வடக்குக் கிழக்கே தமிழர் தாயகம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, July 17th, 2018

இன்று சட்ட ரீதியிலாகப் பிரிக்கப்பட்டிருப்பினும் கூட ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுயாட்சிக்காகவே நாங்கள் கடந்த காலங்களில் பாரிய அர்ப்பணிப்புகளுடன் போராடி வந்திருக்கின்றோம். அந்தப் போராட்டமானது இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபை உருவாக்கம் பெற்றதுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்திருந்த வன்முறைகளுக்கும் எமக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும், சிங்கப்பூர் குடியரசிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் பற்றிய சபை ஒத்திவைப்பின் போதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இன்றைய தினம் இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவாதம் இங்கே நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டு எனது கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கியமை தொடர்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இறக்குமதிகள், வரி அறவீடுகள், விற்பனைகள் என்ற முக்கோண நிலையில் – அதாவது உள்ளூர் உற்பத்திகளை – ஏற்றுமதிகளைப் பற்றி கவலைப்படாத இறக்குமதிகள், மக்களின் வறுமை நிலைமையினைப் பற்றிக் கவலைப்படாத வரிகள் விதிப்பு, நாட்டைப் பற்றி கவலைப்படாத நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தல் என்ற முக்கோணத்தில் இந்த நாடு திண்டாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், இத்தகைய வர்த்தக மற்றும் ஏனைய ஒப்பந்தங்கள் குறித்தும் கதைக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்திற்கு வருவதற்கு முன்பதாக, இன்னுமொரு ஒப்பந்தம் தொடர்பிலான சில சந்தேகங்களை இங்கே வெளிப்படுத்த விரும்புகின்றேன்.
திருகோணமலையை மையப்படுத்தியதாக வடக்கில் முல்லைத்தீவிலிருந்து, கிழக்கில் மட்டக்களப்பு வரையிலான கடற் பிரதேசங்களை உள்ளடக்கியதாக எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளல் என்ற பெயரில் அமெரிக்காவின் சுலும்பேக்கர் என்ற நிறுவனம், இலங்கையின் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சுடன் கடந்த மே மாதம் 30ஆம் திகதி ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இத்தகைய திட்டங்கள் இந்த நாட்டில் ஏனைய கடற் பிரதேசங்களிலும் மேற்கொள்ளப் படவுள்ளதாக நீங்கள் கூறினாலும், அது எந்தளவிற்கு சாத்தியமாகும் என்பதை உங்களால் கூற முடியாது என்றே நான் கருதுகின்றேன். ஏனெனில், இத்திட்டத்தின் நோக்கமானது கிழக்குக் கடற் பிரதேசங்களை மாத்திரமே இலக்காகக் கொண்டு, அமெரிக்காவின் இராணுவ கேந்திர நலன்களுடன் ஒன்றறக் கலந்ததாக இருப்பதாகவே தெரிய வருகின்றது.
2016ஆம் ஆண்டு காலகட்டத்திலும் இத்தகைய கிழக்குக் கடற் பிரதேசத்தில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்ளப் போவதாகக் கூறப்பட்டு பிரெஞ்சு நிறுவனமான வுழவயட – டோடல் – எனும் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின்னர் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டமைக்கும், தற்போது அதே விதமானதோர் ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ளமைக்கும் இடையில் தொடர்புகள் ஏதேனும் இருக்கின்றனவா? எனக் கேட்க விரும்புகின்றேன்.
அதே நேரம், இத்தகைய திட்டங்களின் ஊடாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலை கொண்டுள்ள குடிப் பரம்பலை சிதைத்துவிட்டு, பல்வேறு குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும் எமது மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அத்துடன், மேற்குலகின் போட்டிக் களமாக கிழக்குப் பிரதேசத்தினை மாற்றுவதற்கே இந்த அரசு தற்போது செயற்பட்டு வருவதாகவும் எமது மக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகின்றன.
அந்தவகையில், ‘சர்வதேசம் தலையிட வேண்டும், சர்வதேசம் தலையிட வேண்டும்!’ என எதற்கெடுத்தாலும் சில தமிழ்த் தலைவர்கள் கூறுவதைப்போல், அந்த சர்வதேச தலையீடு இது தானா? எனக் கேட்க விரும்புகின்றேன்.
ஏற்கனவே ஒரு மாபெரும் யுத்த மோதலினை சந்தித்து, துவண்டுப் போயிருக்கின்ற எமது மக்கள் தலைநிமிரக் கூடிய வழிவகைகளை உரிய முறையில் மேற்கொள்ளாமல், மீண்டும் அங்கு ஓர் இராணுவ கேந்திர நலன்;சார்ந்த செயற்பாடுகளுக்கு இடங்கொடுப்பதானது, எமது மக்களை மேலும் புண்படுத்திப் பார்க்கின்ற செயலாகும் என்றே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இப்போதும் கூட வடக்கு, கிழக்கு கடற் பிரதேசங்களில் எமது கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக கடற்றொழில்களில் ஈடுபடுவதற்கு பல்வேறு தடைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் கடற்றொழிலாளர்களது சட்ட விரோதமான தொழில் நடவடிக்கைகள் மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை மீறியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழில் முயற்சிகள் என்பவற்றின் முன்பாக எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், எமது கடற் பகுதிகளின் வளங்களும் இன்று கேள்விக் குறியாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலைமையில், எண்ணெய் ஆய்வுகள் என்றும், இராணுவ நலன்கள் என்றும் ஒவ்வொரு நாடுகள் வந்து எமது பகுதிகளில் நிலை கொள்ளுமானால், அதனால் ஏற்படக்கூடிய எமது மக்களுக்கும், எமது பகுதிகளுக்குமான பாதிப்புகள் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியவர்களாகவே இருக்கின்றோம் என்பதை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.
இன்று சட்ட ரீதியிலாகப் பிரிக்கப்பட்டிருப்பினும்கூட ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுயாட்சிக்காகவே நாங்கள் கடந்த காலங்களில் பாரிய அர்ப்பணிப்புகளுடன் போராடி வந்திருக்கின்றோம். அந்தப் போராட்டமானது இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபை உருவாக்கம் பெற்றதுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்திருந்த வன்முறைகளுக்கும் எமக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது.
இன்றும்கூட இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களையே நாங்கள் விரும்புகின்றோம். முஸ்லிம் மக்களதும் பூரணமான விருப்புகளை இதற்காக நாங்கள் வென்றெடுக்க வேண்டியிருக்கின்றது. அதற்காக நிறையவே உழைக்க வேண்டியிருக்கின்றது.
இருப்பினும், இன்று நிர்வாக ரீதியில் பிரிந்திருந்தாலும் வடக்கும் கிழக்கும் எமது பூர்வீகமான வாழ்விடங்கள் என்ற பற்றுடனேயே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக, வடக்கு, கிழக்கு மாகாணங்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்க்காதீர்கள், நாட்டின் ஏனைய பகுதிகளை தாரை வார்த்துக் கொடுங்கள் என நான் கூறுவதாக எவரும் அர்த்தம் கொள்ளக்கூடாது.
திருகோணமலையாகட்டும், அம்பாந்தோட்டையாகட்டும், மொனராலையாகட்டும், காலியாகட்டும், கொழும்பாகட்டும் – இந்த நாட்டில் சுய உற்பத்தித் துறைகளை மேம்படுத்தாமலும், புதிய ஏற்றுமதிக்கான புதிய தொழிற்துறைகளை உருவாக்காமலும், வெறும் இறக்குமதிகளை மாத்திரம் நினைவில் வைத்துக் கொண்டு, இந்த நாட்டின் சொத்துக்களை விற்பது, வெளிநாட்டுக் கடன் பெறுவது என்கின்ற கனவுகளில் இருந்து கொண்டு மாத்திரம் செயற்படாதீர்கள் என்றே வலியுறுத்த விரும்புகின்றேன்.
இரவு 12 மணிக்கு எரிபொருளின் விலையைக் கூட்டுகிறீர்கள். மறுநாள் பகல் 12 மணிக்கு குறைக்கிறீர்கள். பின்னர் சில நாட்கள் சென்று மீண்டும் இரவு 12 மணிக்கு கூட்டுகிறீர்கள். இந்த வகையில் உங்களுக்கே விளப்பமில்லாத ஆட்சி முறையினை நீங்கள் மேற்கொண்டு வரும்போது, பொது மக்களுக்கு என்ன விளங்கப்போகிறது?… என்ன நடக்கப் போகின்றது? என்ற கேள்வியே எழுகின்றது.
இப்போது இந்த இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலும் பல்வேறு கேள்விகள் எமது மக்கள் மத்தியில் இருக்கின்றன. மேற்படி ஒப்பந்தம் காரணமாக சிங்கப்பூருக்கு வருடமொன்றுக்கு 10 அமெரிக்க டொலர் பில்லியன் நிதி மீதமாக்கப்படும் என சிங்கப்பூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் பிரசுரமொன்றில் கூறப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
அதாவது, சிங்கப்பூர் பொருட்களுக்கான இறக்குமதி வரியாக இலங்கைக்குக் கிடைக்கின்ற நிதியில் குறைந்தபட்சமாக 150 கோடி ரூபா வரி வருமானத்தை மேற்படி ஒப்பந்தம் காரணமாக இலங்கை இழக்கின்ற நிலையே ஏற்படும் எனக் கூறப்படுகின்றது. இதற்குப் பதிலாக இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கான ஏற்றுமதிக்கென என்ன கிடைத்துள்ளது? என்ற கேள்விக்கு என்ன பதில் உங்களிடம் இருக்கின்றது என்ற கேள்வியே எழுகின்றது.
சிங்கப்பூர் நாட்டைப் பொறுத்த வரையில் அந்நாடானது, பொதுவாகவே இறக்குமதிகளின் வரிகளை ஒருதலைப்பட்சமாக மிகவும் குறைந்த மட்டத்தில் வைத்துக் கொள்கின்ற நாடு என்றே கூறப்படுகின்றது. இந்த நிலையில், சிங்கப்பூரானது இதற்கு முன்பிருந்தே உலகின் அனைத்து நாடுகளுக்குமாக இறக்குமதி வரி விலக்களித்துள்ள பொருட்களுக்கே இலங்கைக்கு வரிச் சலுகை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதே நேரம், மேற்படி ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும், ஒரு பொருளின் பெறுமதிக்கு சிங்கப்பூரில் வைத்து சேர்க்கப்படுகின்ற பெறுமதியினை அளவையிடுவதற்கான நிபந்தனையானது மிகவும் பலஹீனமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த வகையில் பார்க்கின்றபோது உலகின் ஏனைய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களும் சிங்கப்பூர் ஊடாக இலங்கைகக்கு வரி விலக்களிப்புடன் நுழையப் போகின்றனவா? எனக் கேட்க விரும்புகின்றேன்.
எனவே, இத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றபோது, தன்னிச்சையான முடிவுகளை எட்டிக் கொண்டு செயற்படாமல், எமது நாட்டுக்குப் பொருத்தமான வகையிலான, அது சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படல் வேண்டும்.
அதே நேரம், எமது நாட்டுக்கு அதிகளவிலான வர்த்தக நிலுவையுள்ள நாடுகளுடன் பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கே அதி தீவிர முனைப்பு காட்டுவதால,; வர்த்தக நிலுவைகள் அதிகரித்து, இந்த நாடு மேலும் பாரிய பொருளாதார சிக்கலுக்கே எதிர்காலத்தில் முகங்கொடுக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை இங்கே முன்கூட்டியே ஞாகப்படுத்துகின்றேன்.
இத்தகைய செயற்பாடுகள் காரணமாக, இந்த நாட்டிலிருந்து மிக அதிகளவில் வெளியேறுகின்ற நிதியை மீள நாட்டுக்குள் எவ்வாறு கொண்டு வரப் போகின்றீர்கள்? என்பது குறித்து என்ன திட்டங்கள் உங்களிடம் இருக்கின்றன? என்று கேட்க விரும்புகின்றேன்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வேலை செய்வித்தா? இந்த நாட்டில் இன்னும் எஞ்சியிருக்கின்ற சொத்துக்களை விற்றா? இல்லை, மேலும், மேலும் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றா? எப்படி இந்த நிதியை மீள எமது நாட்டுக்குள் கொண்டுவரப் போகின்றீர்கள்? என்றே கேட்க விரும்புகின்றேன்.
சிங்கப்பூர் நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த போது, அதற்கு முன்பதாக மேற்படி ஒப்பந்தம் தொடர்பில் இலங்கை சார்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவிருந்த குழுவிலிருந்து ஒரு சிலரை, இதே ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவிருந்த சிங்கப்பூர் குழுவின் பிரதானிகளிடம் பயிற்சி பெறுவதற்கு அனுப்பி வைத்துள்ள உங்களது செயற்பாட்டினை என்னவென்று சொல்வது? என உங்களிடமே கேட்க விரும்புகின்றேன்.
உங்களது இத்தகைய செயற்பாடுகளிலிருந்தே இந்த ஒப்பந்தம் எத்தகையதாக இருக்கும் என்பது குறித்து இந்த நாட்டு மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றே நினைக்கின்றேன். இதைவிட மேலதிகமாக மேற்படி ஒப்பந்தம் தொடர்பில் கூறுவதற்கு எதுவுமில்லை எனத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே..
வடக்கு கிழக்கின் கடற்கரையோரங்களை மூலதனமாகக் கொண்டு வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செய்கின்றீர்கள். அந்த ஒப்பந்தங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவையா? அதனால் இலங்கைக்கு எவ்விதமான நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் விரிவாக பேசுவதற்கு முன்னர், இலங்கையை பெரும் போதைப்பொருள் விநியோக மையமாக மாற்றிக் கொண்டிருக்கும் போதைப் பொருள் விநியோகப் பாதையாக காணப்படும் கடல் பிரதேசத்தை முறையாக கண்காணிக்க இந்த அரசாங்கத்தால் ஏன் முடியாமல் இருக்கின்றது.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் கடல் வழியாக ஆயுதக் கப்பல்கள் நுழைந்துவிடாதிருப்பதிலும், கடல் மார்க்கமாக ஆயுத தாரிகளின் போக்குவரத்து சாத்தியமாகிவிடக் கூடாது என்பதிலும் திட்டமிட்டு செயலாற்றிய இலங்கை கடற்படையினரால் இப்போது போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக அவ்விதமாக ஏன் செயற்படமுடியவில்லை.
கடற்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமானால், கடல் மார்க்கமாக இலங்கைக்குள் கொண்டுவரப்படும் போதைப்பொருள் விநியோகத்தையும், எமது கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அத்துமீறிய மீன்பிடியாளர்களையும் தடுக்கலாம்.
ஆகாய விமானம் மூலமாக நடைபெறும் போதைப் பொருள் கடத்தலை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியுமாக இருக்கின்றபோதும், கடல் மார்க்கமாகவே பெருமளவான போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கவும், அதன் பாதிப்புக்குள்ளாகும் இலங்கையர்களை பாதுகாக்கவும், போர்க்காலத்தில் செயற்பட்டதைப்போன்று விN~ட நடவடிக்கைகளை எடுத்து எமது கடற்பிராந்தியத்தை பாதுகாக்க இலங்கை கடற்படை ஏன் செயற்படுவதில்லை.
எமது கரையோரப்பகுதிகள் போதைப்பொருள் கடத்தல் காரர்களின் இலகுவான போக்குவரத்து மார்க்கமாக மாறியிருக்கின்ற தற்போதைய ஆபத்தான சூழலை கவனத்திற் கொள்ளாமல், வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதற்கு ஏன் அவசரப்படுகின்றோம் என்பதிலும், இந்த ஒப்பந்தங்கள் ஊடாக அந்தக் கடற்பிரதேசங்களையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்துவரும் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு கிடைக்கப் போகும் பயன்கள் எவை என்பதிலும் பல கேள்விகளுக்கு விடைகாண வேண்டியிருக்கின்றது.
அதேநேரம் போதைப் பொருட்கள் விநியோகம், பாவனையால் ஏற்படக்கூடிய பாதிப்புககள் தொர்பாகவும் நாட்டு மக்கள் போதிய தெளிவு இல்லாதிருக்கின்றார்கள் ஆகவே போதைப் பொருட்களின் வகைகள், அதன் தன்மைகள், அதிலிருந்து எவ்வாறு ஒதுங்கியிருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், அது தொடர்பான குற்றம் எவை என்பது தொடர்பாகவும் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் விN~ட ஏற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த செயல்திட்டத்திற்கு அரசாங்கம் மட்டுமல்லது, பொதுமக்களும், மத நிறுவனத் தலைவர்களும், தொண்டு அமைப்புக்களும், அரசியல் தலைமைகளும் எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம் என்பதையும் ஆராய்ந்து விழிப்புனர்வூட்டும் பொறுத்தமான திட்டம் தயாரிக்கப்படுவது நன்மையாக அமையும் என்பதை முதலில் தங்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி.

Related posts:

இன சமத்துவத்தின் உரிமையின் குரலாகவும் இன ஐக்கியத்தின் குரலாகவும் ஒலிப்போம் - 2017 நாடாளுமன்றில் டக்ள...
கடல் தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்...
தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்துகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...