மலையகப் பகுதி மக்களின் பிரச்சினைகள் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களிடையே நிலவுகின்ற பிரச்சினைகளிலிருந்து முற்றாக வேறுபட்டவை – டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 9th, 2016

யுத்தம் காரணமாக நேரடிப் பாதிப்புக்கு உட்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களிடையே நிலவும் பிரச்சினைகளுக்கும், இந்த நாட்டின் ஏனைய மாகாணங்களில் வாழுகின்ற மக்களிடையே நிலவும் பிரச்சினைகளுக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளதைப் போன்று, எமது மலையகப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மக்களின் பிரச்சினைகள் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களிடையே நிலவுகின்ற பிரச்சினைகளிலிருந்து முற்றாகவே வேறுபட்டவை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் 2017ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு தொடர்பில் நடைபெற்ற கழநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து  தெரிவிக்கையில் –

‘20ம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்’ என எமது மலையக மக்கள் குறித்து திரு. மோகனதாஸ் அவர்கள் எழுதியிருந்தார். அந்த அளவுக்கு இந்த மக்களது வாழ்க்கை அமைந்திருக்கிறது. இதில் முன்னேற்றங்கள் காணப்பட வேணடியது அத்தியவசியமாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதாவது, தேசிய இன மற்றும் வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு உட்பட்டு, நிலமற்ற ஒரு சமூகமாக வாழும் இந்த மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு கௌரவ அமைச்சர் திகாம்பரம் அவர்கள் நிச்சயமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கிறேன்.

யுத்த நேரடிப் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ள வடக்கு – கிழக்கு மக்களுக்கு சில விஷேட திட்டங்களை இந்த அரசு வகுத்து, செயற்படுத்த வேண்டும் என நான் அடிக்கடிக் கோரி வருவதைப்போல், இந்த மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை – தேவைகளைத் தீர்ப்பதற்கும் சில விஷேட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியுள்ளதை இங்கு அவதானத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

பெருந்தோட்டத் துறையானது தோட்ட நிர்வாகங்களோடு தொடர்பான பிரச்சினைகளுடனேயே பிணைந்ததாகக் காணப்படுகின்றது. அரசியல் ரீதியான பிரச்சினைகள் ஒருபக்கம் இருக்கின்ற நிலையில், சமூக, பொருளாதார  ரீதியில் நாட்டின் ஏனைய பிரஜைகளைவிட மிகவும் குறைவான நிலையிலேயே இவர்கள் காணப்படுகின்றனர்.

தோட்டத் துரைமார் என்கின்ற ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலையில் இவர்களது வாழ்க்கை முறை சுழன்று வருவதால், இதிலிருந்து மீள அவர்களுக்கு துணை நிற்கக்கூடிய தேவை அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தலைவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

1972ம் ஆண்டில் பெருந்தோட்டங்களை அரசு கையேற்றிருந்த போதிலும், இந்த மக்களின் வாழ்க்கை நிலையும், இம் மக்களுக்கு எதிரான சுரண்டல்களும், இவர்களது துன்ப துயரங்களும் நீங்கிவிட்டதாகக் கூறுவதற்கில்லை. இதற்கு முன்னரும், இதற்குப் பின்னரும் அதே நிலைமையில்தான் இம் மக்கள் அரசியல், சமூக, பொருளாதார துறைகள் சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஆங்காங்கு சில முன்னேற்ற நிலைகள் அவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற வசதிகளைப் பொறுத்து ஏற்படுகின்ற போதிலும், விகிதாசார ரீதியல் அது போதுமானதாக இல்லை.

தோட்டத்துறை தவிர்ந்து இம் மக்களில் ஒரு தொகையினர் முறைசாரா தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளில் சிற்றூழியர்களாகவும், ஏனைய நிலைகளிலும் பலர் பணியாற்றுகின்றனர்.  வீட்டுப் பணியாளர்களாக பலர் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் பணியாற்றுகின்றனர். அந்த வகையில், தோட்டத் தொழிலாளர்களுக்கான மாத ஊதியம் குறைந்த பட்சம் 1000 ரூபாவாக உறுதிப்படுத்தப்படுத்தப்பட வேண்டியதுபோல், உள்நாட்டில் வீட்டுப் பணியாளர்களதும், கடைச் சிற்றூழியர்களதும் பணியானது தொழில் முறை அங்கீகாரத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் இந்த இடத்தில் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதே நேரம், தென் மாகாணம், சப்பிரகமுவ மாகாணம் போன்ற பகுதிகளில் வாழ்ந்து வரும் மலையக மக்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் இன்னும் மாறுபட்டவையாகவே உள்ளன. தமக்கான ஒரு நாடாளுமன்ற பிரதிநிதியைக் கூட பெற முடியாத நிலையில் பரந்தளவில் இவர்கள் வாழ்ந்து வரும் நிலையில், அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்படுகின்றவர்களாகவே இம் மக்கள் இருக்கின்றனர். இவர்களது சமூக, பொருளாதார மட்டமானது கிராம நிலையினையும்விட குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. அத்துடன், இன ரீதியிலான பாகுபாட்டுப் பிரச்சினைகளுக்கு மிக அதிகமான அளவில் இவர்கள் முகங்கொடுத்து வருவதாகவும் தெரிகின்றது.

எனவே, இந்த மக்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் திகாம்பரம் அவர்கள் கூடுதல் அவதானம் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அந்த வகையில், 25 ஆயிரம் வீடுகள் இம் மக்களுக்கென அமைக்கப்படவுள்ளதாக இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதனை விரைவாக முன்னெடுத்து அம்மக்களின் மிக முக்கியமானதொரு பிரச்சினைக்கு தீர்வு காணப்படலாம். எனினும், மலையகத்தைப் பொறுத்தவரையில் தனி வீடுகள் அமைக்கப்பட வேண்டுமெனில் சுமார் 3 இலட்சம் வீடுகளையாவது அமைக்க வேண்டிய நிலையே காணப்படுகின்றது. இதனையும் கருத்தில் கொண்டு அமைச்சர் அவர்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும்,

குறிப்பாக, இந்த வீட்டுத் திட்டங்களைப் பொறுத்த வரையில் அதற்கான காணிகள் பெறுவதில் பெரும் சவாலை எதிர்நோக்கக் கூடியதாக அமையலாம். எனவே, நிலைத்த அபிவிருத்தி மற்றும் அனர்த்த ஆபத்து மதிப்பீடுகளை மேற்கொண்டு அதற்கான காணிகளை இனங்காண்பதற்கும் கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

அடுத்ததாக, கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தொடர்பில் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

எமது நாட்டைப் பொறுத்த வரையில் கால்நடைகள் அதிகமாகக் காணப்படுகின்ற மாகாணமாக வடக்கு மாகாணம் காணப்படுகின்ற போதிலும், அங்குள்ள கால்நடைகளில் பல பாலுற்பத்திக்கு ஏதுவானவையாக இல்லாத நிலையில், அவற்றை இனங்கண்டு, பாலுற்பத்திக்கு ஏற்றவாறு அவற்றின் திறன்களை மேம்படுத்துவதற்கும், அப் பகுதிக்குப் பொருத்தமான கால்நடைகளை வரவழைத்துக் கொடுத்து, அத்துறையினை மேலும் வளர்த்தெடுப்பதற்கும் கௌரவ அமைச்சர் ஹரிசன் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்

தற்போது வடக்கில் பாலுற்பத்தித் துறையானது குறிப்பிடத்தக்க உற்பத்தியினை சந்தைப் படுத்துகின்ற நிலையில், அதனை நவீன வசதிகளுடன் கட்டியெழுப்புவதன் ஊடாகவும், அதனை மக்கள் மயப்படுத்தப்பட்ட பண்ணைகளாக உருவாக்குவதன் ஊடாகவும் அத்துறை சார்ந்த மக்கள் மேலும் தங்களது வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

அந்த வகையில், தற்போது கரவை மாடுகள் பத்து வீதம் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் திட்டத்தில் வடக்கு மாகாண மக்களையும் உள்வாங்கி அத் துறையை எமது பகுதியிலும் ஊக்குவிப்பதற்கு கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

அதே நேரம் எமது பகுதிகளில் போதிய அளவு மேய்ச்சல் தரைகளை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்கான காணிகளை அப்பகுதியில் இனங்காண முடியும். எனவே, இந்த மேய்ச்சல் தரைகளை உருவாக்கி அவற்றைப் பேணக்கூடிய வழிமுறைகளையும் தங்களது அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என்றும்,

அத்துடன், வேறு மாவட்டங்களிலிருந்து விலங்கினத் தீவனங்கள் அங்கு கொண்டு வரப்படும் நிலையில், அவற்றின் விலைகள் அதிகரிப்பு மற்றும் நிறை குறைவு போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே, யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் காணப்படுகின்ற வளங்களையும் அடிப்படையாகக் கொண்டு அங்கு விலங்கினத் தீவின உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகவுள்ளது. எனவே, இது தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைதீவு போன்ற மாவட்டங்களில் நெல் களஞ்சிய சாலைகள், நெல் உலர்த் தளங்கள் மற்றும் நெல் ஆலைகளை அமைப்பதன் ஊடாக அம் மக்கள் தங்களுக்குரிய அரிசியை நியாய விலைகளில் பெறுவதை உறுதி செய்ய முடியும்.

எனவே, அவற்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உதவுமாறும், மேலும், நெல் கொள்வனவின்போது அப்பகுதி மக்களின் அறுவடைகள் தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்துமாறும் கௌரவ அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

அடுத்து தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தொடர்பில் எனது சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

இன்றைய காலகட்டத்தைப் பொறுத்த வரையில் இணைய வசதி என்பது அனைத்து தரப்பினருக்கும் அத்தியவசியமான ஒன்றாகவே வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போது பாடசாலை மாணவர்கள் உட்பட உயர் கல்வித்துறை சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்பட்டும், மேலும் வழங்கப்படவும் உள்ள நிலையில், இணைய சேவை வழங்குநர்கள் அதிக இலபாத்தை ஈட்டும் நோக்குடனேயே அச் சேவையை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் அதற்கான வரிகளும் அதிகரிக்கப்படுகின்ற நிலையே இங்கு காணப்படுகின்றது. எனவே, இதனை குறைந்த விலையிலும், இலகுவாகவும் கல்வித்துறை சார்ந்தோர் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்,

அதே நேரம், தற்போது சில நகரங்களில் குறிப்பிட்ட சில  பொது இடங்கள் சார்ந்து இணைய வசதி (WIFI) வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், அது மிகவும் குறைந்த வேகத்தில் செயலாற்றுவதால், அதன் வேகத்தை அதிகரிப்பதற்கும், அச் சேவையை மேலும் பல பொது இடங்கள் இனங்காணப்பட்டு விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கௌரவ அமைச்சர் ஹரீன் பீரிஸ் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:


வடக்கில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கு அமைக்கப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலி...
வடக்கில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 820 கீழ்நிலைப் பணியாளர்கள் தொடர்பில...
மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்கத் துணைபோனவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி பேச அருகதையற்றவர்கள் - ந...