மலர்ந்தது தமிழர் ஆட்சி  என்றவர்களின் ஆட்சியில் ஊழலும், மோசடியுமே மலிந்து காணப்படுகின்றது – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, December 3rd, 2016

வடக்கு மாகாண விவசாய அமைச்சு மர நடுகைத் திட்டம் எனக் கூறி ஒவ்வொரு வருடமும் மழை காலங்களை இலக்காக்கி பல மில்லியன் ரூபாக்களை செலவிட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. உண்மையில், இந்தத் திட்டமானது எமது பகுதிகளினதோ, மக்களினதோ நலன் கருதி மேற்கொள்ளப்படுகின்ற திட்டமல்ல இது நிதி ஊழல் மோசடியை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற திட்டம் என்றும் தெரிய வருகிறது – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம்(03) 2017 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

2017ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் இன்றைய தினம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தொடர்பான சில விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

அந்த வகையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எமது நாட்டில் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வியே தற்போதைய நிலையில், பலரால் முன்வைக்கப்படுகின்ற கேள்வியாக இருக்கிறது.

2017ம் ஆண்டு  இத் தேர்தல் நத்தப்படக்கூடும் என்று கூறப்படுகின்ற நிலையில் இத் தேர்தல் நடைபெறுமா? அல்லது அடுத்த வருடத்திலும் நடைபெறாதா என்பது குறித்து கௌரவ அமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

மேற்படி உள்@ராட்சி மன்றத் தேர்தல் நடத்தாத நிலையில், மக்கள் பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், வடக்கு மாகாணம் உட்பட நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற அடிப்படை நிர்வாகக் கட்டமைப்பின் சீர்குழைவுகள் நாளாந்தம் அதிகரித்து வருவதையே காணக்கூடியதாக இருக்கிறது. அத்துடன் மக்களின் நாளாந்த அடிப்படைத் தேவைகள் பல புறக்கணிக்கப்பட்டும், சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுத்தப்பட்டும் வரும் நிலையே தொடர்கின்றது.

எனவே, இந்த உள்ளூராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை விரைவாகப் பூர்த்தி செய்து அதனை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,

அவ்வாறு அதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள மேலும் காலதாமதங்கள் ஏற்படுமானால், ஓர் இடைக்கால ஏற்பாடாகத் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அத் தேர்தலை நடத்தவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும்,

அல்லது, ஒரு விN~ட சட்டத்தை மேற்கொண்டு, ஒரு தற்காலிக ஏற்பாடாக – உள்@ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் வரையில் – கலைக்கப்பட்ட உள்@ராட்சி சபைகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியிருந்த உறுப்பினர்களை மீள நியமித்து ஓர் ஏற்பாட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் இந்தச் சபையில் அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

மேலும், வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பகுதிக்கும், யாழ் மாவட்டத்தில் மருதங்கேணிப் பகுதிக்கும், இரு பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஏற்கனவே கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்துக்குக் கொண்டு வந்திருந்தேன்.

அதேபோல் மேலும்;, யாழ் மாவட்டத்தில் தற்போது செயற்பட்டு வருகின்ற இரு பிரதேச சபைகளின் நிர்வாகக் கட்டமைப்பினை விரிவாக்க வேண்டிய தேவைகள் ஏற்பட்டுள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில், வலிகாமம் கிழக்கு – கோப்பாய் பிரதேச சபையானது 31 கிராம சேவையாளர்கள்; பிரிவுகளைக் கொண்டதும்;, 102 சதுர கிலோ மீற்றர் பரந்த நிலப் பரப்பைக் கொண்டதாகவும் இருக்கிறது. அதேபோல் சாவகச்சேரி பிரதேச சபையானது 49 கிராம சேவையாளர்கள் பிரிவுகளைக் கொண்டதும், 195.78 சதுர கிலோ மீற்றர் பரந்த நிலப் பரப்பைக் கொண்டதுமாகக் காணப்படுகிறது.

எனவே, இந்த இரு பிரதேச சபைகளினதும் நிர்வாகத்தை இலகுபடுத்தும் முகமாகவும், மக்களின் வசதி கருதியும், வலிகாமம் கிழக்கு – கோப்பாய் பிரதேச சபையை இரண்டாகப் பிரித்து அச்சுவேலி பிரதேச சபையை மேலதிகமாகவும், சாவகச்சேரி பிரதேச சபையை இரண்டாகப் பிரித்து, கொடிகாமம் பிரதேச சபையை மேலதிகமாகவும், உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்கின்றேன்.

அதே போன்று வடக்கு மாகாணத்தில் தற்போது மேலும் ஒரு முக்கிய தேவை எழுந்துள்ளது. அதாவது தற்போது அதி வளர்ச்சி கண்டுவரும் கிளிநொச்சி நகருக்கென ஒரு நகர சபை அமைக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

ஒரு பாரிய நகரமாகத் தற்போது முன்னேற்றம் கண்டுவரும் கிளிநொச்சி நகரத்தின் நிர்வாகம் இன்னும் கரைச்சி பிரதேச சபையின் கீழேயே இருந்து வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் 95 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ள நிலையில், அங்குள்ள மூன்று பிரதேச சபைகளில் இரண்டு பிரதேச செயலகங்களைக் உள்ளடக்கியதாகவும், 58 கிராம சேவையாளர்களைக் கொண்டதாகவும், மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பான 1,237.11 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 410.96 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டதாகவும், அதிக சனத்தொகையினைக் கொண்டதாகவும் கரைச்சி பிரதேச சபை காணப்படுகின்றது.

அதே நேரத்தில், பரந்த பிரதேசமான கண்டாவளைப் பிரதேச மக்களின் தேவைகளை இலகுபடுத்தவும் சபையின் நிர்வாகச் செயற்பாடுகளை சரிவரப் பேணவும்  கரச்சிப் பிரதேச சபையின் கீழ் காணப்படும் கண்டாவளைப் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியைத் தனியான ஒரு கண்டாவளைப் பிரதேச சபையாக உருவாக்குவதற்கும், கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னேற்றத்தை அவதானத்தில் கொண்டும், குறிப்பாக எமது மக்களின் நலன் கருதிய சேவைகளை மனதில் கொண்டும், அம் மாவட்டத்தில் தற்போது செயற்பட்டுவரும் கரைச்சி, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி ஆகிய பிரதேச சபைகளுக்கு மேலதிகமாக, கிளிநொச்சி நகரை மையப்படுத்தியதாக ஒரு நகரசபையை உருவாக்குவதற்கும் கௌரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம் வடக்கு மாகாண சபை குறித்தும் தற்போது எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கால அவகாசம் கருதி சில குற்றச்சாட்டுகள் குறித்து கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களது ஊழல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அந்த ஊழல்களை விசாரிப்பதற்கென முதலமைச்சர் ஒரு குழுவை நியமித்தார். இந்தக் குழு அமைக்கப்பட்டு தற்போதைக்கு பல நாட்கள் கடந்துள்ள நிலையிலும்  அந்த ஊழல்கள் பற்றி எந்தவொரு தகவல்களும் வெளியிடப்படாத நிலையே காணப்படுகின்றது.

இந்த விசாரணையின் அறிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் கோரி வருவதாகவும், ஆனால், அவை இதுவரையில் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படவில்லை எனவும் தெரிய வரும் நிலையில்,

நான்கு அமைச்சர்கள் தொடர்பாக மாத்திரமே ஊழல் விசாரணைகளை மேற்கொள்ள முதலமைச்சர் குழு அமைத்தாரே தவிர, முதலமைச்சர் வசமுள்ள அமைச்சுக்கள் தொடர்பிலான ஊழல்களை விசாரிப்பதற்காக குழு அமைக்கப்படவில்லை. இதனை மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியும் அதனை முதலமைச்சர் ஏற்காத நிலையே காணப்படுகின்றது.

வடக்கு மாகாண சபையில் கடந்த சுமார் மூன்று வருட கால வரலாற்றில் குறைந்த பட்சம் 20 நியதிச் சட்டங்களையாவது நிறைவேற்றியிருக்க வேண்டிய நிலையில், இதுவரையில் முன்பள்ளி, போக்குவரத்து மற்றும் சிறுவர் நன்னடத்தை தொடர்பிலான மூன்று நியதிச் சட்டங்கள் மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

பிரமாண அடிப்படையிலான மானிய நிதித் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ள பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய சுமார் 200 மில்லியன் ரூபா நிதியில் 8 மில்லியன் ரூபா நிதி உறுப்பினர்களது தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. மாகாண சபை உறுப்பினர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் மக்களது நிதியிலிருந்தல்ல. மேலதிக நிதிகளை ஒதுக்கி வழங்குவதுதான் சரியானது.

வடக்கு மாகாண சபையின் கீழான அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் யாவும் நிதி ஊழல் மோசடியை மாத்திரமே கருத்தில் கொண்டு மாகாண அமைச்சர்களது உறவினர்களுக்கும் தமது தரகர்களுக்கும் வழங்கப்பட்டு வருவதால், அந்த அபிவிருத்திப் பணிகளில் முறைகேடுகளும், தரமின்மையும் தாமதங்களும் ஏற்படுவதை அறியக்கூடியதாகவுள்ளது.

மாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவானது நியமன நடைமுறை விதிகளுக்கு மாறாக செயற்பட்டு, நியமனங்களை வழங்கிவரும் நிலை காணப்படுகின்றது. உரிய விளம்பரங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில் பல நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மாகாணப் போக்குவரத்துத்துறை சார்ந்து ஏற்கனவே 43 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் 175 நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மாகாணத்தின் வேலை வாய்ப்பில்லாதோரின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனினும், உரிய பரீட்சைகளில்கூட சித்தி பெறாதவர்களுக்கும் இவ்வாறு நியமனங்கள் வழங்கப்படும்போது முறைகேடுகள் இடம்பெறுவது மாத்திரமின்றி, அவ்வாறு நியமனங்களைப் பெறுகின்றவர்களால் மக்களுக்கான  உரிய பணிகள் ஒழுங்குற மேற்படக் கூடுமென எதிர்பார்க்க இயலாத நிலையே உருவாகும்.

மேலும், நெல்சிப் திட்டத்தில் ஏற்கனவே இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் மத்திய அரசு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில், மாகாண சபை அதனைக் கையிலெடுத்து, அதற்கென சுமார் 1.2 மில்லியன் ரூபாவினை இதுவரை செலவு செய்துள்ள போதும், அந்த விசாரணைகளின் முடிவுகள் இதுவரை எட்டப்படாமல் இழுபறி நிலையே தொடர்கின்றது.

இதன் பின்னணியைப் பார்க்கின்றபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தவிசாளர்களும், உறுப்பினர்களும் இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாலேயே இதனை விசாரிக்கும் பொறுப்பை ஒழுங்கு விதிமுறையையும் மீறி மாகாணசபை ஏற்றதாகவும், அதனை இழுத்தடித்து வருவதாகவும் தெரிய வருகிறது.

எனவே, இந்த விசாரணையை மத்திய அரசு பொறுப்பேற்று நடத்த முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், வடக்கு மாகாண விவசாய அமைச்சு மர நடுகைத் திட்டம் எனக் கூறி ஒவ்வொரு வருடமும் மழைக் காலங்களை இலக்காக்கி பல மில்லியன் ரூபாக்களை செலவிட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

உண்மையில் பார்க்கப் போனால், இந்தத் திட்டமானது எமது பகுதிகளினதோ, மக்களினதோ நலன் கருதி மேற்கொள்ளப்படுகின்ற திட்டமல்ல என்றும், நிதி ஊழல் மோசடியை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற திட்டம் என்றும் தெரிய வருகிறது.

உரிய வகையில் அமைக்கப்பட்ட நாற்று மேடைகளில் இருந்து மரக் கன்றுகளைப் பெறாமல், ஆங்காங்கே பொது இடங்களில் முளைத்த மரக் கன்றுகளைப் பிடுங்கி, தங்களது தரகர்கள் ஊடாகப் பொதி செய்ய வைத்து, பருவ காலம் பார்க்காமல் நடும் செயற்பாடுகளே இங்கு காணப்படுகின்றது.

இதற்கு ஒரு உதாரணம், அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மர நடுகைத் திட்டமாகும். சுமார் 3 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட இத் திட்டத்தின் மூலமாக நடப்பட்ட மரக் கன்றுகள் அனைத்தும் அடுத்து வந்த மழையினால் அடித்துச் செல்லப்பட்டன.

‘மலர்ந்தது தமிழர் ஆட்சி’ எனக் கூறிக் கொண்டு, வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்கு வந்த இவர்கள் தொடர்ந்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றார்களே தவிர, எமது மக்களின் தேவைகள் ஒருபோதும் அக்கறை செலுத்துவதாக இல்லை.

மாகாண சபைக்காக மத்திய அரசு ஒதுக்கிற நிதி பயன்படுத்தப்படாமல் திரும்கின்றதாகத் தெரிய வருகின்றது. மாகாண சபையினுடைய அரசியற் தலைமைகளினது வினைத்திறனற்ற, அக்கறையற்ற தன்மை காரணமாக இவ்நிதியினைச் செலவழிக்காது திரும்பித் திறைசேரிக்குப் போவதாகச் சொல்லப்படுகின்றது. அதேநேரத்தில், எஞ்சிய நிதியை வைப்பில் வைத்து அடுத்த வருடம் செலவழிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதில் வெளிப்படைத் தன்மையில்லை.

எனவே, இந்த விடயங்கள் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் தனது உடனடி அவதானங்களைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

அடுத்ததாக, மாநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தொடர்பில் எனது கருத்துக்களை இங்கு முன்வைப்பதானால், இந்த அமைச்சு, நகர அபிவிருத்திச் சபையின் ஊடாக உலக வங்கியின் நிதி உதிவியுடன் வடக்கில் – யாழ்நகர அபிவிருத்திப் பணியை முன்னெடுத்து வருகிறது. இது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். இந்தப் பணியை மிகவும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதில் கௌரவ அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் காட்டி வருகின்ற அக்கறைக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதே நேரம், பலத்த சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டமானது சூழல் ரீதியில் பாரிய பாதிப்புகளை உண்டுபண்ணும் என்ற கருத்துப் பரவலாக முன்வைக்கப்படுகின்ற நிலையில், இத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி அறிய விரும்புகின்றேன்.

குறிப்பாக, இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டால் அது களணி கங்கையில் வெள்ளப் பெருக்கு அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அண்மையில் களணி கங்கை பெருக்கெடுத்து கொழும்பு புறநகரப் பகுதி மக்களில் பெருந் தொகையானோர் பாதிக்கப்பட்ட நிலையை நாம் அனைவரும் அறிவோம்.

எனவே இது குறித்து கௌரவ அமைச்சர் அவர்கள் விளக்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அத்துடன், கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைப் பயிற்சிக்கான பாதைகள் கடந்த காலங்களில் அமைக்கப்பட்டு வந்தன. கொழும்பில் ஏற்கனவே அமைக்கப்படாதிருந்த இடங்களில் இந்தப் பாதை தற்போது அமைக்கப்பட்டு வந்தாலும் அது நத்தை வேகத்திலேயே நகர்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக, பம்பலப்பிட்டி கடற்கரையோரத் திட்டத்தை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம். இத் திட்டமானது பல மாதங்களாக இன்னும் இழுபட்டுக் கொண்டிருக்கிறது. இது போன்றே நாட்டில் ஏனைய இடங்களிலும் காணப்படுகின்றன.

அதே நேரம், நாட்டில் ஒரு அபிவிருத்திப் பணி மேற்கொள்ளப்படும்போது அதனை நிலைத்த அபிவிருத்தி என்ற வகையில், அனர்த்த ஆபத்து மதிப்பீடுகளின் அடிப்படையில் மேற்கொண்டால், பிற பாதிப்புகளையும், வீண் செலவுகளையும் தவிர்த்துக் கொள்ள முடியும். இதனைக் கருதாமல் இந்த நடைப் பயிற்சி பாதைகள் உட்பட பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சில வாரங்களிலேயே அவை வேறு அபிவிருத்தித் தேவைகளுக்காக தோண்டப்படுகின்ற நிலைமைகளையும் காணக்கூடியதாக இருக்கிறது.

எனவே, இந்த நிலையினைக் கருத்தில் கொண்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கும், மேற்படி நடைபாதை அமைப்புப் பணிகளை துரிதப்படுத்துவதற்கும், இந்த நடைப்பயிற்சி பாதை வசதிகள் இல்லாத வடக்கு – கிழக்கு மாகாணங்கள் அடங்களான ஏனைய மாவட்டங்களிலும் இதனை அமைப்பதற்கும் கௌரவ அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகின்றேன்.

அதே போன்று, வடக்கு மாகாணத்திலுள்ள கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தி கண்டுவரும் நிலையில் வவுனியா, மன்னார் போன்ற நகரங்களும் அபிவிருத்தி நிலையை எட்ட வேண்டும். இதற்கான திட்டங்களைக் கௌரவ அமைச்சர் அவர்கள் முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதுடன், அந்த வகையில், முல்லைத்தீவு மாவட்டம் அபிவிருத்தி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

ஆற்றலும், அக்கறையும் கொண்ட அமைச்சர் கௌரவ சம்பிக்க ரணவக்க அவர்கள் எனது கருத்துக்களையும் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அடுத்து, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு தொடர்பில் எனது கருத்துக்களை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், குடி நீருக்கான பற்றாக்குறை நிலவுவது தொடர்பில் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நன்கறிவார்கள் என்பதை நான் அறிவேன். எமது மக்களின் தேவைகள் தொடர்பில் உணர்வு பூர்வமாக அறிந்து, அவற்றை நிறைவேற்றுவதில் அவர் அதிக அக்கறையும், ஆற்றல்களையும் கொண்டு செயற்பட்டு வருகிறார்.

அந்த வகையில், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இந்தக் குடி நீருக்கான பற்றாக்குறை  இரணைமடு – யாழ்ப்பாணம் நீர்வழங்கல் திட்டம் பூர்த்தியாகும்போது ஓரளவு நீங்கும் என எதிர்பார்க்க முடியும். அது வரையில் இங்கு நிலவக் கூடிய குடி நீர்ப் பிரச்சினை தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானத்தைச் செலுத்தி, உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், யாழ் குடாநாடு உட்பட வடக்கில் நீர்வள மூலங்களை உரிய முறையில் இனங்காணவும், அவ்வாறு இனங்காணப்படுகின்ற இடங்களிலிருந்து குடி நீரைப் பெற்று, அவற்றை குடி நீருக்கான தட்டுப்பாடுகள் நிலவும் பகுதிகளுக்கு விநியோகிக்கக்கூடிய முறைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் முன்வர வேண்டும் எனவும்,

குறிப்பாக, பொருத்தமான இடங்களில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்கள், மழை நீர் சேகரிப்புத் திட்டம், யாழ்ப்பாண ஆற்றுத் திட்டம், 1,000 குளங்கள் புனரமைப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்,

அதே நேரம் நிலத்தடி நீர் மாசடைவதற்குரிய காரணிகள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றைத் தடுப்பதன் ஊடாகவும், அவை தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டக் கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாகவும் போதியளவு குடிநீரை வடக்கு மாகாணத்தில் பெற முடியும் என்பதால், இந்த அமைச்சின் மூலமாக அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடிந்தால் அது எமது மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பரந்தன், ஆணையிறவு, பாரதிபுரம், மலையாளபுரம், பூநகரி போன்ற பகுதிகளில் குடி நீருக்கான பற்றாக்குறை நிலவி வருகின்ற நிலையில், தற்போது சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும், முன்னெடுப்பதற்காக பரிந்துரைக்கப்பட்டும் உள்ள நிலையில் அவற்றைத் துரிதப்படுத்துவதற்கும், மேலும் போதிய திட்டங்களை முன்னெடுப்பதன் அவசியம் குறித்தும் நான் ஏற்கனவே கௌரவ அமைச்சர் அவர்களின் அவதானத்துக்குக் கொண்டு வந்திருக்கிறேன்.

அதே நேரம் கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் குடி நீருக்கான பற்றாக்குறையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

அந்த வகையில், கம்பஹா தம்மிட்ட கிராமத்தில் குடி நீரின்றி சுமார் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. இந்தக் கிராமத்திலிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மாக்கிலங்கமுவ சந்திக்கு நீர் வழங்கல் வடிகாலமைபுச் சபையின் மூலம் குழாய் மூலமாக நீர் வழங்கப்படுகின்ற நிலையிலேயே தம்மிட்ட கிராம மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

2003ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த பாலிந்தநுவர பகுதி மக்கள் மீளக் குடியேற்றப்பட்டுள்ள களுத்துறை மாவட்டத்திலுள்ள ரன்சிறிகம பகுதியில் குடி நீருக்கான கிணற்றில் கறள் காரணமாக அந்த மக்கள் பல வருட காலமாக குடிநீருக்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, அகலவத்த பகுதியில் சுமார் 50 ஆயிரம் மக்கள் குடி நீருக்கான பற்றாக்குறைக்கு ஆளாகியுள்ளனர்.

பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொல்லுன்ன மற்றும் படஹேன ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பொல்லுன்ன நீர் வழங்கல் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் அப் பகுதிகளைச் சேர்ந்த  சுமார் 110 குடும்பங்கள் குடி நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளன.

பேருவளை மர்சலின் ஜயகொடி சுனாமி கிராமத்தில் வசித்து வருகின்ற சுமார் 27 குடும்பங்கள் கடந்த 10 வருடமாக குடிநீர் வசதியின்றி அவதியடைந்து வருகின்றனர்.

நீர்கொழும்பை அண்மித்த கட்டான பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கென 2014ம் வருடம் டிசம்பர் மாதம் 4ம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாததால் அப்பகுதி மக்கள் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடளாவிய ரீதியில் குடி நீருக்கான பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், இவை தொடர்பில் உரிய அவதானமெடுத்து, அத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றேன்.

Related posts: