நாட்டின் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம்  – புதிய அரசியல் யாப்பு தொடர்பான விவாதத்தில் டக்ளஸ் எம் .பி!

Wednesday, November 1st, 2017

இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வகையிலான அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம்  என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்த விவாதம் இன்றையதினம் (01.11.2017) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்

செயலாளர் நாயகம் அவர்களது முழுமையான உரை வருமாறு..

கௌரவ தலைவர் அவர்களே!

உத்தேச புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை குறித்த பல்வேறு கருத்துகள் அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் முன்வைக்கப்பட்டு வருகின்ற ஒரு நிலையில், அது தொடர்பில் அரசியல் யாப்புச் சபையின் முன்பாக மீண்டும் எனது கருத்தினைப் பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது நாட்டுக்கு புதிய அரசியல் யாப்பின் தேவை உணரப்பட்டிருப்பதாக ஒரு சாரார் சுட்டிக்காட்டி வருகின்ற நிலையில், புதிய அரசியல் யாப்பு இந்த நாட்டிற்குத் தேவையில்லை என இன்னொரு சாராரும் கூறி வருவதுடன், அதற்கென தத்தமது பக்கங்களைச் சார்ந்து பல்வேறு நியாயங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

1978ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் கடந்த 40 வருடங்களாக பாவனையில் இருந்து வருகின்றது. இதுவரை இந்த அரசியலமைப்புச் சட்டம் 19 திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த கால அனுபவங்கள் தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக இந்த நாட்டில் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வளமான நாட்டை காண்பதற்கு தேவையான பொருளாதார சுபீட்சத்தையும், சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவையும் கட்டியெழுப்பக் கூடிய வகையில் இந்த நாடு எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது புதிதாகச் சிந்திக்க வேண்டிய ஒரு கடப்பாடு இந்த சபையில் அங்கம் வகிக்கின்ற சகல உறுப்பினர்களுக்கும் இருக்கின்றது என்று நான் நம்புகின்றேன்.

எதிர்கால சந்ததியினருக்கு நிம்மதியானதும், சந்தோசமானதும், சுபீட்சமானதுமான நாடு ஒன்றை காண வேணும் என்ற கனவை நிறைவேற்றி வைக்கக் கூடிய வகையில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கக் கூடிய வகையில், அதற்கு வழி அமைக்கக் கூடிய ஒரு சிறந்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை பலர்  வலியுறுத்தி வருகின்றனர்.

அதனையும் நாம் ஏற்றுக் கொள்ளும் அதே வேளை அத்தகைய புதிய அரசியல் யாப்பானது இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் கருத்துகளுக்கு மதிப்பளித்தே உருவாக்கப்பட வேண்டும்  என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

குறிப்பாக, எமது மக்களுக்கான அதிகாரப் பகிர்வு முதற்கொண்டு, சமூக, பொருளாதார, கலாசார, சூழல் உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற வகையிலான – இந்த உரிமைகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் செல்லக்கூடிய வகையிலான புதிய அரசியல் யாப்பொன்றின் தேவை குறித்து பெரும்பாலான மக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தளவிற்கு மனித உரிமைகள் பற்றிப் பேசக்கூடிய நிலை உருவாகியுள்ள இந்த நாட்டில், இன்னமும் தமிழ் அரசியல் கைதிகள் எவ்விதமான விசாரணைகளும் இன்றி, பிணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வலிந்து காணாமற்போகச் செய்தவர்களது உறவினர்கள் தங்களுக்கான நியாயம் கோரி வீதிகளில் இறங்கி பல மாதங்களாகப் போராடி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினைகள் இருக்கின்றன? என்றும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. தமிழனாகப் பிறந்ததே பிரச்சினை என்றே இதற்கு பதில் கூற வேண்டியிருக்கின்றது.

எம்மைப் பொறுத்த வரையில் தமிழ் பேசும் மக்களுக்கு, அம் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான நியாயமான அரசியல் அதிகாரங்கள், சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் வேறு எவ்வகையிலும், மீளப் பெற இயலாத வகையில் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகின்றோம்.

அதே நேரம், அனைத்து மக்களும் புரிந்து கொள்கின்ற வகையிலான தீர்வாகவே அது அமைந்திருத்தல் வேண்டும். இல்லையேல், அது, இந்த நாட்டில் மீண்டும் ஒரு மோதல் உருவாகக்கூடிய நிலைக்கே இந்த நாட்டை தயார்படுத்திவிடும் என்பதை நாங்கள் மறந்துவிடக் கூடாது.

தமிழ் மக்கள், இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை கைவிடவோ, தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை கைவிடவோ தயாராக இல்லை. தமிழ் மக்கள் இலங்கையர்களாகவும் அதே நேரம், தமிழர்களாகவுமே வாழ விரும்புகின்றார்கள்.

தமிழ் மக்களது இந்த நியாயமான அபிலாசைகளை  கடந்தகால தமிழ் சிங்கள அரசியல்த் தலைமைகள் தங்களது சுயலாப அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டதன் காரணமாகவே சுமார் 30 வருடகால அழிவு யுத்தத்திற்கு இந்த நாடு முகம் கொடுத்திருந்தது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

தமிழ் பேசும் மக்கள் விரும்புகின்ற நியாயமான அரசியல் தீர்வானது, சகோதர சிங்கள மக்களுக்கோ, இந்த நாட்டின் இறைமைக்கோ விரோதமானதல்ல என்பதை இந்தச் சபையின் ஊடாக சகோதர சிங்கள மக்களுக்கு கூற விரும்புகின்றேன். அந்த வகையில், எமது நியாயமான கோரிக்கையினை சகோதர சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும், தற்போதைய எமது அரசியல் யாப்பில் இருக்கின்ற, 13வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை விடவும் முன்னேற்றகரமான அதிகாரப் பகிர்வுகளைக் கொண்ட வகையிலும் முழுமைப்படுத்தப்பட்ட புதிய அரசியல் யாப்பு எமது நாட்டில் நிறைவேற்றப்படுமாயின், அல்லது, புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படாமல், தற்போது நடைமுறையில் இருக்கின்ற அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுகளைவிட முன்னேற்கரமான அதிகாரப் பகிர்வுகளை உள்ளடக்கியதான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுமாயின் அதனை நாங்கள் ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

இத்தகைய புதிய ஏற்பாடுகள், தற்போதுள்ள 13வது திருத்தச் சட்டத்தில் உள்ளவாறான அதிகாரப் பகிர்வுக்கு எந்தவகையிலும் குறைந்ததாக இருப்பின், அதனை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

இந்த விடயத்தில், தமிழ் பேசும் மக்களுக்கான நியாயமான அரசியல் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற நாம், அது, ஒற்றையாட்சியாக, சமஷ;டியாக, அமெரிக்க மொடலாக, இந்திய மொடலாக, பின்லாந்து வரைபாக என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டுதான் வரவேண்டுமென்று வறட்டுப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. இவ்வாறு சொற் பதங்களை வைத்து, சிலம்பாட்டம் ஆடிக் கொண்டு இனியும் காலத்தைக் கடத்துவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை என்பதை அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

எமது நாட்டுக்குப் பொருத்தமான வகையிலானதும், எமது மக்களுக்கு போதிய அளவிலானதும்,  சட்ட ரீதியாகவோ அன்றி நிர்வாக ரீதியாகவோ எவ்வகையிலும், மீளப் பெற இயலாத வகையிலான நியாயமான அதிகாரப் பகிர்வையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

உத்தேச புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கையில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்கு இடங்கொடுக்காத வகையில், சமஷ்டி, ஒற்றையாட்சி போன்ற இத்தகைய சொற் பதங்கள் மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ணிவிடுவதால், அதன் ஊடாக எழுகின்ற எதிர்ப்புகள் நேர்மையான முயற்சிகளைக்கூட தடுத்து வருகின்ற நிலையினையே நாம் தொடர்ந்தும் கண்டு வருகின்றோம்.

சமஷ்டி என்ற சொற்பதம் சிங்கள மக்களுக்கு  சந்தேகத்தையும்,  ஒற்றையாட்சி என்ற சொற்பதம் தமிழ் மக்களுக்கு சந்தேகத்தையும் உருவாக்கியுள்ள ஒரு நிலைமை, காலகாலமாக எமது நாட்டில் முன்னிறுத்தப்பட்டு, இரு இனங்களுக்கிடையேயும் தமிழ் சிங்கள சுயலாப அரசியல்வாதிகளால் போஷித்து, வளர்க்கப்பட்டு வந்திருக்கின்றது.

இத்தகையதொரு சூழலில் இந்த அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களும் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் கடந்த தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக நேர்மையான முறையில் செயற்பட்டு வந்தாலும், இந்த உத்தேச புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கையில், ஏனைய பல நல்ல அம்சங்கள் உள்வாங்கப்பட்டிருந்தாலும், அந்த முயற்சிகள் வீணடிக்கப்பட்டுவிடும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தற்போது எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் எனக் கூறிக் கொள்பவர்களில் ஒரு சிலர், தங்களது புகழை, தகைமைகளை சமூகத்தின் முன் பறைசாற்றுவதற்காக தெரிவித்து வருகின்ற சில கருத்துக்கள்,  சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்ததைப் போன்று இனவாதத் தரப்பினருக்கு சாதகமாகி விட்டுள்ளன.

இந்த புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை தயாரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த ஆரம்ப காலகட்டத்தில், எமது அரசியல் யாப்பில் ஏற்கனவே இருக்கின்றவற்றை புதிதாக ஏற்படுத்துவதைப்போல், ‘உத்தேச புதிய அரசியல் யாப்பில் மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படும்’ என ஒருவர் தெரிவித்திருந்தார். தேவையற்றதொரு சந்தர்ப்பத்தில் திடீரென இப்படி ஒரு கருத்து வெளியிடப்பட்டதால், சந்தேகத்திற்கு உட்பட்டவர்கள் மத்தியில்  ஒரு குழப்பமான சூழ்நிலை தோன்றியிருந்தது. இந்த குழப்ப நிலை மாறுவதற்குள், ‘சமஷ்டி குணாதிசயங்களைக் கொண்டதாக உத்தேச புதிய அரசியல்; யாப்பு உருவாகுமென’ இன்னொருவர் கூறியிருந்தார். இதனால், ஏற்கனவே இருந்த குழப்ப நிலை அதிகரித்து, சில பௌத்த பீடங்களின் மகா நாயக்க தேரர்கள் புதிய அரசியல் யாப்பு இந்த நாட்டுக்குத் தேவையில்லை என அறிக்கை விடும் அளவிற்கு நிலைமை வந்திருந்தது. இன்று இந்த நிலைமையானது அனைத்து பௌத்த பீடங்களினதும் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

இப்போது இன்னுமொரு தேவையற்ற சர்ச்சை உருவாக்கப்பட்டு வருகின்றது. அதாவது, சிங்கள மொழியில் ஒற்றையாட்சியை ‘ஏக்கீய ராஜ்ய’  என்றும், தமிழ் மொழியில், ஒற்றையாட்சியை –  ஒருமித்த நாடு என்றும் குறிப்பிடப்பட்டு, ஒரு குழப்ப நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அரசின் தன்மை மற்றும் இந்த நாடு பற்றிய வியாக்கியானத்திற்கிடையிலான இந்த குழப்ப நிலை காரணமாக இன்று எமது நாட்டில் அனைத்து பௌத்த பீடங்கள், சட்டத்தரணிகள் சங்கம், மேலும் பல பொது அமைப்புகள், இடதுசாரிகள், புத்திஜீவிகள் இடையே ஒருவித பதற்ற நிலைமை உருவாகியுள்ளது. இந்தக் குழப்பம் ஏன்? எதற்காக? என நான் கேட்க விரும்புகின்றேன்.

தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கா?  ‘ஒருமித்த நாடு’ என தமிழில் மட்டும் எழுதிவிட்டால் மாத்திரம் தமிழ் மக்கள் தங்களுக்கு எல்லாம் கிடைத்துவிடும் என திருப்திப்பட்டு விடுவார்கள் என நினைத்துக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவா  இவ்வாறு செய்யப்பட்டதா?

இல்லை, சிங்கள மக்களுக்குத் தமிழ்த் தெரியாது என நினைத்து, சிங்கள மக்களை ஏமாற்றுவதாக எண்ணி இவ்வாறு செய்யப்பட்டதா? இல்லை, சிங்கள மக்களுக்கு தெரிய வந்து, சிங்கள மக்களின் எதிர்ப்புகளை, கோபங்களை தமிழ் மக்கள்மீது திருப்பிவிடலாம் என எண்ணி, திட்டமிட்டு இவ்வாறு செய்யப்பட்டதா?

இப்போது இத்தகைய நிலைமைதானே உருவாகி வருகின்றது? இனங்களுக்கிடையில் அதிகரித்துள்ள சந்தேகங்களை அகற்றி, அருகிப் போயிருக்கின்ற நமபிக்கையினைக் கட்டியெழுப்புவதற்கு பதிலாக, மேலும், மேலும் சந்தேகங்களை வலுப்படுத்துவதாகவே இந்த செயற்பாடு அமைந்திருப்பது மிகவும் வேதனையாகவே இருக்கின்றது.

‘ஏக்கீய ராஜ்ய’ என்ற சிங்கள சொற் பதத்திற்குரிய தமிழ் சொற்பதம் – வழக்கில் இருக்கின்ற சொற்பதம் ‘ஒற்றையாட்சி’ என்பதாகும். ‘ஒருமித்த நாடு’ என்ற தமிழ் சொற் பதத்திற்குரிய சிங்கள சொற் பதம்  ‘எக்வூ ரட்ட’ என்பதாகும். இந்த நிலையில், அரசின் தன்மை, ‘பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு என்பதை சிங்களப் பதமான ‘ஏக்கீய ராஜ்ய’ நன்கு விபரிக்கப்படுகிறது’ என இடைக்கால அறிக்கையில் தமிழில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், சிங்களத்தில் ‘ஏக்கீய ராஜ்ய’ – ஒற்றையாட்சி என்று சிங்கள மக்களுக்கும், அதனையே  ‘ஒருமித்து நாடு’ என்று தமிழ் மக்களுக்கும் வௌ;வேறு பெயர்களில் காட்சிப் படுத்துவதால் யாருக்கு என்ன இலாபம்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

தமிழ் மக்கள் இதனைப் புரிந்து கொள்ளாத வரையில், இப்படி ஒரு சொற் பதத்தை புகுத்தியவர்கள் இது தங்களது சாதனை என நினைக்கலாம். ஆனால், சிங்கள மக்கள் புரிந்து கொண்டால் சோதனை யாருக்கு என்பது தொடர்பிலும் இதை முன்மொழிந்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழ் மக்கள் – இந்து மக்கள், பிள்ளையார், விநாயகர், கஜமுகன், கணேஷ;, கணபதி என்று அழைக்கின்ற கடவுளை, சிங்கள மக்கள் ‘கணதெவி’ என்றழைப்பார்கள். ஒரு கடவுள். ஆனால், பல பெயர்கள். அதற்காக, கணேஷ; என்ற பெயர் கொண்ட ஒருவரை மக்கள் பிள்ளையார், விநாயகர், கஜமுகன், கணபதி என்று எல்லாம் அழைக்கப் போவதில்லை. அவரை கணேஷ என்றுதான்  மக்கள் அழைப்பார்கள். கேலிக்காக சிங்கள மக்களில் சிலர் ‘கணதெவி;’ என்றழைத்தாலும், அவர் கடவுளாகிவிடப் போவதில்லை.

ஒற்றையாட்சியை மிகத் தெளிவாகவே சிங்கள மொழியில் ‘ஏக்கீய ராஜ்ய’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அதனை தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக மாத்திரம் தமிழ் மொழியில் இன்னொரு பெயரைச் சூட்டி, – பெயரை மாத்திரம் சூட்டி அதாவது ‘ஒருமித்த நாடு’ என்பது அரசின் தன்மையாக இல்லாத நிலையில் ஒருமித்த நாடு என்று அழைப்பது அரசின் தன்மை குறித்தா? அல்லது, நாடு குறித்த வியாக்கியானமா? அவ்வாறு எதையாவது இந்த தமிழ்ச் சொற்பதம் குறித்து நிற்கிறது எனில், அதை ஏன் சிங்கள மொழியில் குறிப்பிடவில்லை? ‘ஏக்கீய ராஜ்ய’ எனும் ‘ஒற்றையாட்சி’ என்ற சிங்கள சொற்பதத்தை தமிழில் ‘ஒருமித்த நாடு’ எனக் குறிப்பிடப்படுவதன் ஊடாக மாத்திரம் அதிகரித்த அதிகாரங்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்துவிடுமா? இல்லை. அல்லது ‘ஒற்றையாட்சி’ என்ற சரியான தமிழ்ப் பதத்தை குறிப்பிட்டு விட்டால் அதிகாரங்கள் குறைந்து விடுமா? இல்லை. இணக்கப்பாடு காணப்படுகின்ற அதிகாரங்களே இருக்கும். அதுதான் உண்மை.

தமிழ் சொற்பதமோ, ஆங்கில சொற்பதமோ என்னென்ன கருத்துக்களை சுட்டிக்காட்டினாலும், இறுதியான தீர்வு சிங்கள சொற்பதம் சுட்டிக்காட்டும் கருத்தினையே கொண்டிருக்கும் என அரசாங்கத்தின் அனைத்து ஆவணங்களிலும் குறிப்பிடப்படுகின்ற நிலையில், தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றி விடலாம் என நினைத்தா இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனக் கேட்க விரும்புகின்றேன்.

இந்த  சொற் பதங்களின் இருவேறு அர்த்தங்களையும்  புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு தமிழ் மக்களும்,  சிங்கள மக்களும் அறிவிலிகள் அல்ல. சிங்கள மக்கள் அனைவருக்குமே தமிழ் தெரியாது என்றும், தமிழ் மக்கள் அனைவருக்குமே சிங்களம் தெரியாது என்றும் எண்ணிக் கொண்டு, இத்தகைய செயலில் ஈடுபடுபவர்களே அறிவிலிகளாக இருக்கக்கூடும் என நினைக்கின்றேன்.

பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனாலும், எல்லோரையும் எக் காலத்திலும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. இலங்கை அரசியல் யாப்பினை எடுத்துக் கொண்டால் 1972ஆம் ஆண்டிலிருந்து ‘ஏக்கீய ராஜ்ய’ ஒற்றையாட்சி எனும் பெயரையே இலங்கையின் அரசியல் யாப்பு கொண்டுள்ளது. தற்போதைய இடைக்கால அறிக்கையிலும் அதே முறைமையே முன்வைக்கப்பட்டுள்ளது. அரசின் தன்மை ‘ஏக்கீய ராஜ்ய’ – ஒற்றையாட்சியாகவே இருக்கும் எனக் கூறப்படுகின்றது. ஒருமித்த நாடு – ‘எக்வூ ரட்ட’ என்ற வகையில் அங்கு அரசின் தன்மை  குறிப்பிடப்படாத நிலையில், கானலைக் காட்டி நீர் என்று கூறும் கதையாக அல்லவா இந்த செயற்பாடு அமைந்திருக்கின்றது? அதாவது, வடக்கில் தமிழரசு கட்சி – TAMIL STATES PARTY என்றும் அதே கட்சியை தெற்கில் பெடரல் கட்சி FADARAL PARTY என்றும் கூறியது போல், இதனையும் அவ்வாறு மாறி, மாறிக் கூறலாம் என யாரும் நினைத்துவிட்டார்களா?

இத்தகைய நாடகம் தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாது, தமிழ் மக்களின்  வாக்குகளை மாத்திரமே குறிவைத்து ஆடப்பட்டிருக்கின்றது என்பது சிங்கள மக்களில் பலருக்குப் புரியாத  நிலையில்,  இத்தகைய சொற் பிரயோகத்தினால் தமிழ் மக்களுக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை என்பதுவும் உணரப்படாத நிலையில்,  இதன் ஊடாக நாடு பிரிக்கப்படுகின்றது என்ற நிலைப்பாட்டிற்கே சிங்கள மக்களில் பலரும் இன்று வந்திருக்கின்றார்கள்.

இன்று இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நியாயமானதொரு அரசியல் தீர்வுக்கான கலந்துரையாடலுக்கு சுமுகமானதொரு சூழ்நிலை காணப்படுகின்ற நிலையில், இத்தகைய குழப்பத்தை இந்த நாட்டில் உருவாக்குவது தேவைதானா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

இனியும் இந்த நாட்டில் குறுகிய அரசியல் சுயலாபங்களைக் கருதி எமது மக்களை தயவு செய்து ஏமாற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன். தமிழ் மக்களின் பெயரில் சிங்கள மக்களை ஏமாற்றாதீர்கள். சிங்கள மக்களின் பெயரில் தமிழ் மக்களை ஏமாற்றாதீர்கள். பொதுவாக இந்த நாட்டை  ஏமாற்றாதீர்கள் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் முன்னேற்றகரமானதொரு அரசியல் தீர்வைக் கொண்டுவந்தபோது, அதனை தயாரிப்பதிலும், தடுப்பதிலும் துணை போனதுபோல், தற்போதும் அதே நிலையில், இத்தகைய சொற்பத ஜாலங்களை முன்வைத்து அதனைத் தயாரிப்பதிலும், அதனையே முன்வைத்து, அதைத் தடுப்பதிலும் தமிழ் பிரதிநிதிகள் துணைபோகக் கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன். முயலுடனும் ஓடி, வேட்டை நாயுடனும் ஓடிய கதைபோல ஆகிவிடக்கூடாது.

கடந்தகால ஆட்சியில் வன்முறைக்கு தீர்வு காணப்பட்ட போதிலும், தேசிய நல்லிணக்கமானது வெற்றிபெற்றிருக்கவில்லை. அந்த வகையில் எமது நாட்டு மக்களிடையே சகோதர, சமத்துவ சூழலை ஏற்படுத்துவதற்கும், நல்ல நோக்கங்களை முன்வைத்து, தமிழ் மக்களை முன்னேற்றகரமான பாதையில் இட்டுச் செல்வதற்கும், ஜனாதிபதி அவர்களும், பிரதமர் அவர்களும்  மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்கு தமிழ் தலைமைகளும் ஆரோக்கியமான ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

கடந்தகாலங்களில் எமது மக்களுக்குக் கிடைத்திருந்த பொன்னான வாய்ப்புகளை எல்லாம் தமிழ் தலைமைகள் எமது மக்களுக்காகப் பயன்படுத்தத் தவறிவிட்ட வரலாறுகளையே நாம் கண்டு வந்துள்ளோம். இந்த நிலையில் இப்போதாவது மாற்றம் தேவை. அதுவே எமது மக்களுக்கு நன்மையைக் கொண்டு தரும். அந்த வகையில், புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான உள்ளடக்க விடயங்கள், அதனது தேவை என்பன குறித்த விடயங்களை வெறும் வாய்ப் பேச்சுடன் நிறுத்திக் கொள்ளாமல், மக்களிடையே கொண்டு செல்வதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும்.

உத்தேச புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்டாலும், அல்லது தற்போதுள்ள அரசியல் யாப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தாலும், சட்டவாக்கங்கள், ஒழுங்குவிதிகள் கொண்டு வரப்பட்டாலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கொண்டு வரப்படுகின்ற விடயங்கள் யாவும் முழுமையாக செயற்படுத்தப்படுகின்றன எனக் கூறுவதற்கில்லை.

குறிப்பாக, 1987ஆம் வருடத்தில் அரச கரும மொழிகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையின் அரச கரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும். தமிழும் அரச கரும மொழி ஒன்றாதல் வேண்டும் என எமது அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, சிங்களமும், தமிழும் இலங்கையின் அரச கரும மொழியாதல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எனினும்,  இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, இன்று 30 வருடங்கள் ஆகின்றன. இந்த 30 வருடங்களில் அரச கரும மொழிகள் சட்டம் முழுமையாக செயற்படுத்தப்பட்டுள்ளதா? இல்லை!

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலமான 13வது திருத்தச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள  அதிகாரங்கள் முழுமையாக இதுவரையில் மாகாண சபைகளின் ஊடாக செயற்படுத்தப்பட்டுள்ளனவா? இல்லை! காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. எமது பகுதிகளில் இருக்கின்ற தனியார் காணி, நிலங்கள்கூட எவ்விதமான சட்ட ஏற்பாடுகளும் இன்றி கையகப்படுத்தப்பட்டு, சொந்த காணி, நிலங்களை விடுவித்துக் கொள்வதற்காக எமது மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இப்படியே போனால், எமது மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களில் வாழ்ந்ததைவிட, அந்த காணி, நிலங்களுக்காகப் போராடி வீதியில் வாழ்ந்திருக்கும் காலமே அதிகமாக இருக்கும் நிலையே தோன்றியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்ஹ பிரேமதாச அவர்களது காலத்தில், அரச நியமனங்களில் இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் என 1990ஃ15ஆம் இலக்க சுற்றறிக்கை கொண்டு வரப்பட்டது, அது இன்று செயற்படுத்தப்படுகின்றதா? இல்லை!

இத்தகையதொரு நிலையில், தமிழ் மக்களுக்கு ஒருமித்த நாடு என்றும், சிங்கள மக்களுக்கு ‘ஏக்கீய ராஜ்ய’ – ஒற்றையாட்சி என்றும் கூறிக் கொண்டு, ஈரின மக்களையும் சந்தேகங்களுக்கு உட்படுத்தி, எதிரிகளாக்கி,  பிரித்து விடாமல், நடைமுறை சாத்தியமான வழிமுறைகளை முன்னெடுப்பதற்கும், அவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற முயற்சிகளை இதயசுத்தியுடன் செயற்படுத்துவதற்கும்  முன்வாருங்கள் என்றே நான் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது நாட்டைப் பொறுத்த வரையில், அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில், முன்னெடுக்கப்படக்கூடிய நடைமுறைச் சாத்தியமான வழிமுறை தொடர்பில் நாம் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்துள்ளோம்.

புதிய அரசியல் யாப்பு குறித்து அல்லது தற்போதுள்ள அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து முன்னெடுக்கப்படுகின்ற  முயற்சிகள் சாதகமான நிலையை எட்டுவதைவிட, பாதகமான நிலைக்கே அது இன்று தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், இதற்கான இதுவரை காலமானதும், மேலதிகமானதுமான முயற்சிகள் அனைத்தும் வீண்விரயமாகிவிடுமோ என்ற அச்சம்  எழுந்துள்ள நிலையில், தொடர்ந்தும் காலத்தை வீணடிக்காமல், நாம் கூறி வருகின்ற நடைமுறைச் சாத்தியமான வழிமுறை பற்றி ஆராயுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தற்போது இங்கு முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையானது, 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில அம்சங்களில் கூடிய முன்னேற்றங்களைக் கொண்டிருந்தாலும், குறிப்பிட்ட சில விடயங்களில் 13வது திருத்தச் சட்டத்தைவிட பாதகமான அம்சங்களைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இது முழுமைப்படுத்தப்பட்ட புதிய அரசியல் யாப்பாக உருவாகும் நிலையில், மேற்படி பாதகத் தன்மைகள் அகற்றப்பட வேண்டும். இருப்பினும், அத்தகையதொரு புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவது சாத்தியப்படாத நிலை ஏற்படுமானால், நாங்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்ற நடைமுறைச் சாத்தியமான வழிமுறை குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

நாங்கள் இங்கே கூறுகின்ற வழிமுறையானது எளிதானது. அதாவது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலமான 13வது திருத்தச் சட்டத்தை முழுiயாக செயற்படுத்துவதை ஓர் ஆரம்பமாகக் கொள்வது.  இது ஒரு முடிவல்ல. எமது அரசியல் உரிமைகளுக்கான தீர்வை நோக்கிய ஓர் ஆரம்பம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

இந்த நடைமுறை தற்போதைய எமது அரசியல் யாப்பில் இருக்கின்றது. முழுமையாக அல்லாதவிடத்தும், நாடாளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அனைத்து மக்களாலும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. பெரும்பாலான அனைத்து அரசியல் கட்சிகளும் இன்று இதில் பங்கேற்றிருக்கின்றன.  இதனைத் தூற்றியோர்கூட இறுதியில் ஓடி வந்து இந்த முiறைமையை கட்டி, அணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை செயற்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையோ, மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்போ அவசியமில்லை.

எனவே, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக உரிய முறையில் செயற்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து, முன்னோக்கிச் செல்கின்றபோது, எமது மக்களின் தேவைகள், பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றபோது, எமது மக்களின் அபிலாiஷகள் நிறைவேறுகின்றபோது, மக்களிடையே இந்த முறைமை தொடர்பில் படிப்படியாக நம்பிக்கை ஏற்படும். இந்த முறைமையினால்  எமது நாடு பிரிந்து போகாது என்ற நம்பிக்கை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படும். இந்த முறைமையின் ஊடாக எமது அன்றாடத் தேவைகள் முதல் அரசியல் உரிமைகள் வரையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடையே ஏற்படும்.

அவ்வாறானதொரு நிலையில், மேலும் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளித்து, எமது மக்களின் அபிலாiஷகளை இலகுவாக எட்ட முடியும் என்பதே எமது நடைமுறைச் சாத்தியமான வழிமுறையாகும். மதசார்பற்ற நாடு, விஷேட அதிகாரங்கள், மொழிகளுக்குச் சம அந்தஷ;து, வடக்கு, கிழக்கு இணைந்த மாநில நிர்வாக மையம், பொலிஸ், முப்படைகள் உள்ளிட்ட அரச தொழில்வாய்ப்புகளில் இனவிகிதாசாரம் பேணப்படுதல் போன்றவையே எமது மக்களின் பிரதான அரசியல் அபிலாiஷகளாக உள்ளன. இவை, இந்த நாட்டைப் பிரிக்கவோ அல்லது ஏனைய இனங்கள் மீது மேலாதிக்கம் செலுத்தவோ போவதில்லை என்பதையும், இது இனங்களுக்கு இடையே மேலும் நெருக்கமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு வழி வகுக்கும் என்பதையும் எமது சகோதர மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன்.

இதனையே நாங்கள் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்றும், ஐக்கிய இலங்கைக்குள் சமதான, சகவாழ்வு என்றும் கொள்கை நிலை கொண்டுள்ளோம். இந்த நிலை நோக்கி நாம் படிப்படியாக முன்னேறுகின்ற வழிமுறையே எமது நாட்டுக்குப் பொருத்தமானது என்பது எமது நம்பிக்கையாகும்.

ஆகவே, அதிகாரங்களை பகிர்வதும், அவற்றை உரிய முறையில் செயற்படுத்துவதும், செயற்படுத்த வழிவிடுவதும்,  இங்கே நேர்மையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் எந்தவிதமான கபடத்தனங்களும் இருக்கக் கூடாது. பகிரப்படுகின்ற அதிகாரங்கள் தொடர்பில் மயக்கமற்ற, வௌ;வேறு பொருள் கொள்ளப்பட இயலாத வகையிலான வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்படுவது மிகவும் அவசியமாகும். ஜனாதிபதி அவர்களும் இத்தகைய தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள் மாற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கருத்து தெரிவித்து வருவதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதே நேரம், உரிய இலக்கினை எட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடாது, உரிய இலக்கினை குழப்புகின்ற மாகாண சபைகள் இனங்காணப்பட்டு, அவை தொடர்பில் மக்ளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.

நோக்கமும், அதற்கான முயற்சியும் அர்ப்பணிப்புடன் கூடியதான நேர்மையுடன் முன்னெடுக்கப்படுமானால் எம்மால் நிச்சயமாக இந்த இலக்கினை வெற்றிகொள்ள முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

புதிய அரசியல் யாப்பு ஒன்றின் தேவை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கின்றது. அது, இந்த நாட்டு மக்களது மனித உரிமைகள் உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில் உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே காணப்படுகின்றது.

அந்தவகையில், இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும், தற்போதைய எமது அரசியல் யாப்பில் இருக்கின்ற, 13வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை விடவும் முன்னேற்றகரமான அதிகாரப் பகிர்வுகளைக் கொண்ட வகையிலும் முழுமைப்படுத்தப்பட்ட புதிய அரசியல் யாப்பு எமது நாட்டில் நிறைவேற்றப்படுமாயின், அல்லது, புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படாமல், தற்போது நடைமுறையில் இருக்கின்ற அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுகளைவிட முன்னேற்கரமான அதிகாரப் பகிர்வுகளை உள்ளடக்கியதான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுமாயின் அதனை நாங்கள் ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றோம் என்பதனை மீண்டும் தெரிவித்து,

அத்தகையதொரு புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட இயலாத சூழ்நிலை ஏற்படுமானால், 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஓர் ஆரம்பமாகக் கொண்டு படிப்படியான அதிகாரப் பகிர்வு நோக்கிய வழிமுறையை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி.

Related posts:

கடல் தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்...
பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்தக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது - டக்ளஸ்...
அவசரகாலச் சட்டம் மனித முகங்களைக் கொண்டு செயற்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

இன சமத்துவத்தின் உரிமையின் குரலாகவும் இன ஐக்கியத்தின் குரலாகவும் ஒலிப்போம் - 2017 நாடாளுமன்றில் டக்ள...
கையாலாகாதவர்களால் முடங்கிக் கிடக்கிறது யாழ் நகரத்தின் அபிவிருத்தி  - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சு...
உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது பொருளாதாரம் மாத்திரம் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முடியாது ...