புலம்பெயர் தேசங்களிலும் எமது நாட்டின் கலை கலாசார விழுமியங்கள் பேணப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

புலம் பெயர்ந்து எமது மக்கள் வாழ்கின்ற நாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயங்களின் ஊடாக எமது மக்களின் கலை, கலாசார விழுமியங்களைப் பேணக்கூடியதான வகையில் ஏற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம் என நான் இந்தச் சபையின் அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலங்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
இன்றைய தினம் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு எனது கருத்துக்களை இங்கு முன்வைக்கக் கிடைத்தமை தொடர்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அந்த வகையில், யாழப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அலுவலகம் ஒன்றினை ஏற்படுத்தி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முயற்சிகளை முன்னெடுத்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது வெளிநாட்டுக் கொள்கையினைப் பார்க்கின்றபோது, நாம் இந்தியாவுடன் கொண்டிருக்கின்ற நெருக்கத்தை, இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டுடன் கொண்டிருக்காத நிலையே காணப்படுகின்றது என்பதை இங்கு நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
அதாவது, எமது நாட்டினதும், எமது மக்களது பல்வேறு பிரச்சினைகளை நாம் மிகவும் இலகுவாகத் தீர்த்துக் கொள்ள வேண்டுமானால், அதற்காக நாம் தமிழ் நாட்டுடனான உறவையும் வலுப்படுத்திக் கொள்வது அவசியமானதாகும் என்பதை கௌரவ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அவர்களது அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
குறிப்பாக, தற்போது மிக அதிகமான அளவில் போதைப் பொருட்கள், கேரளக் கஞ்சா போன்றவை தமிழ் நாட்டின் ஊடாகவே நமது நாட்டுக்குக் கடத்தப்படுவதாகத் தெரிய வருகின்றது. ஆகவே, இந்த முயற்சிகளை ஒடுக்கக்கூடிய வகையிலான ஏற்பாடுகளைப் போதிய வகையில் முன்னெடுப்பதற்கும்,
இந்திய கடற்தொழிலாளர்களது எல்லைகள் தாண்டியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழில் நடவடிக்கைகளையும், எமது கடல் வளங்கள் சுரண்டப்படுவதையும் போதியளவில் கட்டுப்படுத்திக் கொள்வதற்கும்,
இலங்கைக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப, தகவல்தொழில் நுட்ப மென் பொருட்கள், மின்னியல் உபகரணங்கள், ஏனைய நுகர்வுப் பொருட்கள், மருந்து வகைகள் ஏனைய தொழில்சார் உபகரணங்களை மிகவும் மலிவான விலையில் இறக்குமதி செய்து கொள்வதற்கும்,
மற்றும் இதர பல அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், நாம் தமிழ் நாட்டுடனான நட்புறவை வளர்த்துக் கொள்வதே மிகவும் அத்தியாவசியமான விடயமாகும்.
அந்த வகையில் பார்க்கின்றபோது, அன்று தொட்டு இன்று வரை தமிழ் நாட்டு முதல்வர்களில் ஒருவர்கூட இலங்கைக்கான உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டதாக ஒரு வரலாறுகூட இல்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
அதே நேரம், எமது நாட்டுத் தலைவர்கள், மத வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழ் நாட்டிக்கு அடிக்கடி போய் வருகிறார்களே அன்றி, உத்தியோகபூர்வமான விஜயங்களைத் தமிழ்நாட்டுக்கு மேற்கொள்கின்ற நிலைமைகளும் காணப்படுவதில்லை.
எனவே, கௌரவ அமைச்சர் அவர்கள் இந்தக் கருத்தினைப் பரிசீலித்து, இலங்கைக்கான தமிழ் நாட்டுடனான நல்லுறவை வலுப்படுத்தக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என நான் கேட்டுக் கொள்வதுடன்,
அதற்கென தமிழ் நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதரகத்தைப் பலப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
அத்துடன், எமது பிரச்சினைகளை நாங்கள் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்க்கமான நிலையில் நான் தொடர்ந்தும் இருந்து வருகின்றவன் என்பதையும், வெளிநாடுகள் வேண்டுமானால் ஒரு மருத்துவிச்சியின் பங்கினை இந்த விடயத்தில் வகிக்க முடியும் என்பதையும் நான் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்ற அதே நேரம், தமிழ் நாட்டுடனான நட்புறவை வலுப்படுத்திக் கொள்வதானது, எமது நாட்டுக்கும், எமது நாட்டு மக்களுக்கும் பல்வேறு நன்மையான வாயப்புகளை ஏற்படுத்தும் என்ற விடயத்தையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.
இன்று எமது நாட்டிலிருந்து, எமது நாட்டின் பல்வேறு துறைகள் சார்ந்த வளர்ச்சிகளிலும் பங்களிக்க வேண்டிய எமது மக்களில் இலட்சக் கணக்கானோர், கடந்த கால யுத்தம், இன ரீதியிலான மோதல்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் காரணமாக இன்று புலம் பெயர்ந்து வெளிநாடுகளிலேயே வாழ்ந்து வருகின்ற நிலையில்,
புலம் பெயர்ந்த எமது மக்களுடனான உறவுகளை நம்பிக்கையுடன் வலுவாகக் கட்டியெழுப்பி, அதனூடாக எமது மக்களுக்கும், எமது நாட்டுக்கும் பல்வேறு பயன்மிக்க விடயங்களை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
மேற்படி புலம்பெயர் எமது உறவுகள் தொடர்பில் நான் தொடர்ந்தும் பல கோரிக்கைகளை இங்கு முன்வைத்து வந்திருக்கிறேன். அந்த வகையில், இரட்டைக் குடியுரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது.
இது, இன்று ஓரளவுக்குச் சாத்தியமாக்கப்பட்டு வருகின்றது என எண்ணுகிறேன். அது தொடர்பில் கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அடுத்தது, நமது நாட்டிலிருந்து புலம் பெயரும் நிலையில், எமது நாட்டில் வாக்களிக்கும் உரிமைக்குரிய வயதினைக் கொண்டிருந்தோருக்கு, அந்தந்த நாடுகளிலிருந்தே எமது நாட்டில் நடைபெறுகின்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விடயமாகும்.
குறிப்பாக, எமது நாட்டைச் சேர்ந்த மூவின மக்கள், மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளிலும் பரந்தளவில் வாழ்ந்து வருகின்ற நிலையில், அவர்களுக்கு வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போது நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் எற்பட்டுள்ள காலத்தில் இந்த ஏற்பாட்டை வெகு இலகுவாக மேற்கொள்ள முடியும் என்றே நான் கருதுகின்றேன்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள் இலங்கையில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்பதை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக அத் திணைக்களம் அறிவித்துள்ளதாகத் தெரிய வந்துள்ள நிலையில்,
தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், இதற்கென சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்படும் நிலையில்,
இதனை வகுப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான தீர்மானங்களை விரைவாக எடுப்பதன் மூலமாக இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியுமென நான் எண்ணுகின்றேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
புலம் பெயர்ந்து எமது மக்கள் வாழ்கின்ற நாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயங்களின் ஊடாக எமது மக்களின் கலை, கலாசார விழுமியங்களைப் பேணக்கூடியதான வகையில் ஏற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம் என நான் இந்தச் சபையின் அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.
அத்துடன், தேசிய நல்லிணக்கத்தை அந்த மக்களிடத்தேயும் கட்டியெழுப்பக் கூடியதான பல்வேறு நடைமுறைச் சாத்தியமான செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும்,
புலம் பெயர்ந்து வாழும் எமது உறவுகளை வளவாளர்களாகவும், முதலீட்டாளர்களாகவும் பயன்படுத்தி, எமது நாட்டில் பல முதலீடுகளில் ஈடுபடக் கூடிய வகையிலான நம்பிக்கையை வலுப்படுத்துகின்ற ஏற்பாடுகளும் தேவை என்பதையும் இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
அத்துடன், எமது புலம்பெயர்ந்த உறவுகள் எமது நாட்டுக்கு அடிக்கடி வந்து போகக்கூடிய வகையிலான எற்பாடுகளை முன்னெடுப்பதன் ஊடாக, எமது நாட்டுக்கான பொருளாதாரத்தை மேலும் அதிகரித்துக் கொள்ள இயலும் என்பதுடன், புலம்பெயர் உறவுகளுக்கும் எமது கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடனான பிணைப்புகள் வலுப்பெறும் என்ற விடயத்தையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
எமது நாட்டின் வெளிநாட்டு இராஜதந்திரப் பணியினைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களின் பங்களிப்பு என்பது இல்லாத நிலையே காணப்படுகின்றது என்பதை அவதானத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, இதனையும் கருத்தில் எடுத்து, அதற்கான ஏற்பாடுகள் குறித்து கௌரவ அமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதுடன்,
இறுதியாக, யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எமது ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்களின் ஞாபகார்த்தமாக அங்கு ஒரு நீச்சல் தடாகத்தை அமைத்து, அதனை எமது மக்களது பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ள அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுக்கு மீண்டும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்து,
எமது இராஜதந்திரச் சேவையில் அளப்பரிய பங்களிப்புகளை ஆற்றி வருகின்ற அவர், சர்வதேச அரங்குகளிலும் தனது இராஜதந்திர ஆளுமையை நிலைநாட்டி வருகின்றார். அவர் மேலும் பல சிகரங்களை எட்ட வேண்டும். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அடுத்ததாக வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சு தொடர்பான எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
எமது நாட்டைப் பொறுத்த வரையில், தங்களது குடும்பங்களை வறுமை நிலையிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகக் குறிப்பாக, பெண்கள் உழைக்க வேண்டிய நிலையில், அவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்ற ஒரு துறையாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையே காணப்படுகின்றது.
அதே நேரம், ஏனைய வசதியுள்ள குடும்பங்களைப் போல் தாங்களும் வாழ வேண்டும் என்ற நோக்கில் குறிப்பாக, நடுத்தர வகுப்பினைச் சேர்ந்த பெண்களும் இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புத் துறையை நாடுகின்றனர்.
இவ்வாறு செல்கின்றவர்கள் எவ்வித தொழில் முன் அனுபவங்களோ, தொழில் திறன்களோ இன்றிய நிலையில் வீட்டுப் பணிப் பெண்களாகச் செல்கின்றனர். குறிப்பாகச் சொல்லப்போனால், வீட்டுப் பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றனர் என்றும் கூறலாம்.
இந்த வணிகமானது, சட்டபூர்வ ரீதியிலும், சட்ட பூர்வமற்ற ரீதியிலும் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறு, பெண்கள் வீட்டுப் பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்ற நிலையில், எமது பகுதியிலிருந்து ஆண்களை சட்டபூர்வமற்ற வகையில் அவுஸ்திரேலியாவுக்குப் பணம் திரட்டும் நோக்கில் அனுப்பிவைத்து வியாபாரம் நடத்திய பெண்ணும் இங்கு இருக்கிறார்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
எமது நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வறுமையைப் போக்கக்கூடிய முறையானதும், நிலையானதுமான திட்டங்கள் வகுக்கப்படாத நிலையிலேயே இந்த வறுமையானது பலரைத் தொடர்ந்தும் ஆட்கொண்டு வருகிறது என்பதை இங்கு அவதானத்தில் கொண்டு வர விரும்புகின்றேன்.
உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்விக்கான வாய்ப்பு, சமூக அந்தஸ்து உள்ளடங்கலான வாழ்க்கைத் தேவைகளை இழந்த நிலையே வறுமை எனப்படுகின்றது.
இவ்வாறு, வறுமை நிலைக்கு உட்பட்டோர் நகரப்புறங்களிலும் பார்க்க, கிராமப் புறங்களிலும், நகரப் புற சேரிப் பகுதிகளிலுமே அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
பொதுவாக நாட்டில், ஒரு குடும்பத்தில் வறுமை நிலை ஏற்படுவதற்கு, குடும்பத் தலைவனுக்கு தொழில் வாய்ப்பின்மை, அல்லது குறைந்த வருமானம் பெறுவதால் போதிய வருமானம் இன்மை, குடும்பத்தாரின் நோய்கள், போதிய கல்வியறிவு இன்மை, குடும்ப உறுப்பினர்களது அதிக எண்ணிக்கை போன்ற பல காரணங்கள் காணப்படுகின்ற நிலையில்,
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், எல்லைப் புறக் கிராமங்களிலும் இதற்கு மேலதிகமாக கடந்த கால யுத்தப் பாதிப்புகளும் காரணங்களாக அமைகின்றன.
குறிப்பாக யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குடும்பத் தலைமைகளை ஏற்கின்ற நிலையில், இவர்களில் பலர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பணிப் பெண்களாகப் பணியாற்றி வருகின்ற ஒரு நிலை காணப்படுவதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அந்த வகையில் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் பதிவு செய்யப்பட்ட சுமார் 1,043 முகவர் நிலையங்கள் நாடளாவிய ரீதியில் செயற்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.
இ;வ்வாறு வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுச் செல்கின்றவர்களில் 0.14 வீதமான பெண்கள் தொழில்வாண்மை பெற்றவர்களாகவும், 0.65 வீதமானோர் நடுத்தர தொழில்வாண்மை பெற்றவர்களாகவும் இருக்கின்றனர் என்றும் தெரிய வருகின்றது.
4.9 வீதமான பெண்கள் தொழில்த்திறன் மிக்கவர்களாக இருக்கின்ற போதிலும், 94 வீதமானோர் எவ்விதமான தொழில் திறனுமின்றி வீட்டுப் பணிப் பெண்களாகவே வெளிநாடுகளுக்கு – அதிகமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர்.
இவ்வாறு, எவ்விதமான தொழில் அனுபவங்களும் இல்லாமல், வெறும் பணத்தை மாத்திரம் மையமாகக் கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்கின்ற அல்லது அனுப்பி வைக்கப்படுகின்ற பெண்களில் பெரும்பாலானவர்கள், பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற ஒரு நிலையையே காணக்கூடியதாக இருக்கிறது என்பதை நாம் அன்றாடம் ஊடகங்களில் வருகின்ற செய்திகளின் மூலமாக அறிகின்றோம்.
இது தொடர்பில் கௌரவ வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் அவர்கள் மிகுந்த அவதானத்தை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்த விரும்புகின்றேன். ஏனெனில், இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில், அப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் உரிய பொறிமுறை ஒன்றை எடுக்கத் தவறிவிட்டோம் என்பதையே அது உணர்த்துகிறது.
குறிப்பாக, வெளிநாடுகளிலுள்ள வீடுகளில் பணிக்காகச் செல்கின்ற எமது பெண்களில் அதிகமானோருக்கு அந்த வீடுகளின் நவீனத்துவங்களுக்கு ஏற்ப பணி செய்ய முடியாமை,
அவர்களது மொழியில் உரிய வகையில் தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொள்ள முடியாமை,
அந்தந்த நாடுகளின் கலாசார, பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப சுயமாக இயங்க இயலாமை,
அந்தந்த நாடுகளின் தொழில்உறவுச் சட்டங்கள், ஒழுங்குகள் தொடர்பில் போதிய அறிவு காணப்படாமை,
போன்ற பிரச்சினைகளுக்கு இப்பெண்கள் முகங்கொடுக்க நேரிடுகின்றது.
எனவே, இதற்கு ஏற்ற வகையில் அப்பணிப் பெண்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கிய பின்னரே, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால், துரதிஸ்டவசமாக நமது நாட்டில் அப்படியொரு நிலை இல்லை என்றே கருதுகின்றேன்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் விளம்பரங்களை எடுத்துப் பார்த்தால் – அங்கே,
உடனடி வெளிநாட்டு வேலைவாய்ப்பு!
அனுபவம் உள்வர்களும் இல்லாதவர்களும் உடன் வரவும்!
கடவுச் சீட்டு உள்ளவர்களும் – இல்லாதவர்களும் வரலாம்!
நேர்முகப் பரீட்சை நாளை!
நாளை மறுநாள் பயணம் என்றே அந்த விளம்பரங்கள் அமைந்திருக்கின்றன.
இப்படியான ஒரு நிலையில், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற எமது பெண்கள் பல்வேறு சிரமங்களுக்கு – சித்திரவதைகளுக்கு முகங்கொடுப்பதைத் தவிர்க்க முடியாது!
வெளிநாடுகளுக்குச் செல்லும் பணிப் பெண்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக யாரும் கூறலாம். அப்படி எனில் இன்றும்கூட பல ஆயிரக் கணக்கான இலங்கைப் பணிப் பெண்கள் பல நாடுகளில் பாரிய துன்பங்களை அனுபவித்தும், ஒரு சிலர் அதிலிருந்து தப்பி, தூதுவராலயங்களுக்கு ஓடியும் வருகிறார்கள். இது ஏன்? என்பதை நான் இந்தச் சபையிலே கேட்க விரும்புகின்றேன்.
எமது நாட்டுக்கு அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற ஒரு துறை இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை என பெருமைப்பட்டுக்கொள்ள முடிகின்றது.
ஆனால், தங்களது பிள்ளைகளைப் பேணி வளர்ப்பதற்காக வேறு வீட்டுப் பிள்ளைகளைப் பேணி வளர்க்கச் செல்லும் இந்தப் பெண்கள், இறுதியில் தங்களது பிள்ளைகளின் நல்வாழ்வையும் சீரழித்து, குடும்பத்தையும் இழந்து, மிகவும் துயரமான வாழ்க்கைக்கே தள்ளப்படுகின்ற துன்ப நிலைகளும் தொடருவதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த வரலாற்றில்தான் நாங்கள் றிஸானா றபீக் போன்ற பெண்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.
எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு நோக்கிச் செல்வோர் தொடர்பில் அதிகளவில் அக்கறை காட்டக்கூடிய வகையிலான நடைமுறை ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இந்த அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
அதே நேரம், இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வோரது குடும்பங்கள் இனங்காணப்பட்டு, அக் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் கண்டறிந்து, அவற்றை அகற்றுவதற்குரிய சில விN~ட திட்டங்களை – மேலும் வலுவுள்ளதாக முன்னெடுக்க வேண்டும் என்றும்
கௌரவ அமைச்சர் தலதா அத்துக்கோரள அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
தொழில் மற்றும் தொழிற் சங்க உறவுகள் தொடர்பான அமைச்சு குறித்து சில கருத்துக்களை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.
குறிப்பாக வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், அங்கு பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்ற தனியார்துறை தொழிலாளர்களில் 81 சத வீதமானோர் தமக்கென தொழில் ரீதியாக எழுத்து மூலத்திலான ஒப்பந்தங்கள் எதனையும் கொண்டிராத நிலையே காணப்படுகின்றது.
அதே போன்று, கூட்டுப் பேரம் பேசலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளையும் கொண்டிராத நிலையிலேயே அவர்கள் காணப்படுகின்றனர்.
இந்தத் தொழிலாளர்களில் 85 வீதமானவர்கள் சட்ட ரீதியான ஆகக் குறைந்த ஊதியம் தொடர்பில் விழிப்பற்ற நிலையிலேயே இருந்து வருகின்றனர். இத் தொழிலாளர்களில் பலரும் மாதமொன்றுக்கு ஆகக் குறைந்த ஊதியமாக 10,000 ரூபா பெறக்கூடிய நிலையிலேயே இருந்து வருவதை இங்கு அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
இந்த வகையில் பார்க்கின்றபோது, இவ்வாறான ஊதிய பாரபட்சங்கள் மூலம் பெண்கள் பிரதிகூலங்களை அடைகின்ற நிலையும் காணப்படுகின்றது. அதே நேரம், எமது பகுதிகளைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் வேலை செய்கின்ற இடங்களில் பால் சமத்துவமின்மைக்கு அதிகம் அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற நிலையும் காணப்படுகின்றது.
அதாவது, இந்தப் பெண் தொழிலாளர்களுக்கான தொழில் நிபந்தனைகள், மிக மோசமானதாகவும், சட்ட ரீதியான உரிமைகள் பலவீனமானதாகவும், அவை அனைத்துலகத் தொழிலாளர் நியமத்திற்கு ஏற்புடையதாகவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, ஆண்களுக்கு அதிகமான ஊதியத் தொகை வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில், ஆண்கள் செய்யக்கூடிய வேலைகளில் பெண்களை அமர்த்தி, அவர்களுக்கு மிகவும் சொற்பமான ஒரு தொகை ஊதியத்தை வழங்கும் போக்கு வடக்கிலே பெரும்பாலாகக் காணப்படுகின்ற ஒரு நிலையாக மாற்றம் பெற்றுள்ளது.
அந்த வகையில் மிக அண்மையில் இத் தொழிலாளர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, இத் தொழிலாளர்கள் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மேல் பணியாற்றுவதாகவும், மேலதிக நேரப் பணிகளில் அதிகமான பெண்களே ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்றன சட்டத்தின் மூலம் பல நாடுகளில் உறுதிப்படுத்தப்படுகின்ற நிலையில், எமது நாட்டில் தனியார்துறைத் தொழிலாளர்கள் தொடர்பில் அந்த ஏற்பாடுகள் காணக்கூடியதாக இல்லை என்றே கூற வேண்டும்.
ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றால் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் இலங்கையில் நிர்ணயிக்கப்படுகின்ற நிலையில், வடக்கைப் பொறுத்த வரையில் இந்த இரண்டு சலுகைகளும் இல்லாத நிலையில் சுமார் 80 வீதமான தொழிலாளர்கள் பணியாற்றி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
வடக்கிலே காணப்படுகின்ற இத்தகைய நிலையானது, தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அதன் மூலமாகத் தமது எதிர்காலத்தை நிலைபெறச் செய்ய முடியுமென்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்ற எமது தொழிலாளர்கள் மத்தியி;ல் மிகவும் ஆபத்தான நிலைமையைத் தோற்றுவித்துள்ளது என்றே கூற வேண்டும்.
அந்த வகையில், இலங்கையில் எழுத்து மூலமான தொழிலாளர் உரிமைகள் பேணும்; சட்டத்தை வடக்கில் கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டிய ஒரு தேவையும், கட்டாயமும் இருக்கின்றது என்பதை கௌரவ அமைச்சர் ஜோன் செனவிரத்ன அவர்களது அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
மேற்படி சட்டத்தை அமுல்படுத்தவதில் நாடளாவிய ரீதியில் சிக்கல்கள் இல்லாமலுமில்லை என்கின்ற போதிலும், வடக்கைப் பொறுத்த வரையில் இது அத்தியவசியமாகத் தேவைப்படுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் செயற்படுகின்ற தொழிற்சங்கங்கள் தமது தொழிலாளர்களின் உரிமைகளுக்காக நீதிமன்றம் வரை சென்று சட்டத்தை உறுதிப்படுத்தியும், இதற்கான பரிகாரங்களை எட்டியும் வருகின்றன.
ஆனால், தபால்ச் சேவை, தொலைத் தொடர்புகள் சேவை, சுகாதாரச் சேவை போன்றவற்றுக்கான தொழிற்சங்கங்கள் இலங்கை முழுவதிலுமாகச் செயற்படுகின்ற நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் இவ்வாறான சங்கங்கள் செயற்பாடுகளற்ற நிலையிலேயே காணப்படுகின்றன.
எனவே, தேசிய மற்றும் அனைத்துலக தொழில் நியமங்கள் செயற்படுவதை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உறுதி செய்வதற்கும்,
அது தொடர்பில் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கும்,
மேலும், கடந்தகால யுத்தம் காரணமாகச் சிதைவடைந்துள்ள தொழிற் சங்கங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆதரவை வழங்கவும்,
வடக்கு, கிழக்கு மாகாண தொழிலாளர்களுடன் வினைத்திறன்மிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும்,
அனைத்துலகத் தொழிலாளர் நிறுவகத்தின் நியமங்களை ஏற்று, செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கும்,
அடிப்படை, குறைந்த பட்ச வாழ்வாதார நியமங்கள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான தொழிற்படு நிகழ்சி நிரல் ஒன்றை உருவாக்குவதற்கும்,
குறிப்பாக, உள்ளூர் பணிப் பெண்களுக்கான பணியை ஒரு தொழிற்துறையாக மாற்றுவதற்கும்,
வடக்கு மாகாணத்தில் வேலைத் தளங்களில் தொழிற்சங்கமொன்றை நிறுவுவதற்கு குறைந்தபட்சமாக 5,000 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டு, சில அரச நிறுவனங்களால் அத் தொழிற்சங்க முயற்சிகள் நிராகரிக்கப்பட்டுவரும் நிலை காணப்படுகின்றது.
இது தொடர்பில் ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்கும்,
கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
Related posts:
|
|