யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானிக்கப்பட வேண்டும்  – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா

Saturday, July 8th, 2017

இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை  விட்டுக் கொடுக்கவோ, இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை விட்டுக் கொடுக்கவோ ஒரு போதும் விரும்புவதில்லை. எமது மக்கள் தமிழர்களாகவும், அதே நேரம் இலங்கையர்களாகவுமே  வாழ விரும்புகிறார்கள். இதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அந்த வகையில், எமது மக்களது உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். அந்த வகையில், யுத்தம் காரணமாக உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூறும் வகையில் ஒரு பொதுவான நினைவுத்தூபி ஒன்றினை அமைப்பதற்கும், அதற்கென ஒரு தினத்தைப் பிரகடனப் படுத்துவதற்குமாகவே மேற்படித் தனி நபர் பிரேரணை என்னால் இங்கு முன்வைக்கப்படுகின்றது. இன்றைய தினம்(07.07.2017) நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்த உரையாற்றினார்.

தொடர்ந்தும் தனது உரையில் எமது நாட்டில் சுமார் முப்பது வருட காலமாக இடம்பெற்று முடிந்துள்ள கொடிய யுத்தம் காரணமாக, எமது நாட்டிலே வாழ்ந்திருந்த அனைத்து இன சமூகங்களைச் சேர்ந்த மக்களும் பல்வேறு நிலைகளில் கொல்லப்பட்டுள்ளனர். அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர். உடைமை மற்றும் சொத்தழிவுகளுக்கு உட்பட்டுள்ளனர். பல்வேறு உள ரீதியிலான பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர். இன்று, எமது மக்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்ற காலகட்டத்தில் இருந்து வரும் நிலையில், பல்வேறு இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களுக்கும் முகங்கொடுத்து வர வேண்டிய நிலைக்கும், வடக்கு கிழக்கு மாகாணங்களிலே பல்வேறு கலாசார சீரழிவுகளுக்கும் தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த அனைத்து இடர்கள் மற்றும் பிரச்சினைகளையும் சமாளித்து இந்த நாடு முன்னேற வேண்டுமாயின், அதற்கான பொருளாதார நிலையை எட்ட வேண்டியுள்ளது. எனவே, தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்துக் கொண்டே, நிலையான பொருளாதாரத்தை எட்ட வேண்டியுள்ளது. இந்த பொருளாதார நிலையை எட்டுவதற்கான பாதையில் மிக முக்கியமான காரணியாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கருதப்படுவது தேசிய நல்லிணக்கம் மற்றும் இனங்களுக்கிடையிலான சக வாழ்வாகும். இனங்களுக்கிடையில் தொடர்ந்தும் முரண்பாடு நிலை தொடருமானால், இந்த நாட்டில் நிலையானதொரு பொருளாதாரத்தை நோக்கி நகர முடியாத நிலையே ஏற்படும் என்பது யாவரும் அறிந்து கொண்டுள்ள யதார்த்தமாகும்.

அண்மையில் எமது நாட்டில், தேசிய நல்லிணக்கம் மற்றும் சக வாழ்வு தொடர்பிலான தேசிய கொள்கை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும், கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு, இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும், அதனூடாக தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது. இவர்களது முயற்சிகளுக்கு ஏனைய அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் பலம் சேர்ப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், எமது நாட்டில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் முதலில், எமது மக்களது உணர்வு ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. அவை தீர்க்கப்பட்டால் மாத்திரமே தேசிய நல்லிணக்கமானது உணர்வுப்பூர்வமானதாகவும், வலுவுள்ளதாகவும் அமைவதற்கு சாத்தியமாகும். அன்றி, தேசிய நல்லிணக்கம் என்பது பலவந்தமாகக் கட்டியெழுப்பக்கூடியதல்ல.

எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் பல இருக்கின்றன. அவை தொடர்பில் தொடர்ந்தும் நான் இந்தச் சபையிலே ஏற்கனவே கூறி வந்திருக்கிறேன். அவற்றில் மிகவும் முக்கியமான ஒரு விடயம் பற்றியதாகவே எனது இன்றைய தனி நபர் பிரேரணை அமைந்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை  விட்டுக் கொடுக்கவோ, இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை விட்டுக் கொடுக்கவோ ஒரு போதும் விரும்புவதில்லை. எமது மக்கள் தமிழர்களாகவும், அதே நேரம் இலங்கையர்களாகவுமே  வாழ விரும்புகிறார்கள். இதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அந்த வகையில், எமது மக்களது உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அந்த வகையில், யுத்தம் காரணமாக உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூறும் வகையில் ஒரு பொதுவான நினைவுத்தூபி ஒன்றினை அமைப்பதற்கும், அதற்கென ஒரு தினத்தைப் பிரகடனப் படுத்துவதற்குமாகவே மேற்படித் தனி நபர் பிரேரணை என்னால் இங்கு முன்வைக்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் நான் இதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்திருந்த நிலையில், அது அக்கால கட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டும், நிறைவேற்றப்படாததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டிருந்தாலும், யுத்தத்தை வெற்றிகொண்ட ஓர் அரசு என்ற ரீதியில் அது கேள்விக் குறியாகவே இருந்துவிட்டது என்றே நான் கருதுகின்றேன். இத்தகைய எமது மக்களின் உணர்வுப்பூர்வமான விடயங்கள் உட்பட பல்வேறு தேவைகள் நிறைவேற்றப்படாமை மற்றும் சிறுபான்மையின மக்களை அவதானத்தில் கொள்ளாது செயற்பட்டதன் விளைவாகவே, அம் மக்களது தேவைகள் உணர்த்தப்பட்ட நிலையில், அம் மக்களில் அதி பெரும்பான்மையினரால் இந்த ஆட்சிக்கு வித்திடப்பட்டமை பற்றி இந்த ஆட்சியிலிருக்கின்ற பலரும் ஏற்றுக் கொள்கின்ற நிலையிலேயே, அதுவும் ‘யுத்தத்தை வெற்றி கொண்ட நாம் தமிழ் மக்களது மனங்களை வெல்லவில்லை’ என தனது ஆரம்ப சுதந்திர தின உரையில் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி அவர்களினதும், தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வெண்டும் என்ற முனைப்போடு செயற்படுகின்ற பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களினதும் தலைமையில் இந்த நாட்டின் தேசிய நல்லிணக்கச் செய்றபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஆட்சிக் காலத்தில் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் இதனை நான் இங்கு முன்வைத்துள்ளேன்.

எமது மக்கள் தங்களது உறவுகளை கடந்த கால யுத்தத்தில் பறிகொடுத்துவிட்டு, அந்த உயிர்களின் ஆத்ம சாந்தி வேண்டி, மதச் சடங்குகளை மேற்கொண்டு, அவர்களை நினைவு கூறுவதற்காக கடந்த காலங்களில் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர் என்பதை யாவரும் அறிவீர்கள். ஆனால், தற்போதைய நிலையில் அந்தச் சிரமங்கள் ஓரளவுக்கு அகற்றப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. இருப்பினும், பறிபோன உறவுகளுக்கு நினைவு கூறுவதை சில தமிழ் அரசியல்வாதிகள் தங்களது சுயலாப அரசியல் கருதி அதனை பயன்படுத்தி வருகின்றார்கள். இது ஒரு காட்சிப்படுத்துகை என்ற ரீதியில் அமைந்து வருகின்றது. ஒரு விளக்கை ஏற்றிவிட்டு, தங்களது அரசியலை அந்த துன்பகரமான இடத்தில் அரங்கேற்றுகின்ற அசிங்கங்கள் அங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு காவல்த்துறையினர் பாதுகாப்பும் வழங்குகிறார்கள்.

இந்த அரசியல் நாடகங்களை ஏற்காத, விரும்பாத எமது மக்கள் சுயமாக தங்களது உணர்வுகளுக்கும், உயிரிழந்த தமது உறவுகளுக்கும் மரியாதை கொடுத்து, அந்த உறவுகளை நினைத்து, நெகிழ்ந்து தங்களது மத வழிபாடுகளை மேற்கொள்ள முற்படுகின்றபோது, காவல்த்துறை உட்பட்ட பாதுகாப்புத் துறையின் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக எமது மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கம் சாத்தியப்படுமா? என்ற கேள்வியே எம்முன் எழுகின்றது.

இவ்வாறான எமது மக்களது உணர்வு ரீதியிலான பாதிப்புகளை தொடர்ந்தும் வளர்த்தெடுத்து, அதனை ஒரு வெறுப்பாக எங்கள் மக்கள் மத்தியில் குடியிருத்தாமல், அந்த மக்களை வென்றெடுக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உண்டு என நான் நம்புகின்றேன். எனவே, உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு உரிய வகையில் ஒரு பொதுத் தூபி ஒன்றை அமைப்பற்கும், அதற்கென ஒரு திகதியை குறித்தொதுக்குவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். இதனை இந்த அரசு மேற்கொள்ளுமிடத்து, இந்த அரசு மீது எமது மக்களின் நம்பிக்கைகள் வலுப்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

யுத்தத்தால் கொல்லப்பட்ட உறவுகளை எமது மக்கள் நினைவுகூறுகின்ற விடயமானது, சில இனவாதிகளால் புலிகளை நினைவு கூறுவதற்காக சித்தரிக்கப்பட்டு, சிங்கள மக்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களை நினைவுகூறுவதற்காக புலிகள் இயக்கத்தினர் நவம்பர் மாதத்தில் 28ஆம் திகதியை ஒதுக்கியிருந்தனர். அது வேறு. இங்கு நான் கோருவது கடந்தகால யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளை எமது மக்கள் நினைவு கூறும் வகையில் மே மாதத்தில் ஒரு தினத்தையே குறித்தொதுக்கும்படிக் கோருகின்றேன். அதுவும், யுத்தம் காரணமாக உயிரிழந்த எமது நாட்டின் அனைத்து மக்களையும் நினைவு கூறத்தக்க வகையிலேயே இது அமைய வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனது இந்தக் கோரிக்கையை எமது நாட்டிலே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்களில் இனவாதமற்ற பெரும்பாலான மக்கள் எற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இன்று கேப்பாப்புலவு மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை வேண்டி நடத்துகின்ற போராட்டத்தில் சிங்களச் சகோதரர்களும் பங்கேற்கிறார்கள். காணாமற்போன தமது உறவுகளை கண்டறிவதற்காக எமது மக்கள் கிளிநொச்சியிலே மேற்கொண்டு வருகின்ற அறவழிப் போராட்டத்தில் தங்களது உறவுகள் காணாமற்போன சிங்களச் சகோதரிகளும் பங்கெடுத்து வருகிறார்கள். முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதியாக நடைபெற்ற உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தும் நிகழ்வில் ஒரு பௌத்த தேரர் மனித நேயத்துடன் கலந்து கொள்கிறார். இத்தகையதொரு நிலை மாற்று காலம் எமது நாட்டிலே இன்று ஏற்பட்டு வருகின்றது. இது மிகவும் வரவேற்கத்தக்கதொரு மாற்றமாகவே தெரிகின்றது.

தன்னைக் கெலை செய்ய வந்த தமிழ் இளைஞரையே மன்னிப்பு கொடுத்து விடுவித்த மனிதாபிமானங்கொண்டவர் ஜனாதிபதியாக இருக்கின்ற நாட்டில், எமது நாட்டில் யுத்தம் மிகக் கொடூரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தனது உயிரையும் பொருட்படுத்தாது ஓமந்தையில் போய் புலிகள் இயக்கத்துடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட மனிதாபிமானமிக்கவர் பிரதமராக இருக்கின்ற நாட்டில், எமது மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் என்றே நான் நம்புகின்றேன்.

அந்த வகையிலேயே நான் இந்த தனி நபர் பிரேரணையை முன்வைத்துள்ளேன் என்பதை இங்கு தெரிவித்து விடைபெறுகின்றேன் என்று தெரிவித்தார்.

Related posts:

தீர்க்கப்படாமல் இருக்கின்ற எமது மக்களின்  பிரச்சினைகள் யாவும் எதிர்வரும் காலங்களில் விரைந்தும் தீர்க...
சிறுமி சங்கீதாவின்; கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் - நாடாளுமன்றில் எம்.பி டக்ளஸ் தேவானந்தா கோர...
நீதி கேட்டு போராடும் துணிச்சலை எமது மக்கள் மனதில் விதைத்தவர்கள் நாங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...