தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா !

Friday, July 7th, 2017
இன்று 06.07.2017 வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் – கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் கலந்து கொண்டுடக்ளஸ் தேவானந்தா பா.உ அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு
தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஏனெனில், நிகழ்கால மற்றும் எதிர்கால எமது கடல் வளங்களினதும், கடற்றொழிலாள மக்களினதும் நலன்களைஅவதானத்தில் கொண்டு, வளங்களை  பாதுகாத்து வைப்பது எமது பொறுப்பாகும். இதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. இருப்பினும், மாற்றுத் தொழிலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு எமது கடற்றொழிலாளர்கள் பழக்கப்படும்வரை, ஏனைய எமது கடற்றொழிலாளர்களுக்கும், கடல் வளங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில்  ஒரு நிவாரணமாக இதற்கான அனுமதி வழங்குவது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் அவர் மேலும் உரையாற்றுகையில்,
எமது நாட்டில் கடற்றொழிலைப் பொறுத்த வரையில் இன்னும் அதனை விருத்தி செய்ய வேண்டியத் தேவையே காணப்படுகின்றது. இறக்குமதி என்பது அதிகரித்து, ஏற்றுமதித் துறையில் நாம் இன்னும் மிக அதிகமாகவே முன்னோக்கிச் செல்ல வேண்டிய சூழ்நிலையானது இன்றிமையாத ஒன்றாக மாறிவிட்டுள்ளதை நாம் அனைவரும் அவதானத்தில் கொள்ள வேண்டிய தருணத்தில் இருப்பதை மறந்துவிடக்கூடாது.
அந்த வகையில், ஐரோப்பிய சங்கத்திற்கான கடலுணவு ஏற்றுமதியின் அனுமதியினை மீளப் பெற்றிருக்கின்ற நிலையில், நாம் இத்துறையில் அதீத வளர்ச்சிப் போக்கினை எட்ட வேண்டியுள்ளதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தமட்டில் கடற்றொழில் மேம்பாட்டுக்கான பிரதான தடைகளில் ஒன்றாக இருப்பது, இந்திய கடற்றொழிலாளர்களது அத்துமீறியதும், தடை செய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்களைக் கொண்டதுமான தொழில் முறைமையாகும்.
இதனைத் தடுக்கும் வகையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்கள் துணிச்சலான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. எனினும், இத்தகைய நடவடிக்கைகளையும் மீறி, மேற்படி இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி வடக்கு கடற் பரப்பிற்குள் நுழைந்து, எமது மக்களது வாழ்வாதாரங்களை அபகரிப்பது மட்டுமன்றி கடல் வளங்களையும் சுரண்டி வருவதுடன் எமது கடற்றொழிலாளர்களின் தொழில் உபகரணங்களையும் சேதமாக்கியும், அழித்தும் வரும் செயற்பாடுகள் தொடரவே செய்கின்றன.
தமிழக கடற்றொழிலாளர்கள் பாக்கு நீரினைப் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு வருடத்தில் 61 நாட்கள் தடை விதிக்கப்படுகின்றது. இந்த வருடத்தில் இத்தடையானது கடந்த மாதம் 14 ஆம் திகதியுடன் முடிவடைந்து ஒரு வார காலத்திற்குள் 48 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. கைதில் இருந்து தப்பியோர் இன்னும் இருக்கலாம்.
இது, 61 நாட்களாக கடல்வாழ் உயிரினப் பெருக்கத்திற்கு வழி  விடுவதும், 61 நாட்கள் முடிந்தவுடனேயே பல பாரிய படகுகளில் எமது கடற் பரப்பினை ஆக்கிரமித்து அனைத்தையும் சுரண்டிக் கொண்டு செல்வதுமாகவே தொடர்கின்றது.
இந்த விடயம் தொடர்பாக அண்மையில் இராமேஸ்வரத்தில் வைத்து, கருத்து தெரிவித்திருந்த இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் அவர்கள், ‘தொப்புள் கொடி உறவு எனக் கூறிக் கொள்ளும் தமிழக கடற்றொழிலாளர்களே தமது வாழ்வாதாரத்தை அழிக்கின்றமை கவலைக்குரியது என இலங்கை வடபகுதி கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன், தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்துவதாகவும் அண்மைக்காலமாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன’ எனத் தெரிவித்திருந்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அந்த வகையில், மேற்படி எல்லை தாண்டிய கடற்றொழில் தொடர்பில் நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டியுள்ளதை நாம் அனைவரும் அவதானத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
அதே நேரம், இழுவை மடி மூலமாக சிறிய படகுகளைக் கொண்டு, குறிப்பிட்ட கடற் பகுதியில், எமது ஏனைய கடற்றொழிலாளர்களுக்கும், கடல் வளங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி வேண்டும் என இலங்கையில் சில கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மாற்றுத் தொழில் முறைமைக்கான ஏற்பாடுகள் கிடைத்து அத் தொழில் சார்ந்து இக் கடற்றொழிலாளர்கள் பழக்கப்படும்வரை ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள், ஏனைய எமது கடற்றொழிலாளர்களுக்கும், கடல் வளங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் இதனை அனுமதிப்பது குறித்து கௌரவ கடற்றொழில் அமைச்சர் அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.
தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஏனெனில், நிகழ்கால மற்றும் எதிர்கால எமது கடல் வளங்களினதும், கடற்றொழிலாள மக்களினதும் நலன்களைஅவதானத்தில் கொண்டு, வளங்களை  பாதுகாத்து வைப்பது எமது பொறுப்பாகும். இதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. இருப்பினும், மாற்றுத் தொழிலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு எமது கடற்றொழிலாளர்கள் பழக்கப்படும்வரை, ஏனைய எமது கடற்றொழிலாளர்களுக்கும், கடல் வளங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில்  ஒரு நிவாரணமாக இதற்கான அனுமதி வழங்குவது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
எமது நாட்டில் சர்வதேச கடற் பரப்பில் தொழில் செய்வதற்கான சர்வதேச ரூனா (வுருNயு) ஆணைக்குழு அனுமதி சுமார் 1600 படகுகளுக்கே வழங்கப்பட்டுள்ள நிலையில், அனுமதி பெறப்பட்டுள்ள அனைத்து படகுகளும் தொழிலில் ஈடுபடாத நிலை காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. இவ்வாறு தொழிலில் ஈடுபடாத அனுமதிப் பத்திரங்களை மீளப் பெற்றும், மேலும் அனுமதிப் பத்திரங்களபை; புதிதாகப் பெற முடியுமாயின் அவற்றையும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களில் இனங்காணப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு இங்கு அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
அத்துடன், முல்லைதீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து முகங்கொடுத்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைதீவு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் சுமார் 4,600க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது வாழ்வாதாரத் தொழிலில் ஈடுபட சுமார் 73 கிலோ மீற்றர் நீளமான கடற்கரையோர பகுதியே காணப்படுகின்றது. இந்த பகுதிக்குள் நுழைந்து வெளி மாவட்ட கடற்றொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட முறைமைகளைக் கொண்டதும், அத்துமீறியதுமான தொழில்களில் ஈடுபட்டு வருவதாக அம் மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அந்தவகையில், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறுசாலை போன்ற பகுதிகளில் வெளி மாவட்ட கடற்றொழிலாளர்களால் முல்லைத்தீவு மாவட்ட கடற்nhறழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
இம் மக்கள் தங்களது பாரம்பரிய முறைகளில் தொழில் செய்து வருகின்ற கொக்கிளாய் ஆறு, முகத்துவாரம், புளியமுனை ஆகிய பகுதிகளில் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட படகுகள், தடைசெய்யப்பட்ட வலைகள் என்பன பயன்படுத்தப்படுவதால் இப்பகுதிகளில் நீர்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் இம் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக் கடலை புனரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை காரணமாகவும் அம் மாவட்ட கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிப்படைந்தள்ளன. இலங்கையில் இறால் பெருக்கம் மிக அதிகமாகக் காணப்படுகின்ற நந்திக் கடலை புனரமைப்பு செய்வதன் ஊடாக இப்பகுதி மக்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்வதற்கும், அதே நேரம் எமது நாட்டுக்கு பொருளாதார ரீதியில் பாரிய பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வதற்கும் இயலுமாகும்.
அத்துடன், முல்லைத்தீவைப் பொறுத்த வரையில் வெளிச்ச வீடு அற்ற நிலை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியும், திசைமாறிச் செல்கின்ற நிலைமைகளும் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, இவ்விடயங்கள் குறித்து கௌரவ அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் விசேட அவதானங்களைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
அத்துடன், பொதுவாக வடக்கு மாகாண கடற் பரப்பில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வெளி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு மிக அதிகளவில் – அதாவது ஒருவருக்கு பல அனுமதிகள் என்ற வகையில் வழங்கப்பட்டு வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.  இச் செயற்பாடானது எமது கடற்றொழிலாளர்களைப் பாதிக்கின்ற இன்னுமொரு காரணியாக அமைந்துள்ளது. எனவே, இவ்விடயம் குறித்தும் அமைச்சர் அவர்கள் அவதானங்களைச் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதே நேரம், வடபகுதியில் சுமார் 200 வரையிலான கடற்றொழிலாளர்களுக்கு அட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்;, இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடல்தூரத்தைவிட குறைந்தளவு தூரத்தில் இவர்கள் மின் வெளிச்சம் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதாலும், அப்பகுதிகளை கலக்குவதால், மீனினங்கள் கலைந்து செல்வதாலும், கரைப் பகுதிகளை பயண வழிகளாகக் கொள்வதால், சிறு தொழிலாளர்களது வலைகளை ஊடறுத்துச் செல்வதாலும் சிறு தொழிலாளர்கள் தொழில் ரீதியிலான பாதிப்புகளுக்கு உட்பட்டு வருவதாகவும், மேற்படி அட்டை பிடிப்போருக்கு யாழ்ப்பாணக் கடல் பகுதிகளில் இரவில் தொழில் செய்ய அனுமதியில்லாத நிலை இருந்தும், அவர்கள் இரவு வேளைகளிலும் தொழிலில் ஈடுபடுவதாகவும், இவர்களது தொழில் செயற்பாடுகளால் மீனினங்களுக்கான உணவு வளங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர.;
எனவே, இவ்விடயம் குறித்தும் உடனடி அவதானங்களைச் செலுத்தி, மேற்படி தடை செய்யப்பட்ட தொழில் முறைமைகளை நிறுத்துவதற்கும், வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கேற்ப அவர்கள் தொழில் செய்வதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
அந்த வகையில், யாழ்ப்பாணம் வடமராட்சி, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் கடற்றொழில் ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அத்துமீறல்கள், தடை செய்யப்பட்ட முறைமைகளினாலான தொழிற் செயற்பாடுகள் போன்றவற்றையும் நிறுத்துவதற்கு எதிர்காலத்தில் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், எமது பகுதிகளில் பெறுமதிசேர் கடலுணவு உற்பத்திக்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அதனை முழுமையாக ஊக்குவிக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன் என்றும் சுட்டிக்காட்டினார்.

Related posts:

போதைப் பொருள் கடத்தல், விற்பனை அதிகரித்துள்ள குடாநாட்டில் இலக்குவைக்கப்படுகின்ற இளைஞர்கள் நிலை மோசம...
வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவுற அறிவுறுத்த வேண்...
இன நல்லிணக்கத்தில் ஈ.பி.டி.பியினராகிய நாம் உளப்பூர்வமாக செயற்பட்டு வருவதால் வெற்றிகண்டுள்ளோம் - நாடா...