மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்கத் துணைபோனவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி பேச அருகதையற்றவர்கள் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Wednesday, September 19th, 2018

அன்று மலையக மக்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்;தில் அச்சட்டத்திற்கு சார்பாக கையுயர்த்திய வடக்கு மாகாண தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகளின் ஈனச் செயல்களும் இந்த பாவக் காரியத்தின் பின்னணியில் இருந்ததையிட்டு, வடக்கு மாகாண மக்களின் பிரதிநிதியாக இருக்கின்ற நான் வெட்கப்பட வேண்டியுள்ளது. அதே அரசியல்வாதிகளின் குடும்ப வாரிசுகள் தான் இன்று தமது சுயலாப அரசியலுக்காக போலி தமிழ்த் தேசியத்தை தீவிரமாக உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபைகள் மற்றும் இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் தொடர்பிலான சட்டமூலங்கள் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

கௌரவ சபாநாயகர் அவர்களே!

இன்றைய தினம் பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபைகள் மற்றும் இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் தொடர்பிலான சட்டமூலங்கள் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு எனது கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கியமை தொடர்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, இலங்கையில் மலைசார்ந்த பகுதிகளில் குடியிருத்தப்பட்ட எமது மலையக மக்கள,; அரசியல் ரீதியில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக இன்றும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மக்கள் அடைக்கலம் நாடி இங்கு வந்தவர்கள் அல்லர். இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்ற – அக்கால கட்டத்திலிருந்து இன்று வரையில் இந்த நாட்டுக்கு அந்நியச் செலாவணியில் பாரியதொரு பங்களிப்பினை வழங்கி வருகின்ற பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுத்துவதற்கென்றே அழைத்து வரப்பட்டவர்கள். இதனை நாங்கள் மறந்துவிடக் கூடாது.

எனவே, இந்த மக்களுக்கு உரிய நன்றிக் கடனை – அம் மக்களுக்கான நிம்மதியான – இந்த நாட்டின் ஏனைய மக்களுக்கு சமாந்திரமான அனைத்து உரிமைகளையும் வழங்குவதனால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய நன்றிக் கடனை செலுத்த வேண்டியது இந்த நாட்டின் பொறுப்பாகும் – கடமையுமாகும். இதில் மறுபேச்சுக்கு இடமில்லை என்பதை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

1931ஆம் ஆண்டின் டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், இம் மக்களும் இலங்கை பிரஜைகளாகவே கருதப்பட்டனர். எனினும், தொழில் ரீதியாக இம் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டே வந்திருந்தனர்.

பின்னர், 1944ல் சோல்பரி விசாரணைக் குழு பரிந்துரைத்திருந்த சீர்திருத்தங்கள் இம் மக்களைப் புறக்கணித்ததன் காரணமாக, 1949ல் தேர்தல் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டு, இம் மக்களது வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1949ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் இம் மக்கள் சார்ந்து 6 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. இவ்வாறு நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் எதுவுமே அம் மக்களுக்கு எவ்விதமான நிறைவினையும் தராத சட்டங்களாகவே இருக்கின்றன.

அன்று இம் மக்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்;தில் அச்சட்டத்திற்கு சார்பாக கையுயர்த்திய வடக்கு மாகாண தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகளின் ஈனச் செயல்களும் இந்த பாவக் காரியத்தின் பின்னணியில் இருந்ததையிட்டு, வடக்கு மாகாண மக்களின் பிரதிநிதியாக இருக்கின்ற நான் வெட்கப்பட வேண்டியுள்ளது. அதே அரசியல்வாதிகளின் குடும்ப வாரிசுகள்தான் இன்று தமது சுயலாப அரசியலுக்காக போலி தமிழ்த் தேசியத்தை தீவிரமாக உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மலையக மக்களுக்கு வாக்குரிமை இருப்பின் இந்த நாட்டில் தமிழ் பேசுகின்ற மக்களின் அரசியல் பிரதிநிதித்துவங்கள் அதிகமாகும், அதிகமாகின்ற நிலையில் அவர்களுக்கான உரிமைகள் தொடர்பில் கோரிக்கைகள் எழும், அவற்றை வழங்க வேண்டி வரும் என்றெல்லாம் சிந்தித்தே அன்று இந்த மக்களின் வாக்குரிமையானது பறிக்கப்பட்டது. இதற்கு சார்பாக வடக்கின் அரசியல்வாதிகள் அன்;று தங்களது சுயலாப வசதிகளுக்காக சோரம் போனதுடன், மலையக மக்களது வரலாற்றில் துரோகிகளாகவே இன்றும் கணிக்கப்பட்டு வருகின்றார்கள். இதை அறிந்தும், அந்த அரசியல்வாதிகளின் குடும்ப வாரிசுகள் போலி தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டிருப்பதுதான் விந்தையாக இருக்கின்றது.
அந்தவகையில், தேசிய நீரோட்டத்தின் கரைகளில்கூட அம் மக்களை கண்டு கொள்ளச் செய்யாத செயற்பாடுகளே இந்த நாட்டில் முன்னnடுக்கப்பட்டு வந்துள்ளன. அதற்கு இந்த தமிழ் அரசியல்வாதிகளும் துணை போயிருக்கின்றனர்.

அரச வேலைவாய்ப்புகளில் புறக்கணிப்பு, காணி உரிமைகளில் புறக்கணிப்பு, வீட்டு உரிமைகளில் புறக்கணிப்பு, சுகாதார, கல்வி வசதிகளில் புறக்கணிப்பு, கடிதம் வந்து சேர்வதற்குக்கூட ஒரு முகவரியற்ற மக்களாகவே இம் மக்கள் இந்த நவீன யுகத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.
1975ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட காணிச் சீர்திருத்த சட்டமானது அந்நியர் மற்றும் இந்நாட்டவர் வசமிருந்த அனைத்து தோட்டங்களையும் தேசியமயமாக்குவதற்கு உறுதுணையாக இருந்தது. அதுவரைக்கால தனியார் நிர்வாகத்தின்மீது மிகுந்த வெறுப்பினை அடைந்திருந்த இம் மக்கள், இதனை வரவேற்றனர் என்றே கூற வேண்டும். இதன் மூலமாகவேணும் தங்களுக்கொரு முகவரி கிடைக்கும் என்ற நம்பிக்கை அம் மக்களிடத்தே இருந்தது. ஆனாலும், அந்த நம்பிக்கையிலும் மண்ணையள்ளிப் போடுகின்ற ஏற்பாடுகளே பின்னர் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டன.

பெருந்தோட்டத்துறை சார்ந்திருந்த காணிகள், அச்சமூகம் சார்ந்திராத மக்களுக்கும், அரச நிர்வாகக் கட்டுமானங்களுக்கும் என பகிரப்படல் ஆரம்பமானது. அந்த வகையில் பார்க்கப் போனால் 1956ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு வந்திருந்த பெருந்தோட்டத்துறை சார்ந்த காணிகளை துண்டாடும் செயற்பாடுகளுக்கு இந்த தேசியமயமாக்கல் ஏற்பாடுகள் பெரிதும் துணை போயிருந்தன என்றே கூற வேண்டும்.
அந்த வகையில் 50 ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக காணிகள் வைத்திருந்தோரிடமிருந்து மேலதிகக் காணிகள் சுவீகரிக்க்பட்டதன் காரணமாக, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் தோற்றம் இடம்பெற ஆரம்பித்தது.

சுமார் 63 சத வீதமான காணிகளைக் கொண்டிருந்த அரச தரப்பு, அதற்கென நான்கு அரச நிறுவனங்களை உருவாக்கியது. 1976ஆம் ஆண்டு அரச பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை உருவாக்கம் பெற்றது. மேற்படி நிறுவனங்களினிடையே ஏற்பட்டிருந்த நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, அரசப் பெருந்தோட்டக் கூட்டுத்தானம் என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது.

பின்னர் 1992ஆண்டு தேயிலை, இறப்பர் பெருந்தோட்டக் காணிகள் தனியாருக்கு குத்தகை அப்படையில் வழங்குகின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில், அனைத்துப் பங்குகளும் 10 தனியார் நிறுவனங்களால் வாங்கப்பட்டு, 23 பிராந்திய நிர்வாகங்களின் பொறுப்பில் செயற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றது.

தனியாருக்கு பெருந்தோட்டத்துறை காணிகளை குத்தகைக்கு விடுகின்றபோது, காணி உரிமத்தில் பெருமளவிலான பங்கு அரசு சார்ந்திருக்குமெனக் கூறப்பட்டிருந்த போதிலும், காணி உரிமங்களில் தனியார் நிறுவனங்கள் 30 சத வீதத்தையும், அரசு 6 சத வீதத்தையும் கொண்டிருக்கின்ற நிலையில், ஏனையவை அனைத்தும் சிறு தோட்ட உரிமையாளர்கள் வசம் இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபக்கம் பார்க்கின்றபோது, 1976களில் பெருந்தோட்டத்துறை சார்ந்ததாக ஒதுக்கப்பட்டிருந்த 7,50,000 ஹெக்டயர் நிலத்தில் 2,13,920 ஹெக்டயர் நிலத்தில் தேயிலைப் பயிரிடப்பட்டிருந்த நிலையில், இன்று அதில் சுமார் 32, 000 ஹெக்டயர் காணி எவ்விதமான பயன்பாடுகளும் இன்றி, காடு மண்டிக் கிடப்பதாவும் தெரிய வருகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில், எமது மக்களது பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினைகளாக்கி நீடித்து வைத்திருப்பதிலேயே தங்களது அரசியல் தங்கியிருப்பதாக எண்ணுகின்ற சயலாப தமிழ் அரசியல் வாதிகளைப் போல், இந்த மலையக மக்களையும் அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்காமல் வைத்திருப்பதிலேயே தங்களுக்கான இலாபங்கள் தங்கியிருப்பதாக தற்போதைய பெருந்தோட்டத்துறை நிர்வாகங்கள் எண்ணி, செயற்பட்டு வருகின்றன என்றே கூற வேண்டும்.

இந்தக் கம்பனிகள் பெருந்தோட்டத்துறையினைப் பொறுப்பேற்றதன் பின்னர், இம் மக்களுக்கென வழங்கப்பட்டு வந்திருந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதுடன், நலன்புரித் தேவைகளுக்கென வழங்கப்பட்டு வந்திருந்த செலவுத் தொகையும் 25 சத வீதத்தால் குறைக்கப்பட்டதாகவும், அபிவிருத்திகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இன்று இம் மக்களின் பூதாகார பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஊதியப் பிரச்சினையானது, ஊதிய அதிகரிப்பிற்கு வழிவிடாத வகையில் கூட்டு ஒப்பந்தம் என்ற போர்வையில் முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அண்மையில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மலையக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கில், தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் இதர விடயங்களை ஆராய்ந்து பார்க்கின்றபோது, மலையக தொழிலான மக்களின் நாளாந்த ஊதியம் 1,108 ரூபாவாக இருத்தல் வேண்டும் என, பல்கலைக்கழக ஆய்வு மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், இந்த மலையகத் தொழிலாளர்கள் இந்த ஊதிய மட்டத்தினை எட்டுவார்களா? என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகவே தொடர்கின்றது. 1000 ரூபா வரையிலான ஊதிய உயர்வு கோரி இம் மக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தனர். அதற்கு இந்த மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அரசியல் தலைவர்களும் சார்பு நிலைகளைத் தெரிவித்திருந்தனர். இப்போது 750 ரூபா வரையில் நாளாந்த ஊதியம் வழங்குவது தொடர்பில் பேசப்படுகின்றது. ஒரு தரப்பு இவ்வாறு பேசுகின்ற நிலையில், இன்னொரு தரப்பு இதற்கும் சவால் விடுகின்றது. அதாவது, இந்த 750 ரூபாவும் கிடைக்காது என்ற வகையில் சவால் விடப்படுகின்றதாகவே அறிய முடிகின்றது.

இதற்கெல்லாம் காரணம் கூட்டு ஒப்பந்தமே எனக் கூறப்பட்டு, அதற்குரிய பல்வேறு விடயங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 1998ஆம் அஆ;டு மேற்கொள்ளப்பட்ட பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் மொத்த ஒரு நாள் ஊதியமாக 101 ரூபாவும், மேலதிக ஒரு கிலோ தேயிலைக் கொழுந்துக்கு 3 ரூபா 75 சதமும் என வழங்கப்பட்டு வந்தது. இறுதியாக 2016ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் மொத்த ஒரு நாள் ஊதியம் 730 ரூபாவும், ஒரு கிலோ மேலதிக தேயிலைக் கொழுந்துக்கு 25 ரூபாவும் என வழங்கப்பட்டது. இதன்படி பார்க்கின்றபோது 20 வருடங்களில் – அதாவது 1998 முதல் இன்று வரையில் இம் மக்களுக்கான ஊதியமானது 629 ரூபாவால் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

ஊதியத் தொகை இவ்வாறிருக்க, இந்த மக்களுக்கு வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களே வேலை வழங்கப்படும் நிலை தொடர்கின்றது. வேலைக்குச் சென்றாலும், தொழிலிடப் பகுதிகள் உரிய கவனிப்புகள் இன்றிய நிலையில், காடுகள் அடர்ந்து காணப்படுவதால், இம் மக்கள் பல்வேறு காட்டு விலங்கினங்களின் தாக்குதல்களுக்கு இலக்காகின்ற நிலைமைகள் ஏராளமாகும். குளவிக் கொட்டுதல் என்பது மலையகப் பகுதிகளைப் பொறுத்தவரையில் பாரியதொரு அனர்த்தமாகவே தொடர்கின்றது.

அடுத்ததாக, இம்மக்களின் வீட்டுப் பிரச்சினைகள் – காணி உறுதிப் பிரச்சினைகள் என்பன இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையே காணப்படுகின்றது. லயன் முறை வாழ்க்கையிலிருந்து இம் மக்களை மீட்டு, தனி வீட்டுத் திட்டம் கொண்டு வருவதில் அமரர் – தோழர் பெ. சந்திரசேகரன் அவர்கள் ஆற்றியப் பணியானது மிகவும் போற்றத்தக்கது. அந்த வகையில், 1994 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அன்னாரது முயற்சியினால் 20 ஆயிரம் தனி வீடுகள் அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்த இலக்கு முழுமைப் பெறாமல் சுமார் 6 ஆயிரம் தனி வீடுகளே அமைக்கப்பட்டன எனத் தெரிய வருகின்றது.

இந்த வீட்டுத் திட்டத்தின்போது, ஒரு வீட்டுக்கென 300,000 ரூபா கடன் வழங்கப்பட்டு, அக் கடனை 15 வருடங்களில் மீளச் செலுத்தப்பட வேண்டும் எனவும், அவ்வாறு செலுத்தப்பட்டவுடன் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படுமெனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், இன்று சுமார் 24 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் அம் மக்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை என்றே தெரிய வருகின்றது.
இதற்குப் பிற்பட்ட காலங்களில் 7 மற்றும் 15 பேர்ச்சுகளில் தனி வீடுகள் சில பரவலாக அமைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றுக்கான காணி உறுதிப் பத்திரங்களும் வழங்கப்படவில்லை என்றே தெரிய வருகின்றது.

பின்னர், இந்த அரசு ஆட்சிபீடம் ஏறியதன் பின்னர், 2015ஆம் ஆண்டில் 100 நாட்கள் வேலைத் திட்டத்திற்கு அமைவாக அமைக்கப்பட்ட 300 வீடுகளுக்கும், மீரியபெத்தை மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென அமைக்கப்பட்ட 75 வீடுகளுக்குமான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் காணப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர் ‘பசுமை பூமி’ காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

ஆக, இம் மக்களது பொருளாதாரம், குடியிருப்பு வசதிகளுக்கப்பால், ஏனைய அடிப்படை வசதிகள் தொடர்பிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக சுகாதார வசதிகள். மலையகத்தைச் சேர்ந்த சுமார் 45 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு சுகாதார வசதிகள் இல்லை எனத் தெரிய வருகின்றது. அதே நேரம் போசாக்கின்மை குறைபாடுகள் மிகவும் பாரியளவில் நிலவுகின்றன. 17 சத வீதமானோருக்கு இன்னமும் மின்சார வசதிகள் இல்லை. கல்வி நிலையில் பாதிப்புகள் என பல்வேறு அடிப்படை மட்டத்தினாலான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன.

எனவே, மலையக மக்களது வாழ்க்கையில் உண்மையான மறுமலர்ச்சியினை எற்படுத்துகின்ற வகையில் இந்த பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். அதனை சாத்தியமாக்கிக் கொள்வதற்கு மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் தலைவர்களும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், மலையகத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டிதன் தேவையும் இருக்கின்றது. இது தொடர்பிலும் அவதானம் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

குறிப்பாக, மலையக மக்கள் தோட்டம் என்கின்ற கட்டமைப்பை மீறி வெளியில் வர வேண்டிய அவசியம் உணர்த்ததப்பட்டு வருகின்றது. அதற்கான பணிகளை மேற்படி அதிகார சபை மேற்கொள்ளும் என நினைக்கின்றேன்.
அதேநேரம், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களைத் தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களது வாழ்க்கை நிலைகள் தொடர்பில் உரிய அவதானங்கள் செலத்தப்பட்டு வருவதாகத் தெரிய வரவில்லை. அண்மையில்கூட ஊவா மாகாணத்தில் மொனராகலை மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற பெருந் தோட்டத்துறை மக்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.

அதேபோன்று தென், சப்பிரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் வாழ்ந்து வருகின்ற பெருந்தோட்டத்துறை மக்களது பிரச்சினைகள் தொடர்பிலும் மிக அதிகமானளவு அவதானங்கள் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இங்கே வலியுறுத்துகின்றேன்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பெருந் தோட்டப் பகுதிகளிலிருந்து வந்து குடியேறிய மக்கள் பெருமளவில் இருக்கின்றனர். இந்த மக்களை நாம் வடக்கு மாகாண மக்களாகவே கருதுகின்றோம். அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் வாழுகின்ற அனைத்து மக்களும் அண்மைக்காலமாக பாரிய பாதிப்புகளை – பல்வேறு வழிகளில் எதிர்நோக்கியவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இவர்களை இந்த பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய கடமைப்பாடு எம்மையே சாரும். அதனை கூடிய விரைவில் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என்பதையும் தெரிவித்து, சந்தர்ப்பத்திற்கு மீண்டும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
நன்றி.


கடல் தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்...
மக்களின்தேவைகளை நிறை வேற்று வதற்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டோம்: சுய நலத்த...
விபத்துகளுக்கு உள்ளானவர்களுக்கு உதவும் பொது மக்களை ஊக்குவிக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு எவரும் தடையாக இருக்கக்கூடாது - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை விசாரணைகளுக்கு என்ன நடந்தது :  கண்கண்ட சாட்சியாக நானே இருக்கிறேன் – ந...