தேசிய நல்லிணக்கத்தை தமிழ் மக்களின் உணர்வுகளிலிருந்து கட்டியெழுப்ப கல்வி அமைச்சின் பங்கும் அவசியம் – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, May 24th, 2017

இன்றைய தினம் ஆறு துறைகள் சார்ந்து ஏழு விடயங்கள் தொடர்பிலான கட்டளைச் சட்டங்கள் குறித்து இங்கே வாத, விவாதங்கள் இடம்பெறுகின்ற நிலையில், அந்தந்த துறைகள் சார்ந்து, எமது மக்கள் மத்தியில் நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து இங்கே எனது கருத்துக்களை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்.
அந்த வகையில், கல்வி வெளியீட்டுத் திணைக்களம் சார்ந்தும், அதன் ஊடாக  எமது கல்வித்துறை சார்ந்தும் குறிப்பிடுகின்றபோது, கல்வி அமைச்சின் கீழ் தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பரீட்சைகள் திணைக்களம் என்பன செயற்பட்டு வருகின்ற போதிலும் இவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் தொடர்பில் பாரிய குறைபாடுகளையே காணக் கூடியதாக இருக்கின்றன.
இந்த மூன்று முக்கிய துறைகளும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை மேற்கொள்வது அரிதாகி, தனித்தனி பிரிவுகளாக செயற்படுகின்றதான ஒரு தோற்றப்பாடே நடைமுறையில் தெரிய வருவதால், இது தொடர்பில் கல்வி அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்தி, இம் மூன்று துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் கட்டமைப்பினை வலுவானதாகக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
எமது நாட்டில் தேசிய மொழிக் கொள்கையை முறையாக அமுல்படுத்த வேண்டியதன் முக்கியப் பங்கு கல்வி அமைச்சுக்கும் உரியது. இதனைப் புறக்கணிக்கும் போக்கிலிருந்து மீண்டு, தேசிய மொழிக் கொள்கையைப் பூரணமாக அமுல்படுத்தக்கூடிய வகையில் கல்வி அமைச்சு செயற்பட வேண்டும் என நான் இந்தச் சந்தர்ப்பத்திலும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
அந்த வகையில், கல்வி அமைச்சினால் காலத்திற்குக் காலம் வெளியிடப்படுகின்ற சுற்று நிருபங்கள், அறிவுறுத்தல்கள், அறிவித்தல்கள், கையேடுகள் என்பன விடுக்கப்படுகின்ற போதும், கலந்துரையாடல்கள், பயிலமர்வுகள், செயலமர்வுகள் போன்றவை மேற்கொள்ளப்படுகின்ற போதும் இரு மொழி பயன்பாட்டின் அவசியம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அதை விடுத்து, தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அவற்றை மேற்கொள்வதால், அது கூலிக்கு மாறடிக்கும் ஒரு செயற்பாடாகவே அமைகின்றதே தவிர அதனால் தமிழ் மொழி மூல பயன்பாட்டாளர்களுக்கு எவ்விதமான பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
சிங்கள மொழிப் பரிச்சயமற்ற பாடசாலை அதிபர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, கல்வி நிர்வாக அதிகாரிகளுக்கு தனிச் சிங்களத்தில் மாத்திரம் மேற்படி கருமங்கள் ஆற்றுப்படுவதன் காரணமாக, கல்வித்துறையின் புதிய வழிகாட்டல்கள், கல்வி சார்ந்த யுக்திகள் போன்ற எவையும் அவர்களால் புரிந்து கொள்ளப்பட இயலாத நிலையில் – அவை நடைமுறைப் படுத்த இயலாத நிலையில் தமிழ் மொழி மூல கல்வியின் முன்னேற்றம் குறித்து எம்மாhல் நம்பிக்கை கொள்ள முடியாது.
இன்று எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் என்பது ஒரு பிரதான தலைப்பாக முன் வைக்கப்பட்டு, அதற்கான எற்பாடுகள் பல வழிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
அந்த வகையில், தமிழ் மக்களுக்கு மலசலகூடங்களைக் கட்டிக் கொடுப்பதாலும், வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்துவதாலும், வீடுகளைக் கட்டிக் கொடுப்பதாலும், சிங்கள மக்கள் மத்தியில் போய், தமிழ் மக்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்று கூறி வருவதனாலும் தேசிய நல்லிணக்கம் திடீரென ஏற்பட்டு, வலுவடைந்துவிடப் போவதில்லை.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அவர்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும்.
ஆனால், எமது மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தை வலுவுள்ளதாக – எமது மக்களின் உணர்வுகளுடன் ஒன்றியதாகக் கட்டியெழுப்ப வேண்டுமானால,; அதன் அடித்தள பங்களிப்பு கல்வி அமைச்சுக்கே உரியது என்பதையும் இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
அந்த வகையில், எமது மாணாக்கரிடையே அவர்களது சிறு வயது முதலே தேசிய நல்லிணக்கத்தை ஆழமாக வேரூன்ற வைக்க வேண்டியப் பொறுப்பினை கல்வி அமைச்சு இதய சுத்தியுடன் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும்.
எமது அரசியலமைப்பில் இருக்கின்ற சில ஏற்பாடுகளை முறையாக செயற்படுத்தினாலே எமது நாட்டில் இனங்களுக்கிடையில் நிலவி வருகின்ற பல்வேறு முரண் நிலைகளை அகற்ற முடியும். கடந்த காலங்களில் அவை செயற்படுத்தப்பட்டனவா? எனக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே, விதண்டாவாதங்கள் செய்து கொண்டிருக்காமல், தற்போதுள்ள சூழ்நிலையில் அவற்றைச் செயற்படுத்த முன்வராவிட்டால், பின்னர் எக்காலத்திலும் அவற்றைச் செயற்படுத்த முடியாத நிலையே ஏற்பட்டுவிடும் என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அதே நேரம், கல்வித்துறை சார்ந்த நியமனங்களை மேற்கொள்கின்றபோது முன்னாள் ஜனாதிபதி மேன்மைதங்கிய ரணசிங்ஹ பிரேமதாச அவர்களது காலத்தில் கொண்டுவரப்பட்ட பொது நிர்வாக அமைச்சின் 15ஃ90 ஆம் இலக்க சுற்று நிருபத்தை முறையாகப் பயன்படுத்தி, இன விகிதாசாரம் பேணப்படல் வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
படையின் களஞ்சியசாலைகள் தொடர்பிலான ஒரு கட்டளை இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், யாழ்ப்பாணம், மயிட்டியிலுள்ள பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மீன்பிடித் துறைமுகம் எமது மக்களது பாவனைக்கு இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், அங்கும் படையினரின் வெடி பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலை இருப்பதாகக் கூறப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளி;வந்திருந்தன.
அவ்வாறு, அப் பகுதியில் இராணுவ களஞ்சியசாலை இருப்பின் அது அகற்றப்பட்டு, மேற்படி மீன்பிடித் துறைமுகத்தை எமது மக்கள் பயன்பாட்டிற்கு விடுவிக்கப்பட வேண்டும் என்பதையே நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன். மக்கள் வாழ்ந்து வருகின்ற பகுதிகள், பொருளாதார வளங்களைக் கொண்ட பகுதிகள், மக்கள் மீள்குடியேற்றப் பட வேண்டியப் பகுதிகளிலிருந்து படையினரது வெடி பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலைளை அகற்றி, அவற்றை மக்களுக்கு பாதகம் இல்லாத இடங்களில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே உகந்ததாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அந்த வகையில், ஏற்கனவே சாலாவ பகுதியில் இராணுவக் களஞ்சிய சாலை வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பிலும் அரசு உரிய அவதானம் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இலங்கைப் புகையிரதத் திணைக்களம் பற்றி கருத்துக்களைத் தெரிவிக்கின்றபோது, வடக்கில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளின் மூலமாக ஏற்படுகின்ற விபத்துகள் இன்று வடக்கு மாகாணத்தில் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அண்மைக் காலமாக தொடர்ந்து பலர் இவ்வாறான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களைக் காணக்கூடியதாகவுள்ளது.
கடந்த காலங்களில், பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பணியில் நியமிக்கப்பட்டிருந்த காப்பாளர்கள்கூட தற்போது பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றும், இது தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.  எனவே, இவ்விடயம் தொடர்பில் அரசு முக்கிய அவதானமெடுக்க வேண்டும். மேற்படி கடவைகளின் மூலமான உயிரிழப்புகள் வடக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதென்பது மிகவும் வேதனையான விடயமாகும்.
அந்த வகையில் பார்க்கின்றபோது, நாடளாவிய ரீதியில் சுமார் 880 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ளதாகத் தெரிய வருகின்றது. இவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், மேற்படி பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் சுமார் 3628 பேர் தற்போது கடமையாற்றி வருகின்ற நிலையில், இவர்களது தொழில் மற்றும் ஊதியப் பிரச்சினை என்பது ஒரு பாரிய பொருளாதாரப் பிரச்சினையாக இந்த பணியாளர்களிடையே நிலவி வருவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தங்களது ஊதியம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணியாளர்கள் அவ்வப்போது பணிப் பகிஷ;கரிப்புகளில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பங்கள் தொடர்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிரிழப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை.
வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சுமார் 1230 பேர் பொலிஸ் திணைக்களத்தினால் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.
இந்த நிலையில், இப் பணியாளர்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் பணிபுரிந்து வருகின்ற நிலையில,; நாளொன்றுக்கு 250 ரூபா வீதமாக மாதம் 7500 ரூபா மாத்திரமே கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருவதாகவும், அரச பணியாளர்கள் என்ற ரீதியிலோ அல்லது தனியாரத்துறை பணியாளர்கள் என்ற ரீதியிலோ அல்லாமலும், தற்காலிக, அமைய, ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் என்ற எந்தவொரு தரத்திலும் அல்லாமலும் இப் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும்  தெரிவிக்கின்றனர்.
எனவே, இப் பணியாளர்களை இலங்கைப் புகையிரதத் திணைக்களத்துடன் இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறானதொரு நிலையில் இவர்களது தொழில் உரிமைகள் நிலைநிறுத்தப்படக்கூடிய ஏற்பாடுகள் குறித்து அவதானத்தைச் செலுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் அவர்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
விவசாயப் பண்ணைகள் தொடர்பில் எனது அவதானத்தைச் செலுத்துகின்றபோது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரம் என்பது மிகவும் நீண்ட காலமாகவே பாரம்பரிய விவசாயத்தையே மூலமாகக் கொண்டிருக்கின்ற நிலையிலும், மேற்படி விவசாயத் துறையானது தொழிற்துறை நோக்கிய விரிவாக்கப் போக்கில் போதுமான அபிவிருத்தி காணப்படாத நிலையிலேயே தேங்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில், விவசாய உற்பத்திகள் சார்ந்த மூலப் பொருட்கள் அதிகளவிலான பொருளாதார மேம்பாட்டினை ஈட்டக்கூடிய விவசாய மூலாதார கைத்தொழில் நோக்கியதான வழிமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளதை இங்கு அவதானதிற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.
மேலும், எமது விவசாய முயற்சிகள் பண்ணை விவசாய முறைமைகளாக மாற்றப்படுகின்ற சூழலில், மிக அதிகளவிலான பயன்பாடுகளை அத்துறை சார்ந்த மக்கள் பெறக்கூடியதான வாய்ப்புகள் ஏராளம் என்பதையும் அவதானத்தில் கொண்டு, அத்தகைய முயற்சிகளின்பால் செல்ல வேண்டியிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அதே நேரம், எமது மக்களின் சொந்த குடியிருப்புக் காணிகள் மற்றும் பொருளாதார வளமிக்க காணிகளைப் போன்றே எமது மக்களின் விவசாய நிலம் சார்ந்த காணிகளும் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. அவற்றை விடுவிப்பது தொடர்பிலும் அரசு உடனடி அவதானங்களைச் செலுத்த வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி,
கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களிலே சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் விவசாயப் பண்ணைக் காணிகள் இருப்பதாகத் தெரிய வருகின்றது. இந்தக் காணிகளிலே 11 ஆயிரம் பேர் பணியாற்றி வருவதாகவும், இவர்களுக்கு தலா 35 ஆயிரம் ரூபா வீதம் மாதக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.
இந்த செய்தி உண்மையாயின், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 11 ஆயிரம் பேர் பணிபுரிவதற்கு வடக்கிலுள்ள பண்ணைகள் மாத்திரம்தான் இந்த நாட்டில் உள்ளனவா என்ற கேள்வி எழுகின்றது. வடக்கிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் எவ்விதமான வருமானங்களுமின்றி, மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அது மட்டுமல்லாது, வடக்கிலே வேலைவாய்ப்புகளற்ற பலர் மிகவும் பரிதாபகரமான நிலையில் உயிர்வாழ வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எமது நாட்டிலே வறுமை அதிகம் கூடிய மாவட்டமாக முல்லைதீவு மாவட்டமே காணப்படுகின்றது. இவ்வாறன நிலைமைகளை கருத்தில் கொண்டு பாரக்கின்றபோது, மேற்படி விவசாயப் பண்ணைகள் மூலமான தொழில்வாய்ப்புகளைப் பெறக்கூடிய அதிக தகுதி கொண்டவர்களாக அப்பகுதியில் வேலைவாய்ப்பற்றவர்களே காணப்படுகின்றனர்.
அதே நேரம், முன்னாள் போராளிகளே மேற்படி பண்ணைகளில் பணியாற்றி வருகின்றனர் என்றொரு கதையும் கூறப்படுகின்றது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. புனர்வாழ்வளிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதில் பெரும் பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கும் நிலையில், முன்னாள் போராளிகள் 11 ஆயிரம் பேருக்கு மேற்படி பண்ணைகளில் தொழில்வாய்ப்பு வழங்கப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, வடக்கின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைத் தீர்க்கும் வகையிலும், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலும் இதற்கொரு உகந்த ஏற்பாட்டினை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த கௌரவ பிரதமர் அவர்கள், நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பினை வலியுறுத்தியுள்ளதுடன், அங்கு முதலீடுகளை மேற்கொள்வோருக்கு 200 வீத வரிச் சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். அதே நேரம், கௌரவ பிரதமர் அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதற்கு புலம் பெயர் எமது உறவுகளும் முன்வர வேண்டும் என்ற அழைப்பினை நான் இங்கு விடுக்கின்றேன்.
எமது பகுதிகளில் இத்தகைய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றின் மூலமான வேலைவாய்ப்புகள் மிக அதிகளவில் உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டாயத் தேவை எம்முன் உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாகவும் எமது பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற பல்வேறு சமூக மற்றும் கலாசார ரீதியிலான சீர்கேடுகளை போதியளவில் அகற்ற முடியும் என்பதையும் தெரிவித்து  விடைபெறுகின்றேன்.

Related posts:

இலங்கையர்களாக வாழ்வதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கமுடியாது - நாடாளுமன்ற உரையில் டக்ளஸ் தேவானந...
தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா !
வடக்கில் யுத்தத்திற்கு முன்பிருந்த தொழில் முயற்சிகள் தற்போது மீள முன்னெடுக்கப்படாத நிலையே காணப்படுகி...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 24 ஜனவரி 2002அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தீர்வுகளைக் காணமுடியாத நிலை காணப்படுவதேன்?...
ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்க...