லஞ்சம், ஊழலை ஒழிக்க போதுமான சட்ட ஏற்பாடுகள் இல்லை – டக்ளஸ் தேவானந்தா

Thursday, July 6th, 2017
2008ஆம் ஆண்டில் உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் பின்னர் உலக அளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது. ஆனால், இதற்கெதிராக உரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஒரு தோற்றப்பாடு மக்கள் மத்தியில் காட்டப்படுகின்ற போதிலும், உண்மையிலேயே அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகங்கள் எமது மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.
மேற்படி ஆய்வினைப் பொறுத்த வரையில் அதிகளவில் இலஞ்ச ஊழலில் ஈடுபடுகின்றவர்கள் பட்டியலில் முதலாமிடத்தில் அரசியல்த்துறை சார்ந்தவர்களும்,இரண்டாமிடத்தில் பொலிஸாரும், மூன்றாவதாக நீதித்துறை சார்ந்தவர்களும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
எமது நாட்டைப் பொறுத்த வரையில் கல்வித்துறையே இலஞ்சம் அதிகரித்துள்ள துறையாக இருப்பதாக ஊழல் மற்றும் இலஞ்ச ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஒரு தகவல் குறிப்பிடுகின்றது. எனவே. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான பாடத்திட்டமொன்றை பாடசாலை பாட நூல்களில் உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
முறைப்பாடுகள் செய்யப்பட்டால் மாத்திரமே இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவால் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்கின்ற வகையிலேயே தற்போதைய சட்ட ஏற்பாடுகள் எமது நாட்டிலே நடைமுறையில் இருக்கின்றன. இது, இலஞ்சம் மற்றும் ஊழலை இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு போதுமான சட்ட ஏற்பாடாக இல்லை என்றே தெரிய வருகின்றது.
ஏனெனில், எமது நாட்டில் சுமார் 3000க்கும் அதிகமானோர் திடீர் செல்வந்தர்களாகியுள்ளனர் என்ற தகவலையும் இதே இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவே தெரிவிக்கின்றது. இந்த நிலையில், முறைப்பாடுகள் செய்யப்பட்டால் மாத்திரமன்றி, சந்தேகத்திற்குரிய விடயங்கள் குறித்து நேரடியாக ஆராய்ந்து, அவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளக்கூடிய வகையிலான அதிகாரங்கள் மேற்படி ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையே இது எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்திலே வலியுறுத்த விரும்புகின்றேன்.
எமது நாட்டில் கல்வித்துறை சார்ந்தே அதிகளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிலவுவதாக மேற்படி ஆணைக்குழு தெரிவிக்கும் நிலையில், பெற்றோர்களிடமிருந்து நன்கொடைகளைக் கோருகின்ற பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சுக்குத் தெரியாது எனக் கூறுவதற்கு இடமில்லை. பல பாடசாலைகளில் மேற்படி செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தமக்கு அறியக் கிடைத்துள்ளது என கல்வி அமைச்சர்கள் அடிக்கடிக் கூறுகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை. இத்தகைய நிலையில், கல்வி அமைச்சு மேற்படி பாடசாலைகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்தல்களை மேற்கொள்ளாததும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாததும் ஏன் என்ற கேள்வி எமது மக்கள் மத்தியில் எழுவது நியாயமாகும்.
வடக்கிலே, பல்வேறு பகுதிகளில் இயற்கை வளங்கள் சட்டவிரோதமான முறையில் சூறையாடப்பட்டு, பல மில்லியன் ரூபா நிதி ஈட்டல்கள் தொடர்கின்றன. குறிப்பாக, யாழ்ப்பாணம், மருதங்கேணி குடாரப்பு வடக்கு பிரதேசத்திலே மணல் கொள்ளைகளில், சில அரசியல்வாதிகளின் பின்னணியில் அரச அதிகாரிகளே ஈடுபட்டு, இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகளுக்கான வழிகளை திறந்துவிட்டிருக்கின்றனர்.
எனவேதான், இவ்வாறான சந்தேகத்திடமான செயற்பாடுகள் தொடர்பில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றை விசாரிக்கின்ற அதிகாரங்கள் மேற்படி ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன். அந்த வகையில், தற்போது எமது நாட்டில் நடைமுறையிலுள்ள ஊழல் இலஞ்ச ஒழிப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற சமூகத்தை உருவாக்குவது தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒப்பந்தத்தில் 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இரண்டாவது நாடாக எமது நாடு இருக்கின்ற நிலையில் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.
இலஞ்சம், ஊழல் மற்றும் அதனால் ஏற்படுகின்ற பொருளாதார சிதைவுகளாலும் குறிப்பாக வறிய மக்களே மிக அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். வறிய மக்களை ஒடுக்குவதற்கான ஒரு வழிமுறையாக இலஞ்சம் இருந்து வருகின்றது. தொழில் வாய்ப்புகளைப் பெறவோ அன்றி தங்களுக்கான வாழ்வாதாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கோ, தமது பிள்ளைகளுக்கான கல்வி வசதிகளைப் பெறவோ இலஞ்சம் முதன்மைப் படுத்தப்படுமானால், வறியவர்களால் இலஞ்சம் கொடுக்க முடியாத நிலையில் அம் மக்களே பாரியளவில் பாதிக்கப்படுவதுடன், அம் மக்களுக்கான வாய்ப்புகள் திசை மாறிப் போய்விடுகின்றன.
இந்த நிலையை வைத்துப் பார்க்கின்றபோது, கடந்த கால யுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்து நிற்கின்ற எமது மக்களின் நிலை எந்தளவுக்கு பரிதாபகரமானது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வறுமை என்பது எமது மக்கள் மீது யுத்தம் காரணமாகவும், இயற்கைப் பேரழிவுகள் காரணமாகவும் உட்புகுத்தப்பட்டு, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலே வறுமை நிலையிலிருந்து மீளக்கூடிய வாய்ப்புகள் எமது மக்களில் பலருக்கு இருந்தும், அவை தடுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், அத்துமீறியச் செயற்பாடுகள் காரணமாகப் பறிக்கப்பட்டும் வருகின்றமை காரணமாக வறுமையானது, எமது மக்கள் மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ள நிலையும் இல்லாமல் இல்லை.
இவ்வாறான நிலையில் வாழ்ந்து வருகின்ற எமது மக்களிடையே இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தலைவிரித்திருக்கும் நிலையில், எமது மக்கள் தங்களது வாழ்க்கையில் தலைநிமிர முடியாத நிலையே தொடர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு தொடர்பில் அவதானங்களைச் செலுத்துகின்றபோது, பிரதானமாகக் கூறப்படுகின்ற ஒரு விடயம் ஆளணிப் பற்றாக்குறை என்பது. தொடர்ந்தும் இந்தப் பிரச்சினை முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனினும், இதற்கு இதுவரையில் தீர்வுகள் எட்டப்படாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
குறிப்பாக மேற்படி ஆணைக்குழுவுக்கு, கணக்காய்வு மற்றும் வங்கி நடைமுறைகள் தொடர்பிலான பட்டதாரிகள் 100 பேருக்கான வெற்றிடங்கள் நிலவுவதாகத் தெரிய வருகின்றது. மேலும், கொள்வனவுகள், பணத்தை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்தல் போன்ற விடயங்ளை விசாரிப்பதற்கான அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கான தேவை இருப்பதாகவும் தெரிய வருகின்றது.
எனவே, இத்தகைய வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலும் தாமதிக்காது, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
அதே நேரம், கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதிக்குள் 392 வழக்குகள் மேற்படி ஆணைக்குழுவால் நீதவான் நீதிமன்றங்களிலும், மேல் நீதி மன்றங்களிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 106 பேர் குற்றவாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.
எனினும், கடந்த காலங்களில் பலராலும் கூறப்பட்ட நிலையில் ஊடகங்களில் வெளிவந்திருந்த தகவல்களை வைத்துப் பார்க்கின்றபோது, இந்த எண்ணிக்கையானது பல மடங்காக அதிகரித்திருக்க வேண்டும் என்ற கருத்தே மக்கள் மத்தியில் நிலவுகின்றது. அதே போன்றே, மேற்படி ஆணைக்குழுவுக்கு கிடைத்ததாகக் கூறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கைகளும் ஏராளம் என்றே ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையை அவதானிக்கின்றபோது, பொய்யான முறைப்பாடுகளை முன்வைத்திருக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் அநேகம் என்பது புலனாகின்றது. தற்போது எமது நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரம், உண்மைக்கு மாறான முறைப்பாட்டினை ஒருவர் செய்கின்றார் எனில், அவருக்கு 10 வருட கால தண்டனை விதிக்கப்பட முடியும். எனவே, அத்தகைய தண்டனைகள் வழங்கப்படக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளனவா என்ற கேள்வியும் எமது மக்கள் மத்தியில் எழாமல் இல்லை. ஏனெனில், உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள் பலவும் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இதே ஊடகங்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே, அத்தகைய செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டு, போதிய ஆளணிகள் இணைக்கப்பட்டு, நான் இங்கே சுட்டிக்காட்டியதற்கிணங்க மேற்படி ஆணைக்குழுவுக்கு மேலதிக அதிகாரங்களும் வழங்கப்பட்டு, இந்த ஆணைக்குழுவின் பணியை மேலும் செயற்திறன் மிக்கதாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன் என  நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(05.07.2017) தினம் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் படிகளில் திருத்தம் மேற்கொள்ளல். விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரையின் தொகுப்பு

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 3 டிசம்பர் 2011 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
வலுவிழந்த பொருளாதாரத்தின் மத்தியில் ஏற்றுமதிகளின் மந்தமும், இறக்குமதிகளின் வேகமும் - நாடாளுமன்ற உறுப...
எமது மக்களின் நம்பிக்கையைப் பாதிக்காத வகையில் காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் செயற்பட வேண்டும் - சபையி...

 11.02.2016 அன்று நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் ...
இன நல்லிணக்கத்தில் ஈ.பி.டி.பியினராகிய நாம் உளப்பூர்வமாக செயற்பட்டு வருவதால் வெற்றிகண்டுள்ளோம் - நாடா...
வடக்கின் வறிய குடும்பங்களும் மின்சார ஒளி பெற விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில்...