பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி மக்களுக்கு பாதிப்பாக அமையக் கூடாது – டக்ளஸ் தேவானந்தா சபையில் வலியுறுத்து!

Wednesday, June 7th, 2017
பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கென ஏற்கனவே அப்பகுதி கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடி இணக்கம் காணப்பட்ட வகையில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு, அதனை அபிவிருத்தி செய்வதற்கும், அதன் மூலமாக மேற்படி மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கான வழிவகைகளையும் மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும், அல்லது, மேலும் காணிகள் மேற்படி அபிவிருத்தித் திட்டத்திற்கு தேவை எனில், அம் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களுக்குப் பாதிப்பற்ற வகையில், அம் மக்களுடன் மீண்டும் ஒரு முறை கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் இணைந்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசித்துள்ள நிலையில், மேற்படி அபிவிருத்திச் செயற்பாட்டுக்குத் தேவையான காணிகள் சுவீகரிப்பு தொடர்பில் ஏற்கனவே அப்பகுதி கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
அந்த வகையில், துறைமுகம் அமைந்துள்ள கிழக்கு, மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் காணிகள் சுவீகரிக்கப்படும் என்றும், கிழக்கு பகுதியைப் பொறுத்த வரையில் அங்கே அமையப் பெற்றுள்ள நடராஜர் கலை அரங்கு வரையில் மாத்திரமே காணி சுவீகரிப்பு இடம்பெறும் என்றும் ஏற்கனவே வரைபடம் ஒழுங்காகக் காட்டப்படாமல், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டு, கடற்றொழிலாளர்களுடன் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்ததாகவும், ஆனால், தற்போது முன்னர் ஒழுங்காகக் காட்டப்படாத வரைபடத்தை முழுமையாகக் காட்டி, துறைமுக எல்லையானது ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட கிழக்கு பகுதி நடராஜர் கலை அரங்கு தாண்டி 4ஆம் குறுக்குத் தெரு வரை செல்லும் என்று தெரிவிக்கப்படுவதாகவும், தெரிய வரும் நிலையில், இத்தகைய காணி சுவீகரிப்பு இடம்பெறுமானால், கொட்டடி கிராமம் முழுமையாக அழிக்கப்படும் நிலையேற்படும் என்றும், அவ்வாறானதொரு நிலை ஏற்படுமானால், அங்கு வாழ்ந்து வருகின்ற 265 குடும்பங்களினதும், முனை பகுதிக்குட்பட்ட சுமார் 150 குடும்பங்களினதும் வாழ்க்கை பாரிய பாதிப்புகளுக்கு உட்படும் என்றும் அம் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இப்பகுதியில் இம் மக்கள் நீண்ட காலந்தொட்டு, பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் நிலையில், மேற்படி கிராமத்தினுள் தங்களது வாழ்வாதாரத் தேவைகளுக்கான அனைத்து ஏற்பாடுகள் மட்டுமின்றி, தங்களது நிலையான வாழ்க்கைக்கான அனைத்து வசதிகளையும், அமைப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அதே நேரம், இப்பகுதியிலேயே இம் மக்கள் தொழில் செய்கின்ற சுமார் 275 வரையிலான மீன்பிடிப் படகுகளும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இம் மக்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டால், இம் மக்கள் தங்களது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை முன்னிட்டு பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்படும்.
அதே நேரம், கடற்றொழிலை ஒரு குடும்பத் தொழிலாக இம் மக்கள் மேற்கொண்டு வருகின்ற நிலையில், அவரவர்கள் தொழில் செய்கின்ற படகுகள் அவரவர்களது இருப்பிடங்களுக்கு அருகிலேயே கட்டப்பட்டு, அவற்றின் பராமரிப்புகள் உட்பட ஏனைய தொழில்சார்ந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்போது, குடும்பத்தாரே ஈடுபட்டு வருவதால், மேற்படி துறைமுக அபிவிருத்திப் பணிகள் காரணமாக படகுகள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படும் நிலையில் இம் மக்கள் தொழில் ரீதியில் பாதிப்புகளுக்கு உட்பட நேரிடும் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: