வடக்கில் உவர் நீர் புகுந்து விவசாய நிலங்களை பாதிப்படையச் செய்கின்றது  தடுக்க நடவடிக்கை வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை.

douglas-720x450 Wednesday, July 5th, 2017

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் பல்வேறு பகுதிகளில் நிலங்கள் படிப்படியாக உவர் நீர் உட்புகுதலுக்கு உட்பட்டு, அப்பகுதிகள் குடிநீருக்கான பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதுடன்,  விவசாயச் செய்கைகள் மற்றும் விலங்கினங்களுக்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள  சூழ்நிலையில், அப்பகுதிகளின் பொருளாதார வளங்கள் அழிக்கப்பட்டும், குடியிருப்புகள் கைவிடப்பட்டும் எமது மக்களில் கணிசமான தொகையினர் பல்வேறு பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்றனர் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சாவிடம், வடக்கு மாகாணத்தில் உவர் நீர் நிலத்திற்குள் உட்குபுவதால் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (05.07.2017) கேள்விகளை முன்வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்தபோது, குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பூநகரி பகுதியில் பல கிராமங்கள் உவர் நீர்த் தாக்கத்திற்கு உட்பட்டுள்ள நிலையில், தற்போது வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம் போன்ற கிராமங்கள் முழுமையாகவே உவரடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. இதே நிலை, 2000ம் ஆண்டளவில்     பூநகரி, பல்லவராயன்கட்டு கிராமத்தில் ஏற்பட்டு, அது மக்களால் உணர்த்தப்பட்டும், உரிய செயற்பாடுகள மேற்கொள்ளப்படாத காரணத்தினால் இன்று பல்லவராயன்கட்டு கிராமமானது முழுமையாக உவரடைந்துள்ள நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

1953ம் ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளம் கிராமத்தில் தற்போது சுமார் 500 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், மண்டைக்கல்லாறு வழியாக கடல் நீர் உட்புகுந்து அங்குள்ள குஞ்சுக்குளம் கிராமம் தற்போது முழுமையாகவே உவரடைந்து அங்கிருந்து சுமார் 50 குடும்பங்கள் தற்போதைய நிலையில் வெளியேறியுள்ளதுடன், அங்கு செயற்பட்டு வந்துள்ள கணேசா வித்தியாலயமும் தற்போது மூடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

1983ஆம் ஆண்டில் நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்டிருந்த இனக் கலவரங்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் தற்போது சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், குஞ்சுக்குளம் வழியாக தற்போது ஆனைவிழுந்தான் மேற்குவரை உவர் நீர் பரவியுள்ளதாகவும், இதன் காரணமாக  அப்பகுதி கிணறுகள் யாவும் உவர் நீராக மாறியுள்ளதாகவும், பயிர்கள் யாவும் அழிவடைந்து வருவதாகவும் தெரிய வருகின்றது.

இந்த நிலையில்,  மண்டைக்கல்லாறு வழியாகப் பரவுகின்ற உவர் நீரைத் தடுப்பதற்கு உடனடி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால், மேற்படி இரு கிராமங்களும் அழிந்துவிடுவதை தடுக்க முடியாததாகிவிடும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

இவ்வாறு உவர் நீர் உட்புகுவதைத் தடுப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை உரிய காலகட்டங்களில் மேற்கொள்ளப்படாவிட்டால், வடக்கு மாகாணத்தில் பல கிராமங்கள் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டு வருவதையும் இங்கு அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

எனவே, மண்டைக்கல்லாறு வழியாகப் பரவுகின்ற உவர் நீரைத் தடுப்பதற்கு உடனடியாக தடுப்பு அணையொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா?

மேலும், இத்தகைய உவர் நீர் உட்புகும் அபாயங்கள் உள்ள பகுதிகளை உரிய ஆய்வுகள் மூலமாக இனங்கண்டு, அப்பகுதிகளையும் உவர் நீர் உட்புகுவதிலிருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

அத்துடன், யாழ்ப்பாணத்தில் தீவகப் பகுதிகள் அடங்கலாக கிளிநொச்சி, ஆணையிறவிலும், உவர்ப் பரம்பல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக நன்னீர் நிலைகளைக் கொண்ட இயக்கச்சி கிராமமும் உவரடையக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், கடந்த கால யுத்தம் காரணமாக ஆனையிறவு, தட்டவன்கொட்டி, ஊரியான் ஆகிய பகுதிகளிலும், பூநகரி பிரதேசத்திலும் அமைக்கப்ட்டிருந்த உவர்நீர்த் தடுப்பணைகள் அழிவடைந்தும், சேதமடைந்தும் காணப்படுவதால், கடல் நீர் பயிர்ச் செய்கை நிலங்களுக்குள் புகுந்து பெருமளவிலான பயிர்ச் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன என்றும் தெரிய வருகின்றது.

எனவே, ஆனையிறவினை மையப்படுத்தி உவர்நீர்த் தடுப்பணை ஒன்றினை அமைப்பதற்கும், ஏனைய உவர் நீர்த் தடுப்பணைகளை புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமா? எனது மேற்படிக் கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என்றும் கூறினார்.


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் உருவாகும் தீர்வை...
மாகாண மட்டத்தில் விளையாட்டுக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா
நாட்டின் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம்  - புதிய அரசியல் யாப்ப...
வடக்கு கிழக்கில் கல்வி வீழ்ச்சியடைந்ததற்கு மாகாண அமைச்சர்களின் வினைத்திறன் இன்மையும் காரணமாகும்.