நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்றால், நாட்டைக் கெடுப்பவர்கள் யார்? நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முன்னிலையில் டக்ளஸ் எம்.பி கேள்வி

Friday, November 17th, 2017

எமது மக்களால் கைவிடப்பட்டிருந்த காணி, நிலங்கள் பல வருட கால பாவனை இன்றிய நிலையில், மரங்கள் வளர்ந்து, காடுகளாகிவிட்டுள்ளன. இவ்வாறு, காடுகள் வளர்ந்த இடங்கள் எல்லாம், வனத்துறைக்கு உரியது என்றும், எமது மக்களால் கைவிடப்பட்டிருந்த கால்நடைகள் நடமாடும் பகுதிகள் எல்லாம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு உரியது என்றும், எமது மக்களது வரலாற்று வழிபாட்டு இடங்களை எல்லாம் மூடி மறைத்துவிட்டு, அது தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது என்றும் எல்லைகள் பல்வேறு துறையினராலும் போடப்பட்டு, கையகப்படுத்தப்பட்டால், எமது மக்கள் வேறு எங்கே போவது? என்றே கேட்க வேண்டியிருக்கின்றது என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் அடங்களாக மொத்தமாக 24 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபாலவும் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகி இருந்து உரைகளைக் கெட்டுக்கொண்டிருக்கையில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள் –

எமது நாட்டில் 19வது திருத்தச் சட்டத்தின் மூலமாக சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர், அந்த ஆணைக் குழுக்களுக்குமாகச் சேர்த்தே நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.

எமது நாட்டில்  சுயாதீனக் ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னர், அது தொடர்பில் பாரியதொரு எதிர்பார்ப்பு கடந்த காலங்களில் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. மேற்படி சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு, சில மாதங்கள் வரையில் எமது மக்கள் மத்தியில் இருந்த அந்த எதிர்பார்ப்பானது, இன்று இருக்கின்றதா?

இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் உண்மையான நோக்கங்கள் எவை? சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபிப்போம் எனத் தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்காக ஸ்தாபிக்கப்பட்டனவா?  அல்லது, இதோ சுயாதீனக் ஆணைக்குழுக்களை ஸ்தாபித்துவிட்டோம் எனக் கூறுவதற்காக ஸ்தாபிக்கப்பட்டனவா? இந்த அரசைக் கொண்டு வந்ததாகக் கூறுகின்ற சிவில் அமைப்புகளின் வற்புறுத்தலுக்காக ஸ்தாபிக்கப்பட்டனவா? போன்ற கேள்விகள் இன்று எமது மக்கள் மத்தியில் ஏற்படும் வகையில் மேற்படி சில சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும்

எல்லை நிர்ணய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் எல்லை என்ன? தேர்தலுக்கான வட்டாரங்கள் – தொகுதிகளை மாத்திரம் நிர்ணயம் செய்வதா?  என்ற கேள்வி எழுகின்றது.

எமது பகுதிகளைப் பொறுத்தவரையில் வன இலாக்காவினர் வந்து எல்லைகளைப் போட்டு அது அவர்களுக்குரியது என காணிகளை ஒதுக்குகின்றனர். வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வந்து எல்லைகளைப் போட்டு அது அவர்களுக்குரியது என காணிகளை ஒதுக்குகின்றனர். தொல்பொருள் திணைக்களத்தினர் வந்து அது அவர்களுக்குரியது என காணிகளை ஒதுக்குகின்றனர். மகாவலி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் வந்து  எல்லைகள் போட்டு, அது அவர்களுக்குரியது என காணிகளை ஒதுக்குகின்றனர்.

இந்த நிலையில், எமது மக்கள் எங்கே  போய் குடியிருப்பது? எங்கே போய் தொழில் செய்வது? என்ற நிலை எமது பகுதிகளில் தோன்றியிருக்கின்றது.

இந்த நாட்டில், சுமார் மூன்று தசாப்த காலங்களாக பாரிய யுத்தம் ஒன்று நடந்தது என்பதையும், இதன் காரணமாக நேரடிப் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்த எமது மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தங்களது  சொந்த காணி, நிலங்களைவிட்டு பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து  சென்றனர் என்பதையும் நான் இங்கு புதிதாகக் கூற வேண்டியதில்லை.

அத்தகையதொரு நிலையில், எமது மக்களால் கைவிடப்பட்டிருந்த காணி, நிலங்கள் பல வருட கால பாவனை இன்றிய நிலையில், மரங்கள் வளர்ந்து, காடுகளாகிவிட்டுள்ளன. இவ்வாறு, காடுகள் வளர்ந்த இடங்கள் எல்லாம், வனத்துறைக்கு உரியது என்றும், எமது மக்களால் கைவிடப்பட்டிருந்த கால்நடைகள் நடமாடும் பகுதிகள் எல்லாம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு உரியது என்றும், எமது மக்களது வரலாற்று வழிபாட்டு இடங்களை எல்லாம் மூடி மறைத்துவிட்டு, அது தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது என்றும் எல்லைகள் பல்வேறு துறையினராலும் போடப்பட்டு, கையகப்படுத்தப்பட்டால், எமது மக்கள் வேறு எங்கே போவது? என்றே கேட்க வேண்டியிருக்கின்றது.

இந்த நிலையில், ஒவ்வொரு துறையினரும் தாங்கள் விரும்பிய வகையில் எல்லைகளை நிர்ணயிக்கின்ற நாட்டில், எல்லை நிர்ணய சபை எதற்கு? என்ற கேள்வியே எமது மக்கள் மத்தியில் இன்று எழுந்துள்ளது.

அந்த வகையில் நாட்டின் அனைத்து எல்லைகள் நிர்ணயப் பணிகளும் மேற்படி  ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்பட ல் வேண்டும் என்கின்ற அவசியம் தற்போதைய நிலையில் வலியுறுத்தப்படுவதாகவே காணப்படுகின்றது.

சுயாதீன ஆணைக்குழுக்களின் தேவை என்ன? என்ற கேள்வி எழுகின்றபோது, நாட்டை நல்ல முறையில் கட்டியெழுப்புவதற்காக! என்றொரு பதிலும் கிடைக்கின்றது. அப்படியானால், நாட்டைக் கெடுப்பவர்கள் யார்? என்றொரு கேள்வி எழுகின்றது! அதற்கு அரசியல்வாதிகள் என்றொரு பதிலும் முன்வைக்கப்படுகின்றது. இந்த அரசியல்வாதிகள் யார்? தேர்தல்களில் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்களது பிரதிநிதிகள் என்பதே இதற்கான பதிலாகும். தேர்தல் என்பது எமது நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்துகின்ற ஒரு முறைமையாக இருக்கின்றது.

மக்களால் கோரப்படுகின்ற அனைத்தையும் அரசியல்வாதிகளால் சுயாதீனமாக மேற்கொள்ள முடியாது என்ற நிலையிலேயே சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து கிடைப்பதில்லை எனக் கருதப்படுகின்ற சுயாதீனமானது, அதிகாரிகளின் மூலமாக மக்களுக்கு நியாயமான முறையில் கிட்டுமா? என்பதுவும் ஒரு சாரார் மத்தியில் நிலவுகின்ற கேள்வியாகவே இருக்கின்றது.

இந்தக் கேள்வி எழுவதற்குக் காரணமாக, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு

தொடர்பிலான விடயம் முன்வைக்கப்படுகின்றது. இந்த மூன்று கைதிகளின் வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், சாட்சிகளின் பாதுகாப்பு கருதி என்கின்ற காரணத்தைக் காட்டி, இந்த வழக்கினை அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றுகின்ற விடயம் குறித்தே இத்தகையதொரு நிலை எமது மக்களிடையே எழுந்துள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின்போது, ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும், விசாரணை மேற்கொள்ளப்படுகின்ற கட்டிட வளாகத்திற்கும், சாட்சிகளுக்கும், சாட்சிகளின் குடும்பங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகின்ற நிலையில், மேற்படி மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கின் சாட்சிகளுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு வழங்க முடியாதா? பாரபட்சங்கள்… புறக்கணிப்புகள், தவறுகள்… எங்கிருந்து ஏற்படுகின்றன? ஏன்?.. என்றே கேட்கத் தோன்றுகின்றது.

அரசியல்வாதிகள் சுயாதீனமாக செயற்படுவதில்லை என்ற நிலையிலேயே சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற நிலையில், ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மீது அரசியல் அழுத்தங்கள் செலுத்தப்படுகின்றனவா? என்ற கேள்வியும், செலுத்தப்படுகின்றன என்றால், பிறகேன் இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள்?… என்ற கேள்வியும் எழாமல் இருக்க வழியில்லை.

எமது நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பிருந்த நிலைமைகளையும், சுயாதீன ஆணைக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இன்றுள்ள நிலைமைகளயும் ஒப்பிட்டுப் பாரக்க வேண்டும்.

மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா?… அந்த மாற்றங்கள் எமது மக்களுக்கு என்னென்ன பயன்களை அளித்துள்ளன?.. என்பவை தொடர்பில் முன்னேற்ற  விபரங்கள் ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும். அவ்வாறின்றி, ஸ்தாபித்தோம், கைவிட்டோம் என்ற நிலை இருக்குமானால், மேலும், மேலும் மக்களது நிதியையே நாம் வீண் விரயம் செய்து வருகின்றமைக்கு ஆட்பட்டு விடுவோம்.

‘சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியலில் இருந்து விலகி செயற்பட வேண்டும். நீதி, நியாயம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் முறையாகப் பேணப்படுவது முக்கியமாகும். சட்டம் அனைவருக்கும் சமமாக இருப்பது அவசியமாகும்’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வலியுறுத்தியுள்ளமையை இங்கு மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அரசாங்க சேவை ஆணைக்குழு இன்று செயற்பாட்டில் இருக்கின்ற நிலையில், அரச நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் என்பவை யாவும் மேற்படி ஆணைக்குழு மூலமாகவே இடம்பெறுகின்றனவா? என்ற கேள்வியும் எமது மக்களிடையே இல்லாமல் இல்லை.

அண்மைக்கால கல்வித்துறை சார்ந்த நியமனங்கள், பதவி உயர்வுகள், சமுர்த்தி துiறார்ந்த நியமனங்கள் போன்றவை தொடர்பில் எமது மக்களிடையே மேலும்

விரக்தி நிலை ஏற்பட்டு வருவதையே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது

என்பதை இந்த இடத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன்.

பொதுவாகவே இந்த நாட்டு மக்களிடையே அரச நியமனங்கள் தொடர்பில் பல காலமாக நிலவி வந்திருந்த அதிருப்தி நிலையானது, சுயாதீன அரசாங்க சேவை ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரும் தொடர்வதையே ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த நாட்டில் ஏற்கனவே இருக்கின்ற ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதும் பல்வேறு பிரச்சினைகளுக்கு, சிக்கல்களுக்குக் காரணமாகின்றன. அந்தவகையில,; முன்னாள் ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச அவர்களால் கொண்டுவரப்பட்ட 1990ஃ15ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம், அரச நியமனங்களில் இன விகிகதாசாரத்தைப் பேணும் வழிமுறைகளை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும்  பின்பற்றுவதற்கு ஏற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இந்த ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் தொடர்பிலும் இந்த இன விகிகதாசாரம் பேணப்பட வேண்டும் எனவும் இந்தச் சந்தர்ப்பத்திலும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதே போன்று, தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதென்று பொலிஸ் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பிலும் இன்னும் தெளிவற்ற நிலைமைகளே மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. வழக்குகளைத் தாக்கல் செய்வதில் பொலிஸார் அதிக சிரத்தைக் காட்டுவதில்லை என நீதிமன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருடந்தோறும் சுமார் 9,000க்கும், 10,000க்கும் இடைப்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும், இதில் அதிகளவிலான முறைப்பாடுகள் சித்திரவதைகள் தொடர்பிலானவை என்றும் கூறப்படுகின்றது. இத்தகைய விடயங்களில் பொலிஸார், மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு என்பன இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளன. எனினும், எமது நாட்டில் அத்தகையதொரு நிலைப்பாடு பேணப்பட்டு வருகின்றதா? என்பது கேள்விக் குறியாகும்.

அதே நேரம், மனித உரிமைகள் ஆணைக்குழுவானது பெயருக்கு மாத்திரம் இருந்துவிடாது, பலமான முறையில் செயற்பட முன்வர வேண்டியது அவசியமாகும் என்பதுடன், கிடைக்கின்ற முறைப்பாடுகளை உடனுக்குடன் விசாரிப்பதற்கும் கரிசணை காட்ட வேண்டும். ஒரு யுத்தச் சூழல் கடந்த, நிலை மாற்றுக் காலத்தில் தேசிய நல்லிணக்கத்தினை நோக்கியப் பாதையில் நாம் நிற்கின்றோம் என்பதை மனித உரிமைகள் தொடர்பில் செயலாற்றுகின்றவர்கள் மறந்துவிடக் கூடாது.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு 1228 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஒருவர் மற்றவரது உரிமைகளை மீறாதிருக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டியது ஓர் அரசின் கடமையாகும்.

அத்தகைய கடமைகள் ஒழுங்குற நிறைவேற்றப்படாத நிலைகளில், மனித உரிமையானது அரசின்மீது அல்லது அரசுக்கு எதிராக எழுப்பப்படுகின்ற தனி மனிதக் கேள்விகளாகவே தற்காலத்தில் உருவெடுத்துள்ளன. இது தொடர்பில் அரசு அவதானம் செலுத்த வேண்டும் எனக் கேட்டக் கொள்கின்றேன்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகவும், அதே நேரம், சுயாதீன ஆணைக்குழுக்கள்மீது எமது நாட்டு மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் சிதைந்து விடாத வகையலும்; செயற்பட வேண்டும். அதற்குரிய சூழலை உரிய அனைத்துத் தரப்பினரும் இணைந்து ஏற்படுத்த வேண்டும். மேற்படி சுயாதீன ஆணைக்குழுக்கள்மீது மக்கள் சந்தேகம் கொள்கின்ற வகையிலான செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

சில ஆணைக் குழுக்களுக்கென ஒதுக்கப்படுகின்ற நிதியானது, உரிய காலகட்டத்தில் செலவு செய்யப்படாமல், திறைசேரிக்கு மீளத் திரும்புவதாகவும், கணக்காய்வாளர் தலைமை அதிபதி அலுவலகத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளதாக அண்மையில் ஒரு செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இந்தச் செய்தி உண்மையானால், இத்தகைய நிலைமைகள் ஏன் ஏற்படுகின்றன என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.

இந்த அரசு ஆட்சிபீடமேறிய ஆரம்ப காலகட்டத்தில் அதிகம் பேசப்பட்டிருந்த இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணைகள் ஆணைக்குழுவுக்கு இன்று என்ன நடந்துள்ளது? என்றே தெரியாத அளவுக்கு நிலைமை மாறிவிட்டுள்ளது.

குற்றங்கள் சுமத்தப்படுகின்ற நபர்களது பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும், சமூகத்தில் அவர்களுக்கிருக்கின்ற நற்பெயரை பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும், ஒருவரால் ஒரு குற்றச்சாட்டு ஒரு நபர்மீது சுமத்தப்படுமானால், அது உண்மையானதா? பொய்யானதா என்பது குறித்து ஆராய்ந்து, அதனை உறுதிப்படுத்தும் வரையில் அதனை பகிரங்கப்படுத்தாது, குற்றம் சுமத்தப்பட்டவர் மீது வீண்பழிகள் சுமத்தப்படாத வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்வதும், பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துவோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடிய சூழ்நிலைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டியதுயதும் அவசியமாகும். இந்த விடயம் தொடர்பில் மேற்படி ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

உச்ச நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் போதியளவு தமிழ் மொழி மூலமான நீதிபதிகளை நியமிப்பதற்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்ற நீதிமன்றங்களில் மேலதிகமாக நீதிபதிகளை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் தமிழ் மொழியோடு, தமிழ் பண்பாட்டு, கலாசார விழுமியங்களுடன் பரிச்சயமானவர்களாக இருத்தலும் அவசியமாகும். தமிழ் மொழி மூலமான மொழிப் பயன்பாட்டையும் கலாசாரப்  பண்பாட்டையும் கொண்டவர்களது பல வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு தீர்வமாக இந்த நடைமுறை அமையும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

அத்துடன், அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதியளவு மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பது குறித்தும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன். இந்ட விடயத்தை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவும் சாதகமாகப் பரிசீலிக்க வேண்டும்.

கடந்தகால யுத்தப் பாதிப்புகள் மற்றும் தொடரும் இயற்கை அனர்த்தப் பாதிப்புகள் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அவதானத்தில் கொண்டும், பின்தங்கியப் பகுதிகளை அவதானத்தில் கொண்டும், அப்பகுதிகளுக்கு அதிகளவிலான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு நிதி ஆணைக்குழுவானது நிதி ஒதுக்கீடுகளுக்கான ஏற்பாடுகளின் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

தேசிய கல்வி ஆணைக்குழுவானது செயற்திறன் மிக்கதாக செயற்பட்டிருந்தால், இன்று இந்த நாட்டில் நிலவிவருகின்ற பல்வேறு பிரச்சினைகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்காது. குறிப்பாக, எமது நாட்டக்கு அவசியமான கல்விக் கொள்கையுடன் செயற்பட்டிருந்தால், எமது நாட்டில்  இனங்களுக்கிடையிலான சந்தேகங்கள், முரண்பாடுகள், தொழில்வாய்ப்பின்மை, சமூகங்களின் மத்தியில் நாட்டுப் பற்றின்மை போன்ற பல்வேறு அடிப்படை காரணிகளை அகற்றக்கூடியதாக இருந்திருக்கும். அந்த வகையில் இந்த ஆணைக்குழு தனது பணிகளை மேற்கொள்வதற்கு தவறியுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.

எமது நாட்டுக்கு தேசிய கல்வி முறைமையொன்று தேவை. ஆரம்பத்திலிருந்தே தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியைக் கற்பதற்கும், சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பதற்குமான பலமான ஏற்பாடுகள் அவசியமாகும். இந்த நாட்டில் ஒன்றாக வாழுகின்ற சகோதர மக்களாகிய தமிழ் மக்களும், சிங்கள மக்களும் தங்களது உணர்வுகளை – கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக அந்நிய ஆங்கில மொழியையே பயன்படுத்த வேண்டியிருப்பதும், அதுவும் தெரியாத நிலையில் ஊமைகளாக இருக்க வேண்டி இருப்பதுவும் துரதிஸ்டவசமான நிலைமைகளாகும்.

அந்த வகையில் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் இலங்கையர்களே என்ற உணர்வினை ஏற்படுத்தும் வகையிலும், நவீன தொழில்நுட்ப உலகின் தொழில் கேள்விகளுக்கு ஏற்றவாறும் சரியானதும், நிலையானதுமான கொள்கைகள் வகுக்கப்பட்டு, எமது கல்வித் துறையினை முன்னேற்றுவதற்கு உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

அத்துடன், அண்மைக்காலமாக பரீட்சைகள் தொடர்பில் ஏற்பட்டு வருகின்ற குளறுபடிகள் மீள ஏற்படாத வகையிலான உறுதியான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், ஆசிரியர்களுக்கான ஊதிய  மட்டங்களை அதிகரிப்பது தொடர்பிலும் இந்த ஆணைக்குழு அக்கறைகாட்ட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு தற்போது செயற்பாட்டில் உள்ள நிலையில், இது தொடர்பிலான சரியான அறிவுகள் பொதுவாக சாதாரண மக்க

ளிடையே காணப்படாத ஒரு நிலை தென்படுகின்றது. எனவே, இந்த ஆணைக்குழு பற்றிய விழிப்புணர்வுகளை பொது மக்கள் மத்தியில் பரவலாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.  இதற்கு எமது அண்டைய நாடான இந்தியாவின் கேரள மாநிலத்தை எடுத்துக் கொள்ள முடியும். அங்கு அரசு மேற்கொள்கின்ற அனைத்துப் பணிகள் தொடர்பிலான நிதி முதற்கொண்டு அனைத்து விபரங்களும் பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்ற ஏற்பாடுகள் மிக சிறந்த முறையில் செயற்படுத்தப்படுவதன் காரணமாக ஊழல், மோசடிகள் அற்றதொரு ஆட்சி நிர்வாகத்தினையும், முன்னேற்றகரமான அபிவிருத்தியையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

அந்த வகையில், சுயாதீன ஆணைக்குழுக்கள் உட்பட அனைத்து அரச நிறுவனங்களும் செயற்திறன் மிக்கவையாக செயற்றப்பட வேண்டும். அதுவே இந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். இதற்குப் போதுமான அதிகாரங்களையும், வளங்களையும், வளவாளர்களையும் வழங்க அரசு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மேற்படி ஆணைக்குழுக்களினால் உரிய பயன்கள் எட்டப்போவதில்லை. எனவே, இது தொடர்பில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

அதே நேரம், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், ஜனாதிபதி அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது அதன் நிலை என்ன என்பது பற்றி அறிய விரும்புவதுடன், பிரதமர் அலுவலகமானது வடக்கு – கிழக்கு மற்றும் மலையக மக்களது பிரச்சினைகளுடன் அன்றாடம் கலந்துரையாடுகின்ற வகையிலானதொரு ஒருங்கிணைப்பிற்கு ஏதுவான ஏற்பாடுகளை வலுவுள்ளதாகக் கொண்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்து விடைபெறுகின்றேன் என்றும் தெரிவித்தார்.

 

Related posts:


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 8 டிசம்பர் 2012  அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
வரிச் சுமைகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
வாழ்வாதாரங்களுக்கும்,வலுவாதாரங்க ளுக்கும் கட்டாந்தரையிலிருந்தே முயற்சிக்க வேண்டிய நிலையில் எமது மக்க...