பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Thursday, May 9th, 2019

அண்மையில் நாட்டில் நடத்தப்பட்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டித்திருந்திருந்தோம். இந்த நாட்டில் பயங்கரவாதமானது எந்த வடிவில் – யாரின் மூலமாக முன்னெடுக்கப்பட்டாலும் அதை நாங்கள் அனுமதிக்கப் போகின்றவர்கள் அல்லர்.

எனினும், பயங்கரவாதத்தை அடக்குவது அல்லது ஒழிப்பது தொடர்பில் இந்த நாட்டில் ஏற்கனவே பல்வேறு அனுபவங்கள் பெறப்பட்டுள்ளன. தென்பகுதியில் ஆகட்டும், வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஆகட்டும் நிறையவே அனுபவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  இந்த நிலையில், தற்போதைய நாட்டின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்குவோர் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கின்றபோது, மிகுந்த அவதானங்கள் தேவை என்பதையே முதலில் நான் உணர்த்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெறுகின்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

பயங்கரவாத செயற்பாடுகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற எத்தகைய நடவடிக்கையும், இனங்களுக்கிடையில் வெறுப்பபுணர்வுகளையோ, குரோத மனப்பான்மையினையோ, சந்தேகங்களையோ, அச்சத்தையோ ஏற்படுத்தக் கூடாது என்பதுடன், குறிப்பிட்ட எந்தவொரு இனம் சார்ந்த மக்களினதும் உணர்வுகள் புண்படுத்தப்படக்கூடாது என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அண்மையில் நீர்கொழும்பு பகுதியில் ஏற்பட்டிருந்த அசம்பாவித சம்பவமானது, மதுபோதையில் ஏற்பட்டதொரு சிறு சர்ச்சையானது, மோதல் நிலைக்கு உருவெடுத்தது எனக் கூறப்பட்டாலும், இத்தகைய சிறு சர்ச்சைகள் பாரிய மோதலாக சமூகத்தில் உருவெடுப்பது என்பது சாதாரண விடயமாகும் என்கின்ற போதிலும், தற்போதைய நிலையில் அத்தகைய நிலைமைகள் இரு இனங்களிடையே ஏற்படுவதென்பது பாரதூரமான விடயமாகவே கருதப்படல் வேண்டும்.

தற்கொலைத் தாக்குதல்கள் ஏற்பட்ட கையுடன், இனங்கள் மத்தியில் இத்தகைய குரோத நிலைப்பாடுகள் தோற்றம் பெறாதிருக்கக்கூடிய வகையிலான முன்னேற்பாடுகள் அவசியமாக்கப்பட்டது. அத்துடன், சோதனை நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், இத்தகைய முன்னேற்பாடுகள் இன்னும் மிக, மிக அவசியமாகத் தேவைப்பட்டது. இந்தத் தேவைப்பாடானது முழுமையாகாத பட்சத்திலேயே இனக் குரோத நிலைப்பாடுகள் கலையாதிருப்பதற்கு – அல்லது வளர்வதற்கு காரணமாகின்றன.

சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்களில் சுமார் 130 – 140 பேர் வரையில் நாட்டுக்குள் இருக்கலாம் என்றே அரச தலைவரால் கூறப்பட்டு வருகின்ற போதிலும், அத் தொகையினை மீறிய வகையில் இன்று பலர் கைதாகியிருப்பதாகத் தெரிய வருகின்றது. இன்னும் தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இத்தகைய மத அடிப்படைவாதிகள் தொடர்பில் ஏற்கனவே பலமுறை முஸ்லிம் மக்கள் தரப்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவே அம் மக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகின்றது. அப்போதே இது தொடர்பில் அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் பல அப்பாவிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் என நான் நினைக்கின்றேன்

அப்போது அதனைக் கைவிட்டு விட்டு, தற்போது பல உயிர்கள் பலியானதன் பின்னர், சோதனைகள் என்ற பெயரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை நான் மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

தற்போது கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்படுகின்ற மக்களிடமிருந்து சிறைகளிலுள்ள கைதிகளிலிருந்து, காவலர்கள் முதற்கொண்டு அதிகாரிகள் வரையில் பணம் கோரி நச்சரித்து வருவதாகவும், அவர்களது அச்சுறுத்தல்கள் தாங்காத நிலையில், பலர் பணம் கொடுத்து வருவதாகவும் பலரும் முறையிட்டு வருகின்றனர்.

இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து பார்த்து, அதனை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கையினை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், நாளாந்தம் நடத்தப்பட்டுவருகின்ற சோதனைகளின்போது – தேடுதல்களின்போது கிடைக்கின்ற அனைத்துப் பொருட்கள் தொடர்பான விபரங்களும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகின்ற நபர்கள் குறித்த விபரங்களும் உடனுக்குடன் ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுவருகின்றன.

இந்தச் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்ற விதமானது, முஸ்லிம்   சமூகம் தொடர்பில் ஓர் அச்சநிலையினை ஏனைய சமூகங்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுவதாகவும் ஒரு தோற்றப்பாடு தென்படுகின்றது.

மேற்படி தற்கொலைத் தாக்குதல்கள் சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவை என அரச தலைவர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினரும், எதிரணியினரும், பல்வேறு மதத் தலைவர்கள், அரசியல் விமர்சகர்களும் வெளிப்படையாகவே கூறி வருகின்ற நிலையில், இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களில் ஒரு சிறு தரப்பினர் – அதுவும் இந்த நாட்டின் ஏனைய அனைத்து முஸ்லிம் மக்களின் புறக்கணிப்பிற்கு உட்பட்டுள்ள ஒரு சிறு தரப்பினர் அத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்தார்களே அன்றி, இந்நாட்டு அனைத்து முஸ்லிம் மக்களும் அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்றே அனைத்து தரப்பின் குரல்களும் எடுத்துக் காட்டி வருகின்றன.

அந்தவகையில், நாடளாவிய ரீதியில் தேடுதல் – சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற நிலையில், அதனை மேலும் மனிதாபிமான முகத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்பதையே இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணிகின்ற ஆடைகள் தவிர்க்கப்படல் வேண்டும் எனக் கூறப்படுகின்ற – தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அப் பெண்கள் தலையை மூடிச் செல்கின்றபோது, பல்வேறு அரச நிறுவனங்களில் பல்வேறு சிரமங்களுக்கும், அசௌகரியங்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலமாக அப் பெண்கள் அவமரியாதைக்கு ஆளாக்கப்பட்டு வருவதாகவும் பல முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. எனவே, இத்தகைய உணர்வு ரீதியிலான செயற்பாடுகள் உடனடியாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்

குறிப்பாக, இத்தகையதொரு தடையை கொண்டு வருவதற்கு முன்பதாக முஸ்லிம் மதம் சார்ந்த அமைப்புகளினதும் உடன்பாட்டுடன் அதனைக் கொண்டு வந்திருக்க வேண்டும். என்றாலும், கொண்டு வரப்பட்டுவிட்டது. அவ்வாறு கொண்டுவரப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் அரசு ஒரு அறிவித்தலை விடுத்துவிட்டால், முஸ்லிம் மக்கள் அதனைப் பின்பற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இத்தகைய நிலையில், நிறுவனத்திற்கு நிறுவனம், இடத்திற்கு இடம் ‘முக்தை மூடி ஆடைகள் அணிவோர் உட்பிரவேசிக்கக் கூடாது’ என அறிவிப்புப் பலகைகள் தொங்கவிடப்பட்டு, அந்த மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமல்லாது, அவர்களை ஒருவிதமான அவல நிலைக்குத் தள்ளுகின்றதும், ஏனைய இன சமூக மக்களின் முன்பாக அவர்களை ஒதுக்கிக் காட்டுவதுமான செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதல்ல என்பதையும் நான் இங்கு எடுத்துக் கூற விரும்புகின்றேன்.   

ஒரு கையிலே தேசிய நல்லிணக்கத்தையம், மறு கையிலே தேசிய நல்லிணக்கத்தை சிதைக்கின்ற வகையிலான ஏற்பாடுகளையும் சுமந்துகொண்டு பயணிப்பீர்களாயின் அதனால் எவருக்கும் எவ்விதமான நன்மைகளும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

எனவே, தேசிய நல்லிணக்கத்தை இரு கைகளாலும் பற்றிப் பிடித்துக் கொண்டு, முன்னேறுவார்களாயின் அதுவே, இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மையினைத் தரக்கூடியதாக இருக்கும்.

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தௌஹீத் கொள்கை அடிப்படையில் இயங்கும் பல அமைப்புக்கள் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடாமலும் அல்லது தூண்டாமலும் வெறுமனே சமய சார்பானதாகவும் சமூகநலன் நடவடிக்கைகளிலும் ஜனநாயக வழிமுறைகளில் செயற்பட்டு வருகின்றன. தௌஹீத் கொள்கையில் அடிப்படையில் நமது மத அனுஸ்டானங்களையும் சமூகக் கடமைகளையும் கடைப்பிடித்து வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த நாட்டில் இருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்ல. அல்லது ஆயுதக் கலாசாரத்தை முஸ்லிம்கள் மத்தியில் பரப்புபவர்கள் அல்ல. எனவே உண்மையான தௌஹீத் வாதியையும் இஸ்லாமிய பயங்கரவாதியையும் வேறுபடுத்தி அடையாளங்கண்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் நான் இந்த சபையில் பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்

முஸ்லிம் மக்களில் ஒரு குறிப்பிட்ட சிறு தரப்பினரே இத்தகைய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என இனங்காணுகின்ற நீங்கள், ஏனைய முஸ்லிம் மக்களையும் அந்த பயங்கரவாதத்தின்பால் தள்ளிவிடாமல், உங்களது அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையே இங்கு நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

தற்போது நோன்பு  ஆரம்பத்திருக்கின்ற நிலையில், முஸ்லிம் மக்களது மத உணர்வுகளையும் மதித்து, செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் பொலிசாரால் பல முஸ்லிம் இளைஞர்களும் கல்விமான்களும் மதகுருமாரும் கைதி செய்யப்பட்டு தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் நீதிமன்ற தடுப்புக் காவலிலும், பாதுகாப்புச் செயலாளரின் தடுத்தல் கட்டளையின்கீழும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் எந்தக் குற்றமும் இளைத்தவர்கள் அல்ல என்றும் அவர்களிடமிருந்து ஆயுதங்களோ வெடிபொருட்களோ கைப்பற்றப்பட்டிருக்கவில்லையென்றும் சில இடங்களில் ஊனுகளை வைத்திருந்தவர்களையும் வீதியோரங்களில் அல்லது கடைகளில் விற்பனை செய்யப்படும் வாக்கிடோக்கிகளை வைத்திருந்ததாகவும் சில இஸ்லாமிய சஞ்சிகைகளை அல்லது புத்தகங்களை வைத்திருந்ததாகவும் தற்பொழுது இவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கையாளப்படுவதாகவும் எனக்கு முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன.

இவ்வாறான எந்தக் குற்றமும் செய்யாத அல்லது சட்டத்தால் தடை செய்யப்படாத பொருட்களை வைத்திருந்தவர்களாக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள சகல முஸ்லிம்கள் சார்பாகவும் பாதுகாப்பு அமைச்சும் அதன் உயர் அதிகாரிகளும் உடனடியாகக் கவனம் செலுத்தி இத்தகைய அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்வதை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் இச்சபையில் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.  

ஏற்கனவே 1971 மற்றும் 88, 89 களில் தென்பகுதியில் ஏற்பட்டிருந்த பயங்கரவாதத்தை அடக்கப் போய், 89களின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டிருந்த பயங்கரவாதத்தை அடக்கப் போய், சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளை நாம் மறந்துவிடக்கூடாது. அதே நிலை இந்த நாட்டில் இன்னுமொரு சமூகத்திற்கு வந்துவிடக் கூடாது. வன்முறைகள் இந்த நாட்டில் இனியும் தலையெடுக்காமல், அதனை அழிக்க வேண்டும். அதே நேரம், அப்பாவி பொது மக்கள் அதன் காரணமாகப் பலியாகிவிடக் கூடாது என்பதையே நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

அதேபோன்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் சில முஸ்லிம் தலைமைகள் தமிழ் மக்களை அடக்கியும், ஒடுக்கியும், புறந்தள்ளியும் வந்துள்ள நிலைமைகளும் இல்லாமல் இல்லை. இனியாவது, இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமல், தமிழ் மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற போக்குகளை அனைத்து முஸ்லிம் தலைமைகளும் கடைப்பிடிக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்கின்றேன்.

அத்துடன், கடந்த கால வடக்கு, கிழக்கின் தமிழ் தலைமைகளைப் போல், தங்களது சுயலாப அரசியலுக்காக இளைஞர்களை இனவாத வன்முறையின்பால் தூண்டிவிட்டு, பாரிய அழிவுகளுக்குள் அந்த இளைஞர்களையும், சமுதாயத்தையும் தள்ளிவிடாமல், முஸ்லிம் தலைமைகள் ஒட்டு மொத்த முஸ்லிம் மக்கள் சமுதாயத்திற்குமான நேர்வழியைக் காட்டுவதற்கு  செயற்பட முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுப்பதுடன், இந்த நாட்டின் அனைத்து மக்களும் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு முன்னின்று உழைக்க வேண்டும் என்ற விடயத்தையும் வலியுறுத்த விரும்புகின்றேன்

இந்த நாட்டைப் பொறுத்தவரையில், ஓர் அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர்தான் அது தொடர்பில் அடியம், நுனியும் ஆராயப்படுகின்ற நிலை வழக்கமாகிவிட்டுள்ளது. அது இயற்கை அனர்த்தமாகட்டும், இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான அனர்த்தங்களாகட்டும் அனைத்துமே வந்த பின்னரே அணை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

‘வெள்ளம் வருமுன் அணை கட்டுவோம்’ என்ற நிலைக்கு இந்த நாடு இன்னமும் தயாராக இல்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

இன ரீதியிலான – மத ரீதியிலான கருத்துக்கள் இந்த நாட்டு மக்கள் சமூகங்களிடையே பல்வேறு வழிகளிலும் தூண்டப்பட்டே வருகின்றன. குறிப்பாக, சமூக வலைத்தளங்கள் இதில் அதிக ஆதிக்கங்களைச் செலுத்துகின்றன. அதேநேரம், சுயலாப தமிழ் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் சிலரும் இதில் மிக அதிகளவிலான பங்குகளை வகிக்கின்றனர்.

இத்தகைய குறுகிய நோக்கங்கள் காரணமாக ஏட்டிக்குப் போட்டியாக பரப்பப்படுகின்ற இனவாத – மதவாத கருத்துக்களால் முழு நாடும் பாரிய விபரீதங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நிலை வரையில் செல்ல வேண்டிய நிலைமைகளும் இல்லாமல் இல்லை

இந்த நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டபோது, இன மற்றும் மத ரீதியிலான முரண்பாடுகளை தோற்றுவிப்போர் தொடர்பில் ஆராய்ந்து, விசாரணைகளை மேற்கொண்டு சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கும் வகையில் ஓர் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற தேவையை நாம் வலியுறுத்தி இருந்;தோம். ஆனால், நீங்கள் அதை அவதானத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

அயலக நாடான இந்தியாவுடன் உறவுகளைப் பேணுகின்ற அதேநேரம், தமிழ்நாட்டுடனும் உறவுகளைப் பேணுவதற்கு வெளியுறவு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை நான் இந்தச் சபையிலே வலியுறுத்தியிருந்தேன். அதனையும் நீங்கள் சரிவரச் செய்ததாக இல்லை.

குறிப்பாக, இத்தகைய சர்வதேச ரீதியிலான பயங்கரவாதங்களை இலங்கை முறியடிக்க வேண்டும் எனில், தமிழ்நாட்டுனான உறவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமையும்.

மேற்படி சர்வதேச பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய ஒரு நபர் தமிழ்நாட்டில் வைத்து கைதானதன் மூலமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பில் அறியக் கிடைத்ததாகவும், அது தொடர்பில் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டதாகவும் இந்தியத் தரப்பில் கூறப்பட்டது.

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் காரணமாக இந்த நாட்டின் பொருளாதாரமும் மிக அதிகளவிலான பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை என்பன பாரிய நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் சுற்றுலாத்துறையின் மூலமாக இந்த நாட்டுக்கு 4,381 மில்லியன் டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

கடந்த ஆண்டின் தரவுகளின்படி இலங்கையில் சுற்றுலாத்துறைச் சார்ந்து 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் நேரடியாகவும், 1 இலட்சத்து 60 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் பணியாற்றி வருவதாக அறியக் கிடைத்தது.

எனவே, ஒரு பக்கத்தில் இந்த பயங்கரவாத செயற்பாடுகள் வேரோடு களையப்பட வேண்டிய அதே நேரம், இலங்கையின் சுற்றுலாத்துறை அடங்கலாக ஏனைய அனைத்துத் துறைகளையும் மீள கட்டியெழுப்ப வேண்டியத் தேவை அவசியமாகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்துடன், மேற்படி குண்டுத் தாக்குதல் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோருக்கும், காயடைந்தோருக்கும் வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகளை உடன் வழங்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Related posts:


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
நாட்டின் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம்  - புதிய அரசியல் யாப்ப...
வடக்கு கிழக்கில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவiடிக்கை அவசியமாகும் நா...