வடக்கு கிழக்கில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவiடிக்கை அவசியமாகும் நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Wednesday, November 22nd, 2017

முன்பு எமது மக்கள் மத்தியில் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தது. இன்று, சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளின் தவறான வழிகாட்டலால் எமது மக்களின் உழைப்பும் சிதைந்து, நம்பிக்கையும் சிதைந்து, எமது பகுதியின் சூழல் மாசடைந்திருப்பது போல், சமூகமும் மாசடைந்துள்ள நிலையினையே காணக்கூடியதாக இருக்கின்றது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய தினம் (22.11.2017) விவசாயம், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல், நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல், ஆரம்பக் கைத்தொழில் ஆகிய நான்கு அமைச்சுக்கள் தொடர்பிலான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது உரையில்,

சூழல் மாசடைகின்ற நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் இருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருக்கின்றார். அந்த வகையில் எமது நாட்டில் சூழலானது மிகவும் துரிதப் போக்கில் மாசடையச் செய்கின்ற காரணிகளைக் கொண்டதான மாகாணங்களில் வடக்கு மாகாணமே முதன்மை வகிக்கின்றதொரு நிலைமையே காணப்படுகின்றது.

நாளாந்த தமிழ் ஊடகங்களைப் பார்க்கின்றபோது, வடக்கில் சூழலுக்கு பாதகம் ஏற்படுத்துகின்ற ஓரிரு செய்திகளையாவது காணக்கூடிய அளவிற்கு நலைமை மோசமடைந்து வருவதையே அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இது, இந்த அரசின் தவறா? அரச அதிகாரிகளின் தவறா? அல்லது, எமது மக்கள் தெரிவு செய்திருக்கின்ற அரசியல் பிரதிநிதிகளின் தவறா? அல்லது, எமது மக்களின் துரதிர்ஸ்டவசமான நிலைமையா? என்றே கேட்கத் தோன்றுகின்றது.

வடக்கு மாகாணத்திலே இருக்கின்ற மாவட்டங்களின் பொருளாதார வளங்கள் யாவும், சூழலுக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில் அபகரிக்கப்பட்டு, பிற மாவட்டங்கள் நோக்கி நகர்த்தப்படுகின்ற நிலைமையினாலேயே கிளிநொச்சியும், முல்லைத்தீவும், யாழ்ப்பாணமும் இன்று வறுமை மிக அதிகம் கொண்ட மாவட்டங்களாக மாறியிருக்கின்றன.

முன்பு எமது மக்கள் மத்தியில் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தது. இன்று, சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளின் தவறான வழிகாட்டலால் எமது மக்களின் உழைப்பும் சிதைந்து, நம்பிக்கையும் சிதைந்து, எமது பகுதியின் சூழல் மாசடைந்திருப்பது போல், சமூகமும் மாசடைந்துள்ள நிலையினையே காணக்கூடியதாக இருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் மருதங்கேணி, மண்டைதீவு, அரியாலை கிழக்கு, கிளிநொச்சியில் வன்னேரிக்குளத்தின் பின் பகுதி, அக்கராயன் ஆற்றுப் படுகை, சுபாஸ் குடியிருப்பு, மணியங்குளத்தின் பின்பகுதி, கிளாலி கடற்கரைக் கிராமம், பூநகரி, குடமுருட்டி, கண்ணகைபுரம், முல்லைத்தீவு கொக்காவில், துணுக்காய், பழையமுறிகண்டி கிராமம், ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள பேராறு, மன்னகண்டல், மேளிவனம், கனகராயன் ஆறு, ஒலுமடு, தென்னியங்குளம், என வடக்கு மாகாணத்தில் கிராமங்களில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் காரணமாக விவசாயப் பயிர்ச் செய்கைகள் பாதிப்புகளுக்கு உட்பட்டும், உவர் நீர் விவசாய நிலங்களுக்குள் நுழைந்தும், கடலரிப்புகளுக்கு காரணமாகியும் வருகின்றன.

அத்துடன், மணலுக்கான செயற்கைத் தட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு, அதிக விலைக்கு மணலை விநியோகிக்கின்ற கறுப்புச் சந்தைகள் உருவாக்கப்பட்டு, எமது மக்களுக்கு கிடைக்கின்ற வீடமைப்புத் திட்டங்களில்கூட, ஏனைய கட்டுமாணப் பணிகள்கூட, தடைகளை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு, சில தமிழ் அரசியல்வாதிகளாலும், அவர்களுக்குத் துணை நிற்கின்ற சில அரச அதிகாரிகளாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மவாட்டத்தில் முழங்காவில் உள்ளிட்ட பகுதிகள் அடங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிருந்த பெருந்தொகையிலான பெறுமதிமிக்க மரங்கள் வெட்டப்பட்டு, பிற மாவட்டங்களுக்கு கடத்தப்படுகின்ற செயற்பாடுகள் சர்வ சாதாரணமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகைய காடழிப்பு செயற்பாடுகளால் இருக்கின்ற குறிப்பிட்ட சில நீர்வள மூலங்களும் மலட்டுத் தன்மையையே எதிர்நோக்கிவரும் நிலையில், விவசாயத்தை நம்பி வாழுகின்ற எமது மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாக இருக்கின்ற நிலையில், எமது பகுதிகள் வறுமையில் முதல் இடங்களைப் பிடித்தக் கொண்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை என்பதையே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சூழலை சவாலுக்கு உட்படுத்துகின்ற இத்தகைய செயற்பாடுகளால் காட்டு யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் தொல்லைகள் காரணமாக, மேற்கொள்ளப்படுகின்ற பயிர்ச் செய்கைகள்கூட அழிக்கப்படுகின்ற நிலைமைகள் தொடருகின்றன.

எமது மக்கள் தங்களுக்கான குடிசையைக் கட்டிக் கொள்வதற்காக ஒரு தடியினை வெட்டினாலே காடழிப்பு எனக் கூறி கைது செய்கின்ற சம்பவங்கள் நடக்கின்ற எமது மக்களது மண்ணிலே, பெறுமதிமிக்க பெருந்தொகையான மரங்கள், இயந்திரங்களைக் கொண்டு பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களால் வெட்டிச் செல்லப்படுவது காடழிப்பாகக் கொள்ளப்படுவதில்லை என்பது ஆச்சரியமான விடயமாக இருக்கின்றது.

எனவே, வடக்கு மாகாணத்தில் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கெதிரான சட்டங்கள், தராதரங்கள் பாராது அனைவருக்கும் பொதுவானதாக வலுவுள்ள வகையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

தோட்டச் செய்கையோடு தொடர்பானதும், நெற் செய்கையோடு தொடர்பானதுமான இரு வேறு விவசாய செய்கைகள் வடக்கு மாகாணத்திலே காலாகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாழ் குடாநாடானது அதிகளவில் தோட்டச் செய்கைக்கே முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. இதற்கென துண்டு நிலங்களும், தரைக்கீழ் நீர்வளத்தையும் பயன்படுத்தியே வேறு எப்பகுதியிலும் காணப்படாத வகையில் செறிவான முறையில் மேற்படி பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. . ஏனைய சிறு அளவிலான நிலப்பகுதி நெற் பயிர்ச் செய்கைக்கென பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

புகையிலை, மிளகாய், வெங்காயம், பழ வகைகள், உருளைக்கிழங்கு, காய்கறிகள், திணை வகைகள் என்பன இங்கே பெருமளவில் பயிரிடப்படுகின்றன. அந்த வகையில் யுத்தத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் வெங்காயச் செய்கைக்கு உட்பட்ட நிலப் பரப்பளவில் 38 வீதத்தினையும், மிளகாய் செய்கைக்கு உட்பட்ட நிலப் பரப்பளவில் 15 வீதத்தினையும் யாழ் குடாநாடே கொண்டிருந்தது

யாழ் குடாநாடு தவிர்ந்த வடக்கின் பிரதான நிலப்பகுதியில் மேட்டு நிலப் பயன்பாட்டு பகுதிகள் தோட்டப் பயிர்ச் செய்கைக்கும், தாழ்நிலப் பயன்பாட்டுப் பகுதிகள் நெற் பயர்ச் செய்கைக்குமான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. ஆற்று வடி நிலப் பகுதிகள், நீர்த்தேக்கங்களை அண்டியப் பகுதிகள், வண்டல் மண், களிமண் படிவுகளைக் கொண்ட தாழ்வான பகுதிகள் என்பன நெற்செய்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலங்களாகவுள்ளன.

இன்று மேற்குறிப்பிட்ட இருவேறு நீர்வள மூலங்களும் சூழலைப் பாதிக்கின்ற செயற்பாடுகளினால் மலட்டுத் தன்மையை அடைந்து விட்டிருக்கின்றன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எமது நாட்டில் அதிகரித்து வருகின்ற சனத்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியினைப் பெருக்க வேண்டியது அத்தியவசியமானதொரு ஏற்பாடாக இருத்தல் வேண்டும். அண்மைக்காலமாக அரிசியை இறக்குமதி செய்து கொண்டிருப்பதுபோல், ஏனைய அனைத்து உணவுப் பொருட்களுக்கும் இறக்குமதியினையே நம்பி வாழுகின்ற சூழல் ஏற்படுமானால், அது எமது பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பாதகத்தினை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, எமது மக்களில் பெருந்தொகையினரை பட்டினிக்குள்ளும், வாழ்வாதாரங்கள் இன்றிய வெறுமைக்குள்ளும் தள்ளிவிடும் என்பது உறுதியாகும். எனவே, எமது நாட்டின் விவசாய உற்பத்திகளில் பெரும் பங்களிப்பினை வழங்கி வந்திருக்கும் எமது பகுதியின் விவசாயத்துறையினை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டுமானால், வடக்கு மகாணத்திற்கென நீர்ப்பாசன கொள்கைத் திட்டம் ஒன்று அவசியமாகும்.

அந்தவகையில் பார்க்கின்றபோது, விவசாய பொருட்களின் இறக்குமதி, விவசாய உள்ளீடுகளின் விலையுயர்வு, முறையான நீர்ப்பாசன வசதியின்மை, உயர் ரக விதைகள் இன்மை, கிருமிகள் மற்றும் நோய்களின் தாக்கங்கள், நிலத் துண்டாக்கம் – சிறியளவு நிலப் பயன்பாடு என்பவையே எமது விவசாய செய்கையைப் பாதிக்கின்ற பிரதான காரணிகளாக இருக்கின்றன.

எனவே, மேற்படி பிரதான தடைகளை அகற்றக்கூடிய வழிவகைளை இந்த அரசு மேற்கொள்வதற்கு முன்வர வேண்டியது அவசியமாகும்.

அத்துடன், விவசாய தொழில்நுட்பத்தை விரிவாக்கஞ் செய்தல், வர்த்தக சேவையை வலுவூட்டல், தனியார் முயற்சிகளை பலப்படுத்துதல், விவசாய தகவல் தொழில்நுட்பத்தினை விருத்தி செய்தல், விவசாய வளங்களைப் பாதுகாத்தல் போன்ற ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும்.

இங்கு, விவசாய வளங்களைப் பாதுகாத்தல் எனும்போது, அவை அபகரித்துச் செல்லப்படுதலும், படையினரின் தேவைகளுக்காக என முடக்கி வைத்திருப்பதுமான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அந்த வகையில், நிலைபேறான விவசாயம் தொடர்பில் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் 08 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர குளங்கள் தூர்வாரப்படுதல் திட்டத்தில் வடக்கு மாகாணமும் உள்ளடக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் முதன்மை அடிப்படையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு, விவசாயத்துறைக்கு அதிகப் பயன் தருகின்ற குளங்களை இனங்கண்டு தூர்வாருவதற்கும், இத்திட்டத்தை இதனுடன் நிறுத்தி விடாமல் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் கட்டங்களாக முன்னெடுத்து ஏனைய அனைத்துக் குளங்களையும் படிப்படியாக தூர்வாருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், தற்போதும்கூட ஒருசில குளங்கள் புனரமைப்புச் செய்கின்றபோது, மேலோட்டமான புனரமைப்பு நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அணைக்கட்டுகள் புனரமைக்கப்பட்டால் குளத்தினடி, கால்வாய்கள் போன்றவை கைவிடப்படுகின்றன. வாய்க்கால்கால்கள், குளத்தினடி என்பன புனரமைக்கப்பட்டால், அணைகள் கைவிடப்படுகின்றன. இந்த நிலை மாற்றம் பெற்று, குளங்கள் அனைத்தும் முழுமையாகவே புனரமைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன், குளங்களின் நீர் ஆவியாதலைக் கட்டுப்படுத்தும் வகையில், அதனைச் சுற்றி மரங்களை நடுவதற்கும், புற்தரைகளை உருவாக்குவதற்குமான ஏற்பாடுகளும் அவசியம் தேவையாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்தவகையில், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய குளங்களும், சுமார் 54 பெரிய குளங்களும் இருக்கின்றன. இவற்றில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குளங்கள் புனரமைப்பிற்கு உட்படுத்த வேண்டியுள்ளன.
அத்துடன், விவசாய செய்கைகளுக்கு காலநிலை மாற்றங்களால் ஏற்படுகின்ற பாதிப்புகளிலிருந்து விவசாய மக்களைக் காப்பாற்றுகின்ற நோக்கில,; விவசாய நிலங்களுக்கான காப்புறுதி ஏற்பாடுகள் தொடர்பில் நான் ஏற்கனவே இந்தச் சபையின் ஊடாக கௌரவ விவசாய அமைச்சர் அவர்களின் அவதானத்திற்குக் கொண்டு வந்திருந்தேன். அந்த வகையில், நெல் அடங்களாக, சோளம், சோயா, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் ஆகிய 06 பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தது 40 ஆயிரம் ரூபா வழங்கக்கூடியதாக அமையவுள்ள காப்புறுதித் திட்டமும் எமது விவசாய மக்களுக்கு பயனுள்ளதாகவே அமையும்.

எமது நாட்டை சூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, பொலித்தீன் பாவiனைகளில் ஆர்வமின்மையை ஏற்படுத்துகின்ற நோக்கம் பற்றி இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக சேதன முறையில் அழிவடையக்கூடிய மூலப் பொருட்களான வாழை, ஓலைகள், தெங்குத்தும்பு, மூங்கில் இழை போன்ற தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பனை வளத்தையும் சேர்க்கப்படல் வேண்டும் என நான் கோரிக்கை முன்வைத்திருந்தேன்.

இந்த நிலையில், சோளம் மற்றும் மரவள்ளிக் கிழங்கை மூலப் பொருளாகப் பயன்படுத்தி புதிய ‘லஞ்சீற்’ வகைளை சிவில் பொறியியலாளரான அமில் பிரியந்த என்பவர் கண்டுபிடித்திருப்பதாகவும், மேலும், பைகள், ‘சிலி கவர்’ பெட்டிகளையும் மேற்படி மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது. இது வரவேற்கத்ததொரு முயற்சியாகும். எமது நாட்டைப் பொறுத்தவரையில் தற்போது நாளொன்றுக்கு ஒன்றரை மில்லியன் ‘லஞ்சீற்றுகளும’;, 2 மில்லியன் ‘சொப்பிங் பேக்’குகளும் உபயோகப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிய வரும் நிலையில், மிகைத்த சூழல் பாதிப்பினைக் கட்டப்படுத்துவதற்கும், சோளம், மரவள்ளி போன்ற பயிர்ச் செய்கைளை ஊக்குவிப்பதற்கும் மேற்படி புதிய கண்டுபிடிப்பு வழிவகுக்குமென்றே கருதுகின்றேன்.

மேலும், யாழ் மாவட்டத்திலே சின்ன வெங்காயச் செய்கை பெரிதும் பாதிப்பிற்குள்ளான நிலையை அடைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளதுடன், வெளிநாட்டு சிறிய ரக வெங்காயத்துடன் கலந்து யாழப்;பாணத்து சின்ன வெங்காயத்தினை விற்கின்ற நிலைமைகளும் உருவாகியுள்ளன. அந்த வகையில் கடந்த ஆண்டில் 71 ஆயிரத்து 493 மெற்றிக் தொன் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டுள்ள யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தில் 2 ஆயிரத்து 418 ஹெக்டயார் இலக்கு வைக்கப்பட்டும், 966 ஹெக்டயாரே பெறப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. மேற்படி சின்ன வெங்காய உற்பத்தியை திறம்பட ஊக்குவிப்பதன் ஊடாக, உள்@ர் தேவைகள் போக ஏற்றுமதி பங்களிப்பினையும் பெறக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன், வரட்சி நிலைமை, காலநிலை முரண்பாடுகள், விலை தளம்பல் போன்ற பல்வேறு காரணிகளால் பெரிதும் பாதிப்படைந்துள்ள யாழ் மாவட்டத்தின் உருளைக் கிழங்கு செய்கையாளர்கள் தமக்கான விதை உருளைக்கிழங்கு மானியத்தினை எதிர்பார்த்துள்ளனர். இந்த விடயம் தொடர்பிலும் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், அண்மையில் ஏற்பட்டிருந்த வரட்சி காரணமாக வடக்கு மாகாணத்தில் 8,826 விவசாய மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கான நஸ்டஈடுகள் கமநலச் சேவைகள் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நஸ்டஈடுகள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டதா? என்பது தொடர்பில் வினவ விரும்புகின்றேன். ஏனெனில், தற்போது மழைக் காலம் ஆரம்பித்து, மழையினால் பயிர்ச் செய்கைகள் அழியும் நிலை ஏற்பட்டு வருகின்றது. ஏற்கனவே, தமக்கான வரட்சி நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என தம்புள்ளை விவசாய மக்கள் தபாலட்டை போராட்டம் நடத்தியிருந்தனர் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
உத்தேச காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் இத்தகைய நஸ்டஈடுகள், மானியங்கள், நிவாரணங்கள் தேவைப்படாது என நினைக்கின்றேன்.

எமது பகுதியின் விவசாயத்துறையானது அதீத நவீனமயமாக்களுக்கான தேவையையும், இருக்கின்ற வளங்களுக்கான பாதுகாப்பினையும், மேலும் வளங்களுக்கான தேவைகளையும் கொண்டு, ஓரளவு திருப்தியான வகையில் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதால், அது சார்ந்திருக்கும் வாழ்வாதாரங்களைக் கொண்ட எமது மக்கள் கடன் சுமைகளையும் கொண்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், நான் இங்கே மேற்குறிப்பிட்ட பயிர்ச் செய்கைகளுக்கு மேலதிகமாக பொருளாதார ரீதியில் பயன்பெறத்தக்கப் பயிர்ச் செய்கையாக புகையிலைச் செய்கையும் எமது பகுதிகளில், குறிப்பிட்ட சில நிலப்பரப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், தற்போது புகையிலைச் செய்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படுகின்ற தடையானது மேற்படி செய்கையில் ஈடுபட்டிருந்தோர் மத்தியில் விரக்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, புகையிலைச் செய்கையை தடை செய்வதாயின் அதற்கு ஈடான மாற்றுப் பயிர்ச் செய்கையை – எமது வளங்களை ஆராய்ந்து, பரிசோதனைகள் மேற்கொண்டதன் பின்னர் அறிமுகப்படுத்தவதற்கும், அதனை ஊக்குவிப்பதற்கும் அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, தற்போது யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பயிர்ச் செய்கைகளையே புகையிலைக்கு மாற்றாக கொண்டுவரப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஏனெனில், தற்போது யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற ஏனைய பயிர்ச் செய்கைகளிலிருந்து ஈட்டிக் கொள்ள இயலாத பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் நோக்கிலேயே புகையிலைச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதை உரிய தரப்பினர் அவதானத்தில் கொள்ள வேண்டும். எனவே, புகையிலைச் செய்கையைப் போன்று பொருளாதார ஈட்டல்களை மேற்கொள்ளக்கூடிய மாற்றுப் பயிர்ச் செய்கையே அவசியமாகும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

மேலும், எமது பகுதிகளில் செயற்பட்டு வருகின்ற கமநல அபிவிருத்தித் திணைக்களங்கள் போதிய ஆளணிகள் இன்றிய நிலையிலேயே செயற்பட்டு வருவதாக் கூறப்படுகின்றது. எமது விவசாயத்துறை பாதிப்பினை அடைவதற்கு இதுவும் ஒரு காரணியாகக் கூறப்படுகின்றது. ஆளணிப் பற்றாக்குறை காரணமாக குறிப்பிட்ட சிலரே பதில் கடமையாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டும், அவர்களுக்கு பதில் கடமைகளுக்கான கொடுப்பனவுகள்;;; தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் கௌரவ விவசாய அமைச்சர் அவர்கள் அவதானத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் தீவகப் பகுதியான நாரந்தனையில் விவசாய ஆராய்ச்சி மையம் ஒன்று செயற்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அது மூடப்பட்டுள்ளது. தீவகப் பகுதிகளில் குறிப்பாக வரட்சி நிலைக்குத் தாக்குப் பிடித்து வளரக்கூடிய பயரினங்கள் பற்றி வாய்வழியாகக் கூறப்பட்டு வந்தாலும், அது தொடர்பில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுகின்றபோது, மேற்படி ஆய்வு மையத்தின் தேவை உணரப்பட்டு வருவதால், இந்த ஆய்வு மையத்தினை மீள செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

யாழ். மாவட்டத்தைப் பொறுத்த வரையில் விவசாய உற்பத்திகளுக்கான களஞ்சிய சாலைகளின்மை காரணமாக விவசாய மக்கள் பெரும் பாதிப்புகளை அடைகின்றனர். அந்த வகையில் நெல்லினைக் களஞ்சியப் படுத்தக்கூடிய வகையிலான பாரிய களஞ்சிய சாலையொன்றின் தேவையும், ஏனைய மரக்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றைக் களஞ்சியப்படுத்துவதற்கான குளிரூட்டப்பட்ட களஞ்சிய சாலையொன்றின் தேவையும், யாழிலிருந்து விவசாய உற்பத்திகளை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கான குளிரூட்டப்பட்ட வாகன வசதிகளின் தேவையும் இருக்கின்றன. இது தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்தி சாதகமான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன், நெல் அறுவடைகளின்போதும், பொதியிடல் நடவடிக்கைளின்போதும் அதற்குரிய இயந்திரங்களை வெளி மாவட்டங்களிலிருந்து வாடகை;கு அமர்த்த வேண்டிய நிலையிலேயே யாழ் மாவட்ட விவசாயிகள் இருக்கின்றனர். இதனால், உற்பத்திச் செலவினங்கள் அதிகரிக்கும் நிலைமைகளைத் தவிர்க்க முடியாதுள்ளது. எனவே, இதற்கொரு ஏற்பாடாக உரிய இயந்திரங்களை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், வடக்கின் விவசாய பாதைகள் பலவும் புனரமைக்கப்படல் வேண்டும். நவீன நீர்ப்பாசன முறைமைகளை – சொட்டு நீர், தூவல் போன்ற முறைமைகளை அறிமுகப்படுத்தி, அவற்றுக்கு சூரிய கள மின் வசதிகள் வழங்கப்படுதல் அவசியமாகும்.

அதேநேரம், விவசாயத்திற்கென ஒரு தேசிய கொள்கைத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கையை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன்.

வடக்கில் நீருக்கான தட்டுப்பாடுகள் மிகவும் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், எதிர்காலத்தில் அதற்கொரு பாரிய வாய்ப்பாக மொரகஹகந்த பாரிய நீர்த் திட்டத்தை முன்னெடுத்துள்ள மகாவலி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சராக இருக்கின்ற மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எமது மக்களின் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதே நேரம், இந்த திட்டமானது வட மத்திய மாகாண கால்வாய் ஊடாக வடக்கு மாகாணத்தின் கனகராயன் குளத்திற்கு இணைக்கப்படுகின்ற திட்டம் தொடர்பிலான நடவடிக்கைகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றது என்பதை அறிய விரும்புகின்றேன்.

கனகராயன் குள இயற்கை நீரோட்டமானது ஆணையிறவு கடல் நீரேரியுடன் கலந்து, வடமராட்சி கடல் நீரேரி ஊடாக தொண்டமனாறு வழியாக தற்போது கடலில் கலப்பதாகவே உள்ள நிலையில,; இந்த இயற்கை நீரோட்டத்தை சாதகமாக்கி, அதனை செப்பனிட்டு, அந்த நீரை எமது மக்களது பயன்பாட்டுக்கென வழங்குவதற்கான ஒரு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

கல்கமுவ நீர்ப்பாசன பயிற்சி மையத்தில் போதியளவில் வடக்கு, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பயனாளிகளையும் இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் தேவை. அதற்கான விழிப்பூட்டல்களை எமது மக்கள் மத்தியில் ஏற்படுத்தினால் பயனுள்ளதாக அமையும். அதே நேரம் மேற்படி பயிற்சி நிலையமொன்றை கிளிநொச்சி மாவட்டத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால், அது எமது மக்களிடையே நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பிலான விழிப்புணர்வுக்கும், நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பிலான விழிப்புணர்வுக்கும் மேலும் வலுசேர்க்கும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

அதே நேரம், எமது தேசிய திட்டமான பாரிய மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல கட்டமான திட்டங்களால் மகாவலி குடியேற்ற பகுதிகளில் தமிழ், முஸ்லிம் மக்கள் குடியேற்றப்படாத நிலையே காணப்படுகின்றது.

வடக்கில் மணலாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்திலாவது தமக்கான காணிகள் கிடைக்கும் என எமது மக்கள் எதிர்பார்த்திருந்தும், அதிலும் பாரிய ஏமாற்றமே கிடைத்துள்ளது.

அத்துடன் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி போன்ற பகுதிகளில் வாழ்ந்திருந்திருந்த நிலையில், யுத்தம் காரணமாக அம்மக்கள் இடம்பெயர்ந்த போது அவர்களது சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு, பின்னர் அம் மக்கள் மீள்குடியேறிய நிலையில் அவர்களுக்கு வேறு இடங்களில் விவசாய செய்கைக்கு உதவாத சில காணிகளே வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இம் மக்கள் வாழ்வாதார ரீதியாகத் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள டீ வலது கால்வாய் திட்டமானது கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு பகுதியை உள்ளடக்கும் நிலையில், அங்குள்ள காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

எனவே, மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, தேசிய மகாவலி அபிவிருத்தித் திட்ட குடியேற்றங்களில் தமிழ், முஸ்லிம் மக்களையும் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்கள் நோக்கியதான மகாவலி அபிவிருத்தித் திட்டங்களின்போது, வளரும் எமது சமூக மக்களை குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதை நான் இங்கு அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

அத்துடன், மல்வத்து ஓயா கீழ்ப் பகுதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வவுனியா செட்டிக்குளம் பகுதி வாழ் மக்களது குடிபரம்பல் சிதைக்கப்படாமல் அத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், தற்போது காணிகள் இல்லாது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற வவுனியா தெற்கு, செட்டிக்குளம் பகுதிகளிலுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு இத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

அதே நேரம், தற்போது உலகில் மிகவும் அரிதான தாவர வகைகள் பலவும் அழிந்து வரும் நிலையில் இருப்பதாக அறிய முடிகின்றது. எனவே, நாங்கள் எமது நாட்டில் மர நடுகை திட்டங்களை மேற்கொள்கின்ற போது கூடிய வகையில் அழிக்கப்படுகின்ற, அழிந்து வருகின்ற இன மரங்களை மீள நடக்கூடிய ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதையும் இங்கு அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

அதே நேரம் கடலோரப் பகுதிகளைப் பொறுத்தமட்டில், கண்டல் காடுகளையும் நாம் பேணிப் பாதுகாக்கவும், வளர்க்கவும் வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஏனெனில், 76 வீதமான கண்டல் காடுகள் தற்போதைக்கு எமது நாட்டில் அழிவடைந்துள்ளதாகவே தெரிய வருகிறது.

குறிப்பாக, 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது பல உயிர்களைக் காப்பாற்றியதில் இந்த கண்டல் காடுகளுக்கு அதிகமான பங்கு இருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்பதை நான் இங்கு உணர்த்த விரும்புகின்றேன்.

வடக்கினைப் பொறுத்த மட்டில் பாரிய நீர்த் தட்டுப்பாடு நிலவுகின்றமை தொடர்பில் நான் தொடர்ந்து இந்தச் சபையில் பல முறை தெரிவித்திருக்கிறேன். இருப்பினும், இப்பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அல்லது மாகாண சபையுடன் கதைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதில்கள் கூறப்படுகின்றனவே அன்றி, இதுவரையில் ஆக்கப்பூர்வமான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதை நான் இங்கு மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அந்த வகையில், சில நீர்த் திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய, பயனுள்ள சில திட்டங்களை நான் இங்கு முன்வைத்துள்ளேன்.

குறிப்பாக, பூநரிக் குளத் திட்டம், வன்னேரிக் குளத் திட்டம், பாலியாற்றுத் திட்டம், பறங்கியாறு திட்டம் என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். இந்தத் திட்டங்களை உரிய வகையில் மேற்கொண்டால் வடக்கில் எமது மக்களில் பெரும்பாலானவர்களுக்கு குடி நீரும், விவசாயம், கால்நடைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நீரும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இவை தொடர்பில் நானிங்கு நிலையியற் கட்டளையின் கீழ் கொண்டு வந்தபோது, இவை தொடர்பில் மாகாண அரசுடன் கதைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா அவர்கள் தெரிவித்திருந்தார்.

அந்தவகையில், சாத்தியமாக மேற்கொள்ளப்படக்கூடிய திட்டங்களை வகுத்து, அவை செயற்படுத்தப்பட வேண்டும். வடக்கு மாகாணசபையுடன் கலந்து இத்தகைய நடவடிக்கைளை மேற்கொள்ள முடியுமெனில் நல்லது. எனினும், வடக்கு மாகாண சபையானது எமது மக்களின் நலன் சார்ந்த எவ்விதமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடிய தகுதியில் இல்லை என்பதை வடக்கு மக்கள் மட்டுமல்லாது இந்த நாட்டிலும் ஏன் வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர் மக்களும் நன்கறிவார்கள்.

இதன் காரணமாக எமது மக்கள் தொடர்ந்து பாதிப்புகளுக்கு உட்பட்டு வருவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தேசிய ரீதியலான திட்டங்களையாவது போதியளவில் முன்னெடுக்க வேண்டிய நிலையே இன்று எஞ்சியிருக்கின்றது என்பதையும் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

இறுதியாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சு என்ற வகையில், எமது பகுதியில் மேற்கொள்ளத்தக்க பயிரினங்கள் தொடர்பிலும் கூடிய அவதானம் செலுத்த முடியும். வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு பயிர்ச் செய்கைக்கு ஏற்ற நில வளங்களைக் கொண்டிருக்கின்றது. எனவே, ஆய்வுகளின் ஊடாக தகுந்த பயிரினங்களை இங்கு செய்கைக்கு உட்படுத்த முடியும். அதே நேரம் எமது நாட்டின் எகபோக ஏற்றுமதிப் பொருளான கருவா உற்பத்திக்கு இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டள்ளது. அந்தவகையில் சிறந்த முடிவுப் பொருளாக கருவாவை ஏற்றுமதிக்கு தயார் செய்ய முடியுமென எதிர்பார்க்கின்றேன். கருங்கா – கொட்டைப் பாக்கு – தொடர்பிலும் கடந்தகாலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் கமுக பயிருக்கு வடக்கு மாகாணமும் சிறந்த பெறுபேறுகளைத் தரக்கூடியது. இது தொடர்பிலும் அவதானங்களைச் செலுத்துமாறு கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன் என்றும் தெரிவித்தார்.

Related posts: