நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கலைஞரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் – டக்ளஸ் எம்.பி. அஞ்சலி மரியாதை!

Thursday, August 9th, 2018

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர்இ கலைஞர் முத்துவேள் கருணாநிதி அவர்களுக்கு எனது இறுதி மரியாதையை செலுத்துகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா செலுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற இணை மனை சொத்தாண்மை விசேட ஏற்பாடு சட்டமூலம் நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகள் விவாதத்தில் கலந்துகொண்டபின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –

இன்றைய தினம் இணை மனை சொத்தாண்மை மற்றும் நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகள் என்பன தொடர்பில் எனது கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நாட்டில் வீடமைப்பு துறை சார்ந்து பல அமைச்சுக்கள் செயற்பட்டு வருகின்றன. இதில், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் வீடமைப்பு கடன் தொகை தொடர்பில் நான் தனியாகவே கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றேன். அதாவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்லாது தென் பகுதியில்கூட தற்போதைய பொருளாதார நிலையில், மேற்படி கடன் தொகையானது வீடமைப்பு செயற்பாட்டுக்கு போதாத நிலைமையே காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் சாதகமாக பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

இதேபோன்று, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் கல் வீடுகள் கட்டப்படப் போவதாகக் கூறப்பட்டு, அந்த விடயமும் இன்னமும் இழுபறி நிலையிலேயே இருப்பதாகத் தெரிய வருகின்றது.

தேர்தல் காலங்களில் ‘வீடு’ காட்டி, எமது மக்களை ஏமாற்றி, எமது மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொள்வோர், எமது மக்களுக்கென வீடுகளைக் கட்டிக் கொடுப்போர்களாக இல்லை. மத்திய அரசிடமிருந்து வீட்டுத் திட்டங்கள் வருகின்ற நிலையில், அவற்றையும் காலங்கடத்துவதையே தங்களது கடமை எனக் கருதிக் கொண்டிருக்கின்றனர்.

எமது மக்கள் மழை காலங்களில் நனைபவர்களாகவும், வெய்யில் காலங்களில் காய்பவர்களாகவும், வீடுகள் வேண்டி தவம் கிடக்கின்றனர். வாக்குக்கு மட்டுமே வீடு, வாழ்க்கைக்கு அல்ல என்ற போக்கில் சுயலாப அரசியல் நடத்துகின்றவர்களால் எமது மக்களின் உரிமைப் பிரச்சினை போன்றே, உறைவிடப் பிரச்சினையும் காலங்கடத்தப்பட்டே வருவது வேதனைக்குரிய விடயமாகும்.

அதேநேரம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கட்டப்படுகின்ற வீடுகளின் தரம் தொடர்பிலும் உரிய அவதானங்கள் செலுத்தப்படுவதாகத் தெரிய வரவில்லை. குறிப்பாக, யாழ்ப்பாணம், கீரிமலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்கபுரம் வீடமைப்புத் திட்ட வீடுகளில் ,ரண்டு வருடங்கள் கழியும் முன்னராகவே தற்போது வெடிப்புகள் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது.

ஒரு பக்கம் நல்லிணக்கபுரம் வெடிப்பு கண்டு வருகிறது. மறுபக்கம் நல்லிணக்கமும் வெடிப்பு கண்டு வருகிறது. இதுதான் இன்றைய எமது மக்களின் நிலையாகவுள்ளது.

கிட்டத்தட்ட ஆறு அமைச்சுக்கள் இந்த நாட்டில் வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதில் மலையக புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மலையகத் தோட்டப் பகுதிகள் சார்ந்த வீடமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அது தவிர, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு, மா நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சு, தேசிய நல்லிணக்க அமைச்சு, கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சு என இந்த அமைச்சுகள் ஏதோவொரு வகையில் வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதில் பங்களிப்பினை வழங்குகின்றன.

ஆனால், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், இந்த அமைச்சுக்களின்; மூலமான வீடமைப்பு பங்களிப்புகள் தற்போதைய நிலையில் பூச்சியமாகவே இருக்கின்றது. வீடமைப்புத் திட்டங்கள் வருவதாகக் கூறப்படுகின்ற போதிலும், ‘வரும்! ஆனால் வராது!’ என்ற நிலைமையே அங்கு தொடர்கின்றது.

பொருத்து வீடு வருகின்றது என்ற ஒரு காலத்தில் ‘பொருத்து வீடு எமது மக்களுக்கு பொருத்தமாகாது’ எனக் கூக்குரலிட்டு, அதைத் தடுத்தவர்கள், கல் வீடு வரும் எனக் கூறிக் கூறியே இன்று கல்வீடும் காணல் நீராகிப் போய்விட்டது. சுயலாப அரசியல்வாதிகள், எமது மக்களின் எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குத் திராணியற்று, இறுதியில் அந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் அனைத்துப் பொறுப்புகளையும் விதியே என்று சர்வதேசத்தின் தலையில் சுமத்திவிடுவதுபோல், இப்போது இந்த வீட்டுப் பிரச்சினையும் சர்வதேசத்திடம் மாட்டிக் கொண்டு இந்தியாவா? சீனாவா? என இழுபட்டுக் கொண்டிருக்கின்றது.
கடந்த காலத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம் எமது முயற்சி காரணமாக கைகூடியிருந்த நிலையில், அதனை ஒழுங்குற செயற்படத்தக்கூடிய விருப்பம், ஆளுமை, திறமை என்பன எம்மிடம் இருந்தன. இன்றைய எமது பகுதிகளில் அத்தகைய நிலைமைகள் காணக்கூடியதாக இல்லாததன் காரணமாகவே, எமது மக்களுக்கான அனைத்து திட்டங்களும் பெயரளவில் வந்தும், செயற்பாடுகளுக்கு எட்டாமல் போய்க் கொண்டிருக்கின்றன. மனமிருந்தால், இடமிருக்கும் என்பதையே இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

அந்த வகையில், கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள், அவரது தந்தையாரான அமரர் ரணசிங்ஹ பிரேமதாச அவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி தற்போது மாதிரிக் கிராமங்களை அமைக்கும் திட்டத்தினை தொடர்ந்து வருகின்றார். இத்திட்டமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களையும் நோக்கி – செல்வபுரம், தட்சணாபுரம், கைலாயபுரம், லூர்து நகர் என்ற வகையில் வருவது உண்மையிலேயே வரவேற்கத்தக்க முயற்சியாகவே இருக்கின்றது. அந்த வகையில் கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், வீடில்லாப் பிரச்சினைகள் மிக அதிகம் காணப்படுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இத்தகைய திட்டங்கள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைக்கின்றேன்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்ஹ பிரமேதாச அவர்களது எண்ணக் கருவுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் 300 வீட்டுத் திட்டம் அமைக்கப்பட்டது. இந்த வீட்டுத் திட்டமும் கடந்த கால யத்தம் காரணமாக மிகுந்த பாதிப்புகளுக்கு உட்பட்டும், அழிந்தும் போயிருந்த நிலையில், நான் அமைச்சராக இருந்த காலத்தில் அதனைப் பொறுப்பேற்று, அந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கான நிதி உதவிகளை மேற்கொண்டு, மேற்படி வீட்டுத் திட்ட வீடுகளைக் கைவிட்டு ஒரு சாரார் சென்றிருந்த நிலையில், அக் காலகட்டத்தில் காணி, வீடுகளற்ற நிலையில் மீளக் குடியேற வந்திருந்த குடும்பங்கள் அங்கே குடியமர்த்தப்பட்டன.

மேற்படி வீடமைப்புத் திட்டம் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குரிய எஞ்சிய காணியில், கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, மிகவும் பாதிக்கப்பட்டிருந்த காணி, வீடுகளற்ற சுமார் 100 வரையிலான குடும்பங்கள் வீடுகளை அமைத்து குடியேறியிருந்தன. மேலும், இதே காணியில் சிங்கள மக்களும் குடியேறியுள்ள நிலையில், விசேட அதிரடிப் படையினரும், இராணுவத்தினரும் நிலை கொண்டுள்ளதுடன், அவர்களுக்கென ஒரு பௌத்த விஹாரையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்படி 100 குடும்பங்களில் 65 குடும்பங்கள் அத்துமீறி அங்கே குடியிருப்பதாகக் கூறப்பட்டு, தேசிய வீடமைப்பு அதிகார சபையானது சாவகச்சேரி நீதிமன்றத்திலே தனித்தனியான வழக்குகளை மேற்படி 65 குடும்பங்களுக்கும் எதிராக கடந்த மாதம் 03ஆம் திகதி தாக்கல் செய்திருப்பதாகவும், இந்த வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் நான் கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளேன்.

இந்த விடயம் தொடர்பில் கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் உரிய அவதானத்தினைச் செலுத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் மேற்படி குடும்பங்களுக்கு அதே இடத்தில் காணியும், வீட்டுத் திட்டமும் வழங்குவதற்கு ஒரு விசேட ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன, கடந்த காலங்களில் வீடமைப்புக் கடன்களைப் பெற்றவர்களது நிலுவையில் இருக்கின்ற கடன் தொகைகள் மற்றும் தண்டப் பணங்கள் அறவிடுகின்ற செயற்பாடுகள் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டுவர வேண்டியுள்ளது. இது தொடர்பில் நான் ஒரு கேள்வியும் கௌரவ அமைச்சர் அவர்களிடம் முன்வைத்திருக்கின்றேன்.

அதாவது, வீட்டுக் கடன் பெற்றவர்களில் சிலர் குறிப்பாக, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தங்களது பொருளாதார நிலைமை காரணமாக அந்தக் கடனை – தண்டப் பணத்தினை மீளச் செலுத்த இயலாத நிலையில் இருக்கின்றனர். எமது பகுதிகளைப் பொறுத்த வரையில் வறுமை நிலையானது மிகவும் தாராளமாகவே நிலை கொண்டுள்ள காரணத்தினாலும், குடும்ப பொருளாதாரத்தினை ஈட்டிக் கொள்வதற்கு போதியளவு தொழில்வாய்ப்புகள் இன்மையினாலும் இத்தகைய நிலைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, எமது மக்களின் வாழ்க்கை நிலைமைகளை அவதானத்தில் கொண்டு, இந்த தொகைளை இரத்துச் செய்வதற்கும் கௌரவ அமைச்சர் அவர்கள் ஒரு விஷேட ஏற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும் எனவும் இந்தச் சந்தர்ப்பத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த நாட்டினைப் பொறுத்த வரையில் இன்று நிர்மாணத் துறையின் விருத்தி தொடர்பில் மிக அதிகமாகவே பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும், தொழில்வாய்ப்புகளின் உருவாக்கங்களுக்கும் இத்துறையானது மிகவும் அத்தியாவசியமானதொரு துறையாகவே இன்று இந்த நாட்டில் எழுந்து வருகின்ற நிலையில், அதற்குரிய வாய்ப்புகளை ஒழுங்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு இந்த நாடு கொண்டிருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

கட்டிடத் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் இந்த நாடு முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் ஏராளமாகும். அதிலும், தரமான மூலப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதென்பது அதைவிட சிரமமான விடயமாக இருக்கின்றது.

குறிப்பாக, கட்டிடத் தேவைகளுக்கென மணலைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஏராளமாகும். வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மணல் பிரச்சினையானது மிக அதிகமாகவே காணப்படும் அதே வேளை திருட்டு மணல் அகழ்வுகளும் பாரியளவில் இடம்பெற்று வருகின்றன.

கடந்த காலங்களில் யாழ் குடாநாட்டில் மணல் விநியோக நடவடிக்கைகள் சட்டரீதியாக, நியாயமான வழிமுறைகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வந்திருந்த நிலையில் குடாநாட்டில் மணல் தட்டுப்பாடுகளுக்கோ, திருட்டு மணல் அகழ்வுகளுக்கோ வாய்ப்புகள் இருக்கவில்லை.

ஆனால், தற்போது நிலைமை அவ்வாறில்லை என்றே நாளாந்தம் ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.

வடக்கு மாகாணத்திலே யாழ்ப்பாணம் தொடக்கம் வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் திருட்டு மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மணலுக்கான செயற்கையான தட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய செயற்பாடுகள் காரணமாக வடக்கு மாகாணத்திலே கட்டுமானப் பணிகளின் ஸ்தம்பித நிலையினை பரவலாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் கட்டிட நிர்மாணப் பணிகளின்போது உழைப்பாளர்களின் பற்றாக்குறையானது இந்த நாட்டில் பொதுவாகவே காணப்படுகின்ற ஒரு குறைபாடாகவே இருந்து வருகின்றது.

1995ஆம் வருடத்தில் குத்தகைக்காரர்களினால் பொறுப்பேற்கப்பட்டிருந்த நிர்மாணப் பணிகளின் பெறுமதியானது 15 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில் 2015ஆம் ஆண்டு இப் பெறுமதியானது 200 பில்லியன் ரூபாவரையில் அதிகரித்துள்ள நிலையில் – அதாவது 1233 வீதமாக அதிகரித்துள்ள நிலையில் இதற்கு ஏதுவாக உழைப்பாளர்கள் படையணியின் வளர்ச்சியானது நூற்றுக்கு 8 வீதமே ஆகுமென மத்திய வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

எனவே, இன்றைய இந்த நாட்டின் கட்டிட நிர்மாணத்துறையில் மனித உழைப்பு என்பது மிகவும் அரிதாகவே இருந்து வருகின்றமை அவதானிக்கத் தக்கது.

இந்த நாட்டில் தொழில்லவாய்ப்புகள் இன்றிய நிலையில் பல ஆயிரக் கணக்கானோர் இருக்கின்ற நிலையில், இருக்கின்ற தொழில்வாய்ப்புகளுக்குரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு இயலாதுள்ளமை வேதனைக்குரியதொரு வியடமாகவே தொடர்கின்றது.

எனவே, கட்டிட நிர்மாணத்துறை தொடர்பிலான கற்கைகளின் பரவலாக்கல்கள் அவசியமாகின்றன. அதுவும், நவீன தொழில்நுட்பங்கள் உள்வாங்கப்பட்டதான கற்கைகள் மிகவும் அத்தியாவசிய தேவையாகவே இருக்கின்றமையினால், இது தொடர்பில் முக்கிய அவதானமெடுப்பது கட்டாயமாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

கட்டிட நிர்மாணத்துறையில் ஈடுபடுகின்ற பலரும் பாரம்பரிய எல்லைகளிலிருந்து இன்னமும் மீளாத நிலையைக் காணக் கூடியதாகவுள்ளது. இதன் காரணமாக இத்துறை சார்ந்த நிறுவனங்களில் நிதி முகாமைத்துவம், தொழில்நுட்பம்;, திட்ட முகாமைத்தவம் போன்ற பல்வேறு துறைகள் பாரிய பின்னடைவுகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலை ஏற்படுகின்றது. எனவே, இந்த விடயமும் அவதானத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

மேலும், இங்கே இந்த இணை மனைகள் அல்லது தொடர்மாடிக் குடியிருப்புகள் தொடர்பில் ஒரு கோரிக்கையினை முன்வைக்;க விரும்புகின்றேன். அதாவது, கொழும்பு, வேகந்தை அடுக்குமாடி குடியிருப்பின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரிய வருகின்றது. 1971ஆம் ஆண்டு அப்போதைய வீடமைப்பு அமைச்சராக இருந்த அமரர் பீற்றர் கெனமன் அவர்களால் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடமைப்புத் திட்டமானது, தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் பராமரிக்கப்பட்டு வந்துள்ள போதிலும், கடந்த 2003ஆம் ஆண்டு தொடக்கம் அந்தப் பராமரிப்பு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகின்றது.

தற்போதைய நிலையில் இந்த வீடமைப்புத் திட்டக் கட்டிடமானது எப்போதும் இடிந்து விழுகின்ற நிலைமையிலேயே இருக்கின்றதாக தெரிய வருகின்ற நிலையில், இங்கு குடியிருக்கின்ற மக்களை அதே பகுதியில் குடியேற்றுவதற்கு ஏதுவாக வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு மேற்படி கட்டிடம் மோசமான நிலையினை அடைந்துள்ளதாகவே தெரிய வருகின்றது. எனவே, ஏதாவது ஆபத்துகள் நேருவதற்கு முன்பதாக நல்லதொரு ஏற்பாட்டினை கௌரவ அமைச்சர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, விடைபெறுகின்றேன்.

நன்றி.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா29 ஜனவரி 2004 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
அனைத்து இன மக்களையும் ‘இலங்கையர்கள்’ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியம் - நாடாளுமன்றத்...
நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் - வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்....

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
உள்ளளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால்  மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்- டக்ள...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு தொடர்ந்து நிவாரணமும் உரிய நஷ்டஈடும் வழங்கப்பட வேண்டும் - ...