தடுப்பு முகாம்களில் பல கைதிகள் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் வெளியான செய்திகளின் உண்மை நிலைமை என்ன?

Thursday, May 10th, 2018

இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் காணாமற் போயுள்ளதாகக் கூறப்படுகின்ற பலர் தடுப்பு முகாம்களில் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் பூசா தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகியுள்ள முன்னாள் இயக்க உறுப்பினரான நவரத்தினம் நிசாந்தன் என்பவர் கூறியதாக தமிழ் ஊடகங்களில் முன்பக்கச் செய்தியாக வெளிவந்து எமது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் உண்மை நிலைமை என்ன? என்பதை அறிய விரும்புகின்றேன் ௲ என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதித்துறை திருத்தச் சட்டமூலம், காலவிதிப்பு சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இன்றைய தினம் நீதித்துறைச் சார்ந்த திருத்தச் சட்டமூலங்கள் இரண்டாம் மதிப்பீட்டிற்காக இந்தச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவை சார்ந்து எமது நாட்டின் சில நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் எனது கருத்துக்களை தெரிவிக்க விரும்புகின்றேன். அதற்கான வாய்ப்பினை வழங்கியமையையிட்டு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாரிய ஊழல், மோசடிகளை துரித கதியில் விசாரணை செய்யும் முகமாக சிறப்பு மேல் நீதிமன்றம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலத்திற்கு எதிராக ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, இதனது சில சரத்துகள் அரசியல் யாப்பிற்கு முரணான வகையில் அமையப் பெற்றிருப்பதால், இதனை நிறைவேற்ற வேண்டுமானால் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என உயர் நீதிமன்றம் கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு அறிவித்திருந்ததையும் நாம் அறிவோம்.

பொருளாதார ரீதியல் மட்டுமன்றி சமூக, கலாசார ரீதியிலும் பாரிய பின்னடைவினை நோக்கிச் செல்கின்ற இந்த நாட்டில், இத்தகைய வீழ்ச்சிக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக விளங்குகின்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் இனங்காணப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதும், ஊழல், மோசடிகளால் பெறப்பட்டுள்ள இந்த நாட்டு மக்களது நிதியை, சொத்துக்களை, உடைமைகளை மீள அரசு கைப்பற்ற வேண்டியதும் அவசியமாகும் என்பதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

அந்த வகையில் மேற்படி சிறப்பு மேல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்கின்ற போதிலும், அது எமது அரசியல் யாப்பிற்கு முரணாகாத வகையிலும், வெறுமனே அரசியல் பழிவாங்கல்களை நோக்கமாகக் கொள்ளாத வகையிலும் அமையப் பெற வேண்டும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

1971ஆம் ஆண்டில் எமது நாட்டில் ஏற்பட்ட கலவரத்துக்கு ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் வகையில், அக்கால கட்டத்தில் விN~ட சட்டமூலம் ஒன்று அங்கீகரிக்கப்பட்டு, வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்ததை இங்கு நான் மீள நினைவுபடுத்துகின்றேன்.

‘ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல்’ அமைப்பு வருடாந்தம் வெளியிடுகின்ற ஊழல் தொடர்பான புள்ளிவிபர அறிக்கையில் கடந்த ஆண்டில் ஊழல்கள் இடம்பெறுகின்ற 183 நாடுகளில்,  எமது நாடு 38 புள்ளிகளைப் பெற்று 91வது இடத்தில் இருப்பதாக அறிய முடிகின்றது.

இதில், ஆச்சரியமான, அதிசயமான விடயம் ஒன்று தொடர்பில் அண்மையில் ஊடகங்களின் மூலமாக அறியக் கிடைத்திருந்தது. அதாவது, கடந்த 24 வருடங்களில் எமது நாட்டில் இலஞ்சம், ஊழல் தொடர்பில் ஏராளமான குற்றச்சாட்டுகள், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்ற விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்திருந்த போதிலும், அவற்றில் 75 வழக்குகள் மட்டுமே தொடுக்கப்பட்டு, இந்த 75 வழக்குகளிலும் நான்கு பேர் மாத்திரமே குற்றவாளிகளாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர் என மேற்படி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக அச் செய்தி குறிப்பிடுகின்றது.

இத்தகையதொரு நிலை எமது நாட்டில் நிலவுகின்ற நிலையில், இலஞ்சம், ஊழல், மோசடிகள் தொடர்பில் இந்த நாட்டில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற கருத்துகள் யாவும் வெறும் அரசியல் பேசு பொருளாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், கடந்த காலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சரால் கூறப்பட்டு, நான்கு அமைச்சர்களுக்கு எதிராகவும் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் மூலமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, நான்கு அமைச்சர்களும் பதவி நீக்கஞ் செய்யப்பட்டார்கள். ஆனால், அவர்கள் மேற்கொண்டிருந்த ஊழல், மோசடிகள் எவை என்பது பற்றிய போதிய விபரங்கள் அவர்களைத் தெரிவு செய்துள்ள எமது மக்களுக்கு தெளிவாக அறிவிக்கப்படவில்லை. அத்துடன், அவர்களுக்கு எதிராக எவ்விதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இத்தகையதொரு நிலையில், தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என அண்மையில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஊழல், மோசடிகளில் ஈடுபடுகின்றவர்களை ஒரு சிலர் காப்பாற்ற முனைவதால், அதன் ஊடாக இழக்கப்படுகின்ற எமது மக்களுக்குரிய நிதியானது, மீளப் பெற வழியற்ற நிலைமையை ஏற்படுத்தி விடுவதுடன், அத்தகைய ஊழல், மோசடிகளில் ஈடுபடுகின்றவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், மீண்டும், மீண்டும் அப்பேர்வழிகள் அதே குற்றங்களைப் புரிவதற்கும், இதனை ஒரு வழிகாட்டலாகக் கொண்டு மேலும் பலரும் அதே குற்றச் செயல்களை புரிவதற்கும் இது வழியேற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதை மறந்துவிடக் கூடாது.

அண்மையில் பாரிய இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரையும் பதவிகள் நீக்கி, இவர்கள் தொடர்பிலான விசாரணைகளில் எவ்விதமான அழுத்தங்களும் எவராலும் கொடுக்கப்படக்கூடாது என ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கியிருந்தார். இது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். இந்த இருவரில் ஒருவர் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பதவி வகித்தவர். இவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவரும் ஏற்கனவே நிதி மோசடியில் ஈடுபட்டவர் என்றொரு விடயம் ஊடகங்களில் வெளிவந்திருப்பதை அறிய முடிந்தது. எனவே, இது குறித்தும் உரிய அவதானங்கள் செலுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பிலான சில விடயங்களையும் இங்கு மீண்டும் முன்வைக்கலாம் என நினைக்கின்றேன். அரசியல் கைதிகள் என இந்த நாட்டில் எவருமே இல்லை என ஏற்கனவே நீதி அமைச்சரும், நாட்டின் தலைவரும் கூறியிருக்கின்றார்கள் என்பதை நான் அறிவேன். எனவே, அவர்கள் அரசியல் கைதிகளா? அரசியல் அற்ற கைதிகளா? என்ற தலைப்பு அவசியமில்லை என்றே கருதுகின்றேன். அரசியல் கைதிகள் எனக் குறிப்பிடப்படுவதால்தான் அவர்களது விடுதலைகள் தாமதமாகின்றன எனில், அந்த தலைப்பு தேவையற்றது. இங்கு தலைப்பு முக்கியமல்ல. அவர்கள் தொடர்பில் நியாயமான ஏற்பாடுகளே அவசியமாகும் என்பதையே நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அந்த வகையில் இன்னமும் 110 பேர் இதுவரையில் விடுவிக்கப்படாது பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 14 பேருக்கு இதுவரையில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செயப்படவில்லை என்றும், 44 பேர் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டிருப்பினும், அவ்வழக்குகள் இழுத்தடிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், 35 பேர் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இந்தக் கைதிகளின் நிலைமைகளைப் பாரக்கின்றபோது, ‘எய்தவன் போக, அம்புகளை நோகவைத்துக் கொண்டிருக்கின்ற’ கதையாகத்தான் இருக்கின்றது.

இந்த நிலையில், இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் காணாமற் போயுள்ளதாகக் கூறப்படுகின்ற பலர் தடுப்பு முகாம்களில் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் பூசா தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகியுள்ள முன்னாள் இயக்க உறுப்பினரான நவரத்தினம் நிசாந்தன் என்பவர் கூறியதாக தமிழ் ஊடகங்களில் முன்பக்கச் செய்தியாக வெளிவந்து எமது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதன் உண்மை நிலைமை என்ன? என்பதை அறிய விரும்புகின்றேன். அதே நேரம, நான் இங்கே குறிப்பிட்டுள்ள 14 கைதிகளுக்கு எதிராக,  பல வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும், இதுவரையில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாதது ஏன்? என்பதை அறிவிக்க வேண்டும். மேலும், வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்களது வழக்குகள் ஏற்கனவே அக் கைதிகளுக்கு உறுதியளித்திருந்தமைக்கு இணங்க விரைவாக விசாரிக்கப்படாமல், தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு இழுத்தடிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவது ஏன்? என்பதையும் அறிய விரும்புகின்றேன்.

இவ்வாறான உணர்வுப்பூர்வமான பல்வேறு பிரச்சினைகளை தொடர்ந்து சுமந்திருக்கும் எமது மக்களின் மத்தியில், இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்காமல் நீங்கள் இனங்களிடையே ஐக்கியம், தேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாடு என்றெல்லாம் கூறிக் கொண்டிருப்பதால், அவை ஒருபோதும் சாத்தியமாகாது என்பதையே நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன்.

இந்த நாட்டில் நீங்கள் கூறுவதைப் போன்று இனங்களுக்கிடையே ஒற்றுமையோ, ஒருமைப்பாடோ, தேசிய நல்லிணக்கமோ ஏற்பட வேண்டுமாயின், முதலில் புறையோடிப் போயிருக்கின்ற சில பழக்க, வழக்கங்களை மாற்றுங்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள். மனதாபிமான முறையில் ஓர் அரசியல் தீரமானம் எடுத்து, தடுத்து வைத்திருக்கின்ற மேற்படி  கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு முன்வாருங்கள். இதற்குத் தயாராக இல்லையேல், ஒரு விN~ட நீதிமன்ற ஏறபாடுகளை மேற்கொண்டு, இந்த வழக்குகளை விசாரித்து ஒரு முடிவுக்குக் கொண்டு வாருங்கள். இதனை ஓர் அரசியல் முதலீடாக தொடரந்து வைத்துக் கொண்டிருக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு தொடர்ந்து பல்வேறு அநீதிகள், முறைகேடுகள் இழைக்கப்படுவதாகவும், அங்கு சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அண்மையில் வவுனியா நீதிமன்றத்தில்  கைதியொருவர் பதில் நீதவான் அவர்கள் முன்னிலையில் தெரிவித்திருப்பதாக தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இவ்விடயம் தொடர்பிலும் ஆராய்ந்து பார்த்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தெரிவித்து விடைபெறுகின்றேன்.

நன்றி.

Related posts:

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா...
வடக்கிலுள்ள மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது – நாடாள...
பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி மக்களுக்கு பாதிப்பாக அமையக் கூடாது - டக்ளஸ் தேவானந்தா சபையில் வலிய...

அரசியலுரிமைக்காக மட்டுமன்றி அழிவு யுத்த வன்முறைகளில் இருந்தும் எமது மக்கள் மீண்டெழ வேண்டும் - நாடாளு...
காணி உரிமை கோரி வருபவர்களுக்கு மாற்று ஏற்பாடு வேண்டும் என்ற எமது கோரிக்கை அரசியலமைப்பு சபையில் ஏற்க...
வடக்கு  மாகணத்திலுள்ள கைத்தொழில்சாலைகளை மீளியக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வல...