“பேசுவது தமிழ் தேசியம் செய்வது கஞ்சா வியாபாராம்” – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, February 5th, 2019

நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, இத்தகைய போதைப் பொருள் கடத்தல்கள், விற்பனைகள் என்பன எமது பகுதிகளில் இருக்கவில்லை. இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எப்போது ஆளுந்தரப்புடன் இணைந்து அரசியல் நடத்தத் தொடங்கினார்களோ, அன்று முதலே இத்தகைய போதைப் பொருள் கடத்தல்களும், கேரள கஞ்சா கடத்தல்களும், வாள்வெட்டுச் சம்பவங்களும், சமூக அவலங்களும் எமது பகுதிகளில் அதிகரித்துள்ளன என்பதை அங்கு வாழுகின்ற எமது மக்கள் அறிவார்கள்என ஈழ மக்கள் ஜநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற ஊழல்கள் மோசடிகள் தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –


எமது நாட்டில் இன்று ஊழல் மோசடிகள் என்பது ஓர் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயமாக மாறியுள்ளது. இவ் ஊழல்களை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அரசியல் நோக்கங்களுக்காக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டும், அதன்பின்னர் அவைகளில் பல விசாரிக்கப்படாமலும் நிரூபிக்கப்படாமலும் கூட இருக்கின்றன.
எனக்கு எதிராகக் கூட கௌரவ சுமந்திரன் அவர்கள் பிரதமர் காரியாலயத்தில் செயற்பட்ட ஊழல் மோசடிப்பிரிவில் 2015 ஆம் ஆண்டு முறைப்பாடு செய்து ஊடகங்களை அழைத்து அரசியல் வியாபாரம் செய்தார். ஆனால் இதுவரை அவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டனவா?
படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன்கோவில்” பேசுவது தமிழ் தேசியம் செய்வது கஞ்சா வியாபாரம். சட்டத்தரணியாகச் செயற்படுவது கஞ்சாவிற்பனையாளர்களையும் பாலியல் குற்றவாழிகளையும் காப்பாற்றுவதற்காகவா அல்லது நீதியின் குரலாக செயற்படுவதற்காகவா? இவரது கட்சி சட்டத்தரணிகள் பாலியல் குற்றவாழிகளை கஞ்சா வியாபாரிகளை ஊழல் மோசடிகாரர்களை சமூக விரோதிகளை விடுவிப்பதிலேயே முன்னின்று செயற்படு வருகின்றனர்.
இன்றும்கூட ஏதோ கேரள கஞ்சாவுக்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினரொருவருக்கும் தொடர்பு இருப்பதாக ஏதோ ஒரு பொய்யினை அவர் இந்தச் சபையிலே கூறியிருக்கிறார்.
கேரள கஞ்சா கடத்தல் தொழில்களில் ஈடுபடுகின்ற சிலர் கிளிநொச்சி பொலிஸாரினால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரை விடுவி;த்துக் கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொலிஸ் உயரதிகாரி ஒருவருக்கு அழுத்தங் கொடுத்தார் என்ற செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்திருந்தன. அதைப் பற்றி நான் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கதைத்தபோது, உடனே எழுந்திருந்த அவர், வேறோர் கதையைக் கூறி, அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றார். இன்று, ஈ.பி.டி.பி கட்சிக்கும், கேரள கஞ்சாவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றார். ஆக, இவர் இந்த கேரள கஞ்சாவை கைவிட மாட்டார் போல் தெரிகின்றது.
கேரள கஞ்சாவைக் கடத்தித்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலையில் நாங்கள் இல்லை. எமது பகுதிகளில் போதைப் பொருள்; உட்பட இந்த கேரள கஞ்சா கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை அடியோடு நிறுத்த வேண்டும் என்பதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.
இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு கைது செய்யப்படுவோரைக்கூட விடுவிப்பதற்கும் இதே தமிழ்த் தேசியத் தரப்பினரே பொலிஸ் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் முன்நிற்கின்றனர் என்பதையும் எமது மக்கள் அறிவார்கள். எனவே, எமது மக்களுக்குத் தெரியும், போதைப் பொருள், கேரள கஞ்சா போன்றவற்றின் கடத்தல்கள் மற்றும் விற்பனைக்கு யார் துணைநிற்கின்றார்கள் என்பது. அதனால்தான் இவர்களது தமிழ்த் தேசியம் என்பது கேரள கஞ்சாவைப் போன்றது என எமது மக்கள் கதைத்து வருகின்றனர்.
(நாடாளுமன்றில் நடைபெற்ற பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், அரசு சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான விசாரணை செயலகத்தின் ஜனாதிபதி ஆணைக்கழுவின் விசாரணை அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்)

0000
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஊழல்கள் மோசடிகள் தொடர்பில் பிரேரணை கொண்டுவருவதற்கு அருகதை இருக்கிறதா –
நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால் ஊழல்கள் மோசடிகள் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். ஆனால் இது தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சிக்கு சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவருவதற்கு அருகதை இருக்கிறதா என நான் வினவ விரும்புகின்றேன்.
இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற பிணை முறி மோசடி ரூபா 11 ஆயிரம் மில்லியன் அதாவது 1,100 கோடிக்கும் மேற்பட்ட மோசடி தொடர்பாக எதிர்க் கட்சி தலைவராக இருந்துகொண்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனியாக இருந்துவிட்டு இன்று ஊழல் மோசடி தொடர்பாக ஒத்திவைப்பு பிரேரணை கொண்டுவருவது கேலிக்கூத்தாக உள்ளது. அதுமட்டுமல்ல அது தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை கூட நாடாளுமன்றத்தில் விவாதத்றிற்கு வரும் போது தமிழ் மொழியாக்கம் தரப்படவில்லை என்ற விடயத்தை முன்னிறுத்தி அதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூட விடாது மூடிமறைத்த பெருமை தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் கௌரவ சுமந்திரனையே சாரும்.
அதுமட்டுமல்ல மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக பிரதமர் ஒரு விசாரணைக் குழு அமைத்து அங்கு மோசடி நடைபெறவில்லை என்று விடயங்களை மூடி மறைத்து அறிக்கை வந்தபோது கூட தட்டிக் கேட்காமல் மௌனியாகவே செயற்பட்டீர்கள்.
யாரைக் காப்பாற்றுவதற்காக இவ்வாறு செயற்பட்டீர்கள்? ஜனநாயகத்தை காப்பாற்றுவதாக மார்தட்டிக் கொள்ளும் உங்களுக்கு பிணைமுறி மோசடி ஒரு ஜனநாயக விரோத செயல் என்று புரியவில்லையா?
அதுமட்டுமல்ல தங்களின் அதிகாரத்தின் கீழ் கடந்த ஐந்து வருடங்களாக செயற்பட்ட வடக்கு மாகாணசபையின் ஊழல்கள் மோசடிகள் நிரூபிக்கப்பட்டும் மோசடிக்காரர்களான உங்கள் மாகாணசபை அமைச்சர்களுக்கு எதிராக ஏதாவது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
முதலமைச்சரினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவே எத்தனையோ மோசடிகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்குமாறு பரிந்துரைகள் செய்திருந்தும் அந்த அமைச்சர்கள் அல்லது அதிகாரிகளுக்கு எதிராக உங்களது முதலமைச்சரினால் சட்ட நடவடிக்கைகள் ஏதாவது எடுக்கப்பட்டனவா? அங்கும் ஊழலுக்கு விலைபோனவர்களாகவே உங்கள் கட்சி செயற்பட்டிருக்கின்றது.
அரசியல் பலம் அல்லது அரசியல் தொடர்புகளை உற்றார் உறவினர்களுக்கு தகுதி அடிப்படையிலான முறைமை பின்பற்றப்படாது அரச தொழில்வாய்ப்புக்களை பெறுவதும் ஓர் ஊழல் செயற்பாடாகும்.
உங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகள் அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்தில் தொழில் செய்துவருவதாக பேசப்படுகின்றது.
அத்தொழிலை புரிவதற்கு இலங்கையில் வேறொருவரும் இல்லையா? அத்தொழிலுக்காக விளம்பரம் செய்யப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டு விண்ணப்பதாரர்களில் முதன்மை நிலையில் நின்றா உங்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகள் அவ் வேலையை பெற்றார்?
உங்கள் பிள்ளைகளுக்கு அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தில் வேலை எடுப்பதற்காகவா உங்களை பிரதிநிதிகளாக மக்கள் அனுப்பினார்கள்? இது ஊழல் செயற்பாடு என்று உங்களுக்கு புரியவில்லையா?
அண்மையில் பளைப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்தபோது பொலிஸ் மேலதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு அவரை விடுவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்டவர் நாடாளுமன்ற உறுப்பினரின் கார் சாரதியின் சகோதரர். அவர் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடன் பிடிபட்ட ஏனைய போதைப்பொருள் வியாபாரிகளும் இத்தலையீடு காரணமாக விடுவிக்கப்பட்டனர். அவர்கள் நிரபராதிகளாயின் நீதிமன்றத்தினூடாக அவர்களை விடுவித்திருக்க வேண்டும். இதுவும் ஓர் ஊழல் செயற்பாடு இல்லையா?
இன்று நாட்டையே, குறிப்பாக வடக்கு மாகாணத்தை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் போதைப்பொருள் வியாபாரிகளை உங்கள் தலையீட்டினால் விடுவித்துவிட்டு இங்கு ஊழலுக்கு எதிராக பிரேரணை கொண்டுவதற்கு உங்களுக்கு அருகதை உண்டா என்று சிந்தித்து பாருங்கள்?
“தனக்கொரு நியாயம் பிறருக்கொரு நியாயம்” என்பதுபோல் இலங்கை தமிழரசுக் கட்சியினராகிய நீங்கள் ஊழலுக்கு உறுதுணையாக இருந்துவிட்டு, பாரிய ஊழல்களைக் கூட எதிர்க் கட்சி தலைவர் பதவியை வைத்துக்கொண்டு பகிரங்கப்படுத்தும் துணிச்சலற்றவர்களாக இருந்துவிட்டு தற்போது இவ் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டுவருவது எந்த உள் நோக்கத்திற்காக என்று அறிய விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(நாடாளுமன்றில் நடைபெற்ற பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், அரசு சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான விசாரணை செயலகத்தின் ஜனாதிபதி ஆணைக்கழுவின் விசாரணை அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்)

Related posts:

தமிழ் மொழி மூலப் பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள் - நாடாளுமன்றில் ...
விவசாயத்துறை இன்னும் சில காலங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ...

எமது முயற்சியால் கொண்டுவரப்பட்ட கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானப் பணிகள் பூர்த்தி செய்யப்படாதிரு...
அரசு கூறும் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்கள் கிடைப்பதில்லை! நாடாளுமன்றில்  டக்ளஸ் தேவானந்தா தெரிவ...
இலங்கை போதைப் பொருள் கடத்தல் நாடாக மாற்றியிருக்கின்றதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!