மாகாணசபையின் அதிகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையீடு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி 

Wednesday, September 20th, 2017
(இன்று (20.09.2017) நாடாளுமன்றத்தில் 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூல விவாதத்தில் கலந்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய உரை)
1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தின் 10ஆம் பிரிவினையும், முதன்மைச் சட்டவாக்கத்தின் 13ஆம் பிரிவினையும் 17ஆம் பிரிவினையும் திருத்துவதற்கும், இச்சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை நாம் வரவேற்கின்றோம்.
13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் முறைமையை ஆரம்பத்திலிருந்தே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் ஆதரித்தும், வரவேற்றும் வருகின்றோம்.
எமது நாட்டில் மாகாண சபை முறைமை என்பது எமது அர்ப்பணிப்புகளாலும், தியாகங்களாலும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் பிரதி பலனாகவே எமக்குக் கிடைத்திருக்கின்றது.
எந்த நோக்கத்திற்காக எங்களது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டனவோ, அந்தப் போராட்டங்களின் பிரதிபலனாக எமக்குக் கிடைத்துள்ள இந்த மாகாண சபை முறைமையின் கீழ், எமது மக்களுக்கு உரிய பயன்பாடுகள் இதுவரையில் எட்டப்படவில்லை என்பதுதான் இதில் வேதனையான விடயமாக இருக்கிறது.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்துடன் எமது போராட்ட வழிமுறையை கைவிட்டு, தேசிய நீரோட்டத்திற்கு நாங்கள் பிரவேசித்தோம். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையை நம்பியே நாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தோம். ஆதலால்தான் இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்பது எமது மக்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு என நான் அடிக்கடிக் கூறுவதுண்டு.
மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டதே தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான ஆரம்பமாகவேயாகும். துரதிஷ;டவசமாக தமிழ் மக்கள் மாகாணசபை முறைமையின் அனுகூலங்களை அனுபவிக்கவில்லை. மாறாக வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாண மக்களே மாகாணசபை முறைமையின் அனுகூலங்களை அனுபவித்து வந்திருக்கின்றார்கள்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பிக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
நாம் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பிக்க முடியும் என்று கூறியபோது, சிலர் எம்மை பரிகாசம் செய்தார்கள். தனிநாடு கிடைத்துவிடும் என்றும், அதற்காக எத்தனைபேரும் பழியாகலாம் என்றும் உசுப்பேற்றினார்கள். வன்முறையையும், கொலைகளையும் நியாயப்படுத்தி தூண்டிவிட்டார்கள். ஈ.பி.டி.பியின் தீர்வுத் திட்டமே 13ஆவது திருத்தமும், மாகாணசபை முறைமையும் என்றும், அதைத் தும்புத் தடியாலும் தொட்டும் பார்க்க மாட்டோம் என்றும் எம்மைத் துரோகிகள் என்றும் தூற்றினார்கள். எம்மீது பழிகளையும், அவதூறுகளையும் பரப்பிவிட்டார்கள்.
இன்று நாம் கூறிவந்ததே நிதர்சனமாகி இருக்கின்றது. எம்மைத் தூற்றியவர்கள், நாம் கூறிய வழிமுறைக்கு வந்து நிற்கின்றார்கள். அதன் நடைமுறைச்சாத்தியத்தைப் பற்றி பேசுவதற்கு முற்படுகின்றார்கள். நாம் அன்று கூறியதை இவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்களேயானால், எமது மக்கள் இத்தனை உயிர் இழப்புக்களையும், உடமை இழப்புக்களையும், இடப்பெயர்வகளையும் சந்தித்திருக்க மாட்டார்கள். காலம் கடந்தேனும் இவர்களுக்கு நாம் கூறிய நிதர்சனம் புரிந்து ஞானம் பிறந்திருக்கின்றதே என்று வரவேற்கின்றேன். நான் கூறிய அரசியல் வழிமுறைக்கு வந்திருப்பவர்கள் அதை எவ்வாறு செய்து முடிக்க வேண்டும் என்ற எமது பொறிமுறைக்கு வந்திருப்பதாகத் தெரியவில்லை. காலம் இவர்களை எமது பொறிமுறை நோக்கியும் அழைத்துவரும் என்று நம்புகின்றேன்.
மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!! என்பதே எமது அரசியல் இலக்காக வகுத்துக்கொண்டு அதற்காக பல தளங்களில் செயலாற்றியும் வருகின்றோம். முக்கியமாக தேசிய நல்லிணக்கம் அர்த்தபூர்வமாக சாத்தியப்படும்போதே இனங்களுக்கிடையே நம்பிக்கையும், ஐக்கியமும் சாத்தியமாகும் என்பதுடன், முழுமையான தீர்வொன்றுக்கான புறச்சூழலும் தோற்றுவிக்கப்படும் என்றும் நாம் நம்புகின்றோம்.
தேசிய நல்லிணக்கம் தொடர்பாக இன்று பலராலும் பலவிதமாக பேசப்பட்டாலும், நாம் 1990ஆம் ஆண்டிலிருந்தே தேசிய நல்லிணக்கத்திற்கான விதையை விதைத்து செயற்பட்டவர்கள். ஆகையால்தான், இன்று வடக்குக்கும், தெற்கிற்கும் இடையேயான உறவுப்பாலமாகவும், நம்பிக்கையாளர்களாகவும் எம்மை பெரும்பான்மை மக்கள் அடையாளம் காண்டிருக்கின்றார்கள்.
நாம் எப்போதும் நடைமுறை யதார்த்தமான பணிகளையே செய்திருக்கின்றோம், அது பரபரப்புக்காட்டுவதாகவோ, உணர்ச்சியூட்டுவதாகவோ ஒருபோதும் இருப்பதில்லை. எமது தீர்க்க தரிசனமான கருத்துக்களும், செயற்பாடுகளும் அதிகமாக ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காமல் போனதோ என்றும் நாம் சிந்தித்திருக்கின்றோம்.
ஊடகங்களின் கவனத்தை திருப்புவதற்காக நாம் ஒருபோதும், நடைமுறைக்கு சாத்தியமில்லாததையும், இன முரண்பாடுகளை தூண்டிவிடும் உசுப்பேற்றல்களையும் பேசியதில்லை.
அந்த வகையில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமையப்பெற்ற மாகாணசபை முறைமையை பாதுகாக்க வேண்டும், அதை சக்தியுள்ள நிர்வாக முறையாக செயற்படுத்த வேண்டும் என்பதில் நாம் அக்கறையுடன் இருக்கின்றோம். எனவே மாகாணசபை முறைமையில் மத்திய அரசின் அநாவசியத் தலையீடு செய்வதையோ, அதிகாரங்களில் கை வைப்பதையோ நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
அதேபோல் பதவிக்காலம் நிறைவடையும் மாகாணசபைகளுக்கான தேர்தலையும் உரிய காலத்தில் நடத்தி, மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.  மக்கள் பிரதிநிதிகள் வழிநடத்தாத அதிகார மையங்கள் மக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்க முடியாது.
துரதிஷ;டவசமாக மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி செய்கின்றபோதும், சில ஆட்சி மையங்கள் மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைவாக திறம்படச் செயலாற்றாமல், அர்த்தமற்ற தீர்மானங்களை நிறைவேற்றிக்கொண்டும், பதவிச் சண்டையில் காலத்தை விணடித்துக்கொண்டும் இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்கின்றோம். அவ்வாறான தவறை திருத்துவதற்கும் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள மக்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.
மாகாணசபைகள் திருத்தச் சட்டமூலத்தில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பரிந்துரை செய்யப்பட்டிருப்பதை நாம் வரவேற்கின்றோம். 30 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ற சட்ட ஏற்பாடு அமையப்பெறுவது வரவேற்புக்குரியதாகும். எம்மைப் பொறுத்தவரை அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50 வீதிமாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.
மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் பாதுகாக்கப்படுவதற்கும், மத்திய அரசாங்கத்துடன், மாகாணசபைகள் எவ்வாறு தேவையான அதிகாரங்களை பகிர்ந்து கொள்வது என்பதைக் கையாளவும், மேல்சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் அரசியல் தீர்வுக்கான எமது பரிந்துரையில் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
அவ்வாறு அமையப்பெறும் மேல்சபையில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் 50க்கு 50ஆக இருப்பதும் அவசியமாகும். இல்லாவிட்டால், நாடாளுமன்றத்தில் இருப்பதைப்போல், மேல்சபையிலும் சிறுபான்மையினரின்; பிரதிநிதித்துவம் பலமான பங்களிப்பைச் செய்யமுடியாது போகும் என்பதையும் நாம் குறிப்பிட்டிருக்கின்றோம்.
மாகாணசபை முறைமையானது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுமாக இருந்தால், அதைக் கட்டங்கட்டமாக அரசியல் தீர்வு நோக்கி நகர்த்த முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதை வரவேற்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
13ஆவது திருத்தச் சட்டம் ஏற்கனவே எமது நாட்டின் சட்ட திருத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. பெரும்பான்மைச் சிங்கள மக்கள் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆகையால் அதன் மீது அவர்களுக்கு தெளிவும், நம்பிக்கையும் இருக்கின்றது. முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கோ, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை என்பதாகும்.
மாகாணசபை முறைமையில் நாம் சுட்டிக்காட்ட முற்படுவது என்னவென்றால், மாகாணத்திற்குள் இருக்கும் உள்ளுராட்சி மன்றங்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் வைத்திருப்பதானது, அந்த மாகாண மக்களின் உணர்வுகளை மலினப்படுத்துவதாகும். உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கே இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், மத்திக்கும், மாகாணத்திற்குமான இடைவெளியைப் பயன்படுத்திக்கொள்ளும் சில அதிகாரிகள் பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலைமையும் காட்டிக்கொள்வதுபோல் செயற்படுவார்கள். இரட்டை வழித் தடத்தில் பயணம் செய்யும் உள்ளுராட்சி மன்றங்களினால் மக்களுக்கு பிரயோசனம் இருக்காது.
எனவே மாகாணசபைகள் தொடர்பான திருத்த வரைபில், தேர்தல் நடத்தும் முறைமை, அதில் பெண்களுக்கு 30 வீதப் பிரதிநிதித்துவம், என்பவற்றோடு, உள்ளுராட்சி மன்றங்களை மாகாணசபைகள் கட்டுப்படுத்தும் திட்டத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

Related posts:

வன இலாக்காவால் அபகரிக்கப்பட்டுள்ள மன்னார், குஞ்சுக்குளம் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - செயலாளர் ந...
உண்ணாவிரதமிருக்கும் தமிழ்க் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் விரைவாக நிறைவேற்ற வேண்டும் - நாடாளுமன்றில...
கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் மின்சாரத்தை வீண்விரயம் செய்வதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்...