‘படைப் புழு” தாக்கம் போல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவுக்கும் நஷ்டஈடுகள் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, March 22nd, 2019

இந்த நாட்டு விவசாயத்துறைக்கு அண்மையில் ஏற்பட்டிருந்த ‘படைப் புழு” தாக்கத்தின் காரணமான அழிவைப் போன்று, தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவு என்பது மிகவும் பாரதூரமானதொரு விடயமாகவே இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீர்வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலப்பகுதிக்குள் கிண்ணியா பிரதேச பண்ணையாளர்களுக்குச் சொந்தமான 28 ஆயிரம் மாடுகள் உயிரிழந்திருக்கின்ற விடயமானது அதிர்ச்சிக்குரிய விடயமாகும். மட்டக்களப்பு மாவட்டத்திலே சுமார் 400க்கும் அதிகமான மாடுகள் உயிரிழந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்திலே கடந்த மூன்று மாதங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன எனத் தெரியவருகின்றது.

அதேபோன்று, மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு, நானாட்டான் போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மாடுகள் பல உயிரிழந்துள்ளதுடன், இவ்வாறான உயிரிழப்புகளுக்கு ஒரு வகை ‘கால் வாய்” நோயே காரணமெனக் கூறப்பட்டது.

அதாவது, கால்நடைகளுக்கான பிரத்தியேகமான மேய்ச்சல் தரைகள் இல்லாததன் காரணமாக கால்நடைகள் கால்வாய்களை – குளக் கட்டுகளை அண்மித்த பகுதிகளில் மேய்வதன் காரணமாக, அப்பகுதி வாழ் நத்தைகளின் ஊடாக இந்நோய் பரவுவதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், குறிப்பாக, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், குமுழமுனை, நாயாறு, தண்ணிமுறிப்பு, ஒதியமலை போன்ற பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ள நிலையில், அங்கு ஒரு பிரத்தியேக மேய்ச்சல் தரை இல்லை.

கிளிநொச்சி மாவட்ட மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயமும், கால்நடை வளர்ப்பும் காணப்படுகின்ற நிலையில், அங்கும் பிரத்தியேக மேய்ச்சல் தரை இல்லாத காரணத்தால், கால்நடைகளால் தங்களுக்கு பெரும் பாதிப்புககள் ஏற்பட்டு வருவதாக விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம், கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் நெற்செய்கைகள் மேற்கொள்ளும்போது, கால்நடைகளை எங்கே மேய்ப்பது? என கால்நடை வளர்ப்போர் கேள்வி எழுப்புகின்றனர். 

கிளிநொச்சி மாவட்டத்தில் மேய்ச்சல் தரைக்கென 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்த இடத்தை இப்போது வனவளத் திணைக்களம் சொந்தம் கொண்டாடி வருவதாகத் தெரிய வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் கால்நடைகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இறக்குமதி பால்மாவில் பன்றிக் கொழுப்பு கலந்திருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், தேசிய பால் உற்பத்தியில் தன்னிறைவு காண்போம் என ஊடகங்களில் கூறுகின்ற நீங்கள், கால்நடைகள் தன்னிறைவு காண்பதற்கான மேய்ச்சல் தரைகளை அமைப்பது தொடர்பில் அக்கறை காட்டுவதில்லை. இப்படியே போனால் இந்த நாட்டின் கால்நடைத்துறை அபிவிருத்தி என்பது, நாளடைவில் காணாமற்போய்விடும் நிலையே எற்படும்

அதேநேரம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாய செய்கைக்கும், கால்நடை வளர்ப்பிற்கும் தடையாக சில திணைக்களங்களும் செயற்பட்டு வருகின்றன. தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்திச் சபை என்பன இவற்றுள் மிக முக்கியமானவை. இந்த நாட்டைப் பொறுத்தவரையில் இந்தத் திணைக்களங்களுக்கு காணிகள் குட்டி போடுகின்ற அதிசயங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே அதிகமாக நடக்கின்றது எனக் கூறலாம்.  

எனவே கௌரவ அமைச்சர் பி ஹெரிசன் அவர்கள், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளை அந்தந்த மாவட்டங்களில் உருவாக்குவது தொடர்பில் உரிய அவதானங்களை தாமதமின்றி எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் கடைகள் தொடர்பில் கடந்த வருடம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமைவாக, அங்கு 40 வருடங்களாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 35 வர்த்தகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அவர்களுக்கு 35 கடைகள் வழங்கப்பட வேண்டுமென உள்ள நிலையில், அங்குள்ள அனைத்துக் கடைகளுக்குமாக தற்போது திறந்த கேள்வி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இதன் தற்போதைய நிலைமை தொடர்பில் அமைச்சர் அவர்கள் அவரது உரையின்போது தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்

கடந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கொழும்பினை இணைத்து யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார மையமொன்று உருவாக்கப்படும் என்றும், நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சியில் இரண்டு உணவு பதனிடும் நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது இன்னமும் உருவாக்கப்பட்டதாக இல்லை. அதேபோன்று இந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் மத்திய பொருளாதார மையமொன்றுடன் இணைந்ததாக 10 துணைப் பொருளாதார நிலையங்கள் வடக்கு மாகாணத்தில் தாபிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஏற்கனவே கூறப்பட்ட யாழ்ப்பாணத்து நவீன பொருளாதார மையம் உருவாக்கப்படுமா? அது உருவாக்கப்பட்ட பின், அதனுடன் இணைத்து இந்த 10 துணைப் பொருளாதார நிலையங்கள் உருவாக்கப்படுமா? அல்லது, வவுனியா பொருளாதார மத்திய நிலையத்துடன் இணைத்தா 10 துணைப் பொருளாதார நிலையங்கள் உருவாக்கப்படும்? போன்ற கேள்விகள் தொடர்பில் விளக்கங்கள் இல்லாமலேயே இருக்கின்றன. அமைக்கும்போது பார்ப்போம் என்று ஆறுதல் அடைந்து கொண்டு, நெல் கொள்வனவு தொடர்பிலான அரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் காரணமாக வடக்கு, கிழக்கு விவசாய மக்கள் இம்முறையும் பாரிய பாதிப்புகளை அடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வவுனிக்குளத்தின் கீழ் 1,500 ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொண்ட மக்கள் தங்களது அறுவடைகளை நியாய விலைக்கு விற்க முடியாதுள்ளனர். மேலும், முல்லைத்தீவின் கோட்டைகட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம் விவசாய மக்களும் மிகக் குறைந்த விலைக்கே தனியார் துறையினருக்கு தங்களது அறுவடைகளை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோன்று அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் இம்மாத ஆரம்பம் வரையில் நெல் சந்தைப்படுத்தும் சபை நெல்லினைக் கொள்வனவு செய்யவில்லை என அப்பகுதி விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்திலே ஒரு விவசாயியிடமிருந்து தலா 2 ஆயிரம் கிலோ நெல்லினை நெல் சந்தைப்படுத்தல் சபையினர் கொள்வனவு செய்ததாகவும், இதன்போது ஒரு பேக்கில் 50 கிலோ எனத் தெரிவித்து 50.5 கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டு, ஒரு விவசாயியிடமிருந்து 20 கிலோ வீதமாக நெல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விவசாய மக்கள் முறையிட்டு வருகின்றனர்.

எனவே, இந்த விடயங்கள் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வவுனியா மாவட்டத்தில் கடந்த யுத்த காலத்தில் அமைக்கப்பட்ட 22 கிலோ மீற்றர் நீளமான மண் தடுப்பணை காரணமாக விவசாய மக்கள் விவசாய செய்கைகளில் ஈடுபட சிரமம் அடைகின்ற நிலை காணப்படுவதால், இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு, உடனடியாக மேற்படி மண் அணையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் உட்பட்டதாக சுமார் 14 வரையிலான விவசாயக் குளங்கள் வனவளத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இந்த குளங்களை நம்பி சுமார் 1089 விவசாயக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்திலே கமநல சேவை திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 400 விவசாயக் குளங்கள் உள்ள நிலையில், இவற்றில் புனரமைக்கப்பட வேண்டிய குளங்கள் இனங்காணப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கின்ற தருவாயில் வனவளத் திணைக்களத்தினர் அதனைத் தடுத்து வருகின்ற நிலையும் காணப்படுகின்றது.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் வனவளத் திணைக்களத்துடன் கலந்துரையாடி எமது மக்களுக்கு சாதகமான தீர்மானங்களை எட்டுவதற்கு விவசாய அமைச்சு முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் ஏற்கனவே இந்திய அரசின் உதவியினால் வடக்கு மாகாண கமநல சேவைத் திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 500 உழவு இயந்திரங்களில் தற்போது 400 உழவு இயந்திரங்களே இருப்பதாகவும், அவற்றில்  பலவும் பழுதடைந்துள்ளதாகவும், மேலும் பல பாவனையின்றி கிடப்பதாகவும் தெரிய வருகின்றது. மேற்படி பழுதடைந்த உழவு இயந்திரங்களை திருத்துவதற்கும், கமநல சேவை திணைக்களத் தேவைகளுக்கான உழவு இயந்திரங்களைத் தவிர ஏனையவற்றை அந்தந்த மாவட்டங்களிலுள்ள விவசாய சங்கங்களுக்கு குத்தகைக்கு விடவும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டியுள்ளது என்பதையும் இங்கு கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன். அதேநேரம், வழங்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களில் 400 உழவு இயந்திரங்களே இருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், ஏனைய 100 உழவு இயந்திரங்களுக்கு என்னவாயிற்று என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்

இலங்கை, கடலால் சூழப்பட்ட தீவு என பெருமிதமாக பேசப்படுகின்றது. ஆனாலும் நாம் இன்னும் மீன் அறுவடையில் தன்னிறைவு அடையவில்லை. ஆயிரத்திற்கு மேற்பட்ட தீவுகளை கொத்துக் கொத்தாக கொண்ட மாலைதீவு நாட்டில், அவர்கள் சர்வதேச மட்டத்தில் மீன் ஏற்றுமதியில் எம்மைவிட முன்னணியில் திகழ்கின்றனர். உல்லாச பிரயாணிகளினால் கிடைக்கின்ற அந்நிய செலாவணியை விட கூடிய வருமானத்தை மீன் ஏற்றுமதியில் பெறுகின்றனர்.

மாலைதீவு கண்டப்பரப்பு சுமார் 400 கிலோமீற்றர் விஸ்தீரணம் உள்ளது. நம் நாட்டை பொறுத்த வரையில் அது 20 கிலோமீற்றர் வரையிலாகும். பெரிய அளவிலான மீன் அறுவடைக்கு நாம் பெரும் கடலுக்கு செல்ல வேண்டும். நம்மவர்கள் சின்ன வள்ளங்களையே பாவிக்கின்றனர். 50பாகத்திற்கு மேலான ஆழத்தில் உள்ள மீன் வளங்கள் பிடிக்கப்படுவதில்லை. சூரை போன்ற பெரிய மீன்கள் பிடிக்க முடிவதில்லை. அந்நிய நாட்டவரினாலேயே இப்பாரிய மீன்கள் பிடிபடுகின்றன. அவர்களிடம் உள்ள இழுவைத் தொழில்நுட்பம், குளிர்சாதன வசதி, பெருங்கடல் பயண உபாயங்கள் எம்மிடம் இல்லை. இந்த வசதிகளை கொண்ட கப்பல்கள் ரூபா 35மில்லியன் வரையான பெறுமதி உடையவை ஆகும்.  இவற்றை இங்கு எத்தனை பேரால் பெற்றுக் கொள்ள முடிகின்றது? என்ற கேள்வியே எழுகின்றது

ஒவ்வொரு மீன்பிடி பயணமும் பல நாட்கள் கொண்டதால் (தங்கு தொழில்) குறைந்த பட்சம் ரூபா 2.5 மில்லியன் செலவீட்டை உள்ளடக்கும். ஆகவே, கப்பல் மட்டுமல்ல பயண செலவும் கொடுக்கப்பட வேண்டும். வடக்கில் கடந்த காலங்களில் துறைமுக வசதி இல்லாமையே பெரிய குறைபாடாக இருந்துள்ளது. மேலும், குடிநீர் வசதி, ஜஸ் கட்டிகள், எரிபொருள், குளிர் அறைகள் போன்ற முக்கிய காரணிகளும் இல்லாமையும் கவனிக்கப்பட வேண்டியதாகும். ஆனால், இப்போது இவ் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டாலும் பயணச் செலவு பெறுவதில் சிக்கல் உள்ளது.

புள்ளிவிபரக்கணக்கின் படி 1981 இல் இருந்து 30வருட யுத்த காரணமாக மீன்பிடியில் பெரும் வீழ்ச்சிக்கே நாம் முகம்கொடுத்து வந்தோம். நாம் எமது வளங்களை உபயோகப்படுத்தாமையினாலேயே இந்திய மீனவர்களின் ஊடுருவல் வலுப்பெற்றது. பின் மீனவர்களுக்கான உபகரணங்கள் கொடுக்கப்பட்டாலும், மீன்பிடித்துறையில் இன்னுமும் வீழ்ச்சியே காணப்படுகின்றது. பல்வேறு அமைச்சர்களும் பலவிதமான மூல உபாயத்தை பிரயோகித்தனர். கௌரவ அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா மீனவ கூட்டுறவுச் சங்கங்களை அமைத்தார். ஆனால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கௌரவ இந்திக குணவர்த்தன அமைச்சர் உள்ளக கட்டமைப்புக்களையும் பயிற்சி கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்தார். கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பொறுப்புடனான 05 அத்தியட்சகர் கொண்ட நிறுவனங்களை ஏற்படுத்தினார். அதன் பின் வந்த கௌரவ ராஜித சேனாரத்ன அமைச்சர்  கிராமிய மீன்பிடி நிறுவனங்களை நிறுவினார். இவ் ஏற்பாடுகள் வெற்றி அளிக்கவில்லை என நான் கூறவரவில்லை. காலப்போக்கில் இவற்றை தக்க வைப்பதற்கான முயற்சிகள் இங்கே முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றேன்

நம் நாட்டில் தொலைநோக்குடனான கொள்கைகள் தொடர்ந்து பேணப்படுவதில்லை. ஒவ்வொரு அமைச்சரும் தங்களது தனிப்பட்ட முத்திரை பதிக்கும் நோக்கோடு கொள்கைகளை மாற்றுகின்றனர்

உணவு விவசாய சர்வதேச அமைப்பினரால் (குயுழு) வகுக்கப்பட்ட கொள்கைகள் திட்டங்கள் இங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வெற்றிக்கு இதுவே வழிவகுக்கும். அமைச்சர்கள் இவற்றை துறைசார் தொலைநோக்கோடும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.

நம் நாடு 2020ஆம் ஆண்டில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஜ.நா சபை ஒவ்வொரு நாட்டிற்கும் மீன்பிடி பிரமாண ஒதுக்கீடுகளை ஏற்படுத்த விளைகின்றது. எமது மீன்பிடி புள்ளிவிபரப் பதிவுகளை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவோம்.  நாம் எமக்கான ஒதுக்கீட்டை பெறாவிட்டால் அவற்றை அந்நியருக்கு தாரைவாத்து கொடுக்க வேண்டி இருக்கும்.

இது எமது கடற்றொழில் சார்ந்த சமூத்தினருக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் மாபெரும் வீழ்;ச்சியை ஏற்படுத்தும். ஜ.நா சபை இதை கடல்சார் சட்டமாக ஏற்றுக் கொள்ள நாம் நிர்ப்பந்திக்கப்படுவோம். காரணம் ஜ.நா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்களில் நம் நாடும் ஒன்றாகும்.

எனவே, பின்வரும் அனுகுமுறைகளை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். நிரந்தர மீன்பிடி கொள்கை வகுத்தல். அவற்றை செயற்படுத்துதல். இதன் மூலம் ஆகக் கூடிய வருமானம் பெறும் உத்வேகத்தை ஏற்படுத்தல், நிதிக்கொள்கை, மீன்பிடி தொழில்நுட்பம் பற்றிய அறிவு போன்றவற்றை வலுவூட்டல் மூலம் பெற்றுக் கொடுக்க முனைய வேண்டும்.

இங்கு 55அடி நீளத்திற்கு கூடுதலான பெரிய கப்பல்களை கட்டுவதற்கான வல்லமை உடைய துறைசார் சிற்பிகள் உள்ளதாக மீன்பிடி துறைசார் நிபுணர்களிடம் இருந்து அறியக் கிடைத்துள்ளது.  இவற்றை உங்கள் கவனத்திற்கு எடுக்குமாறு கேட்டுக் கொள்வதுடன், வடக்கிலே தற்போது எமது கடற்றொழிலாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற சில முக்கியப் பிரச்சினைகள் உள்ளன.

குறிப்பாக, ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ள உள்ளூர் இழுவலைப் படகுகளின் பாவனை காரணமாக தீவகம் உட்பட்ட யாழ் மாவட்ட கடற்பரப்பில் ஏற்படுகின்ற வள அழிவுகள், பருத்தித்துறை கடற்பரப்பில் பிற மாவட்ட கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற டைனமைட் பயன்படுத்துகின்ற தொழில் முயற்சிகள், அதாவது, அட்டைத் தொழிலில் ஈடுபடுகின்ற பிற மாவட்ட கடற்றொழிலாளர்களால் புPளு கருவி மூலமாக தகவல்கள் வழங்கப்பட்டு, மீன்கள் அதிகமிருக்கும் இடங்கள் நோக்கி வருகின்ற பிற மாவட்ட கடற்றொழிலாளர்களால் டைனமைட் மற்றும் சுருக்கு வலைகள் பயன்படுத்தல் போன்ற தொழில் முயற்சிகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். இதனால் வளப் பாதிப்புகள் மட்டுமன்றி ஏனைய சிறு தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், கடல்சார்ந்து சரணாலயங்களை அமைத்து வருவதால் கடல் ஆறுகள் சார்ந்த தொழிற்துறைகளில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்கள் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பில் அவதானங்களைச் செலுத்தி, கடற்தொழிலாளர்களுக்கு தொழிலில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு, வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதேநேரம், வடக்கு கடற்பரப்பிற்குள் அதிகளவிலான பிளாஸ்ரிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உள்ளூராட்சி நிறுவனங்களே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவதால், பொது மக்களும் அதற்குப் பழக்கப்பட்டுள்ளனர். எனவே, இது தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவை தடைசெய்யப்பட வேண்டுமெனக் கோரிக்கைவிடுகின்றேன். 

Related posts: