மகேஸ்வரன் கொலை: நீதிமன்ற தீர்ப்பு அவமதிக்கப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
Friday, July 6th, 2018முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரானரும் திருமதி. விஜயகலாவின் கணவருமான தி. மகேஸ்வரன் அவர்களது படுகொலையானது ஏற்கனவே கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட கொலையாளிக்கு நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி கொலையுடன் எம்மைத் தொடர்புபடுத்தி மீண்டும் ஒரு புரளி கிளப்பப்பட்டுள்ளது.
மேற்படி கொலைக்கும் எமக்கும் எவ்விதமான தொரடர்புகளும் இல்லை என்பதை நீதிமன்ற விசாரணைகள் நிரூபித்துள்ளன. இந்த நிலையில் மீண்டும், மீண்டும் பொய்யான தகவல்களை வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான பிரேரணைகள், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
அடிக்கடி வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கின்ற மகிழ்ச்சியினைக்கூட இலங்கை மக்கள் கொண்டிருக்கவில்லை. எமது நாட்டின் நிலையற்ற பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் காரணமாகவே எமது மக்கள் மகிழ்ச்சியற்ற சமுதாயமாக மாறி வருகின்றனர்
உலக சனத் தொகையில் 99.7 சத வீதத்தினை உள்ளடக்கிய வகையில் 163 நாடுகளைக் கொண்டு உலக பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் வருடந்தோறும் ஒரு பட்டியலை வெளியிடுகின்றது. அதில் உலகில் அமைதியான நாடுகள் மற்றும் மகிழ்ச்சியான நாடுகள் தர வரிசைப் படுத்தப்பட்டிருக்கும்.
இதன்படி, இலங்கையானது அமைதியான நாடு என்ற வகையில் உலகளாவிய ரீதியில் 67வது இடத்தில் இருப்பதுடன், பாகிஸ்தான் 151வது இடத்தில் இருக்கின்றது.
அதே நேரம், உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியான நாடுகள் தர வரிசையில் இலங்கையானது 116வது இடத்திலும், பாகிஸ்தான் 75வது இடத்திலும் இருக்கின்றது.
அடிக்கடி வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கின்ற மகிழ்ச்சியினைக்கூட, அமைதி நிலை கொண்டுள்ள இலங்கை மக்கள் கொண்டிருக்கவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது என்றே கருத வேண்டியுள்ளது.
எமது நாட்டின் நிலையற்ற பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் காரணமாகவே இன்று எமது மக்கள் மகிழ்ச்சியற்ற சமுதாயமாக மாறி வருகின்றனர். நாட்டின் கடன் சுமையும், உற்பத்தியை மீறிய இறக்குமதிகளும் என நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சி நிலையினைக் கண்டு வருகின்றது.
ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் பொருளாதார கொள்கைகளையும் மாற்றிக் கொண்டிருக்கும் நிலைமை மாற்றப்பட்டு, நாட்டுக்குப் பொருத்தமான நிலையான பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட்டு, அதனையே நிலையானதாக முன்னெடுத்துச் செல்கின்ற நிலை இந்த நாட்டில் ஏற்படும் வரையில், இந்த நாட்டினால் முன்னேற்றம் காண முடியாது என்றே கூற வேண்டும்.
உற்பத்தித் திறன் வீழ்ச்சி நிலை கண்டுள்ள இந்த நாட்டுக்கு பொருத்தமான சந்தைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், இவை எதையும் செய்யாமல், எமது நாடு முன்னேறிவிடும் என ஆரூடம் கூறிக் கொண்டு அரசியல் நடத்துவதால் எவ்விதமான பயன்களும் இந்த நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ கிட்டப் போவதில்லை என்பதுடன், இந்த நாடு மிக விரைவில் மீள முடியாத வகையில் படு பாதாளத்திற்குள் தள்ளப்படும் என்ற விடயத்தை முன்கூட்டியே இங்கு பதிவு செய்து வைக்க எண்ணுகின்றேன்.
விளைவிக்கக் கூடிய பொருட்களை இறக்குமதி செய்வது தேசிய அவமானம் –
இந்த நாடு வரலாற்று ரீதியாகவே ஒரு விவசாய நாடாகவே இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் விவசாயத்தை சிதைக்க முற்பட்டனர் எனக் கூறப்பட்டு, இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான காலத்திலிருந்து இன்று வரையில் விவசாயத் துறை சார்ந்து பல்வேறு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தும், நாம் இன்றுகூட அரிசி முதற் கொண்டு, மரக்கறிகள் வரை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். இது ஒரு தேசிய அவமானமாக இல்லையா? எனக் கேட்க விரும்புகின்றேன்
இந்த வருடத்தின் முதல் காலாண்டின் ஏற்றுமதிகள் தொடர்பில் பார்க்கின்றபோது, விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியானது 5.6 வீதமான வீழ்ச்சியினைப் பதிவு செய்திருக்கின்றது. அதே நேரம் இதே காலாண்டுப் பகுதிக்குள் 15,560 மில்லியன் ரூபாவுக்கு மரக்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. கடந்த வருடம் ஜனவரி மாதம் முதற்கொண்டு நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் சுமார் 49,000 மில்லியன் ரூபாவுக்கு மரக்கறி வகைகள் இறக்குமதிஜீ செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இந்த நாட்டின் மரக்கறி செய்கையாளர்கள் தங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாமல், அவற்றை காட்டு யானைகளுக்கு போட்டும், பூசனிக்காய் தானங்களைக் கொடுத்தும் தங்களது பாதிப்புகளை வெளிக்காட்டி வருகின்ற நிலையில், அவர்களது வாழ்வாதாரங்களுக்கு உரிய வழிகளை எற்படுத்திக் கொடுக்காமல், மரக்கறி வகைகளைக்கூட நீங்கள் இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றீர்கள்.
இத்தகையதொரு நிலையில் இன்று எமது மக்கள் மிக அதிக விலை கொடுத்து மரக்;கறி வகைகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாய மக்களிடம் நேரடி சந்தைப்படுதல் வசதிகள் கிடையாது. உற்பத்திகளை கொண்டு செல்லக்கூடிய போக்குவரத்து வசதிகள், களஞ்சியப்படுத்தும் வசதிகள் கிடையாது. தங்களது உற்பத்திகள் தொடர்பிலான சந்தை விலை விபரங்கள் மற்றும் சந்தையின் உற்பத்திக் கேள்விகள் போன்றவற்றினை அறியக்கூடிய வாய்ப்புகள் அரிதாக இருப்பதால், இடைத்தரகர்களின் ஆதிக்கங்களே இதில் மேலோங்குகின்றன. அதே நேரம், மேற்படி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் அரசின் கண்காணிப்பு போதியளவு இல்லாதிருப்பதால் ஒரே பொருள் பல்வேறு விலைகள் விற்கப்படுகின்ற நிலைமைகள் ஏற்படுகின்றன. இவை போன்ற பல்வேறு காரணிகள் எமது விவசாயத் துறையின் பாதிப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
சந்தை வாய்ப்பில்லாமையால் நடுத்தெருவில் விவசாயிகள் –
எமது பகுதிகளைப் பொறுத்தவரையில், விவசாய உற்பத்திகளுக்கான சந்தைப்படுத்தல் வசதிகள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன. அதே நேரம், அவ்வப் பொருட்களின் இறக்குமதிகள் காரணமாக இருக்கின்ற ஓரளவு சந்தைவாய்ப்புகளும் பறித்தெடுக்கப்படுகின்றன
எமது பகுதிகளில் புகையிலைச் செய்கை மூலமான பொருளாதார ஈட்டல்களை குறிப்பிட்டளவு விவசாய மக்கள் பெற்றுக் கொள்கின்ற போதிலும், 2020ஆம் ஆண்டளவில் புகையிலை முற்றாகத் தடை செய்யப்படும் என்ற அரசாங்கத்தின் கொள்கை நிலை காரணமாக மேற்படி புகையிலைச் செய்கையை அத்துறை சார்ந்த விவசாய மக்கள் கைவிட வேண்டி வரும். இந்நிலையில், இதற்கான மாற்றுப் பயிரினை அறிமுகப்படுத்தி, அதனை ஊக்குவிக்குமாறு உங்களிடம் கேட்டால், மிளகாய், வெங்காயம், கற்றாளை என்பன மாற்றுப் பயிர்களாக செய்கை பண்ண முடியும் எனக் கூறுகின்றீர்கள்.
கற்றாளை செய்கை பண்ணினால், அவற்றை கொள்வனவு செய்யக்கூடிய ஏற்பாடுகள் உங்களிடம் இருக்கின்றனவா? எனக் கேட்க விரும்புகின்றேன்.
இல்லை, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு உற்பத்தி செய்தால் அவற்றிற்கான சந்தை வாய்ப்புகள் உங்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமா? மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றின் இறக்குமதிகளை உள்ளூர் அறுவடைக்காலங்களின்போதும், அதற்குப் பிந்திய – அதாவது உள்ளூர் உற்பத்திகளை விற்றுத் தீர்க்கும் வரையிலான காலப்பகுதியிலும் முற்றாகத் தடை செய்ய முடியுமா? எனக் கேட்க விரும்புகின்றேன்.
முடியாது! இப்போதுகூட உருளைக்கிழங்கு செய்கையாளர்கள் தங்களது உற்பத்திகளுக்கு நியாயமான விலைகளைக் கோரி வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். பூசனி செய்கையாளர்கள் தங்களது அறுவடைகளை வீதிகளிலே குவித்து இலவசமாக அள்ளிச் செல்ல வழிவிட்டு, அழுது கொண்டிருக்கின்றனர். மரக்கறி செய்கையாளர்கள் காட்டு யானைகளுக்கு தங்களது அறுவடைகளைப் போட்டுவிட்டு, பட்டினி கிடக்கின்றனர்.
ஆக, இப்போது இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற விளைப் பொருட்களே உரிய சந்தைவாய்ப்பகளோ இன்றி, நியாயமான விலையோ கிடைக்காத நிலையில், மேலும் மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை உற்பத்தி செய்து எமது விவசாய மக்கள் நடுத் தெருவில்தான் நிற்க வேண்டி வரும் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
எனவே, உணவுப் பொருட்கள் தொடர்பில் இந்த அரசோ, வேறு எந்த அரசோ மிகவும் அவதானமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையே இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
மகேஸ்வரன் கொலை: நீதிமன்ற தீர்ப்பு அவமதிக்கப்படுகின்றது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரானரும் திருமதி. விஜயகலாவின் கணவருமான தி. மகேஸ்வரன் அவர்களது படுகொலையானது ஏற்கனவே கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட கொலையாளிக்கு நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி கொலையுடன் எம்மைத் தொடர்புபடுத்தி மீண்டும் ஒரு புரளி கிளப்பப்பட்டுள்ளது.
மேற்படி கொலைக்கும் எமக்கும் எவ்விதமான தொரடர்புகளும் இல்லை என்பதை நீதிமன்ற விசாரணைகள் நிரூபித்துள்ளன. இந்த நிலையில் மீண்டும், மீண்டும் பொய்யான தகவல்களை வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரச காலத்தில் மகேஸ்வரனின் கொலை தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டவர்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் ஏன் அவர்கள் மேல்நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் செல்லவில்லையெனக் கேட்க விரும்புகின்றேன்.
அல்லது இவர் பங்கெடுக்கும் ஆட்சியில் கௌரவ ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் கலந்துரையாடி ஒரு ஆணைக்குழுவை ஏன் அமைக்க முடியாது? அவ்வாறு ஒரு ஆணைக்குழுவை அமைத்து காலஞ்சென்ற மகேஸ்வரன் அவர்களது சகோதரர்களை அழைத்து விசாரித்தால் உண்மைகள் அம்பலத்திற்கு வரும் என்பதையும் இச்சபையில் தெரிவிக்க விரும்புகின்றேன்.
இருப்பினும் அத்தகைய சட்ட நடவடிக்கைகளுக்குச் சென்றால் உண்மை அம்பலமாகிடும் எனக் கருதியே இவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்குச் செல்லாமல் பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றார். மேற்படி கொலையினை யார் செய்தார்கள் என்பது இந்த நாட்டுக்கே வெட்டவெளிச்சமாகும்.
இந்த நிலையில் மேற்படி கொலையினை செய்தவர்கள் ஒரு புறமிருக்க, அதனது பழியினை எம்மீது போடுவதை குறிப்பட்ட தரப்பினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட கொலையை செய்தவர்கள் கையும், மெய்யுமாகப் பிடிப்பட்டு, தண்டனை அனுபவித்து வருகின்றார். அவர்கள்தான் இக் கெலையை செய்தனர் என ஏற்றுக் கொண்டால் தங்களது அரசியலுக்கும், வர்த்கத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுமென அஞ்சியே இவர்கள் அதனை மூடி மறைத்துவிடலாம் என எண்ணுகின்றார்.
உண்மையை ஒருபோதும் மூடி மறைத்துவிட முடியாது. மறைந்த மகேஸ்வரன் அவர்களது சகோதரர்களைக் கேட்டால் உண்மை என்வென்பது அம்பலத்திற்கு வரும். இதையே இந்தச் சபையில் நான் மீண்டும், மீண்டும் கூறிவைக்க விரும்புவதுடன் இவ்விடயம் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும் தயாராகி வருகின்றேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|