நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Thursday, May 24th, 2018

சந்தைக் கேள்விகளில் இருந்து நிராகரிக்கப்படுவதனால், இவ்வகை தேயிலை ‘கழிவுத் தேயிலை’ எனக் கூறப்பட்டாலும், இவை கழிவுத் தேயிலை அல்ல என்பதால் இதன் பெயரை ‘நிராகரிக்கப்பட்ட தேயிலை’ எனக் கொள்வதே சிறந்தது என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை தேயிலைச் சபை (திருத்தச்) சட்டமூலம், இரண்டாம் மதிப்பீடு தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

இந்த நாட்டைப் பொறுத்த வரையில் பொருளாதார மெலிவுகளும் பிரச்சினைகளின் பருமன்களும் அதிகரித்துள்ள நிலையில் எதிர்காலம் குறித்த சீர்திருத்த நிகழ்ச்சிநிரலற்ற வகையில் சென்று கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்புகளற்ற பயணத்தில், இன்னும் ஏதோவென ஒட்டிக் கொண்டிருக்கின்ற இந்த நாட்டின் நீண்ட கால ஏற்றுமதி உற்பத்தியான தேயிலை தொடர்பில் எனது கருத்துக்களையும் இங்கு பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கியமை தொடர்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த வருடத்தின் எமது மொத்த ஏற்றுமதி வருமானம் 11360 மில்லியன் டொலர்களைப் பதிவு செய்துள்ளது. இதில், தேயிலையானது உள்நாட்டு உற்பத்தியில் 4.9 வீதத்தை எட்டி நிற்கின்றது. இறக்குமதி செலவீனம் 20980 மில்லியன் டொலர்களைப் பதிவு செய்திருக்கின்றது என்பது வேறு விடயம்.

கடந்த வருடத்தில் ரஷ்யா இலங்கைத் தேயிலையை தடை செய்திருந்தபோது, இந்த நாட்டில் தேயிலைச் சபையானது என்ன செய்து கொண்டிருக்கிறது? என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டது. இன்றும் அந்தக் கேள்வி எமது மக்களிடையே வாபஸ் பெறப்படாமலேயே இருந்து வருவதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

குறிப்பாக ‘கழிவுத் தேயிலை’ என இனங்காட்டப்படுகின்றவை தொடர்பில் ஓர் உரிய பொறிமுறையினை உருவாக்குவதற்கு உங்களால் இன்னும் இயலாதிருக்கின்றது. உண்மையிலேயே நீங்கள் கூறுகின்ற வகையில் இவை ‘கழிவுத் தேயிலை’ அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது தேயிலையை அரைக்கின்றபோது, வெளித் தோல் அகன்று வெளிப்படுகின்ற தண்டுப் பகுதிகள் அடர் பொன்னிறமாக மாற்றம் பெறுகின்ற நிலையில் அவை கறுப்பு நிறத்தைக் கொள்வதில்லை. அதிக சந்தைக் கேள்வியானது கறுப்பு நிறத் தேயிலைக்கே இருப்பதால் மேற்படி அடர் பொன்னிற தேயிலையானது கேள்விச் சந்தையில் நிராகரிக்கப்படுகின்றது. இவ்வகைத் தேயிலை மிக அதிகமாக துளிர் தேயிலைகளினால் கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு சந்தைக் கேள்விகளில் இருந்து நிராகரிக்கப்படுவதனால் இவ்வகை தேயிலை ‘கழிவுத் தேயிலை’ எனக் கூறப்பட்டாலும் இவை கழிவுத் தேயிலை அல்ல என்பதால் இதன் பெயரை ‘நிராகரிக்கப்பட்ட தேயிலை’ எனக் கொள்வதே சாலச் சிறந்தது என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

ஆனால் இவை சந்தை கேள்விகளில் இருந்து நிராகரிக்கப்பட்டாலும் இவற்றை மூலப் பொருளாக மாத்திரம் ஏற்றுக் கொண்டு  இந்த மூலப் பொருளை முடிவுப் பொருளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் உறுதியான முறையில் மேற்கொள்ளப்படல் வேண்டும். அதாவது இதற்கு பல்வித சேர்க்கைகள் சேர்க்கப்பட்டு நல்ல தேயிலையாக மாற்ற முடியும்.

இந்த செயற்பாட்டிற்கு நீங்கள் இதுவரையில் சிறந்த முகாமைத்துவத்தினை வழங்கத் தவறிவிட்டதால் மேற்படி தேயிலையுடன் கோஸ்ரிக் சோடா பெரஸ் சல்பேட் கொண்டிஸ் அயன் மாத்திரைகள் தென்னந் துகழ்கள் மரத்தூள் என்பன கலக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு எவ்வகையிலும் ஏற்பில்லாத துகழ்கள் தேயிலை என்ற பெயரில் இன்று இலங்கையில் பரவலாகவே பாவனையில் இருந்து வருகின்றது. அத்துடன் நிற்காமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஈரான் கூட இத்தகைய தேயிலையை தங்களது நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் எனக் கூறுமளவுக்கு இந்த வியாபாரம் நடந்தேறியிருக்கின்றது. இத்தனைக்கும் இலங்கையில் ஒரு தேயிலைச் சபை செயற்பாட்டில் இருக்கின்றது.

மேற்படி ‘நிராகரிக்கப்பட்ட தேயிலைகளை கொள்வனவு செய்வதற்கும், மேலதிக தயாரிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் நிறுவனங்கள் பதிவு செய்யப்படல் வேண்டும் என்ற விதிமுறை இருந்த போதிலும் உங்களது கவனமின்மை காரணமாக பல்வேறு தரப்புகள் பதிவு செய்து கொள்ளாமலேயே மேற்படி திருட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வர்த்தகர்கள் தேயிலைத் தோழிற்சாலைகளுடன் தொடர்புகளைப் பேணி நல்ல தேயிலையுடன் மேற்படி தேயிலையையும் கலந்து தர இலச்சினை இன்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் இதன் பின்னணியில் சில அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அடிக்கடி ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

இத்தகைய தேயிலைக்கு கறுப்பு நிறத்தினைக் கொடுப்பதற்காக சோடியம் பைகாபனேற் கோன் சிரப் போன்றவை கலக்கப்படுவதால் அவை நீரிழிவு மாரடைப்பு கொலொஸ்ட்ரோல் போன்ற நோய்களுக்கான இரசாயன அழுத்தங்களைக் கொடுப்பதாகத் தெரிய வருகின்றது.

இத்தகைய மக்கள் பாவனைக்குதவாத மிகுந்த தீங்கு விளைவிக்கின்ற தேயிலை வகைகள் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிலே மிகத் தாராளமாக விற்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக உவர் தன்மை கொண்ட நீர் அதிகமாகப் பாவனையில் இருக்கின்ற பகுதிகளை இலக்கு வைத்தே இத்தகைய தேயிலை விற்பனைக்கு விடப்படுகின்றன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இத்தனைக்கும் மக்கள் பாவனைக்குதவாத இவ்வகைத் தேயிலையானது ‘சிலோன் ரீ’ என்ற பெயரிலேயே பொதி செய்யப்பட்டு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் சந்தைக்கு விடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

அதே போன்று, தேயிலையில் சீனி, குளுக்கோஸ் கலக்கப்படுவதாகக் கூறப்பட்டு 82 தேயிலை தொழிற்சாலைகள் இனங்காணப்பட்டுள்ளதாக கடந்த பெப்ரவரி மாதம் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள தொழிற்சாலைகள் தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்? அந்த தொழிற்சாலைகள் யாவை? போன்ற விபரங்களை எமது மக்களின் அவதானத்திற்கு வெளியிட தேயிலைச் சபை முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

எனவே, இன்று நாடு இருக்கின்ற பொருளாதார நிலையில், நீண்ட காலமாக எமக்கு அந்நியச் செலாவணி ஈட்டலில் பெருந் துiணாக இருந்து வருகின்ற ‘இலங்கைத் தேயிலை’யை தயவு செய்து காப்பாற்றும் படி கேட்டுக் கொள்கின்றேன்.

அடுத்தது, இந்தத் தேயிலைக்காக அன்றாடம் அல்லல்படுகின்ற மக்கள் இன்னும் தீராமல் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள். இந்த மக்கள் இங்கு குடியேற்றப்பட்ட காலத்திலிருந்தே பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே இன்னும் தொடர்கின்றன.

எமது மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடியிருந்த காலத்தில் மலையக மக்களை ஒருபோதும் மறந்துவிட்டு நாங்கள் செயற்பட்டிருக்கவில்லை. அந்த மக்களில் பல தோழர்கள் எம்முடன் இணைந்து செயற்பட்டிருந்தனர். எமது போராட்டத்திற்காக உயிர்த் தியாகங்களையும் செய்திருக்கின்றனர். எமது உடன் பிறப்புக்களான மலையக மக்களின் பிரஜா உரிமை உட்பட அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்க வேண்டுமென் நாம் 1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 08ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்த ‘திம்பு” பேச்சுவார்த்தையின்போது பிரேரணை முன்வதை;திருந்தோம்.

உழைப்பிற்கு ஏற்ற ஊதியமின்மை, தொடர்ந்தேர்ச்சியான வேலை நாட்கள் இன்மை, அடிப்படை வசதிகள் இன்மை, அடிப்படை உரிமைகள் இன்மை, குளவி, தேனீ, சிறுத்தை, வி~ ஜந்துக்கள் மத்தியில் தொழில் செய்ய நேரிடுகின்றமை போன்ற பல்வேறு துன்ப துயரங்களுக்கு ஆட்பட்ட மக்களாகவே இம் மக்கள் இருந்து வருகின்றனர்.

இங்கு ஒரு விடயத்தை இந்தச் சபைக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். அதாவது, குளவிக் கொட்டு என்பது மலையகப் பகுதிகளில் பரவலாகவும், அடிக்கடியும் இடம்பெற்று வருகின்ற அனர்த்தமாக உள்ளதனால் இதன் காரணமாக பலர் தொடர் அவதிகளுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில் குளவிக் கொட்டையும் இந்த நாட்டின் அனர்த்தங்களில் ஒன்றாக அறிவிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்ற விடயத்தை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

மலையக மக்கள் தங்களுக்கு வருகின்ற கடிதங்களைக்கூட பெற முடியாத நிலையில் உரிமையின்றிய மக்களாகவே இன்னமும் வாழ்கிறார்கள். இரண்டு வருடங்களாக இம் மக்களுக்கு வந்துள்ள கடிதங்களை இம் மக்களுக்கு வழங்காமல் முடக்கி வைத்திருந்த தோட்ட நிர்வாகங்கள் குறித்தும் செய்திகள் இல்லாமல் இல்லை.

தொடர் வீட்டு முறைமையிலிருந்து இந்த மக்களின் இருப்பிடங்கள் தனி வீட்டுத் திட்டங்களாக இப்போது மாற்றப்பட்டு வந்தாலும் இம் மக்கள் அனைவரும் அவற்றின் முழுமையான பயன்களைப் பெற இன்னும் பல வருடங்கள் செல்லும் என்ற நிலையே காணப்படுகின்றது. அதிலும் பாரபட்சங்கள் காட்டப்படும் நிலைமைகளும் இல்லாமல் இல்லை எனக் கூறப்படுகின்றது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலே வாழுகின்ற மலையக மக்களின் நிலை இதுவாகும் என்கின்றபோது, சப்பிரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் தோட்டங்கள் சார்ந்து பணியாற்றுகின்ற தமிழ்  மக்கள் தொடர்பில் கவனிப்பார் எவருமே இல்லை என்றே கூற வேண்டியுள்ளது.

இன்று தேயிலை உற்பத்தியை நோக்குகின்றபோது பெருந்தோட்டக் கம்பனிகள் நூற்;றுக்கு சுமார் 25 வீதமான உற்பத்தியை  மேற்கொள்கின்ற நிலையில் 75 வீதமான உற்பத்திகளை சிறு தோட்ட உரிமையாளர்களின் கீழான தோட்டங்களே உற்பத்தி செய்கின்றன. என்றாலும் அதிகளவிலான மக்கள் பெருந்தோட்டத்துறையின் கீழேயே இன்னமும் இருக்கின்றனர்.

இவ்வாறு பெருந்தோட்டத்துறைப் பிரிவுகளில் அதிகளவிலான மக்கள் இருக்கின்ற நிலையில், இம் மக்களது எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் இப்போதே எழ ஆரம்பித்துள்ளன. அதாவது, இந்த மக்களின் இருப்பின் எதிர்காலம் என்னவாகும்? என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.

உரிய பராமரிப்பின்மை, அர்ப்பணத் தன்மையின்மை காரணமாக இன்று தேயிலைத் தோட்டங்கள் காடுகளாக மாறி வருகின்றன. இலாப ஈட்டல்களை மாததிரமே ஒரே நோக்கமாகக் கொண்டு கம்பனிகள் செற்பட்டு வருகின்றன. இதனை இந்த அரசு தனது உடனடி அவதானத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதேநேரம் களுத்தறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இன்று தேயிலைத் தோட்டங்கள் படிப்படியாக வேற்று பாவனைகளுக்காக மாற்றப்பட்டு வருகின்ற நிலைமைகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இங்கே வாழுகின்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக வசதிகள் அற்ற குடியிருப்புகளுக்கு ஏற்பு இல்லாத பகுதிகள் வழங்கப்பட்டு குதிரை லாயங்கள் அமைப்பதற்காக நல்ல இடங்களை ஒதுக்குகின்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

அந்த வகையில், இந்த நாட்டு தேயிலையை நீங்கள் பாதுகாக்க வேண்டும். அத்துடன், அத் துறை சார்ந்த தொழிலாளர்களது நலன்களிலும், தோட்டங்களின் நலன் சார்ந்தும் சிந்தித்து செயற்பட முன்வர வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தி, விடைபெறுகின்றேன்.

நன்றி.

Related posts:


யுத்த வடுக்களற்ற புதிய தேசத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்...
தோழர் பிடல் கஸ்ரோ என்ற வல்லமையின் வரலாறு எம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்று விட்டது - நாடாளுமன்றில...
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துரிதகதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில...