தமிழர் தேசத்தின் வளங்கள் தொடர்ந்து சுரண்டப்படுகின்றன நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி எடுத்துரைப்பு

Wednesday, November 15th, 2017

சில அகப்பைகள் எங்களது வளங்களை தொடர்ந்தும் சுரண்டி எடுத்து வருவதையும் கைகட்டிப் பாரத்துக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களது பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்பவர்கள், இந்த வரவு – செலவுத் திட்டத்தில் எமது மக்களுக்கு பயன்தரும் வகையில் எதையாவது சேர்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறவில்லையா? என்றொரு கேள்வியும் எமது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று (15.11.2017) நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறிய செயலாளர் நாயகம் தொடர்ந்து உரையாற்றுகையில்….

‘பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது’ என்றொரு முதுமொழி தமிழில் வழக்கில் இருந்து வருகின்றது. ஆனால், பனையால் விழவைத்தே மாடு மிதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள் வாழ்கின்ற பகுதியிலிருந்து, அந்த மக்களின் பிரதிநிதியாக நான் இன்றும் இந்தச் சபையிலே உரையாற்ற வேண்டியிருக்கின்றது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மன அழுத்தங்கள், வாழ்க்கையைக் கொண்டு நடத்த போதிய  வாழ்வாதாரங்கள் இன்றிய நிலைமைகள், சமூகப் பாதுகாப்பு, சமூகப் பராமரிப்புகள் இன்மை, கடன் தொல்லைகள் போன்ற காரணங்களால் வருடத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட  தற்கொலை முயற்சிகளை கண்ணாறக் காணுகின்ற நிலைமைகள்…

இத்தகைய முயற்சிகளால் சிகிச்சைகள் பலனின்றி வருடாந்தம் 300க்கும் மேற்பட்டோர் மரணிக்கும் துன்பங்கள்…

தங்களது சொந்த காணி, நிலங்களுக்காக…

தங்களது காணமற்போன உறவுகளைக் கண்டறிவதற்காக…

படித்துப் பட்டங்கள் பெற்றும், அந்தப் பட்டங்கள் வீடுகளுக்குள்ளேயே வறுமையில் வாடி வதங்கும் நிலைமைகளில், தங்களுக்கான நியமனங்களுக்காக…

விசாரணைகளும் இன்றி… பிணையும் இன்றி இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தங்களது உறவுகளின் விடுதலைக்காக…

பாரிய சிரமங்களுக்கு மத்தியில்,கடும்  மழையையும், கடும் வெய்யிலையுமே தங்களது கூரைகளாகக் கொண்ட நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாக இருந்து கொண்டு,  சொந்த காணி, நிலங்களில் மீள்குடியேறுவதற்காக…

வாழ்க்கையில், இளமையில், வறுமையில் வேலைவாய்ப்புகளுக்காக…

அசாதாரண காலங்கள் முதற்கொண்டு, இன்றுவரையில் செய்யும் பணிக்கு ஊதியங்கள் எதுவுNமு இன்றி, தங்களது வாழ்க்கையையே சுகாதாரத் தொண்டர்களாக அர்ப்பணித்துக் கொண்டிருப்போர் தங்களுக்கான நிரந்தர நியமனங்களுக்காக… என,

உழைப்பில் ஈடுபடுத்த வேண்டிய மனித வளங்கள், ஒப்பாரியுடன் வீதிகளில் போராடிக் கொண்டிருக்கும் மண்ணின் வாசனையுடன் உங்கள் முன் உரையாடிக் கொண்டிருக்கின்றேன்.

இங்கு நான் குறிப்பிட்ட விடயங்கள் ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல. பழைய விடயங்கள்தான். எமது மக்களுக்கு நாளுக்கு நாள் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பழைய விடயங்கள். இங்குள்ள பலருக்கு நாளுக்கு நாள் புதிதாகவே எடுத்துக்கூற வேண்டிய பழைய விடயங்கள்.

தீர்க்கப்படாத இப் பிரச்சினைகளே சில தமிழ் அரசியல்வாதிகளின் சுயலாப அரசியலுக்கு சோறு போட்டுக் கொண்டிருப்பதால், அவர்களால் ஏறெடுத்தும் பார்க்கப்படாத பிரச்சினைகள.;

இன்று எமது நாட்டில் வறுமை கொண்ட முதல் ஐந்து மாவட்டங்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவையாகவே இருக்கின்றன. கடந்த ஒக்டோம்பர் மாத இறுதியில், புள்ளி விபரத் திணைக்களம் இதனைச் சொல்கின்றது.

இதன்படி, கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடத்திலும், முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. அதாவது, முல்லைத்தீவு மாவட்டமானது பல வருடங்களுக்குப் பின்னர் இப்போதுதான் வறுமை ஓட்டப் போட்டியில்  ஒரு படி முன்னேறி இருக்கின்றது. இதுவரையில் முல்லைத்தீவு மாவட்டம் முதலாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தது.

மூன்றாவது இடத்தை மட்டக்களப்பு மாவட்டமும், நான்காவது இடத்தை திருகோணமலை மாவட்டமும், ஐந்தாவது இடத்தை யாழ்ப்பாணம் மாவட்டமும் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும் என்பார்கள். அந்த வகையிலேயே நான் இந்த வரவு – செலவுத் திட்டத்தைப் பார்க்கின்றேன். இது, இன்றைய நாட்டின் நிலைமை. இதனை நான் புரிந்து கொள்கின்றேன்.

என்றாலும், பானை இருந்தும், சமையலுக்கான வளங்கள் இருந்தும், சமைப்பதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படாமையினாலும், கிடைக்கும் சந்தர்ப்பங்களைக்கூட சுயலாப தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தடுத்தும், முடக்கியும் வருவதாலும், எமது பகுதிகள் வறுமையிலும், கஷ;டத்திலும் வாடிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையிலும் சில அகப்பைகள் எங்களது வளங்களை தொடர்ந்தும் சுரண்டி எடுத்து வருவதையும் கைகட்டிப் பாரத்துக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களது பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்பவர்கள், இந்த வரவு – செலவுத் திட்டத்தில் எமது மக்களுக்கு பயன்தரும் வகையில் எதையாவது சேர்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறவில்லையா? என்றொரு கேள்வியும் எமது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒரு கரத்தால் கரகோசம் எழுப்ப முடியாது. இருந்தும் எழுப்ப வேண்டிய நிலையில் இன்று நான் இருக்கின்றேன். அந்த வகையில் எமது மக்களது பல்வேறு பிரச்சினைகள் குறித்து நான் கடந்த காலங்களில் தொடர்ச்சியாகவே இந்த நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியும், கருத்துக்களை முன்வைத்தும் அரசின் அவதானத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றேன்.

அந்த வகையில், நான் முன்வைத்திருந்த பல விடயங்களில் முக்கியமான சில விடயங்களும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. அதையிட்டு, ஜனாதிபதி அவர்களுக்கும், பிரதமர் அவர்களுக்கும், நிதி அமைச்சருக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆனாலும், இன்னும் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை, அன்றாட, உணர்வு ரீதியிலான, அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் பல உண்டு.

வடக்கு – கிழக்கு மக்களுக்கு மாத்திரமா பிரச்சினைகள்? தெற்கு மக்களுக்கு இல்லையா? என எவரும் என்னிடம் கேள்வி கேட்க முடியாது. தெற்கு மக்களுக்கும் இன்னும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உண்டு என்பதையும் நான் இந்தச் சபையிலே, பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி கேள்விகளை எழுப்பியும்,  கருத்துக்களை முன்வைத்துமிருக்கின்றேன்.

தெற்கு மக்களில் இருந்தும் மாறுபட்ட பிரச்சினைகள் பலவும் எமது மக்களுக்கு உண்டு. சுமார் மூன்று தசாப்த கால யுத்தத்தின் நேரடிப் பாதிப்பு. தொடரும் மிகையான இயற்கை அனர்த்தங்கள். வாழ்க்கை குறித்த பல்வேறு அழுத்தங்கள். பல ஆயிரக் கணக்கான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள். அங்கவீனமாக்கப்பட்டவர்கள். சமூகமயப் படுத்தப்பட்டதாக அரசு கூறினாலும், இன்றும்கூட அரசும், சமூகமும் முழுமையாகக் கைகொடுக்காத முன்னாள் இயக்க உறுப்பினர்கள். வாழ்வாதாரங்கள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

எமது மக்களின் இந்த அவலங்களை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, வடக்கு மாகாண சபையின் அமர்வுகள் வெகு அமர்க்களமாகவே நடத்தப்பட்டு வருகின்றன…

மாகாண சபைக்குள் ஆளுங்கட்சி சர்ச்சைகளுக்கு பட்டிமன்றங்களை நடத்திக் கொண்டிருக்கும் சத்தத்தில் எமது மக்களின் அவலக் குரல்கள் அந்தச் சபைக்குள் எட்டாமலேயே போய்விடுகின்றன…

எட்டினாலும்கூட கொட்டிக் கொடுக்கவா போகிறார்கள்… மக்களின் வாக்குகளைத் தட்டிப் பறித்தவர்கள்?.. கொடுத்திருந்தால் எமது மக்களின் பிரச்சினைகளில் இன்று எவ்வளவோ தீர்ந்திருக்கும்!

தெற்கே, இயற்கை அனர்த்தங்கள், அனர்த்த ஆபத்துகள் நிறைந்த பகுதிகள் நோக்கியே வருடந்தோறும் வருகின்றன!

வடக்கே… மக்கள் வாழுகின்ற குடியிருப்புப் பகுதிகள் நோக்கியே இயற்கை அனர்த்தங்களும் வாரந்தோறும் நுழைகின்றன!

கடைசியில், காலநிலைகூட எமது மக்களை கடனாளிகளாகவே ஆக்கிவிட்டுள்ளது.

இதுதான் எமது மக்களது நிலை கௌரவ சபாநாயகர் அவர்களே!

மழை என்றால் கடும் மழை… அந்த மழை நீரை சேமித்து வைப்பதற்கு உரிய எற்பாடுகள் இல்லை… கடந்த காலத்தில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளும் இன்று கவனிப்பாரற்றுப் போயிருக்கின்றன…

ஆனால்… மழை நீரை சேமிப்போம் என்கின்ற அறிவிப்புப் பதாதைகள் மாத்திரம் இன்னும் அப்படியே இருக்கின்றன! மாகாண சபையினர் இந்த பதாதைகளை மாத்திரமே அடிக்கடி தூர்வாரிக் கொண்டிருக்கிறார்கள்!

மழை காலங்களில் எமது மக்கள் தரையிலும் இருக்க முடியாது – கூரை ஏறி இருக்கவும் முடியாத நிலை!

வெள்ளம்! வழிந்தோட கால்வாய்கள் இல்லை! இருந்த கால்வாய்களும் இருந்ததற்கே இன்று அடையாளமில்லாத நிலை!

மழை விட்டதும் வரட்சி! கடும் வரட்சி! தீவகப் பகுதிகளை விட்டு மக்கள் வெளியேறும் நிலை கொண்ட வரட்சி! விலங்குகள் செத்து மடியும் வரட்சி!

அப்போதும் மக்களுக்கு தரையில் இருக்கவும் முடியாத நிலை! கூரை ஏறி இருக்கவும் முடியாத நிலைதான்!

மரங்கள் இல்லை! காடுகள் அழிக்கப்படுகின்றன! பெறுமதியான மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுகின்றன! திருட்டு மணல் சுரண்டல்கள்!

கேள்வி கேட்பதற்குக்கூட இன்று யாரும் அங்கு இல்லாத நிலை! அனாதை நிலை!

வரட்சி தொடரும் கடுமையாக… முடிவில் மழை தொடரும் அதைவிட கடுமையாக… பின்னர் மீண்டும் மாறி, மாறி இதே நிலைமைகள்தான்!

இப்படியே ஏராளமான பிரச்சினைகள,; எமது மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் வரையில் தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன…

வடக்கு – கிழக்கு மாகாணங்களிலே, தெற்கில் நிலவுகின்ற பொதுவான பிரச்சினைகளும் உண்டு…

யுத்தம் மற்றும் அதீத இயற்கை அழிவுகள் காரணமாக எழுந்துள்ள மேலதிகப் பிரச்சினைகளும் உண்டு…

அரசியல் உரிமைகள் ரீதியிலான பிரச்சினையும் உண்டு…

பசி மயக்கம் தாளாமல் பாடசாலை மாணவிகள் பாடசாலைகளில் வாந்தி எடுக்கின்ற நிலைமை தெற்கில்…

பட்டினி பொறுக்காமல் குடும்பமே தற்கொலை செய்துகொள்ளும் நிலைமை வடக்கில்…

வழிபட மக்கள் இருந்தும், விஹாரை இருந்தும், விஹாராதிபதி இருந்தும், அவருக்கு ஒழுங்காக உணவு இல்லாமல், நாளை தான் செத்துப் போனால் சவப்பெட்டிக்கு எங்கே போவது? என எண்ணி, விஹாரை வாசலில் சவப் பெட்டியை வைத்தக் கொண்டு வாழும் விஹாராதிபதிகள் தெற்கில்!

வழிபடுவதற்கு மக்களே இல்லாத இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகள் வடக்கு – கிழக்கில்!

வீதிப் பக்கமாக வளைந்திருந்த மாமரத்தில் மூன்று மாங்காய்களைப் பறித்ததற்காக ஒரு பெண்மணி முழு நாள் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்படுகின்றார் தெற்கில்!

நாளாந்தம் வாள் வெட்டுச் சம்பவங்கள், கொலைகள், பாரிய கொள்ளைகள், போதைப் பொருள் கடத்தல்கள், விற்பனை, பாவனை, பாலியல் வன்முறைகள், சிறுவர் வன்முறைகள் வடக்கில்!

இப்படித்தான் கௌரவ சபாநாயகர் அவர்களே எமது மக்களின் பிரச்சினைகள் இந்த நாட்டிலே தொடர்கின்றன… முடிவு பெறாமல் தொடர்கின்றன!

அந்த வகையில்தான்

அரசு விதிக்கின்ற வரிகள் எமது மக்களின் வயிற்றில் அடிக்கின்ற இடிகளாக இறங்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்!

நிறுவனங்கள் மீதுதான் பல வரிகள் விதிக்கப்படும் என்பது சிலை மேல் எழுத்தாக இருந்தாலும், அவை அனைத்தும் எமது மக்களின் வயிற்றுக்குத்தான் இறுதியில் வந்து சேரும் என்பதுதானே எமது மக்களின் தலை மேல் எழுத்தாக இருக்கிறது!….

நீல பசுமை எமது தேசத்திற்கும் – நீலக் கருமை எமது மக்களுக்கும் என ஆகிவிடக் கூடாது என்பதில் நாம் அவதானமாகவே இருக்க வேண்டும் என்பதையே நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்…

வரிகள் விதிக்கப்பட வேண்டும்… அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை…

ஏழையின் வெறும் தேநீரில் அறவிடப்படுகின்ற வரிகள், செல்வந்தர்களின் மாட மாளிகைகளுக்கென அறவிடப்படுகின்றனவா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்…

பனை ஏறி தங்களது வாழ்க்கையில் பசி போக்க உழைக்கும் தொழிலாளியின் வியர்வையில் அறவிடத் துடிக்கும் வரிகள், 300 கோடி ரூபா வரி ஏய்ப்பு செய்கின்ற தென்பகுதி மதுபான உற்பத்திச் சாலைகளில் இருந்து  அறவிடப்படுகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும்…

திரைப்பட மாளிகைகளில் அறவிடப்படுகின்ற கேளிக்கை வரிகள், குளிரூட்டப்பட்ட கசினோ சூதாட்ட விடுதிகளில் அறவிடப்படுகின்றனவா என்பதை உறுதிபடுத்த வேண்டும்…

இருப்பவர்களுக்கு வரிச் சலுகைகள், வரி இடை நிறுத்தல்கள், வரி ஏய்ப்பிற்கான வசதிகள் – இல்லாதோருக்கு எதற்கெடுத்தாலும் வரிகள் என இருக்கக் கூடாது…

இல்லாதோரின் வீட்டு அடுப்புகள் எரிவது, அவர்களது வயிறு எரியாத சில சமயங்களில் மாத்திரம்தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்!

இவை எல்லாம் எனது ஆதங்கம் மட்டுல்ல! எமது மக்களின் யதார்த்தமும்தான்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் இன்று வறுமையின் ஆகக்கூடிய இருப்பிடங்களாக இருக்கின்றன…

தென் பகுதியிலே மொனராகலை – வறுமைக்கு மிகவும் பெயர் பெற்ற மாவட்டமாக இருந்தது. தகவல் தொலைத் தொடர்புகளில்கூட மிகவும் பின்தங்கிய மாவட்டமாக மொனராகலை மாவட்டம் காணப்பட்டது. இன்று அந்த நிலை மாற்றம் பெற்றிருக்கின்றதா? என்பது பற்றித் தெரியாது.

ஆனாலும், வறுமை நிலையிலிருந்து இன்று அந்த மாவட்டம் மீண்டிருக்கின்றது என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது…

இதே போன்றுதான் எமது பகுதிகள் உட்பட இந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வறுமையற்ற பகுதிகளாக மாற்றம் பெற வேண்டும் என்ற அபிலாiஷ எம்மிடமும் உண்டு.

வளங்கள் இல்லாமல் ஒரு பகுதி, வறுமை நிலை  காண்பது வேறு! ஆனால், போதிய வளங்கள் இருந்தும், அந்த வளங்களைப் பயன்படுத்துவதற்கான தடைகள், இடையூறுகள், புறக்கணிப்புகள், ஆக்கிரமிப்புகள், சுரண்டல்கள் ஏற்படுமானால், அந்தப் பகுதி வேண்டுமென்றே – செயற்கையாகவே வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றது என்பதே அர்த்தமாகும்.

இந்த நிலைமைதான் இன்று எமது பகுதிகளுக்கும் நேர்ந்துள்ளது என்பதையே இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த வரவு – செலவுத் திட்டம் வடக்கிற்கும், கிழக்கிற்கும் அதிகமான சலுகைகளை வழங்கியுள்ளதாக ஒரு சில ஊடகங்கள் தெரிவித்திருந்தன!

இவை சலுகைகள் அல்ல… செய்யப்பட வேண்டிய கடமைகள்… அந்தக் கடமைகள் வரிசையில் பயனுள்ள சில திட்டங்கள் எமது பகுதிகளுக்கு என முன்மொழியப் பட்டுள்ளன. அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால், எமது மக்கள் தங்களது வாழ்வாதாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்காலத்தில் உதவியாக இருக்கும் என நம்புகின்றேன். இந்த திட்டங்களுள் ஏற்கனவே இந்தச் சபையில் என்னால் முன்வைக்கப்பட்ட திட்டங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன. அவை குறித்து அந்தந்த அமைச்சுகளின் போதான விவாதங்களில் எனது கருத்தினை பதிவு செய்யலாம் என நினைக்கின்றேன்.

எனினும், குறிப்பாக இரு திட்டங்கள் பற்றி மாத்திரம் தற்போது இங்கு குறிப்பிடுவது சிறந்தது எனக் கருதுகின்றேன்.

நந்திக்கடல் புனரமைப்புத் திட்டம். இந்தத் திட்டம் தொடர்பில் கௌரவ கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் கேள்வி ரீதியிலான ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தேன். அதுமட்டுமன்றி, கடந்த வரவு – செலவுத் திட்ட உரையிலும், அதற்குப் பின்னரான சில நாடாளுமன்ற உரைகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி இருந்தேன். அதேபோன்று, மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி தொடர்பிலும் வலியுறுத்தி இருந்தேன். இந்த இரு திட்டங்களும் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. அதற்காக, எமது மக்கள் சார்பாக எனது நன்றியை கௌரவ அமைச்சர்களான மகிந்த அமரவீர மற்றும் மங்கல சமரவீர ஆகியோருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த இரு திட்டங்களும் செயற்படுத்தப்பட்டால், எமது மக்களில் பல ஆயிரக் கணக்கானோருக்கு சிறந்த வாழ்வாதாரங்கள் கிட்டும் என்பது மட்டுமல்ல, எமது தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பினை வழங்கும் என்பது நிச்சயமாகும்.

அதே நேரம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுவதோடு மாத்திரம் நின்றுவிடாமல், அப்பகுதி மக்களை முழுமையாக மீளக் குடியமர்த்துவதற்கும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இதே போன்று முற்போக்கான பல திட்டங்கள் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் இல்லாமல் இல்லை. இவை நடைமுறைப்படுத்தப்பட்டு, செயல் வடிவங்கள் பெற்று, முற்றுப்பெறுவதற்கு காலங்கள் எடுக்கும். கண்டிப்பாக இத் திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டியவையாகும். இல்லையேல், எமது நாடு மேலும், மேலும் பொருளாதார பின்னடைவிற்கே தள்ளப்பட்டுவிடும் என்பது உறுதியாகும். அதே நேரம், மேற்படித் திட்டங்களில் சில முரண்பாடுகள் காணப்படுவதும், ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பிலான கேள்விகள் எழுவதும் குறிப்பிடத்தக்கது.

எனினும், நிலைபேறு அபிவிருத்திகள் என்ற வகையில் இத்திட்டங்கள் செழுமைப்படுத்தப்பட்டு, செயற்படுத்தப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும்வரையில் எமது மக்கள் பட்டினிச் சாவுகளை எதிர்நோக்காமல் இருப்பதற்கான நடைமுறைச் சாத்தியமான திட்டங்களும் வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில், ஏற்றுமதி, இறக்குமதி நிதியளிப்பு அலகுடன் கூடிய அபிவிருத்தி வங்கி ஒன்று ஸ்தாபிக்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல எற்பாடு. இதன் பயன்பாடு வடக்கு, கிழக்கு மாகாணங்களைப்  பொறுத்த வரையில் எமது தொழில்சார் முயற்சியாளர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும். அந்தவகையில், இந்த வங்கி அமைக்கப்படுகி;னற நிலையில் அதன் பயன்பாட்டினை எமது பகுதி மக்களும் அடைகின்ற வகையில் ஏற்பாடுகள் தேவை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதே நேரம், தென்னைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், பனைக்கு வழங்கப்படவில்லை என்றொரு கருத்து மேலோங்கியிருக்கின்றது. குறிப்பாக, ப்ளாஸ்ரிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களாக வரும் நிலையிலும்கூட பனை வளமானது அதிகப் பயன் தரக்கூடியது. அதுமட்டுமல்லாது, பனைசார் பாரம்பரிய உணவுகளின் நுகர்வோர்களாகிய எமது மக்களில் சுமார் 10 இலட்சம் மக்கள் தற்போது புலம்பெயர்ந்த நிலையில் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். எனவே பனை சார்ந்த உற்பத்திப் பொருட்களை பதனிட்டு, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். அதே நேரம் இந்த உணவுப் பொருட்களை அந்தந்த நாட்டு மக்களிடையேயும் பிரபலப்படுத்த முடியும். அந்த வகையில் இவ்விடயம் தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்குமாறு கௌரவ நிதி அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே போன்று இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் கடலோரங்கள், கடலரிப்பு தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தீவுப் பகுதிகளில் – குறிப்பாக நெடுந்தீவு கடலரிப்பிற்கு உட்பட்டு வருகின்றது. அதே நேரம், வடக்கின் பல பகுதிகள் உவர் நீர் உட்புகுதலுக்கு ஆட்பட்டுள்ளன. எனவே, இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் அவசியமானதும் அவசரமானதுமாகும். அத்துடன், ஒலுவில் பகுதி கடலரிப்பு தொடர்பில் நான் ஏற்கனவே இச் சபையின் ஊடாக அரசின் அவதானத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். உடனடி தீர்வுகள் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால்,,. ஒன்றுமே நடந்தபாடில்லை!

மேலும், மர அணில், மீன் பிடிக்கும் பூனை, அளுங்கு போனற அழிவடையும் நிலையிலுள்ள உயிரினங்களைப் பாதுகாப்பது தொடர்பில் வரவு – செலவுத் திட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, தற்போது பாரிய அழிவு நிலைக்கு உட்பட்டு வருகின்ற, வரலாற்றுச் சின்னமான நெடுந்தீவுக் குதிரைகளையும் காப்பாற்ற வேண்டியுள்ளதை இந்த அரசு மறந்துவிடக்கூடாது.

யாழ்ப்பாணத்திற்கு நவீன பொருளாதார மையம், கிளிநொச்சிக்கு பண்டகசாலை போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. எனினும் வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு நேர்ந்த கதி இவற்றுக்கும் நேர்ந்துவிடக் கூடாது.

அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் 50 சதவீதம் தற்போது பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது தவறான கருத்தாகும். ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட சுமார் நான்கு தொழில் முயற்சி நிறுவனங்கள் மாத்திரம்தான் அங்கே செயற்பட்டு வருகின்றன. எனவே, இத்தொழிற்பேட்டை மேலும் பல தொழில் முயற்சியாளர்களை ஈர்க்கின்ற வகையில் தயார் நிலைக்கு கொண்டுவரப்படல் வேண்டும். அத்துடன்,  வவுனியா பூந்தோட்டம் கைத்தொழிற் பேட்டையும் கண்டு கொள்ளப்படல் வேண்டும்.

மேலும் இத்தகைய பல்வேறு விடயங்கள் பற்றிய எனது கருத்துக்களை தொடர்ந்து வருகின்ற குழுநிலை விவாதங்களின்போது தெரிவிக்க விரும்புவதுடன், இந்த வரவு – செலவுத் திட்டத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தே அனுமதி வழங்கியதாகக் கூறுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள், மேற்படி விடயங்களைக் கண்டு கொள்ளாதது ஏன்? என்றும், சிலவேளை கண்டு கொண்டும் அது குறித்து அக்கறை கொள்ளாதது, தமிழ் பேசும் மக்களும், அவர்களது பகுதிகளும் எக்கேடு கெட்டுப் போனாலும் பலவாயில்லை என்ற அவர்களது வழமையான கொள்கையினாலா? என்றும் கேட்க விரும்புகின்றேன்.

இந்த வரவு – செலவுத் திட்டத்திற்கு இன்னுமொரு பெயரும் ஒரு சிலரால் கொடுக்கப்பட்டிருந்ததை என்னால் காணக்கூடியதாக இருந்தது. அதாவது, தேசிய நல்லிணக்கத்திற்கான வரவு – செலவுத் திட்டம் என்று.

அந்த வகையில் ‘நல்லிணக்கம்’ என்ற பகுதியின் கீழ் 21 திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் பல திட்டங்கள் மக்களது வாழ்வாதாரங்களுடன் தொடர்பானவை. எமது நாட்டு மக்களிடையே புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவதில் கௌரவ நிதி அமைச்சர் மங்கல சமரவீர அவர்கள் கடந்த காலத்தில் ஓரளவு வெற்றி கண்டவர். அவருக்கு இது புரியும் என நம்புகின்றேன்.

எமது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதால், வாழ்வாதார உதவிகளை மேற்கொள்வதால் மட்டுமே தேசிய நல்லிணக்கம் ஏற்பட்டு விடும் எனக் கருதுவது வெறும் மாயையானது. எமது மக்களை உணர்வு ரீதியாக வென்றெடுக்க வேண்டும். அந்த வகையில் எமது மக்களுக்கு உணர்வு ரீதியிலான – இன்னும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உண்டு. அவை விரைந்து தீர்க்கப்பட வேண்டும்.

தேசிய நல்லிணக்கம் என்பது உதட்டளவில் உச்சரித்துக் கொண்டிருக்கக் கூடிய மூடு மந்திரமல்ல. செயல் வடிவில் வெளிப்பட வேண்டிய வழிமுறையாக அது இருக்க வேண்டும்.

இன்றும்கூட அரச நியமனங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை பார்க்கின்றபோது, காட்டப்படுகின்ற புறக்கணிப்புகளை எம்மால் சகித்துக் கொள்ள முடியாத நிலையே இருந்து வருகின்றது.

மறைந்த ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச அவர்கள் இந்த நாட்டுக்கு  நல்ல பல விடயங்களை மேற்கொண்டவர். அதில் ஒன்று 1990ஃ15ஆம் இலக்க சுற்றறிக்கை. அரச தொழில்வாய்ப்புகளில் இன விகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் என்கின்ற சுற்றறிக்கை. அதுகூட அவரது காலத்தில் செயற்படுத்தப்பட்டு, பின்னர் அப்படியே கைவிடப்பட்டுவிட்டது.

இன்றோ, நாளையோ மீண்டும் எமது பட்டதாரிகள் வீதிக்கு இறங்கும் நிலையில் இருக்கிறார்கள்.

தேசிய நல்லிணக்கமானது எமது நாட்டு வீதிகளிலும், அரச அலுவலகங்களின் முன்னாலும் போராடிக் கொண்டிருக்கக் கூடாது. அது நிம்மதியானதும், கௌரவமானதுமான வாழ்க்கையுடன் எமது நாட்டில் அனைத்து மக்களினதும் மனங்களில் உணர்வுகளுடன் வேரூன்ற வேண்டும் என்பதே எமது விருப்பம் என்பதை தெரிவித்து,

தனது, முதலாவது வரவு – செலவுத் திட்டத்தை இங்கே முன்வைத்துள்ள கௌரவ நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கல சமரவீர அவர்கள் குறித்து இந்த நாட்டு மக்களிடையே நல்ல நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. திறமையும், தகுதியும், நேர்மையும் கொண்ட ஒரு மனிதர் மங்கல சமரவீர அவர்கள். அந்த வகையில், இந்த நாட்டு மக்களின் தற்போதைய நிலைப்பாடுகள் குறித்து நான் இங்கு முன்வைத்துள்ள கருத்துக்கள் தொடர்பிலும் அவர் தனது அவதானத்தை செலுத்துவார் என எதிர்பார்த்து, விடைபெறுகின்றேன் என்றும் சுட்டிக்காட்டினார்.

Related posts:

கப்பாச்சி கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...
நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் மின்சாரத்தை வீண்விரயம் செய்வதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்...