தேசிய நல்லிணக்க  என்றும் விதையை  மாணவர்களிடையே விதைக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, November 26th, 2016

இன்று எமது நாட்டில் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் மிக அதிகமாகவே அவதானம் செலுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் நமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உணர்வுபூர்வமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும், தேசிய நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதில் பல்கலைக்கழகங்களுக்கும் பாரிய பொறுப்பு இருக்கின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் –

நவீன கல்வித்துறையோடு கூடிய கல்வி முறை வேண்டும் …………..!

நமது நாட்டில் கல்வி கற்கும் மாணவர்களில் சுமார் 0.8மூ மானவர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்திற்கான அனுமதியினைப் பெறக்கூடிய ஒரு நிலையே காணப்படுகின்றது. இவர்களில் பொறியியல், மருத்துவப் பிரிவுகளுக்கு தேர்வாகும் தொகையினர் மிகக் குறைந்த தொகையினராக – அதாவது, 0.12 வீதமாக உள்ளனர். அதே நேரம்இன்றைய நிலையில் பாடசாலைகளில் உயர் தரத்தில் 41 வீதத்தினர் சித்தியடைந்த போதிலும் அதில் சுமார் 4.7 வீதத்தினரே பல்கலைக்கழக அனுமதியைப் பெறக் கூடியதான ஒரு நிலைமையே காணப்படுவதாகவும் தெரிய வருகிறது.

அந்த வகையில், உயர் தரம் வரையில் கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்ல இயலாத பல மாணவர்கள் நடுத்தெருவில் கைவிடப்படும் நிலையே காணப்படுகின்றது. எனவேஇந்த மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் என்ன? என்பதை நான் இங்கு வினவ விரும்புகின்றேன்.

எமது இளைஞர்கள் பலர், பல்வேறு சமூகச் சீர்கேடுகளை நோக்கிச் செல்வதற்கும் இந்த நிலைமை பிரதானதொரு பங்கினை வகிக்கின்றது என்பதை மறுக்க முடியாமல் உள்ளது.

எனவே கூடிய வரையிலும் நவீன தொழிற் துறையோடு ஒன்றிணைந்த கல்வி முறைமையினை எமது கல்வித் துறையில் நாம் மேலும், மேலும் உள்ளடக்க வேண்டிய தேவையை நாம் உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியுள்ளமையை நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

எமது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் அடிக்கடி பிரஸ்தாபிக்கப்பட்டு வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. மாணவர்களுக்கான விடுதிகள் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. மேலும், நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளும், அங்கு கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவோர் சார்ந்த பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை. அந்த வகையில் இவ்வாறான தேவைகளைப் படிப்படியாகவேணும் தீர்க்கக் கூடிய நடவடிக்கைகளை  இந்த அமைச்சு எடுக்கும் என நான் எதிர்பார்கின்றேன்.

ஏனெனில்இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகள் எட்டப்படாத நிலையில், அதனால் விரக்தியுறும் மாணவர்கள் தங்களது உணர்ச்சிகளை வெளிக்காட்ட முற்படுகின்றபோது, அவர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற சில நடவடிக்கைகள், அந்த மாணவர்களைக் கல்வித்துறை சரர்ந்த ஈடுபாட்டை விடுத்து வேறு வழிகளிலேயே கொண்டு செல்லத் தூண்டக் கூடும் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.

மாணவர்களிடையே தேசிய நல்லிணக்க விதையை விதைக்க வேண்டும்.!

இன்று எமது நாட்டில் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் மிக அதிகமாகவே அவதானம் செலுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும், பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களும் நமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உணர்வுபூர்வமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில்இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும், தேசிய நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதில் பல்கலைக்கழகங்களுக்கும் பாரிய பொறுப்பு இருக்கின்றது.

இனங்களுக்கு இடையில் தொடர்புகளுக்கான வாய்ப்புகள் எதுவுமே இல்லாத பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் முதற் தடவையாக இந்தப் பல்கலைக் கழகங்களிலேயே பல இனத்தவர்களாக ஒன்று கூடுகின்றனர். விடுதிகளில் தங்கித் தங்களது வாழ்க்கையில் சிறிது காலத்தைக் கழிக்கின்றனர்.

எனவேஇந்த மாணவர்களுக்கிடையில் இன ஐக்கியத்தையும், தேசிய நல்லிணக்கத்தையும் வலுவாகக் கட்டியெழுப்பக் கூடிய வகையிலான நிர்வாகம் சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் இந்தச் சந்தர்ப்பத்தில் கௌரவ உயர் கல்வி அமைச்சரிடம் ஒரு கோரிக்கையை முன் வைக்க விரும்புகின்றேன்.

அதே நேரம் வடக்கு மாகாணத்தில் வன்னிப் பகுதியை மையமாகக் கொண்டு மேலுமொரு பல்கலைக்கழகத்தினை நிறுவுவுது தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இதற்கான வளங்கள் அங்கு தாராளமாகக் காணப்படும் நிலையில், மாணவர்களை மேலும் அதிகளவில் பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவதற்கு இது வசதியாக அமையக்கூடும் என்பது எனது எண்ணமாகும்.

அதே நேரம் மலையகத்திலும் ஒரு பல்கலைக்கழகத்திற்கான தேவை தொடர்பில் பல வருட காலமாகக் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு வருடத்துக்கு சுமார் 28,900 மாணவர்கள் உள்வாங்கப்படுகின்ற நிலையில்இதில் சுமார் 150 – 200 மலையக மாணவர்களே உள்வாங்கப்படும் நிலை இருப்பதாகக் கூறப்பட்டே இந்தக் கோரிக்கை முன் வைக்கப்படுவதாகத் தெரிய வருகின்றது.எனவேஇந்த விடயம் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்துவார் என நம்புகின்றேன்.

ஒழுங்கமைக்கப்பட்ட இந்து அமைப்பு வேண்டும்.

எமது நாட்டைப் பொறுத்தமட்டில்இந்துமத கற்கைகளை உயர் மட்டத்திலும், சமூக மட்டங்களிலும் கற்பிப்பதற்கும், அதனது சிறப்பம்சங்களை எடுத்துக் கூறுவதற்கும் இந்து மத கற்கைகளைப் படித்தவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதுடன்இந்த எண்ணிக்கையும் வர வரக் குறைந்து செல்லும் நிலைமையே நிலவுகின்றதையும் காணக் கூடியதாக உள்ளது.

குறிப்பாகஇந்து சமய சிவாச்சாரியர்களைப் பொறுத்த மட்டில், அவர்கள் கோவில் பூசைகளிலும், புரோகிதத்திலும் ஈடுபட்டு வருவதால் சமய அறிவை அவர்களால் எமது சமுதாயத்திற்கு வழங்க இயலாதுள்ளது.

அதே நேரம் ஒழுங்கமைக்கப்பட்ட இந்து சமய கற்கை நிறுவனம் ஒன்று இல்லாமை காரணமாக, மக்கள் மத்தியில் சமயம் சார்ந்த அறிவு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அத்துடன்இந்து சமய அறிவைக் கற்பிப்பதற்குப் போதிய பயிற்றப்பட்ட ஆளணியும் இந்து மக்கள் மத்தியில் இல்லை என்பதையும் கௌரவ உயர் கல்வி அமைச்சர் அவர்களின் அவதானத்திற்குக் கொண்டு வருவதுடன்,

இந்தப் பாரிய குறைபாட்டினை நீக்கும் வகையில் அரச பல்கலைக்கழகமொன்றில் இந்துக் கற்கைகள் சார்ந்த பீடமொன்றை உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்ற அனைத்துக் கல்விசார் மற்றும் கல்விசாரா ஆளணிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் பல்கலைக்கழகங்களை அண்மித்த வகையில் ‘பல்கலைக்கழக நகரம்’ என்ற பெயரில் அனைத்து வசதிகளையும் கொண்டதான நகரங்களை அமைக்கும் திட்டமொன்று கடந்த காலத்தில் கொண்டு வரப்பட்டது. அது மாணவர்களுக்கும், மக்களுக்கும் மிகவும் பயனுள்ள திட்டமாகவும் காணப்பட்டது. அந்தத் திட்டத்தினை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதுவும் தற்போது மேற்கொள்ளப்படுகின்றனவா? என்பதை அறிய விரும்புகின்றேன்.

மணலாறு, நெடுங்கெணி நெடுஞ்சாலை எப்போது அமையும்?

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான அதிகவேக நெடுஞ்சாலையை அமைக்கும் திட்டம் பற்றி முன்பு பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு திட்டம் ஏதும் முன்னெடுக்கப்பட உள்ளதா என்பதை அறிய விரும்புகின்றேன். அத்துடன், முல்லைத்தீவு மணலாறு தொடக்கம் நெடுங்கேணி வரையிலான நெடுஞ்சாலைப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதையும் அறிய விரும்புகின்றேன்.

அதே நேரம் யாழ் மாவட்டத்தைப் பொறுத்த மட்டில், அராலி – வேலணை பாதை அமைத்தல் – வேலணை – குறிகாட்டுவான் பாதை புனரமைத்தல் மற்றும் குறிகாட்டுவான் – நயினாதீவு பாதை என்பவை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  தென் பகுதியிலிருந்தும்  பக்தர்கள் பெருந்திரளாக நயினாதீவு நோக்கித் தினமும் வருகை தருகின்ற நிலையில்இந்தப் பாதை ஏற்பாடு இன்றியமையாததாகும் என்பதை இங்கு கௌரவ அமைச்சரின் அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

அதே நேரம், கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் பல பிரதான பாதைகள் மீளப் பனரமைப்பு செய்யப்பட்டு, நவீன மயமாக்கப்பட்டுள்ள நிலையில்இன்னும் சில பாலங்கள், வீதிகள்  புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. அந்த வகையில் யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரையில்,

பருத்தித்துறை – மருதங்கேணி பிரதான வீதி,

சோரன்பற்று – தாளையடி வீதி,

புத்தூர் – கந்தரோடை வீதி,

புலோலி – கந்தரோடை– கச்சாய் வீதி,

யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி,

காரைநகர் சுற்றுவட்ட வீதி,

யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை வீதி,

போன்ற வீதிகளும் புனரமைக்கப்பட வேண்டியுள்ளன.

அதே நேரம் எமது பகுதிகளில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்ற போது ஏற்படுகின்ற மேடுகள் காரணமாக மழை நீர் வழிந்தோடக் கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமை காரணமாக மக்கள் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்றனர். இந்த நிலையை வடக்கில் பல பகுதிகளிலும் காணக்கூடியதாக உள்ளது. எனவேஇவ்வாறான இடங்களில் உரிய கால்வாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன்இனிவரும் காலங்களில் நெடுஞ்சாலைகளை அமைக்கும்போது இவ்வாறான நிலைமைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

 

மாணவர்களை விஞ்ஞான மற்றும் தொழிற்நுட்ப ரீதியாக ஈர்க்க வேண்டும்.

விஞ்ஞான தொழில் நுட்பத்துறை என்பது ன்றைய உலகில் இன்றிமையாத ஒரு விடயமாக மாற்றம் பெற்றுள்ளது. இதனை நாம் பாடசாலை மட்டங்களிலிருந்து, மிகுந்த நுட்பத்துடன் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வகையில்இதற்கான நடவடிக்கைகளை இந்த அமைச்சு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கின்றேன்.

குறிப்பாகஇன்றைய நிலையில் எமது நாட்டில் விஞ்ஞான, தொழில்நுட்பப் பாடங்களை பாடசாலைகளில் கற்பிப்பதற்கான பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பற்றாக் குறை நிலவுவதை நாம் நன்கறிவோம்.

ஆகவேஇந்த நிலையை தொடர்ந்து எமது நாட்டில் நீடிக்க விடாமல்இப்போதிருந்தே அதற்கான அடித்தளமாக பாடசாலை மட்டங்களில் இருந்தே விஞ்ஞான தொழில்நுட்பப் பாடங்களை பயிற்றுவிக்கக் கூடிய திட்டங்களை கல்வி அமைச்சுடன் இணைந்து கௌரவ அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள் இந்த அமைச்சின் ஊடாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என நான் நம்புகின்றேன்.

இதற்கு வசதியாகப் பல பாடசாலைகளில் விஞ்ஞான தொழில்நுட்ப பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த வசதிகளை கொண்டிராத பாடசாலைகளுக்கும் அந்த வசதிகளைக் கல்வி அமைச்சு ஏற்படுத்திக் கொடுக்க முன்வருவது அவசியமாகும்.

அதே நேரம் மாணவர்களை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பாடங்களின்பால் ஈர்ப்பதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும்,  சிறந்த அறிவும், ஆற்றலும், அக்கறையும் உள்ள அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள் மேற்கொள்வார்கள் என நம்புகின்றேன்.

அதே நேரம் பல்கலைக்கழக மட்டங்களிலும் இந்த விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளைப் பரவலாக்க முடியுமென நான் நம்புகின்றேன். அதற்கான வளங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கும் பட்சத்தில் பல்கலைக்கழக மட்டங்களில் இந்த முயற்சிகளை முன்னெடுக்க முடியுமென நான் எதிர்பார்க்கின்றேன்.

சிங்கள சொற்பதங்களுக்கு தமிழ் பதம் வேண்டும்!

தற்போது நாட்டில் ‘விதாதா வள’ நிலையங்கள் பரவலாக அமைக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றின் மூலமான பயன்பாடு எமது மக்களுக்கு உரிய வகையிலும், போதுமானதாகவும் கிடைக்கின்றனவா? என்பது தொடர்பில் தொடர் கண்காணிப்புக்களை மேற்கொள்வது அவசியமாகும்.

அத்துடன்‘விதாதா வள’ நிலையங்களில் பணியாற்றுகின்ற அதிகாரிகளுக்கு மாறி வருகின்ற உலகில் அடிக்கடி மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நவீன தொழில் நுட்பங்களையும் பயிற்றுவிக்க வேண்டும்  என்ற கோரிக்கையையும்,

அதே நேரம்இங்கு பெற்றுக் கொள்ளக் கூடிய பயன்பாடுகள் தொடர்பில் மக்களுக்குப் போதிய தெளிவை உண்டு பண்ணக்கூடிய வகையில் பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்தச் சந்தர்ப்பத்திலே நான் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன். அத்துடன்,‘விதாதா’ என்ற சொற்பதத்தை தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மத்தியில் தமிழில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மொழி புரியாத காரணங்களும் எமது மக்கள் மத்தியில் இவ்வாறான பயனுள்ள திட்டங்கள் சென்றடைவதில் தடைகளை ஏற்படுத்துகின்றன. இதனைக் கௌரவ அமைச்சர் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

அத்துடன் விஞ்ஞானத் துறைசார்ந்த அனைத்து விடயங்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளக்கூடிய வகையில், ஒரு விஞ்ஞான நிலையம் அமைக்கப்பட வேண்டியுள்ளது. இதில் விஞ்ஞானம் சார்ந்த அனைத்து விடயங்களுடனும் விஞ்ஞான நேரடி செய்முறைக் கண்காட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டும்.

அத்துடன்இந்த நிலையத்தால் மேற்கொள்ளப்படுகின்ற விளக்கங்கள் பொது மொழி என்ற வகையில் ஆங்கிலத்தில் அமையப் பெற்றாலும், சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல மக்களுக்கு அவரவர்களின் தாய் மொழிகளிலும் அந்த விளக்கங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எனது ஆலோசனையையும் இங்கு முன்வைக்க விரும்புவதுடன்,

இந்த நிலையத்தை அமைக்க இந்த அமைச்சு நடவடிக்கை மேற்கொள்வதாக ஒரு தகவல் இருந்து வரும் நிலையில், அது தொடர்பிலான முயற்சிகள் தற்போது எந்த அளவில் இருக்கிறது என்பதை அறிய விரும்புகின்றேன்.

அத்துடன் நாட்டில் விவசாயத்துறை சார்ந்து பல்வேறு நவீன தொழில்நுட்ப அறிவினை வழங்குவதனை அமைச்சு மேலும் விரிவுபடுத்த வேண்டும். அதனூடாக எமது நாட்டின் விவசாயத்துறை உற்பத்திகளை மேலும் அதிகரிப்பதற்கும், வளப் பயன்பாடுகள் மற்றும் உற்பத்தி செலவினங்களைக் குறைப்பதற்கும் ஏதுவாக அமையும் என நம்புகின்றேன்.

அதே நேரம் புதிய கண்டு பிடிப்புகள் தொடர்பில் எமது மாணவர்களிடையே நல்ல திறமைகள் காணப்படுகின்றன. மாணவர்கள் மட்டத்தில் மட்டுமல்லாது, பல தரப்பினர் மத்தியிலும் இத் திறமைகளை நாம் கண்டு வருகின்றோம். இவ்வாறானவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் வலுவுள்ள திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்த அமைச்சு அதிக அக்கறை கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

 

தமிழ் மொழி கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த நாட்டில் ஏனைய பகுதிகளில் உள்ள அரச தொழிற் பயிற்சி நிலையங்களில், தமிழ் மொழி மூலமான கற்கைகள் போதிய அளவில் இல்லை என்ற விடயம் குறித்து, நான் ஏற்கனவே இந்தச் சபையில் கௌரவ அமைச்சர் மகிந்த சமரசிங்ஹ அவர்களிடம் கேள்விகளைக் கேட்டிருந்தேன். அதற்கு பதிலளித்திருந்த கௌரவ அமைச்சர் அவர்கள், தமிழ் மொழி மூல பாடநெறிகள் கற்பிக்கப்படுகின்றன எனக் கூறியிருந்தார்;.

அதே நேரம் தமிழ் மொழி மூலப் பாடநெறிகளைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்கள் போதியளவில் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்தக் கூற்றினைப் பார்க்கும்போது தமிழ் மொழி மூலப் பாடநெறிகள் ஒழுங்குற இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் முன்னெடுக்கப்படுவதில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது என்றே நான் கருத வேண்டியுள்ளது.

எனவேஇந்த விடயம் தொடர்பில் அக்கறையெடுத்து உரிய ஏற்பாடுகளை கௌரவ அமைச்சர் மகிந்த சமரசிங்ஹ அவர்கள் மேற்கொள்வார் என நான் எதிர்பார்க்கிறேன்.

அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 அரச தொழிற் பயிற்சி நிலையங்கள் உள்ள போதிலும் அவற்றில் மாணவர்களது வருகை மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. அந்த வகையில் பார்க்கும்போது உரிய முறையிலான பரவலான பிரச்சாரங்கள் இந்த தொழிற்பயிற்சிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படாமையே இதற்குக் காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன். எனவே, அங்கு வழங்கப்படுகின்ற தொழிற் பயிற்சிகள் தொடர்பில் உரிய விழிப்புணர்வுகள் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

எமது நாட்டைப் பொறுத்த வரையில், பாரிய சிலைகளை வடிவமைக்கின்றபோது வெளிநாடுகளிலிருந்து – குறிப்பாக இந்தியாவிலிருந்தே அதற்குரிய சிற்பிகளை நாம் வரவழைக்க வேண்டிய நிலையில் உள்ளோம். அது பௌத்த தர்மம் சார்ந்த சிலைகளாகட்டும்இந்து மதம் சார்ந்த சிலைகளாகட்டும், அவற்றைச் செதுக்குவதற்கு நாம் பிற நாடுகளையே நாட வேண்டிய நிலையில் இன்னும் இருக்கின்றோம்.

எனினும் எமது நாட்டில் பல திறமைவாய்ந்த சிற்பிகள் இல்லாமலில்லை. அவர்களை ஊக்குவிப்பதற்கு நாம் முன்வரவேண்டும் என்ற கருத்தை இங்கு நான் முன்வைப்பதுடன் எதிர்கால எமது சந்ததியினரும் இந்தக் கலையைப் பயிலக் கூடிய வகையில் எமது தொழிற்பயிற்சி நிலையங்களில் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கு முன்வைத்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 4 டிசம்பர் 2008 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளை முடக்கும் வகையிலான ஏற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்த...
வடக்கு மாகாண சபை ஊழல் தொடர்பில் மத்திய அரசின் நடவடிக்கை வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக...