மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 25th, 2017

நாட்டு மக்கள் செலுத்துகின்ற முழு வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் உள்ளபோது, அரசு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகும். இதில் தவறு எங்கே நிகழுகின்றது? என்பதை ஆராய்ந்து, அதற்குரிய பரிகாரம் காணப்படாவிட்டால், நிலைமை மேலும் மிகவும் மோசமானதாகவே தொடரும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் ஏற்றுமதிகள், இறக்குமதிகள் , சேர் பெறுமதி வரி, உற்பத்திகள் வரி மற்றும் காணி சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதுதொடர்பில் அவரது உரையின் முழு வடிவும் வருமாறு –

எமது நாட்டைப் பொறுத்தவரையில், பல்வேறு முறைமைகளில் சுமார் 26 வரிகளை அரசு விதித்து வருகின்ற நிலையில், இவ் வரிகள் செலுத்தப்பட வேண்டிய தரப்பினர் எவராயினும், இதன் அடிப்படை சுமை பொது மக்களின் மீதே சுமத்தப்படுகிறது.

ஒழுக்கப் பண்பாடுகளுடன்கூடிய ஒரு சமூகத்தில் வாழ்ந்து வருகின்றவர்கள்,  அவர்கள் வாழுகின்ற நாட்டில் வரிகளைச் செலுத்துவதிலிருந்து விலகியிருக்க முடியாது. வரி என்பது அனைவரும் செலுத்தப்பட கடமைப்பட்ட ஒரு விடயமாகவே ஆக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஏனைய எவரும் செய்யாத, எனினும் அரசு செய்கின்ற சேவைகள் பலவற்றுக்காகவே இந்த வரியை பொது மக்கள் செலுத்துகின்றனர். இவ்வாறான சேவைகளுக்கென ஒவ்வொரு  நபர்களிடமிருந்தும் நேரடி விலைகளை அறவிடவும் இயலாது. எனவே, இந்த வரிகளை அறவிட்டுக் கொள்வதன் மூலம், ஒழுக்கப் பண்பாடுகளுடன்கூடிய சமூகத்தில் அனைத்து நபர்களும் வாழக்கூடிய வகையில், அதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்துவதற்கான பொதுப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் அபிவிருத்திகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், சட்டத்தையும், ஒழுங்கையும் உருவாக்குதல், அத்தியாவசிய சேவைகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு பணிகள் இதற்கு உட்படுகின்றன. இவை, பொதுவாக ஒரு சமூகத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுகின்ற சேவைகளாகும். அந்த வகையில், அனைத்து மக்களிடமும் ஒரு பொதுவான தொகையை அறவிடலானது வரி எனக் கொள்ளப்படுகின்றது. எனினும், இதன் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் ஒழுங்குற வழங்கப்படுகின்றனவா? என்பது தொடர்பில் நாம் தனியாக ஆராய்ந்து பார்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

உலகின் அபிவிருத்தியடைந்துள்ள நாடுகளைப் பொறுத்தவரையில் அனைத்து நபர்களும் வரி செலுத்துகின்றனர். என்றாலும், எமது நாட்டைப் பொறுத்த வரையில் வரி செலுத்துவதிலிருந்து தப்பித்துக் கொள்வதிலேயே பலரும் குறியாக இருந்துவரும் நிலையே உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அவதானத்துக்குரிய ஒரு விடயமாகும். அபிவிருத்தியடைந்துள்ள நாடுகளில் இவ்வாறு வரி செலுத்துவதிலிருந்து தப்பித்துக் கொள்வதென்பது இலகுவான விடயமல்ல. அந்தந்த நாடுகளில் வாழுகின்ற, ஒவ்வொரு நபரும் பெறுகின்ற, அனைத்து வருமானங்கள், அவர்களது சொத்துக்கள் என்பன அவர்களது பெயர் விலாசங்களுடன் கணினிமயப் படுத்தப்பட்டுள்ளதால், அந்த நபர்களால் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரித் தொகையும் அதிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், அந்த முறைமை எமது நாட்டில் இல்லை.

இவ்வாறான முறைமை இங்கு ஒழுங்குற செயற்படுத்தப்படுமானால், இந்த நாட்டில் வரிகளின் சுமையை சாதாரண மக்கள் மாத்திரம் சுமக்கின்ற நிலை ஏற்படாது என்பதை நான் இங்கு அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். எனினும், துரதிஸ்டவசமாக அந்த நிலையை நாம் எட்டவில்லை. இன்றும் கூட நபர்களைப் பார்த்து வரி அறவிடப்படுகின்ற ஒரு நிலையினைக் கொண்ட சூழலில்தான் நாம் வாழந்து வருகின்றோம். அந்த வகையில், நாட்டில் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்ற போதிலும், ஒரு சிறு தொகையினர் மாத்திரமே அதனைச் செலுத்துகின்ற நிலையையே காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறு செலுத்றுகின்ற சிறு தொகையினர்கூட அதிகளவில் வரி செலுத்துவது கிடையாது. அதே நேரம் அரசு பொருட்களின் மூலமான மறைமுக வரியையே அதிகமாக அறவிடுகின்றது. இந்த முறைமை இலகுவானது, ஆனால், அந்தளவுக்கு இது நியாயமான தொரு முறையாக இல்லை என்பதையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

இந்த நிலையில், அண்மைக் காலத்தில் பெறுமதி சேர் வரியினை அதிகரித்தமை மற்றும் பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான நாட்டைக் கட்டியெழுப்பும் வரி விதித்தமை போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி நாட்டில் பல்வேறு எதிர்ப்பு நிலைகள் தோற்றம் பெற்றன.

அரசைப் பொறுத்தமட்டில், வெளிநாடுகளிருந்து பெறப்பட்டுள்ள கடன் ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது. இது காலகாலமாக நீடித்துள்ள பிரச்சினையாகும். இந்தக் கடன்களை இந்த வரிகளின் மூலமே செலுத்தவும் வேண்டியுள்ளது. எனினும், மக்களிடமிருந்து அறவிடப்படுகின்ற முழுமையான வரிகளின் மூலமாகப் பெறப்படுகின்ற தொகையானது, அரசு பெற்றுள்ள வெளிநாட்டுக் கடன்களின் தவணைகளையும், வட்டியையும் செலுத்தக்கூடப் போதுமானதாக இல்லாத நிலையும் காணப்படுகின்றது. ஆனால், இந்தக் கடன்களைச் செலுத்தவதற்காக மாத்திரம் பொது மக்கள் வரி செலுத்தவில்லை என்பதையும் நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கான சேவைகள் அரசால் வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு நிலைமை மிக மோசமாக அமைந்திருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. அதாவது, மக்கள் செலுத்துகின்ற முழு வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் உள்ளபோது, அரசு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகும்.

இதில் தவறு எங்கே நிகழுகின்றது? என்பதை ஆராய்ந்து, அதற்குரிய பரிகாரம் காணப்படாவிட்டால், நிலைமை மேலும் மிகவும் மோசமானதாகவே தொடரும்

நாட்டின் முதலீட்டுச் சூழலின் குறைபாடுகளே அதிகரித்துச் செல்லும் வரிச் சுமைக்கு காரணம்

அரச கடன்களைச் செலுத்தவே இயலாதுள்ள நிலையில், மக்கள் செலுத்தகின்ற வரிகளுக்காக அந்த மக்களுக்குரிய சேவைகளையும் வழங்கவேண்டிய நிலையில், அரசு மேலும் கடன்களையே நாடுமானால் அது மேலும், மேலும் வரிச் சுமைகளையே எமது மக்கள்மீது சுமத்தும் என்பதில் ஐயமில்லை எனவே ஒழுங்கான – நிலையான நிதி முகாமைத்துவத்தினதும், எமது நாட்டுக்கு, தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கும் பொருந்தக்கூடிய தேசிய பொருளாதாரக் கொள்கையினதும் அவசியத்தையே இவை வலியுறுத்துகின்றன

வரி அதிகரிப்பு என்பது எமது நாட்டின் புறையோடிய பிரச்சினைக்கு ஒரு தற்காலிக நிவாரணமே அன்றி, நீடித்த, நிலைத்த தீர்வாக இது அமையாது. இதற்கு கொள்கை ரீதியிலான மறுசீரமைப்பே அவசியமாகிறது. இவ்வாறான கொள்கை மறுசீரமைப்பின் தேவை எமது நாட்டுக்கு இப்போதல்ல, 1984 – 1990 காலகட்டத்திலே அவசியமாகத் தேவைப்பட்டது. ஆனால் அது அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக எமது நாட்டில் ஏற்பட்ட மிகப் பாரியதொரு பிரச்சினை, முதலீடுகளில் முன்னேற்றம் காணப்படாமையாகும்.

கடந்த சுமார் 5 வருட காலங்களில் சுமார் 1500 டொலர் பில்லியன் முதலீடுகள் ஆசிய நாடுகள் நோக்கி  வந்துடைந்துள்ளதாகத் தெரிய வருகின்ற நிலையில், இதில் நூற்றுக்கு ஒரு வீதமாவது எமது நாட்டுக்குக் கிடைக்காமை இங்கு குறிப்பிடத்தக்கது. 5 வருடங்களையும் தாண்டி சுமார் 10 வருடங்களை எடுத்தக் கொண்டாலும், மேற்கூறிய வகையில் நூற்றுக்கு ஒரு வீதமான முதலீடுகள்கூட எமது நாட்டுக்குக் கிடைக்காத நிலையையே காணக்கூடியதாக இருக்கிறது. எமது நாட்டின் முதலீட்டுச் சூழலின் குறைபாடுகளே இதற்குக் காரணம் என்பதையும் இங்கு நான் குறிப்பிட விரும்பகின்றேன் உட்படுகின்றனர்

நாட்டில் உற்பத்திகளுக்கு வரி விதிப்பதற்கு முதல் உற்பத்தி முயற்சிகளைப் பாதிக்கின்ற காரணிகள் அகற்றப்பட வேண்டும்

இலங்கை முதலீட்டாளர்கள்கூட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள பின்வாங்கும் ஒரு நிலையில். வெளிநாட்டு முதலீட்டாளர் பற்றி மேலும் கூற வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கின்றேன். எனவே நாட்டில் உற்பத்திகளுக்கு வரி விதிப்பதற்கு முதல் உற்பத்தி முயற்சிகளைப் பாதிக்கின்ற காரணிகள் அகற்றப்பட வேண்டும்

இங்கே உற்பத்தி வரிகளைப் பற்றிப் பேசுகின்றோம். உண்மையில் பார்க்கப் போனால், உற்பத்திகள் அதிகரிக்கப்பட்டு, அதன் மூலம் அதிகரிக்கின்ற வருமானங்களின் அடிப்படையில் மக்களிடமிருந்து பெறப்படுகின்ற வரியை அதிகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கலாம். எனினும், அவ்வாறான ஒரு நிலை – அதாவது உற்பத்திகள் அதிகரிப்பினை காண முடிகின்ற நிலை இங்கு இருக்கின்றதா? அதுவும் இல்லை என்கின்ற நிலையில், அடிப்படை பொருளாதாரக் கட்டமைப்புகள் இல்லாத நிலையில் விதிக்கப்படுகின்ற – அதிகரிக்கப்படுகின்ற வரிகளால் அரசு எதிர்பார்க்கின்ற இலக்கை எட்டுவது சிரமமான காரியமாகும்.

உதாரணமாக, உருளைக்கிழங்கு எமது நாட்டில் அறுவடை செய்யப்படும் காலங்களில் அதன் இறக்குமதி வரியை அதிகமாக அதிகரித்தும், எமது உற்பத்திகளின் அளவு மற்றும் நுகர்வுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அதன் இறக்குமதியை மட்டுப்படுத்துமாறும் நான் பல தடவைகள் இங்கு வலியுறுத்தி வந்துள்ளேன்.  ஆனால், அந்தக் கோரிக்கைகூட ஒழுங்காக ஏற்று நடைமுறைப்படுத்தாத நிலையில், இன்று சந்தையில் உள்ளூர் உற்பத்தி உருளைக்கிழங்கின் விலை அதிகரித்தும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக் கிழங்கின் விலை மிகக் குறைந்தும் காணப்டுகின்றது. இந்த நிலையில், உள்ளூர் உற்பத்திகளை எபபடி அதிகரிக்க முடியும்? உற்பத்திகளுக்க வரி விதிப்பதற்கு முதல், உற்பத்தி முயற்சிகளைப் பாதிக்கின்ற காரணிகள் அகற்றப்பட வேண்டும்.

நிறுவனங்களைப் பதிவு செய்கின்ற வருடாந்தக் கட்டணம் அதிகரிப்பு காரணமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் ஊக்குவிக்கப்படுவதற்குப் பதிலாக முடக்கப்பட்டுள்ள ஒரு நிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம், நேரடி வரிகள் குறைக்கப்பட்டு, மறைமுக வரிகள் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், சாதாரண பொது மக்களே அதிகமான பாதிப்புகளுக்கு உட்படுகின்றனர்

நட்டின் அனைத்து நபர்களுக்கும் என பொதுவானதும் – சமமானதுமான ஒரு வரிக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும் 

நாட்டில் சுமார் 8.5 மில்லியன் வீதமான உழைப்பாளர்களில் சுமார் 1.5 மில்லியன் உழைப்பாளர்கள் அரச பணியாளர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கான ஊதியம் உட்பட்ட ஏனைய அனைத்து கொடுப்பனவுகளும் மக்களிடமிருந்து பெறப்படுகின்ற வரிப் பணத்திலிருந்தே செலுத்த வேண்டியுள்ளது. எனினும், இவர்களால் நாட்டுக்கு கிடைக்கின்ற பொருளாதார பங்களிப்புகள் குறித்து ஆராய்ந்துள்ளோமா? எ

எமது நாட்டினது பொருளாதார நிலை தொடர்பில் பல்வேறு கேள்விக்களே எஞ்சியிருக்கின்ற நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த முன்வர வேண்டும். அதற்கென ஒழுங்கானதும், நிலையானதும், நீடித்ததுமான நிதி முகாமைத்துவக் கொள்கையும், அதே வகையிலான தேசிய பொருளதாரக் கொள்கையும் வகுக்கப்பட்டு, உரிய முறையில் அது செயற்படுத்தப்பட வேண்டும் .

நாட்டை முன்னேற்றுவதற்கு நாட்டின் பிரஜைகளுக்கு வழியேற்படுத்திக் கொடுக்கும் வகையில், அவர்களது உற்பத்திகளைப் பெருக்குவதற்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களது உற்பத்திகளைப் பாதிக்கின்ற காரணிகள் மற்றும் வரிகள் அகற்றப்பட வேண்டும் .,

தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை மேற்கொள்ளத்தக்க வகையில் எமது நாட்டின் முதலீட்டுத் தளங்களின் சூழல் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும், நட்டின் அனைத்து நபர்களுக்கும் என பொதுவானதும் – சமமானதுமான ஒரு வரிக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும் .

உதாரணமாக, எஸ்ரோனியா நாட்டில் தனியார் வருமான வரி 22 வீதமாகவும், வர்த்தக வருமான வரி 22 வீதமாகவும் அறவிடப்படுகின்றது. இதன்படி, ஊதியம் பெறுகின்ற அனைவரும் தனியார் வருமான வரியையும், வர்த்தகங்களில் ஈடுபடுகின்றவர்கள் அனைவரும் வர்த்தக வருமான வரியையும் செலுத்துகின்றனர். என்பதையும் இங்கு சுட்டிக்காட்டி, விடைபெறுகின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! நாடாளுமன்றில்  செயல...
செய்யும் தவறுக்கு முன்னர் அதன் விளைவுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவ...
தமிழர் தேசத்தின் வளங்கள் தொடர்ந்து சுரண்டப்படுகின்றன நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி எடுத்துரைப்பு