தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, March 18th, 2019


எமது மக்களின் சொந்த காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலைமை குறித்த எமது நீண்டகால கோரிக்கைகள் இன்னமும் முழுமையாகவே தீர்க்கப்படாத நிலைமையைக் காணக்கூடியதாகவே இருக்கின்றது. இது தொடர்பில் அண்மையில்கூட கொழும்பிலும் ஒரு கவனயீர்ப்பு பேரணி நடத்தப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு, யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, பலாலி, மன்னார் சிலாவத்துறை, பள்ளிமுனை, முள்ளிக்குளம், சம்பூர், பாணம, அஸ்ரப் நகர் போன்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகளிலும் மக்கள் மேற்படி காணி விடுவிப்பு தொடர்பில் தங்களது போராட்டங்களை இன்னமும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அவை தொடர்பில் ஆளுக்காள் இழுத்தடிப்புகளை செய்கின்ற நிலைமைகளும் தொடர்கின்றன.

எமது மக்களின் சொந்த இருப்பிடங்கள் மட்டுமல்லாது வாழ்வாதார இடங்களும் இத்தகைய காணி, நிலங்களுக்குள் அகப்பட்டிருப்பதால், குடியிருக்கவும் வழியில்லாமல், தொழில் செய்யவும் வழியில்லாமல் எமது மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்;.

2017ஆம் ஆண்டில் உலக வங்கியானது நிலம் மற்றும் வறுமை குறித்து நடத்திய மாநாட்டில், காணி உரிமையைப் பாதுகாத்தல் என்பது வறுமையைக் குறைப்பதற்கும், நாட்டினதும், குடும்பத்தினதும் பகிரப்பட்ட செழிப்பினை மேம்படுத்திக் கொள்வதற்கும் மிக அவசியமானது என்ற தொனிப் பொருளை வெளிப்படுத்தியிருந்தது.

அந்த வகையில் இன்று தங்களது சொந்தக் காணிகளே இல்லாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ள எமது மக்கள் மத்தியில் வறுமைநிலை என்பது பாரிய சவாலினைத் தோற்றுவித்துள்ளது.

எமது மக்கள் மீது இவ்வாறு வலிந்து திணிக்கப்பட்டுள்ள வறுமையானது, மறுபக்கத்தில் இன்னமும் எமது மக்களுக்கு மறுக்கப்படுகின்ற எமது மக்களின் காணி, நிலங்களின் ஊடாக பொருளாதார இலாபங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் பார்க்கின்றபோது, தேசிய பாதுகாப்பு என்ற பெயரைக் கூறிக் கொண்டு எமது மக்களின் சொந்த காணி, நிலங்கள் படையினருக்கான பொருளாதார ஈட்டல்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில், வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு மேலும் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு வருகின்ற நிலையும் சொந்த, காணி நிலங்கள் அற்று, வாழ்வாதாரங்களும் அற்று, பொருளாதார ரீதியில் நலிவடைந்து, எதிர்காலமே இருளாக்கப்பட்டு வருகின்ற எமது மக்களுக்கு கடன் திட்டங்களைத் தருகின்ற நிலையும் இந்த நாட்டில்தான் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு, தொலைத் தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியன தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

இந்த நிலையில், யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை மத்தி மற்றும் நகுலேஸ்வரம் கிராம சேவையாளர் பிரிவுகளில் தனியார் காணிகள் உள்ளடங்களாக 167 ஏக்கர் காணி காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கும், அங்கிருக்கின்ற ஜனாதிபதி மாளிகை உள்ளடங்களாக 65 ஏக்கர் காணி சுற்றுலா அதிகார சபைக்கும் என மொத்தமாக 232 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்;கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவித்தலை தெல்லிப்பளை பிரதேச செயலகம் ஒட்டி இருப்பதாகவும், மேற்படி பிரதேச சபைக்குக் கிடைத்துள்ள உத்தியோகப்பூர்வ அறிவிப்பையடுத்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

மேற்படி காணி சுவீகரிப்பு விடயம் காணி அமைச்சின் ஊடாகவே கையாளப்பட வேண்டும் என்றும், இந்த சுவீகரிப்பு விடயத்தை உடனே கைவிட உத்தரவிடுகின்றேன் என்றும் கௌரவ பிரதமர் அவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே இந்த காணி சுவீகரிப்பு ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. எனவே, இந்த விடயத்தின் உண்மை நிலை என்ன? என காணி அமைச்சர் அவர்களிடம் கேட்க விரும்புகின்றேன்.

யாழ்ப்பாணக் குடாநாட்டை எடுத்துக் கொண்டால் தற்போது படையினர் வசமுள்ள 3,918 ஏக்கர் காணியில் 3, 642 ஏக்கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவையாகும். எனவே, எமது மக்களது சொந்தக் காணி, நிலங்களையே எமது மக்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயாரில்லாத நீங்கள், எண்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்காவை அல்ல எந்தபிரைசஸ் ஸ்ரீ லங்காவைக் கொண்டு வந்தாலும் நடுத்தெருவில் நிற்கின்ற எமது மக்களுக்கு ஏற்படப்போவது ஒன்றுமில்லை என்றே கூற வேண்டியுள்ளது     

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிக அதிகளவில் காணி உரிமங்கள் தொடர்பிலான பிரச்சினைகள் நீடிக்கின்றன. திருகோணமலை மாவட்டத்தில் இப்பிரச்சினையானது பல்வேறு பகுதிகளிலும் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன. பட்டிணமும், சூழலும் பிரதேச செயலாளர் பிரிவை எடுத்துக் கொண்டாலும், திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவை எடுத்துக் கொண்டாலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் காணி உரிமங்கள் தொடர்பில் தொடர்கின்றன.

வவுனியா மாவட்டத்திலே தமிழ்ப் பிரதேச சபையின் கட்டடங்கள் அடங்கலாக விளையாட்டு மைதானம், ஆயுர்வேத வைத்தியசாலை கட்டிடங்கள் போன்றவற்றுக்குக்கூட இதுவரையில் காணி உரிமங்கள் இல்லை என்றே கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் காணி உரிமங்கள் தொடர்பில் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஏராளம் என்பதை கடந்த காலங்களிலும் அவர் இங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேநேரம், வடக்கிலே கோயில் காணிகளில் குடியிருக்கின்ற மக்களின் காணி உரிமங்கள் தொடர்பிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ஓர் ஏற்பாடு மிகவும் அவசியமாகவுள்ளது. இவ்வாறு கோவில் காணிகளில் குடியிருக்கின்ற பெரும்பாலான மக்கள் காணிக்கான உரிமங்கள் இல்லாத நிலையில், எவ்விதமான வீடமைப்புத் திட்டங்களையும் பெற இயலாத நிலை காணப்படுகின்றது.அந்தவகையில் எமது மக்களின் காணி தொடர்பிலான அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பில் காணி அமைச்சு விரைவான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்வர வேண்டும்

யாழ்ப்பாணத்தில் தற்போது கேபிள் டி.வி. கம்பங்களை சட்டவிரோதமான முறையில் நடுகின்ற ஒரு செயற்பாடு இரண்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கிடையில் போட்டி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகத் தெரிய வருகின்றது

இந்த தனியார் தொலைக்காட்சிகளின் கேபிள் வயர்கள் கடந்த காலங்களில் மின் கம்பங்கள் ஊடாக இழுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கேபிள்களில் பழுதுபார்த்தல்களை மேற்கொண்டிருந்த பலர் மின்சாரம் தாக்கிக் கொல்லப்பட்டதன் காரணமாக அந்த கேபிள்கள் மின்கம்பங்களில் இருந்து அகற்றப்பட்டதன் பின்னர் தற்போது உள்ளூராட்சி நிறுவனங்களின் அனுமதியைப் பெறாமலும், நீதி மன்றம் தடைவிதித்துள்ள நிலையிலும், பொலிஸாரையும் சட்டை செய்யாது, இத்தகைய கம்பங்கள் யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு போன்ற பகுதிகளில் பாதையோரங்களில் கொங்கிறீட் இடப்பட்டு நடப்பட்டு வருவதாகவும், இது பற்றி கேள்வி எழுப்புகின்ற ஊடகவியலாளர்கள் உட்பட அரச அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

எனவே, இப்பிரச்சினை தொடர்பில் தொலைத் தொடர்புகள் அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

வெளிநாட்டு வேலை பெற்றுச் செல்வோர் தொடர்பிலான தொழில் பாதுகாப்பு தொடர்பில் இருக்கின்ற சந்தேகங்கள் இன்னும் தீர்ந்த நிலையில் இல்லை என்றே தெரிய வருகின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை  மக்களுக்கான ஒரு வேலைவாய்ப்பாகக் கருதாமல், அதனை மனித வியாபாரமாகக் கருதி, அதில் ஈடுபடுகின்ற முகவர் நிலையங்கள் தொடர்பில் அமைச்சு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், இந்த நாட்டுக்கு மிக அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற இத்துறை தொடர்பில் மேலும் அதிக அவதானங்களைச் செலுத்த வேண்டும்

குவைத் நாட்டில் 2 வருடங்களுக்கு மேலாகப் பணிபுரிந்திருந்த 6 பெண்களும், ஒரு வருடத்திற்குக் குறைவான காலமாகப் பணிபுரிந்திருந்த 46 பெண்களுமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 52 பெண்கள், அவர்கள் பணியாற்றியிருந்த குவைத் நாட்டு வீடுகளில் இழைக்கப்பட்ட கொடுமைகள் தாங்காது அண்மையில் குவைத் நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் கடந்த மாதம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர் எனத் தெரிய வருகின்றது. இவர்களில் 35 பெண்கள் தங்களது சொந்த செலவிலும், 44 பெண்கள் தற்காலிகக் கடவுச் சீட்டுகளிலுமே இலங்கை வர நேர்ந்துள்ளது.

அதேபோன்று கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு பணிப் பெண் தொழிலுக்காகச் சென்றுள்ள வவுனியா, மாறம்பைக்குளத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒரு பெண், அங்கு தொல்லைகள் தாளாது, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி அங்கேயே தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது சடலம் நான்கு மாதங்கள் கழித்து – அதாவது கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 29ஆம் திகதியே இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்தப் பெண் தொழிலுக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டு இறந்து, சில மாதங்கள் கடந்திருந்த நிலையிலும் அவர் பற்றிய தகவல்களை வெளியிடவோ, அவரைப்பற்றி ஆராய்ந்து பார்க்கவோ குறிப்பிட்ட முகவர் நிலையம் தவறிவிட்டுள்ளதாகவே கூறப்படுகின்றது.

எனவே, இத்தகைய நிலைமைகள் இனியும் ஏற்படாத வகையில் வெளிநாட்டுத் தொழிற்துறையானது எமது மக்கள் நலன்சார்ந்து பேணப்படக்கூடிய தொழிற்துறையாக மேம்படுத்த வேண்டியத் தேவை இருக்கின்றது.

வடக்கு மாகணாத்திலே கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத் துறையும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. அந்த வகையில் விளையாட்டுத்துறை மேம்பாடு தொடர்பில் கௌரவ அமைச்சர் ஹரீன் பெர்னாந்து அவர்கள் அவதானங்களை எடுக்கின்றபோது, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் அதிகூடிய அவதானங்களை மேற்கொள்ள வேண்டும்

குறிப்பாக, தமிழ் – சிங்கள மக்களிடையே பரம்பரை பரம்பரையாக இருந்து வந்துள்ள பாரம்பரிய விளையாட்டுக்கள் பல இன்று அருகிவருகின்ற நிலையே காணப்படுகின்றது. சிங்கள பாரம்பரிய வீர விளையாட்டுக் கலையான ‘அங்கம்பொற’ பற்றி தற்போது பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. அது ஒரு நல்ல கலை. அதேபோல், தமிழர் வரலாற்றிலும் சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இன்று அருகிவருகின்றன.

அதேபோன்று தேசிய கிரிக்கெற் அணிக்கு தெரிவாகக் கூடிய வகையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சார்ந்த வீரர்களும் உருவாக வேண்டும். அதற்கேற்ப வசதிவாய்ப்புகளை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

அதேநேரம், கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு விளையாட்டு மைதானத்தின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும் என்றொரு கோரிக்கையினை மாவட்ட இளைஞர் கழகங்கள் முன்வைத்துள்ளன.

இந்த மைதானப் பணிகள் கடந்த 7 வருடங்காக இழுத்தடிக்கப்பட்டு, கட்டம் கட்டமாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மைதானத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த நிதியிலிருந்து ஒரு தொகை வேறொரு மாவட்டத்திற்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக மாற்றப்பட்டதாகவும், இதனாலேயே இந்த மைதானப் பணிகள் தாமதமடைந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த மைதானமானது எனது கோரிக்கைக்கு அமைவாக கடந்த 2012ஆம் திகதி அடிக்கல் நட்டப்பட்டு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதாகும். அந்த வகையில், நீண்ட காலம் கடந்தாவது இந்த விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தமை தொடர்பில் எமது மக்கள் சார்பாக எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மலையகத் தொழிலாள மக்களின் நாளாந்த ஊதியப் பிரச்சினை இன்னமும் அந்த மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு முடிவினை எட்ட முடியாமலேயே காலங்கடத்தப்பட்டு வருகின்றது.

வரவு – செலவுத் திட்டத்தில் மலையகத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா ஊதியம் சேர்த்துக் கொள்ளப்படும் எனக் கூறப்பட்டு வந்துள்ள நிலையில், அதுவும் சாத்தியமில்லாமல், தேயிலைச் சபையுடன் பேசியே அதுதொடர்பில் முடிவெடுக்கப்படும் என வரவு – செலவு திட்ட முன்மொழிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மேற்படி மேலதிகக் கொடுப்பனவை வழங்கும் முகமாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு இன்னும் காணப்படவில்லை என தேயிலைச் சபையின் தலைவர் இப்போது தெரிவித்துள்ளார்.

எனவே, இதுவும் அம்மக்களுக்கு கனவாகிவிடுமோ என்ற சந்தேகமே காணப்படுகின்றது. எனினும், இந்த நாட்டின் ‘முதுகெலும்பு முதுகெலும்பு’ எனக் கூறிக் கொண்டே அந்த மக்களை நிமிர்ந்தெழ விடாமல் அவர்களது முதுகெலும்புகளை முறித்து விடாதீர்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தொழில் திணைக்களம் மற்றும் அதனது மாவட்ட கிளை அலுவலகங்கள் பலவற்றில் தமிழ் மொழி மூலப் பரிச்சயமுள்ள பணியாளர்களது பற்றாக்குறை காரணமாக சிங்கள மொழி மூலப் பரிச்சயமற்ற தொழிலாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனத் தெரிய வருகின்றது.

மேற்படி திணைக்களத்தின் கீழ் குறிப்பாக தனியார்துறை தொழில் வழங்குநர் மற்றும் தொழிலாளர்களுக்கிடையிலான உறவைப் பேணுகின்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்டைப் பொறுத்தவரையில் இன்று தனியார்துறைகளில் பணியாற்றுகின்றவர்களாக தமிழ், முஸ்லிம் மக்களே அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களில் பலரும் தமிழ் மக்களாகவே இருக்கின்றனர்.

இந்நிலையில், தொழில் திணைக்களத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுமானால், இத்தொழிலாளர்கள் பெரிதும் சிரமங்களையே அடைய நேரிடுகின்றது. ஊழியர் சேமலாப நிதியாக இருக்கட்டும், ஏனைய தொழில்துறை சார்ந்த நன்மைகளாக இருக்கட்டும் அதன் மூலமான பயன்களை இம் மக்கள் பெறுவதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் தமிழ், முஸ்லிம் மக்களையும் மேற்படி திணைக்களப் பணிகளில் இணைத்துக் கொள்வதற்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், அவை தவிர்ந்து தமிழ் மொழி மூலப் பரிச்சயமுள்ள ஏனைய மாவட்டங்களிலும் போதியளவில் அவர்களை பணிகளில் அமர்த்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேநேரம், தமிழ் மொழி கற்ற சிங்கள பணியாளர்களை இப்பணிகளில் ஈடுபடுத்துகின்றோம் என நீங்கள் கூறுவீர்களாயின் அது உண்மையிலேயே இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாகாது. ஏனெனில் கடந்த காலங்களில் தமிழ் மொழியைக் கற்கிறோம் என சிங்கள அரச ஊழியர்கள் பலரும், சிங்கள மொழியைக் கற்கிறோம் என தமிழ் அரச ஊழியர்கள் பலரும்  அம் மொழிகளை ஒழுங்குறக் கற்காமல், அதற்கான அரச நிதியினைப் பெற்றுக் கொண்டு, வெறும் சான்றிதழ்களை மாத்திரமே  வைத்திருக்கின்றனர் என்ற விடயமும் இருக்கின்றது. எனவே இது தொடர்பில் தொழில் அமைச்சர் அவர்கள் அதிக அவதானமெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related posts:

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா...
  பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ...
மாகாணசபையின் அதிகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையீடு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை நாடாளுமன்றத்தில் ...

புத்தபெருமானின் சிலையை ஒரு ஆக்கிரமிப்பு அடையாளமாக சில இனவாதிகள் பாவிப்பது தடுக்கப்பட வேண்டும்-நாடாளு...
மலையகப் பகுதி மக்களின் பிரச்சினைகள் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களிடையே நிலவுகின்ற பிரச்...
மாகாணசபையின் அதிகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையீடு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை நாடாளுமன்றத்தில் ...