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 92 ஆயிரத்து 699 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 40 ஆயிரத்து 465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இதில் குறிப்பாக, புத்தளம், குருனாகல், இரத்தினபுரி, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மொனராகலை, திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களிலேயே அதிகளவிலான மக்கள் பாதிப்புகளுக்கு அதிகம் முகங்கொடுத்துள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், இத்தகைய பாதிப்புகளுக்கு உட்பட்டவர்களுக்கான வரட்சி நிவாரணங்கள் எதுவும் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளனவா? என்பது தொடர்பில் கௌரவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அவர்கள் தனது உரையில் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரட்சி நிவாரணங்கள் வழங்கப்படுவதில் பாரபட்சங்கள் காட்டப்படுவதாக மன்னார், சாந்திபுரம் கிராம மக்கள் கடந்த 14ஆம் திகதி அப்பகுதியில் ஒரு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இங்கு மட்டுமல்லாது, மேலும் சில பகுதிகளிலும் இத்தகைய பாரபட்சங்கள் காட்டப்பட்டு வருவதாகவே ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதே நேரம், மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்டு வருகின்ற தாழ் அமுக்கமானது எமது கரையோரப் பகுதிகளை அதிகளவில் பாதிக்கின்ற அபாயங்கள் இருப்பதாக காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

தற்போதைய நிலையில் பல மாவட்டங்களில் வரட்சி நிலை காணப்படுகின்ற அதே நேரத்தில,; குறிப்பிட்ட சில பகுதிகளில் மழையும், சில பகுதிகளிலும் அடை மழையும் பெய்து வருவதையும் காண முடிகின்றது.

அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்று, பொத்துவில், ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, காரைதீவு, திருக்கோவில், கல்முனை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி, சம்மாந்துறை, அம்பாறை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் தோன்றியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

எனவே, வெள்ள அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் தொடர்பிலும் அவதானங்கள் தேவை என்பதையும், அதற்கான விழிப்புணர்வுகள், அனைத்து மட்டங்களிலும் எமது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு, முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அமைச்சு உறுதிபடுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அண்மையில் தென் பகுதியில் ஏற்பட்டிருந்த வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் போன்ற அனர்த்தங்கள் பாரியளவிலான மக்களைக் காவு கொண்டிருந்த துயரங்களை நாம் மறந்துவிடக்கூடாது. அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில் மீண்டும் ஏற்படாத வகையிலான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் வலுவுள்ளதாக மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமும், அவசரமும் எம்முன்னே இருக்கின்றன.

தற்போது பெய்து வருகின்ற அடை மழை காரணமாக மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த இறத்தோட்டை, தம்பகல்லாகம மற்றும் பொல்வத்த கந்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தரை வெடிப்பு, நிலத் தாழிறக்கம், மண்சரிவு போன்ற அபாய நிலைமைகள் காணப்படுவதாகவும், உக்குவளை மற்றும் கலஉடஹேன போன்ற பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இந்தப் பகுதிகளிலிருந்து மக்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்ற நிலையில், இவ்வாறு இயற்கை அனர்த்தப் பகுதிகளிலிருந்து அகற்றப்படுகின்ற மக்கள், பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியேற்றப்படுவதை விரைந்து செயற்படுத்தும் படியும் கேட்டுக் கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் பல்வேறு இயற்கை அனர்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்த மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் உரிய இடங்களில் மீளக் குடியேற்றப்படாத நிலைமைகளும் இல்லாமல் இல்லை.

கடந்த மே மாதம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின்போது மத்துகம, வோகன் தோட்டக் கீழ்ப் பிரிவில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள 35 குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டம் இன்னும் இழுபறி நிலையில் இருப்பதாகவே தெரிய வருகின்றது. ஏற்கனவே பாரிய மண்சரிவு அபாயங்கள் ஏற்பட்டிருந்த மீரியபெத்த, அரநாயக்க, புளத்கொகுபிட்டிய, கடுகண்ணாவ போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் எத்தனைக் குடும்பங்கள் இதுவரையில் மீளக்குடியேற்றப்பட்டுள்ளன? என்ற விடயத்தினையும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது உரையில் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கின்றேன்.

அவிஸ்சாவலை சாலாவ பகுதியில் இராணுவ முகாம் வெடிப்பு காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகள் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டனவா என்ற கேள்வியும் இருக்கின்றது

அதே நேரம், மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டு, சுமார் ஒன்றரை வருடங்கள் கழிந்தும், அதே அபாய இடத்திலேயே தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயம் இயங்கி வருவதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது. மேற்படி பாடசாலையில் சுமார் 600 மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது உடனடி அவதானத்தைச் செலுத்தி, மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

இத்தகைய மழை, வெள்ள அனர்த்தத்திற்கு வடக்கு மாகாணமும் தொடர்ந்தும் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்றது என்பதை நான் இங்கு பலமுறை சுட்டிக்காட்டியிருக்கின்றேன். வரட்சி பாதிப்பின் தாக்கம் முற்றாக விடுபடாத நிலையில் இடைவெளியற்ற வகையில் மீண்டும் மழை, வெள்ளத்தின் பாதிப்புகளின் தாக்கத்திற்கு எமது மக்கள் உட்படுகின்ற நிலைமையே காணப்படுகின்றது. அந்த வகையில், மேற்படி வெள்ள அனர்த்தங்களில் எமது மக்களைப் பாதுகாக்கும் வகையில் வெள்ளம் வழிந்தோடக்கூடிய தேவைகள் கொண்ட பகுதிகளில் அதற்குரிய கால்வாய் வசதிகளை ஏற்படுத்த வேண்டிய நிலை இருக்கின்றது.

குறிப்பாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களினால் உருவாக்கப்பட்ட நாவற்குழி 300 வீடமைப்புத் திட்டம், குருநகர் 5 மாடி வீட்டுத் திட்டம், இராஜகிராமம் வீட்டுத் திட்டம் போன்ற வீடமைப்புத் திட்டங்கள் அமைந்துள்ள பகுதிகள் சிறு மழைக்கும்கூட வெள்ளம் ஏற்பட்டுவிடுகின்ற நிலைமையில் இருக்கின்றன. எனவே, இவ்விடயம் தொடர்பில் உடனடி அவதானங்களைச் செலுத்தி, இப்பகுதிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, இப்பகுதி மக்களை வெள்ள அனர்த்த நிலைமைகளில் இருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், வரட்சி பாதிப்புகளிலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், அனர்த்த தடுப்பு ஏற்பாடுகளாக சிறிய மற்றும் நடுத்தர குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன், வருடந்தோறும் நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் மழை – வெள்ள அபாயங்கள் வடக்கில் ஏற்படுவதன் காரணமாக, இது தொடர்பிலான தற்பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் முன்கூட்டிய விழிப்புணர்வுகளை எமது மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இயற்கை அனர்த்தங்களின்போது, எமது மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்ற வகையிலான அடிப்படை அறிவு, மற்றும் முதலுதவிகள் வழங்கக்கூடிய திறன்களைப் பெற்றுக்கொள்கின்ற வகையிலான பயிற்சிகளை வழங்குகின்ற செயற்திட்டங்கள் கிராம மட்டங்களிலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதே நேரம், ஆபத்துகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுகின்றபோது, காப்பாற்றுகின்றவர் சட்ட சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்கின்ற நிலைமைகள் நடைமுறையில் இருப்பதால், ஆபத்து நிலைகளில் இருக்கின்ற மக்களைக் காப்பாற்றுவதற்கு பலர் உடனடியாக முன்வராத ஒரு நிலையும் காணப்படுகின்றது. இத்தகைய நிலைமைகள் அகற்றப்பட வேண்டும் என்ற விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, முல்லைத்தீவு மாவட்டத்தில் 24 மில்லியன் ரூபா செலவில் உவர் நீர்த் தடுப்பு அணைகளை அமைத்தல் மற்றும் வெள்ள நீர் வழிந்தோடும் வாய்க்கால்களைப் புனரமைத்தல் போன்ற நான்கு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது. இத்தகைய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் கௌரவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், இதுபோன்ற வேலைத்திட்டங்கள் வடக்கு மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் உவர் நீர், விவசாய நிலங்கள் நோக்கி உட்புகுகின்ற பகுதிகளாக பல பகுதிகள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் இப்பகுதிகள் தொடர்பில் அவதானங்களைச் செலுத்தி, முதன்மை அடிப்படையில் உவர் நீர்த் தடுப்பு அணைகளை அமைப்பதற்கும், வெள்ள நீர் வழிந்தோடக்கூடிய கால்வாய்களைப் புனரமைப்பதற்கும், மேலும் புதிய கால்வாய்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானம் செலுத்துவார் என நம்புகின்றேன்.

அதே போன்று, யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில், காலநிலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் மிக அதிகமாக ஏற்படுகின்ற ஒரு பகுதியாக இருக்கின்ற போதிலும், அங்கு காலநிலை அவதான நிலையம் ஒன்று இல்லை. எனவே, இதனை அவதானத்தில் கொண்டு, வெகுவிரைவில் மேற்படித் தேவையினைப் பூர்த்தி செய்து தருமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அடுத்ததாக, தற்போது எமது நாட்டில் ஒரு பாரதூரமான பிரச்சினையாக நீரில் மூழ்கி இறப்போரது எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நீரில் மூழ்கி இறப்பவர்கள் குறித்து கணக்கீடுகளை மேற்கொள்கின்ற நிறுவனம், நீரில் மூழ்கி இறப்போரது எண்ணிக்கையில் இலங்கை அபாயகரமான நிலையில் இருப்பதாக எச்சரிக்கையும் செய்திருக்கின்றது.

இந்த வகையில் ஒரு வருடத்திற்கு 300க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி மரணிக்கின்ற மாகாணமாக மேல் மாகாணம் காணப்படுவதாகவும், அடுத்த நிலையில் வருடமொன்றில் சுமார் 52 உயிரிழப்புகள் ஏற்படுகின்ற மாகாணமாக வடக்கு மாகாணம் இருப்பதாகவும், அந்த வகையில் 61 நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் இலங்கையானது நீரில் மூழ்கி இறப்போரது எண்ணிக்கையில் 12வது இடத்தில் இருப்பதாகதவும் தெரிய வருகின்றது.

எமது நாட்டடைப் பொறுத்தவரையில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 373 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

எனவே, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இவ்விடயம் தொடர்பில் அதிக அக்கறை கொண்டு, கல்வி அமைச்சு, உயர்கல்வி அமைச்சு மற்றும் உள்@ராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு போன்ற அமைச்சுக்களுடன் இணைந்து, நிரில் மூழ்குதல் முகாமைத்துவம் தொடர்பிலான அடிப்படை அறிவுகளை குறிப்பாக மாணவர்கள் மத்தியிலும், சமூக மட்டத்திலும் வலுமிக்கதாக ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை ஒரு தீவாகவும், அதிகமான நீர் நிலைகளையும் கொண்டு இருக்கின்ற நிலையில், இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு நீந்தக்கூடிய திறனில்லை என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும். எனவே, பாடசாலை மட்டங்களிலிருந்தே நீச்சல் பயிற்சியினை ஒரு பாடமாக முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகும்.

அதே நேரம், குளவிகள் கொட்டும் சம்வங்களும் குறிப்பாக மலையகப் பகுதிகளில் அதிகரித்தே காணப்படுகின்றன. இந்த அனர்த்தம் குறித்தும் அதிக அவதானங்கள் செலுத்த வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு தொடர்பில் குறிப்பிடுகின்றபோது, காங்;கேசன்துறை துறைமுகமானது பொது மக்களது பாவனைக்கு உட்படுத்தப்படாத நிலையே காணப்படுகின்றது.

இந்த துறைமுகத்தை புனரமைப்புச் செய்து, அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசு முன்வந்திருந்தது. எமக்கு பல்வேறு உதவிகளை காலத்திற்குக் காலம் முன்வந்து செய்து தருகின்ற இந்தியாவின் இந்தப் பணியும் பாராட்டத்தக்கது.

எனினும், காங்கேசன்துறை துறைமுகமானது முழுமையாகப் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. தற்போதைய நிலையில் அங்கு சீமெந்து இறக்கும் செயற்பாடுகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றது. இது, எமது மக்களின் பாவனைக்கு விடப்படல் வேண்டும். அதன் ஊடாக இந்தியாவிலிருந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலகுவான வழிவகைள் இருக்கின்றன. இதன் மூலமாக வடக்கு மக்களுக்கு தொழில்வாய்ப்புகளையும், வடக்கு மகாணத்தை அண்டியதான பல மாவட்டங்களுக்கு மிகவும் நியாயமான விலையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், விவசாய உபகரணங்கள் போன்றவற்றையும் வழங்க முடியும்.

யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், ஏ – 9 தரைப்பாதை மூடப்பட்டிருந்த நிலையில், மக்கள் போக்குவரத்து முதல் ஏனைய பொருட்கள் ஏற்றி, இறக்குவதற்குமாக காங்கேசன்துறை துறைமுகத்தினை பயன்படுத்தியிருக்க முடியுமானால், இப்போது – யுத்தமற்ற அமைதியான சூழ்நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தை எமது மக்களது பயன்பாட்டிற்கு விட முடியாதது ஏன்? எனக் கேட்க விரும்புகின்றேன். எனவே, இது குறித்து கௌரவ அமைச்சர் மகிந்த சமரசிங்ஹ அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்தி, உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், கொழும்பு, திருகோணமலை போன்ற துறைமுகங்களில் எமது பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் தொழில்வாய்ப்புகளை வழங்கவதற்கும் கௌரவ அமைச்சர் அவதானம் செலுத்த வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அடுத்ததாக தொழில், தொழில் உறவுகள், சப்பிரகமுவ அபிவிருத்தி அமைச்சு தொடர்பில் சில விடயங்களைக் கூற விரும்புகின்றேன்.

சப்பிரகமுவ மாகாணத்தில் கணித மற்றும் விஞ்ஞான பாடங்களைக் கொண்டதான உயர் வகுப்பு கற்கை நெறி கொண்ட ஒரு தமிழ் பாடசாலை இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனை கௌரவ அமைச்சர் ஜோன் செனவிரத்ன அவர்கள் நன்கறிவார்கள். அந்தவகையில் தனது சப்பிரகமுவ அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ஒரு ஏற்பாட்டினை முன்னெடுத்து, அங்குள்ள தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு பெரும் உதவியாக இதற்கான வசதியினை ஏற்படுத்திக் கொடுக்க கௌரவ அமைச்சர் அவர்கள் முன்வர வேண்டும் என முதலில் அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், தற்போது 40 ஆயிரத்து 493 இளைஞர்கள் தொழில்வாய்ப்புகளுக்கான பதிவுகளை மாவட்டச் செயலகங்களில் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. பதிவு செய்யப்பாடாத நிலையிலும் இன்னும் பலர் இருக்கின்றனர்.

அரசாங்கத்திடம் எமது இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளைக் கேட்பது என்பது எமது இன உரிமையை அடகு வைப்பதல்ல. அரசாங்கத்திடம் எமது இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாயப்புகளைக் கேட்டுப் பெறுவதானது எமது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.

அந்தவகையில் எமது இளைஞர், யுவதிகள் அரசாங்கத் தொழில்வாய்ப்புகளில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றனர். தொழில்வாய்ப்புகளுக்காக எமது இளைஞர்கள், யுவதிகள் போராடி வருகின்ற நிலையில், தமிழ் மொழியில் பரிச்சயமே அற்ற தென் பகுதி சார்ந்த பலருக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டு. எமது மக்களும் அசௌகரியங்களுக்கு உட்பட்டு, அவ்வாறு நியமனங்களைப் பெற்று வருபவர்களும் அசௌகரியங்களுக்கு உட்பட்டு, அரசப் பணிகள் நகராமல் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலைமைகளே அதிகமாகக் காணப்படுகின்றன.

அரச தொழில்வாய்ப்புகளில் இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் என்ற 1990ஃ15ஆம் இலக்க சுற்றறிக்கை மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச அவர்களினால் கொண்டுவரப்பட்டு, செயற்படுத்தப்பட்டு, இன்று அது கண்டு கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்தகைய பாரபட்சமான அணுகுமுறைகளை இனியாவது மாற்றியமைப்பதற்கு இந்த நாடு முன்வர வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

மேலும் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தனியார்த்துறை சார்ந்த பணியாளர்கள் அடிப்படை தொழில் உரிமைகள் பேணப்படாத நிலையில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலைமையானது மலையகத் தொழிலாளர்கள் மத்தியில் மிகவும் அழுத்தமான பாதிப்புகளையே தொடர்ந்தும் ஏற்படுத்தி வருகின்றது.

அதே நேரம், தற்போது எமது நாட்டில் தொழிலாளர்களுக்கான பற்றாக்குறையானது பாரியளவில் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. குறிப்பாக கட்டுமானத்துறை, விவசாயத்துறை என்பன அதிகளவிலான தொழிலாளர்களுக்கான தேவைக்கு முகங்கொடுத்திருப்பதாகவே தெரிய வருகின்றது. அதேபோன்று, பெருந்தோட்டத்துறை, உல்லாசப் பிரயாணத்துறை, கப்பல் கட்டுதல், ஆடைத் தொழிற்துறை போன்ற துறைகளுக்கும் தொழிலாளர்களின் தேவைகள் இருப்பதாகத் தெரிய வருகின்றது.

தற்போதைய நிலையில் எமது நாட்டில் தொழில்களை மேற்கொள்வதற்கு 10 ஆயிரம் வெளிநாட்டவர்களுக்கு விசா அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2 இலட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டவிரோதமான வகையில் பல்வேறு தொழிற்துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிய வருகின்றது.

இந்த நிலையில், சீனா மற்றும் இந்திய தொழிலாளர்களுக்கு எமது நாட்டில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக ஒரு சிலர் விமர்சனங்களை முன்வைத்தும் வருகின்றனர்.

அம்பாறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, கிளிநொச்சி, வவுனியா போன்ற மாவட்டங்களில் விவசாயத் துறை சார்ந்த அறுவடைக் காலங்களின்போது, தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்ற நிலையில், இப்பகுதி விசாயிகள் தென்னிந்திய தொழிலாளர்களின் தேவையை உணர்த்தியும் வருகின்றனர்.

சீனா, இந்தியா போன்ற நாடுகளின் உதவித் திட்டங்களில் அதிகளவில் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களே பணிகளில் அமர்த்தப்படுகின்றனர். கொழும்பில் உள்ள உல்லாச ஹோட்டல்களில் உணவு தயாரிப்புப் பணிகளில் அதிகளவிலான வெளிநாட்டவர்கள் ஈடுபட்டடிருக்கின்றனர். சர்வதேசப் பாடசலைகளில் வெளிநாட்டு ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சில தனியார் மருத்துவ நிலையங்களில் வெளிநாட்டு மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர்.

எனவே, தொழிலாளர்களுக்கான பற்றாக்குறைகள் காணப்படுகின்ற நிலையில், அதனை ஈடு செய்வதற்கு மாற்று வழிகள் காணப்பட வேண்டியது அவசியமாகும்.

அதே நேரம், பல்வேறு தொழிற் சங்கங்கள் இன்று வலுவற்றுள்ள நிலையில், அநேகமான தொழில் பிணக்குகள் மனித உரிமைகள் தொடர்பான நிறுவனங்களை நோக்கி நகர்கின்ற நிலையும் காணப்படுகின்றது. எனவே, தொழிற் சங்கங்களைப் பலப்படுத்தி நிர்வாகத் தரப்பினருடனான உறவுகளை வளர்க்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.

தற்போது மேலை நாடுகளில், தொழில்சார் நிறுவனங்களுடனான உறவுகளைப் பேணுவதன் ஊடாக அந்த நிறுவனங்களின் பங்குதாரர்களாக தொழிலாளர்கள் மாறி வருகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன.

அத்துடன, மிகவும் ஆபத்தான தொழிற்துறைகளில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் நலன்கருதி தற்பாதுகாப்பு, பாதுகாப்பு விழிப்புணர்வுகள் அதிகளவில் – பரந்தளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்துடன் அவர்களுக்கான காப்புறுதி ஏற்பாடுகளும் தேவை.

மேலும், சிறுவர்களை தொழிற்துறைகளில் ஈடுபடுத்துதல் தொடர்பிலும் மேலும் அவதானங்கள் தேவை. அத்துடன் எமது நாட்டில் பெண் தொழிலாளர்கள் ஒழுங்கமைக்கபடாத தொழிற்துறைகளில் பயன் உறுவப்படுதல்களுக்கு அதிகமாக முகங்கொடுத்து வருவது தொடர்பிலும் அவதானங்கள் தேவை.

அதே நெரம், தொழிலாளர்களுக்கான வினைத்திறன்கள் வளர்க்கப்பட வேண்டும். இன்று நாட்டில் ஆயிரக் கணக்கானவர்கள் தொழில்வாய்ப்புகள் இன்றி இருக்கின்ற நிலையில், தொழில்வாய்ப்புகள் பெற்றுள்ள பலர் உழைப்பின்றி இருக்கின்ற நிலை காணப்படுகின்றது.

அந்த வகையில், நான் இங்கு முன்வைத்துள்ள கருத்துகள் தொடர்பில் கௌரவ அமைச்சர் ஜோன் செனவிரத்ன அவர்கள் தனது அவதானத்தினைச் செலுத்துவார் என எதிர்பார்த்து விடைபெறுகின்றேன்.

இறந்த உறவுகளுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி மரியாதை என்பது வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான ஓர் உரிமை வாழ்வை உருவாக்கிக் கொடுப்பதேயாகும்.

இதுவே அர்த்தபூர்வமான அஞ்சலி மரியாதையாகும். அதற்காக உறுதியுடன் உண்மைவழி நின்று உழைப்போம்.

வலிகளையும் வதைகளையும் இரத்தப் பலிகளையும் சுமந்து நடந்த மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றுவோம்.

போலித்தனமாக அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பவர்கள் உரிமைகளைப் பெறுவதற்காக கனிந்த வந்த சந்தர்ப்பங்களை உரிய முறையில் பயன்படுத்த மறுத்துவிட்டனர்.

அவர்களின் நோக்கம் மக்களின் துன்ப துயரங்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதேயாகும்.

உள்ளத்தில் நஞ்சும் உதட்டில் நல்லெண்ணமும் கொண்டு நல்ல பாம்பு வேசம் போட்டு நடிக்கின்றார்கள்.

யார் அழிய வேண்டும் என்று உள்@ர விரும்பினார்களோ அவர்களின் பெயரைச் சொல்லி அரசியல் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார்.

Related posts:

அமரர் அமிர்தலிங்கம் போன்றவர்களின் ஜனநாயக தலைமைத்துவம் அலட்சியப்படுத்தப்பட்டு அவர்களின் அமைதிவழிப் போ...
வடக்கு மாகாணம் போதைப்பொருள் கடத்தும் கேந்திரமாக மாறக் காரணம் என்ன? – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் ட...
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது – நாடாளுமன்றில் ...

அகிம்சை குரலுக்கு மதிப்பளித்திருந்தால்  இலங்கை இரத்தம் தோய்ந்த தீவாக மாறியிருக்காது – நாடாளுமன்றில் ...
உண்ணாவிரதமிருக்கும் தமிழ்க் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் விரைவாக நிறைவேற்ற வேண்டும் - நாடாளுமன்றில...
உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை உழைக்கும் மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்...