தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்துகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டு!

Monday, March 18th, 2019

தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு என்பது எமது மக்களை கடந்த யுத்த காலத்தைவிட அதிகளவில் உணர்வு ரீதியாகப் பாதித்து வருகின்ற ஒரு செயற்பாடாகவே அமைந்து வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதத்தின், புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு – வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என்பன தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

யுத்த காலத்தில் பல்வேறு பாதிப்புகள் இருந்த போதிலும் எமது மக்கள் தங்களது மத வழிபாடுகளை மேற்கொண்டாவது சற்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இன்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் எமது மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், தாங்கள் காலங்காலமாக வழிபாடுகளை மேற்கொண்டிருந்த மத ஆலயங்களைக்கூட பறிகொடுத்துவரும் நிலையிலேயே பரிதவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஊரும் பன்சலையும், குளமும் தாதுக் கோபுரமும் என்று சிங்கள பௌத்த மக்கள் வாழ்வியலில் இருந்து வருகின்ற கட்டமைப்பிற்கு ஏற்ப ஏனைய இன மத மக்களும் ஊரும் மத வழிபாட்டுத் தலங்களும், குளங்களும் கோபுரங்களும் என்ற கட்டமைப்பின் கீழ் வாழ்ந்து பழகியவர்கள்.

அந்தவகையில் எமது மக்களது வாழ்விடங்கள், வாழ்வாதார இடங்கள் மற்றும் வழிபாட்டு இடங்கள் என்பன தொல்பொருள் திணைக்களத்தினால் அபகிரிக்கப்பட்டு வருகின்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையானது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே தொடர்கின்றது.

பல நூற்றாண்டு காலமாக எமது மக்களால் வழிப்பட்டு வந்த முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம், புல்மோட்டை அரிசி ஆலை மலைப்பகுதி விகாரை அமைத்தல் விவகாரம், குமுழமுனை, குருந்தூர் மலையில் விகாரை அமைத்தல் விவகாரம்,   வவுனியா நெடுங்கேணி, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரம், ஐயனார் ஆலய விவகாரம், தென்னமரவடி கந்தசாமி மலை விகாரை அமைப்பு விவகாரம், மூதூர், சூடைக்குடா மத்தள மலைப்பகுதி முருகன் ஆலய விவகாரம், கோணேஸ்வரர் ஆலய விவகாரம், முல்லைத்தீவு மூன்றுமுறிப்பு கண்ணகி அம்மன், வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயம், சிவபுரம் சிவாலயம், ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம், மாந்தை கிழக்கு ஆதிசிவன் கோயில் போன்ற ஆலயங்களுக்கு அருகிலுள்ள இடங்கள் போன்றவற்றில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளால் இன முரண்பாட்டு நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பாரிய பிரச்சினைகள் இந்த தொல்பொருள் திணைக்களத்தினால் எமது மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மாவட்டம் என்ற ரீதியில் எடுத்துக் கொண்டால் முல்லைத்தீவு மாவட்டத்திலே அதிகளவிலான இடங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 இடங்கள் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட இடங்கள் எனக் கோரப்பட்டு அவற்றை உடனடியாக அளவீடு செய்து தருமாறு தொல்பொருள் திணைக்களம் நில அளவைத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாகத் தெரிய வருகின்றது. இந்த இடங்கள் எமது மக்களின் வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட இடங்கள் மட்டுமல்ல, வாழ்விடங்களாகவும், வாழ்வாதார இடங்களாகவும் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இத்தகைய எமது மக்களின் இடங்களை அபகரிப்பது தொடர்பில் தற்போது கலாசார அலுவல்கள் அமைச்சராக இருக்கின்ற கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்தி, எமது மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை தொடர்பில் ஏற்படுத்தப்படுகின்ற இடையூறுகளை நீக்குவதற்கு முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

00000

வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் செப்பனிடப்படாதிருந்த வீதிகள் பல புனரமைப்பு!

வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் புனரமைக்கப்படாதிருக்கும் பல வீதிகளை புனரமைக்கு முயற்சிகள் நடைபெற்றுவருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினருமான சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் கப்பண்டான் வீதி மற்றும் சங்கானை சிவப்பிரகாச பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீதி  ஆகியன செப்பனிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ்வீதிகளின் செப்பநிடும் பணிகள் தொடர்பில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தருடன் தொழில் நுட்பக்குழு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


போதையற்ற தேசத்தை உருவாக்குவது எந்த வகையில் சாத்தியமாகும்? - சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்றால், நாட்டைக் கெடுப்பவர்கள் யார்?...
நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் - வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்....